இலங்கைத் திரு நாட்டில் வாழும் ஸூபிஸ, மற்றும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வழி செல்லும் அன்புச் சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வின் நல்லடியார்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
கடந்த 1000 ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக நமது நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாகவும், பெரும்பான்மை சமூகத்துடன் ஐக்கியமாகவும், சகோதரத்துவமாகவும் வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் சுமார் 30 வருடங்களாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வழிகெட்ட வஹ்ஹாபிஸத்தினால் ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டும், முஸ்லிம்கள் மீதான நல்லெண்ணம் சிதைக்கப்பட்டும் வந்து இறுதியாக கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடந்த குண்டுத்தாக்குதலின் மூலம் முழுமையாக முஸ்லிம்களின் மீது தப்பான பார்வை ஏற்பட்டுள்ளதை தாங்கள் அனைவரும் என்னைவிடவும் நன்கறிவீர்கள்.
முழு நாட்டு முஸ்லிம்களும் இவ்வாறான செயல்பாடுகளுக்கு ஆதரவானவர்கள் அல்ல என்பதை நாங்கள் மாத்திரமின்றி இந்நாட்டின் அரசாங்கமும், பெரும்பான்மை சமூகமும் அறியும். காரணம் குண்டுதாரி ஸஹ்றானின் செயல்பாடுகள் தொடர்பாக குறித்த தாக்குதலை நடத்த முன்பே காத்தான்குடியில் எனது தலைமையின் கீழ் வாழ்கின்ற ஸூபீ முஸ்லிம்களே அரசுக்கு புகார் அளித்திருந்தார்கள்.
இது தொடர்பாக பல தரப்பினரிடமும் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நமது நாட்டில் இனிவரும் காலங்களில் அவ்வாறான செயல்பாடுகள் இடம்பெறாத வண்ணம் நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த அடிப்படையில் கடந்த 07.04.2021 அன்று சட்டமா அதிபரினால் இலங்கை நாட்டில் இயங்கும் 11 அடிப்படைவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது. வஹ்ஹாபிஸ தீவரவாதப் போக்கை தமது நெறியாகக் கொண்டு இயங்கும் இவ் அமைப்புக்களை தடை செய்தது பாராட்டத்தக்கது மாத்திரமின்றி ஸூபிஸ, மற்றும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியுமாகும் என்பதை நான் ஒரு மார்க்க அறிஞன் என்ற வகையில் கூறிக் கொள்கின்றேன். இதற்காக குறித்த நடவடிக்கையை மேற்கொண்டவர்களுக்கு எமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பது எமது கடமையுமாகும். அந்த அடிப்படையிலே நானும், எனது தலைமையில் இயங்கும் “அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு (incorporated by act of parliament No 46 of 2009) “ம் நன்றி தெரிவித்து ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தோம். இவ்வாறு நன்றி தெரிவிப்பதனால் எவரும் என்னை தவறாக எடை போட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கின்றேன். இது முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை அல்ல. மாறாக எதிர்காலத்தில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதற்கான அத்திவாரமே என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இலங்கையில் இயங்கும் ஸுன்னத் வல் ஜமாஅத், ஸூபிஸ அமைப்புக்களும் இந்த நடவடிக்கைக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பது காலத்தின் தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். நாங்கள் ஸூபீகள், ஸுன்னீகள் என்று வாயால் மாத்திரம் கூறாமல் செயல்வீரர்களாகவும் இருக்க வேண்டும். கொள்கைக்காகவே உயிர் வாழ வேண்டுமேயன்றி கொடுப்பனவுகளுக்காக வாழக் கூடாது. இலட்சியவாதியாக வாழ்ந்து மரணிக்க வேண்டுமேயன்றி அலட்சியவாதியாக வாழ்ந்து மரணிக்கக் கூடாது.
ஆகவே, நமது நாட்டில் வாழ்கின்ற ஸூபிஸ, ஸுன்னத் வல் ஜமாஅத் சமுகங்களை வழி நடாத்தும் சற்குருக்கள் (ஷெய்குமார்), மார்க்க அறிஞர்கள், சிவில் சமுக பிரபலங்கள் அனைவரும் இவ்விடயத்தில் கவனமெடுத்து இன்னும் தடை செய்யப்படாமல் எஞ்சியிருக்கும் அமைப்புக்களையும் தடைசெய்து முஸ்லிம்கள் கடந்த 40 – 50 வருடங்களுக்கு முன் எவ்வாறு பெரும்பான்மை சமுகத்துடன் ஐக்கியமாகவும், சகோதரத்துவத்துடனும், நிம்மதியாகவும் வாழ்ந்தார்களோ அவ்வாறு வாழ வழி சமைப்பதுடன், ஸூபிஸ, ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை நிலை நாட்டவும் ஒன்றிணையுமாறும் அன்பாய் வேண்டுகிறேன்.
நான் எந்த ஒரு நபரையும் வெறுக்கவில்லை. வஹ்ஹாபிஸ கொள்கையை மட்டுமே வெறுக்கிறேன். வஹ்ஹாபிஸம் ஒழிந்தால் மட்டுமே நாடும் செழிக்கும், முஸ்லிம்களுக்கிடையே ஒற்றுமையும் ஜொலிக்கும்.
قال النبي صلى الله عليه وسلّم: مَنْ أَعَانَ عَلَى مَعْصِيَةٍ وَلَوْ بِشَطْرِ كَلِمَةٍ كَانَ شَرِيْكًا لَهُ فِيْهَا
ஒரு பாவத்திற்கு ஒரு சொல்லின் பாதி கொண்டேனும் உதவியவன் அப்பாவத்தின் பங்காளியாவான்.
(நபீ மொழி)
உதாணமாக அறபு மொழியில் اُقْتُلْ “உக்துல்” என்றால் கொல் என்றும், اِضْرِبْ “இழ்ரிப்” என்றால் அடி என்றும் பொருள் வரும். இவ் அறபுச் சொற்களின் பாதி அறபியில் “உக்” என்றும், “இழ்” என்றும் வரும். தமிழில் “கொ” என்றும், “அ” என்றும் வரும். இவ்வாறு பாதிச் சொற்கள் கொண்டு பாவத்திற்கு உதவியவன் அதில் பங்காளியாவான் என்பது நபீ மொழி. இதை உலமாஉகளும், ஏனையோரும் விளங்கிச் செயல்பட வேண்டும்.
நன்றி, வஸ்ஸலாம்.
காதிமுல் கவ்மி,
10.04.2021