தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
உடலையும், உடையையும் கவர்ச்சியாக வைத்திருப்பது மார்க்கத்திற்கு முரணானதா? இவ்வாறு செய்தல் “கிப்ர்” என்ற பெருமையைச் சேருமா?
இப்படியொரு தலைப்பில் சிறு விளக்கமொன்று தருவது நாகரீகம் உச்சியைத் தொட்டு நிற்கும் இக்கால கட்ட இளைஞர்களுக்கு பயனளிக்குமென்று நான் நம்பி இத்தலைப்பில் எழுதுகிறேன்.
ஒருவன் அடிக்கடி புத்தாடை உடுப்பதும், தற்கால நாகரீகத்திற்கு ஏற்றவாறு ஷேட், சாரம், றவ்ஸர் உடுப்பதும் இதேபோல் பாதணிமுதல் “கூளிங் கிளாஸ்” வரை ஒரே நிறத்தில் பாவிப்பதும், இதேபோல் உடைகள் தெரிவுசெய்து உடுப்பதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையா? இல்லையா? என்பது பற்றிய ஓர் ஆய்வுதான் இச்சிறு கட்டுரை.
ஒருவன் தனது உடலையும், உடையையும் கவர்ச்சியாக வைத்திருப்பதற்கு அவனைத் தூண்டிய கரு எது? என்பதை அறிவதன் மூலமே அச் செயல் சரியானதா? பிழையானதா? என்பதைத் தீர்மானிக்க முடியும். எல்லாச் செயலும் செய்கின்றவனின் “நிய்யத்” எண்ணத்தைப் பொறுத்ததேயாகும். அதுவே அடிப்படைக்கரு.
قال النبي صلّى الله عليه وسلّم، إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللهِ وَرَسُوْلِهِ فَهِجْرَتُهُ إِلَى اللهِ وَرَسُوْلِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيْبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ،
இந்த நபீ மொழி ஒரு நிகழ்வோடு தொடர்புடையது. அதாவது நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நபீ பட்டம் கிடைத்த நாற்பதாம் வயது முதல் தொடராகப் பத்து வருடங்கள் மக்காவிலேயே இருந்து “தவ்ஹீத்” ஏகத்துவத்தின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டே இருந்தார்கள். அங்கு வாழ்ந்த பத்து வருடங்களும் சொல்லொணாத் துன்பங்களையும் அனுபவித்தார்கள். தங்களின் ஐம்பதாம் வயதில் திரு மதீனா நகருக்கு வரவிரும்பி தங்களின் தோழர்களை அழைத்து அந்தப் பயணம் பற்றி அறிவித்தார்கள். அதுவே அவர்களின் திரு மதீனாவுக்கான முதற் பயணமாக இருந்தது. அதுவே “ஹிஜ்றத்” என்றும் அழைக்கப்படுகிறது.
அவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் ஒரு தோழர் இருந்தார். அவரும் அந்தப் பயணத்துக்கு தனது விருப்பத்தை தெரிவித்தார். அவர் ஏற்கனவே திரு மதீனாவிலுள்ள ஒரு பெண்ணை விரும்பியிருந்தார். “ஹிஜ்றத்” என்ற பெயரில் பயணிப்பவர்களுடன் தானும் பயணித்து அப் பெண்ணை அடையும் “நிய்யத்” எண்ணம் அவரின் உள்ளத்திலிருந்தது.
அவரின் உள்ளத்தில் மறைந்திருந்த எண்ணத்தை “நுபுவ்வத்” நபித்துவத்தின் மூலம் அறிந்து கொண்ட பெருமானார் மற்றத் தோழர்கள் விளங்காமல் அவர் மட்டும் விளங்கி தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மேற்கண்ட ஹதீதை – பொன் மொழியைக் கூறினார்கள்.
ஹதீதின் பொருள்: “எந்தச் செயலாயினும் செயல்கள் எல்லாம் செய்பவனின் “நிய்யத்” எண்ணத்தைப் பொறுத்ததாகும். மக்காவில் இருந்து மதீனாவுக்கு “ஹிஜ்றத்” போகின்றவனின் “நிய்யத்” எண்ணம் அல்லாஹ்வினதும், றஸூலினதும் – தூதரினதும் கட்டளைக்கு அடி பணிவதாக இருந்தால் அவருக்கு அதற்கான பலன் உண்டு. இதற்கு மாறாக அங்குள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்யும் எண்ணம் ஒருவருக்கு இருந்தால் அதுவே அவருக்கு உண்டு. எந்த ஒரு பலனும் அவருக்கு இல்லை” என்று அருளினார்கள்.
ஒரு தோழரின் எண்ணத்தை அறிந்து அண்ணல் சொன்னதும் அதை அந்த எண்ணத்தோடு இருந்த நபீ தோழர் மட்டும் புரிந்து தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.
இந்த நபீ மொழி மூலம் எவர் எதைச் செய்தாலும் அவரின் எண்ணத்தின்படியே அதன் முடிவு கிடைக்கும் என்ற உண்மை விளங்கப்படுகின்றது.
இங்கு ஒரு விடயத்தைக் கவனத்திற் கொள்ள வேண்டும். அதாவது மார்க்கத்தில் “ஹலால்” அனுமதிக்கப்பட்ட விடயத்தில் மட்டுமே ஒருவன் தனது எண்ணத்தை நல்லெண்ணமாக மாற்றிக் கொள்ளலாமேயன்றி “ஹறாம்” மார்க்கத்தில் தடுக்கப்பட்ட விடயத்தில் எண்ணத்தை மாற்றிக் கொள்வதற்கு இடமே கிடையாது.
உதாரணமாக விபச்சாரம் மார்க்கத்தில் “ஹறாம்” தடைசெய்யப்பட்ட ஒரு செயல். ஒருவன் பின்வருமாறு கற்பனை செய்து விபச்சாரம் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
“ஹலால்” ஆன ஒரு மனைவி மூலம் குழந்தை கிடைப்பதாயின் ஒரு வருடத்தில் ஒரு குழந்தைதான் கிடைக்கும். ஆயினும் விபச்சாரத்தின் மூலம் ஒரு வருடத்தில் எத்தனை குழந்தைகளையும் உற்பத்தி செய்யலாம். இதைக் கருத்திற் கொண்டு தனக்குப் பிறக்கின்ற குழந்தைகள் தவறான வழியில் பிறந்தாலும் கூட அவை அனைத்தும் இஸ்லாமிய குழந்தைகளாகவே பிறக்கும். இதன் மூலம் முஸ்லிம்களின் சனத் தொகையை குறுகிய காலத்தில் கூட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் விபச்சாரம் செய்வது போன்று. இது தவறு. பாவமான காரியம் பாவமான காரியம்தான். எண்ணத்தை மாற்றுவதன் மூலம் அது பாவமற்ற காரியமாக மாறிவிடாது.
செயல் எல்லாம் எண்ணத்தைப் பொறுத்தே நல்லவையாகவும், கெட்டவையாகவும் அமைகின்றன என்ற மேற்கண்ட நபீ மொழியின் படி ஒருவன் தனது உடலையும், உடைகளையும் அழகாகவும், தரம் உயர்ந்தவையாகவும் வைத்திருப்பது ஆகும்.
ஒருவன் ஒரு பெண்ணை தனது உடலழகு கொண்டும், உடையழகு கொண்டும் தன் பக்கம் திருப்பியெடுக்கும் நோக்கத்தோடு, நிய்யத்தோடு அவ்வாறு செய்தானாயின் அதனால் அவனுக்கு நன்மை கிடைக்காது.
ஒருவன் ஒரு செல்வந்தனைக் காணும் போது அவனிடம் ஓர் உதவியை பெறுவதற்காக தனது “தஸ்பீஹ்” ஜெப மாலையை எடுத்து எதை ஓதினாலும் அவன் தான் நினைத்ததைத்தான் பெற்றுக் கொள்வானேயன்றி அவனுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காது.
இவ்வாறான எண்ணங்களின்றி அல்லாஹ் அழகன், அவன் அழகையே விரும்புகின்றான் என்ற நபீ மொழியின் படி ஒருவன் தனதுடலையும், உடையையும் அழகாகவும், தரமானதாகவும் ஆக்கிக் கொண்டானாயின் அவனுக்கு நன்மை நிச்சயமாக கிடைக்கும். ஏனெனில் அவன் நாடியதும், அவனின் “நிய்யத்” எண்ணமும் புனிதமானவையாகும்.
ஒரு நாள் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் தோழர்களுடன் உள்ளத்தில் பெருமை உள்ளவன் பற்றிக் கூறிக் கொண்டிருக்கையில் நபீ தோழர்களில் ஒருவர்
قَالَ رَجُلٌ: إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً،
அல்லாஹ்வின் திருத்தூதரே! ஒரு மனிதன் தனது உடை அழகாக இருக்க வேண்டுமென்றும், தனது பாதணி அழகாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறான். இவனுக்குரிய சட்டம் என்ன? என்று கேட்டார். அதற்கு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ அல்லாஹ் அழகன், அவன் அழகையே விரும்புகிறான் என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ் அழகனா? இல்லையா? என்பது யாருக்கு தெரியும். அவனைக் கண்டவர்களுக்கே தெரியும். பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவனைக் கண்டதினால்தான் அவன் அழகானவன் என்று கூறினார்கள். அவர்களின் திரு வாயிலிருந்து உண்மை மட்டுமே வெளியாகும்.
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى ، إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى
அவர்கள் தங்களின் மன விருப்பத்தின்படி ஒன்றுமே பேசமாட்டார்கள். பேசினால் அது “வஹீ” இறையறிவிப்பாகவே இருக்கும் என்று அவர்களைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.
அல்லாஹ்வின் அழகுக்கு கட்டுப்பாடில்லை. எந்த ஓர் வரையறையுமில்லை. நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மயங்கிக் கீழே விழுந்தது அவனின் பேரழகைக் கண்டுதான். அவர்கள் நபீயாக இருந்தும் கூட அவனின் பேரழகை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்க முடியாமலேயே விழுந்தார்கள். ஆயினும் எம் பெருமகனார் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அவனைத் தலைக் கண்ணால் – முகத்திலுள்ள வெளிக் கண்ணால் கண்டும் கூட அசையாமல் இருந்தார்கள் என்றால் நபீ மூஸா எங்கே? நமது நபீ முஹம்மத் எங்கே?
قَالَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: بَيْنَ الْعَبْدِ وَرَبِّهِ سَبْعُوْنَ حِجَابًا، لَوْ كَشَفَهَا لَأَحْرَقَتْ سُبْحَاتُ وَجْهِهِ مَا انْتَهَى إِلَيْهِ بَصَرُهُ،
அடியானுக்கும், அல்லாஹ்வுக்குமிடையில் எழுபது திரைகள் உள்ளன. அவையாவையும் அல்லாஹ் நீக்கி விட்டானாயின் அவனைக் காண்போர் அனைவரையும் அவன் பிரகாசம் எரித்துச் சாம்பலாக்கிவிடும் என்று பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
வவ்வாலுக்கு பகல் நேரத்தில் கண் தெரியாமற் போனது ஆதவன் ஒளியைப் பார்க்க இயலாமற் போனதினால்தான். மனிதனுக்கு அல்லாஹ் செய்த அருள் வவ்வாலின் கண்களுக்கு வழங்கிய பார்வைப்புலனை விட அதிக சக்தியுள்ள புலனைக் கொடுத்ததேயாகும்.
சூரியன் அல்லாஹ்வின் படைப்புக்களில் ஒன்று. அவன் படைப்புக்கு வழங்கிய அழகைக் கண்டே எமது கண் பார்வை மங்கிப் போகிறதென்றால் இறைவனின் திருவொளியின் வேகத்தையும், அதன் சக்தியையும் நாம் என்னென்று சொல்வது? ஸுப்ஹானல்லாஹ்!
உலகிலுள்ள படைப்புகளில் எதுவெல்லாம் அழகாக உள்ளதோ அவை அனைத்தின் அழகும் அவன் அழகேயாகும். அவனின்றி ஒன்றுமே இல்லை என்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தரும் விளக்கத்தின்படி எழுதுகின்ற என்னழகும், வாசிக்கின்ற உன்னழகும், கையழகும், எழுத்தழகும் அவனழகே! உலகிலுள்ள பேரழகர்கள், பேரழகிகள், சுவர்க்கத்தில் உள்ள “ஹூறுல் ஈன்” பேரழகிகள் அனைவரின் அழகும் அவனழகே! இவ்வழகுகள் அனைத்தையும் ஓர் இடத்தில் குவித்துப் பார்த்தால் பார்ப்பவர் ஒரு நொடியில் மயங்கி விழுந்துவிடுவார். விழுவது மட்டுமல்ல. உயிர் துறந்தும் விடுவார்.
எனவே, நாமும் அவனே, நம்மழகும் அவனழகே என்ற உணர்வோடு நம்மை நாமே உடையாலும், உடலாலும் அழகுபடுத்துவது அவனை அழகு படுத்துவதாகவே ஆகும். இந்த உணர்வோடு எந்த உடையும் உடுக்கலாம். ஒரேயொரு நிபந்தனை மட்டுமே அவசியம். அது “ஷரீஆ”வுக்கு முரணில்லாத உடையாக இருக்க வேண்டும். எல்லாமவனே என்ற தத்துவத்தின் அடிப்படையில் நம்மை நாம் அழகுபடுத்தினாலும் எதார்த்தத்தில் அவனையே அழகுபடுத்துகிறோம்.
இந்த நோக்கத்தில் இந்த “நிய்யத்”தில், இந்த எண்ணத்தில் “ஷரீஆ”வில் ஆகுமாக்கப்பட்ட முறையில் நம்மை உடலாலும், உடையாலும் நாம் அழகுபடுத்திக் கொள்வது தவறாகாது.
خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ
எந்த ஒரு பள்ளிவாயலாயினும் அங்கு செல்லும் போது அழகாக உடுத்துச் செல்லுங்கள் என்பது இதையே சுட்டிக் காட்டுகின்றது. பள்ளிவாயல்கள் அல்லாஹ்வின் இல்லங்களாகும். அவனில்லத்தில் அவனின்றி வேறு யார் இருப்பார்?
என்ன உடை கொண்டு உடலை அழகுபடுத்தினாலும், எந்த அழகு சாதனம் கொண்டு உடலை அலங்கரித்தாலும், என்ன டிசைனில் உடை உடுத்தாலும் எந்த ஒரு குற்றமுமில்லை. உடை கொண்டும், அழகு சாதனங்கள் கொண்டும் உடலை அழகு படுத்துவோர் நற்குணங்கள் கொண்டு உள்ளங்களை அழகுபடுத்தாதிருப்பது வேதனைக்குரியதே!
எனது சிறு குறிப்புக்களை நுகர்வோர் எனக்காக துஆ செய்து கொள்வது நன்றிக்குரிய செயலாகும்.