தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
وَكَيْفَ أَخَافُ الْـفَـقْرَ وَاللهُ رَازِقِـيْ
وَرَازِقُ هَذَا الْخَلْقِ فِى الْعُسْرِ وَالْيُسْرِ
تَـكَـفَّـلَ بِالْأَرْزَاقِ لِـلْـخَـلْـقِ كُلِّهِمْ
وَلِلضَّبِّ فِى الْبَيْدَا وَلِلْحُوْتِ فِى الْبَحْرِ
அல்லாஹ்தான் எனக்கு உணவு தருபவனாயிருக்கும் நிலையில் வறுமையை நான் எவ்வாறு பயப்படுவேன்?
அவன் இந்தப் படைப்புகளுக்கு கஷ்டமான காலங்களிலும், கஷ்டமில்லாத காலங்களிலும் உணவு வழங்கிக் கொண்டே இருக்கின்றான்.
படைப்புகள் அனைத்திற்கும் உணவளிக்கும் பொறுப்பை அவனே ஏற்றுள்ளான். அவன் கடல் வாழ் மீன்களுக்கும், காட்டில் வாழும் உடும்புக்கும் உணவு வழங்குகிறான்.
إِذَا مَا مَدَدْتُ الْكَفَّ اَلْتَمِسُ الْغِنَى
إِلَى غَيْرِ مَنْ قَالَ اسْئَلُوْنِيْ فَشَلَّـتِ
سَأَصْبِرُ جُهْدِيْ فِى صِيَانَةِ عِزَّتِـيْ
وَأَرْضَى بِدُنْيَايَ وَإِنْ هِـيَ قَـلَّـتِ
எவன் என்னிடம் கேளுங்கள் என்று சொன்னானோ அவனிடம் கேட்காமல் வேறு யாரிடமாவது செல்வத்தை நாடி நான் பணம் கேட்டால் எனது கையிரண்டும் சூகையாகட்டும்.
எனது கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக என்னால் முடிந்தவரை பொறுமை செய்கிறேன். எனது உலக வருவாய் எனக்கு குறைந்தாலும் அதை நான் பொருந்திக் கொள்கிறேன்.
لَجَوْبُ الْبِلَادِ مَعَ الْمَتْرَبَةْ
أَحَبُّ إِلَـيَّ مِـنَ الْمَرْتَبَةْ
لِأَنَّ الْـوُلَاةَ لَـهُـمْ نَـبْوَةٌ
وَمَعْتَبَةٌ يَـا لَـهَا مَـعْتَبَةٌ
வறுமையுடன் ஊர்களைச் சுற்றித் திரிவது ஒரு பதவியிலிருப்பதை விட எனக்கு விருப்பமானதாகும்.
ஏனெனில் அதிகாரிகளுக்கு ஒரு வகை வெறுப்பும், பாய்ச்சலும், தண்டிப்பதும் உண்டு. தண்டனை என்றாலும் தண்டனைதான்.
“பக்ர்” என்றால் வறுமை என்று பொருள். “பகீர்” என்றால் வறுமை உள்ளவன் என்று பொருள்.
ஸூபீ மகான்களிடம் “பக்ர்” என்றால் “மகாமுல் பனா” என்ற அந்தஸ்த்தை – படித்தரத்தை குறிக்கும். “பகீர்” என்றால் அந்தப் படித்தரத்தை அடைந்தவரைக் குறிக்கும்.
குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு “பகீர்” என்று ஒரு திரு நாமம் உண்டு. அவர்கள் பகீர் முஹ்யித்தீன் என்று அழைக்கப்படுகின்றார்கள்.
அந்தக் காலத்தில் வாழ்ந்த நல்ல மனிதர்கள் – தரீகா வழி நடந்த நல்லடியார்கள் தமது பிள்ளைகளுக்கு நபீமார், வலீமாரின் பெயர்களையே வைத்து அருள் பெற்று வந்துள்ளார்கள். அந்த வகையில் வைக்கப்பட்ட பெயர்களில் ஒன்றுதான் “பகீர் முஹ்யித்தீன்” என்ற பெயராகும்.
இப் பெயர் காரணம் புரியாதவர்களாலும், சொல்லத் தெரியாதவர்களாலும் தவறாகச் சொல்லப்பட்டு வந்து இப்போது “பக்கிர் மெய்யன்” என்று மாறி மருவி விட்டது. இதை “பக்கிர் மைதீன்” என்று சொல்பவர்களும் உள்ளனர்.
குத்பு நாயகம் “பகீர்” என்று அவர்களின் ஆன்மிக உயர்வைக் காட்டும் நோக்கத்திலேயே அவ்வாறு அழைக்கப்பட்டார்கள். இந்த விபரம் தெரியாதவர்கள் அந்தப் பெயரை நமது நாட்டில் “தகறா” அடித்துக் கொண்டு யாசகம் செய்பவர்களை “பக்கிர்” என்று சொல்வார்கள். அதேபோல் குத்பு நாயகம் அவர்களும் “தகறா” அடித்துக் கொண்டு யாசகம் செய்தவர்கள் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும். இது மகா தவறு. அந்த மகானை அவ்வாறு சொல்லக் கூடாது.
குத்பு நாயகம் அவர்களுக்கு “பாவா” முஹ்யித்தீன் என்றும் ஒரு சிறப்புப் பெயர் உண்டு. நமது நாட்டில் “தகறா” அடித்து யாசகம் செய்பவர்கள் “பாவா” என்று அழைக்கப்படுவதால் குத்பு நாயகமும் அவ்வாறு “தகறா” அடித்து யாசகம் செய்ததால்தான் “பாவா” என்று அழைக்கப்பட்டார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். இதுவும் தவறுதான்.
“பாவா” என்ற சொல்லுக்கு தந்தை என்ற பொருள் உண்டு. “பாவா” என்பது “வாப்பா” என்று மாறியிருக்கலாம். அல்லது “வாப்பா” என்பது “பாவா” என்று மாறியிருக்கலாம். எவ்வாறு மாறியிருந்தாலும் எந்த வகையிலும் இச் சொல் குத்பு நாயகம் அவர்களுக்கு “தகறா” அடித்து யாசகம் செய்பவர் என்ற பொருளுக்குரியதல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
முதல் மனிதன் أَبُو الْبَشَـرِ ஆதம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பாவா ஆதம் என்று அழைக்கப்படுவது தந்தை என்ற பொருளிலேயாகும்.
எனவே, “ஷரீஆ” அடிப்படையில் “பகீர்” என்ற சொல் “ஏழை” என்ற பொருளுக்கே பாவிக்கப்படும்.
“ஷரீஆ”வில் “பகீர்” என்பவன் யாரெனில் அவன் தனியவனாயின் அவனுக்கு தனது அவசியத் தேவையை மட்டுமாவது நிறைவு செய்யுமளவு பொருளாதார வசதியற்றவனாவான். அவன் திருமணம் செய்து மனைவி மக்களுடன் வாழ்பவனாயின் தனது குடும்பத்தின் அவசியத்தேவையை மட்டுமாவது நிறைவு செய்யுமளவு பொருளாதார வசதியற்றவனாவான்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இந்த நிலையை விரும்பவில்லை. “பக்ர்” என்ற வறுமையை விட்டும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். ஏனெனில் இந் நிலையில் இருப்பவர்களிற் சிலர் வறுமை எல்லையைத் தாண்டும் போது மார்க்கத்திற்கு முரணான வேலைகளை ஹலாலாக்கிக் கொள்வதற்கும், கொலை செய்வதற்கும் கூட அவர்கள் தள்ளப்பட வாய்ப்புண்டு.
இதனால்தான் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் كَادَ الْفَقْرُ أَنْ يَكُوْنَ كُفْرًا வறுமை “குப்ர்” என்ற நிராகரிப்புக்கு நெருங்கிவிட்டதென்று கூறினார்கள்.
ஆகையால் “பக்ர்” என்ற வறுமை வராமல் நாம் அனைவரும் பாதுகாப்புத் தேட வேண்டும். اَللهم إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْكُفْرِ وَالْفَقْرِ என்று ஓதிக் கொள்ள வேண்டும். இவ்வாறு நமது கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள்.
ஆயினும் ஒருவன் “மிஸ்கீன்” ஆக இருப்பது நல்லது. நபீகள் நாயகம் அவர்கள் தங்களை “மிஸ்கீன்” ஆக வைக்குமாறுதான் அல்லாஹ்விடம் கேட்டிருக்கின்றார்கள்.
اللَّهُمَّ أَحْيِنِي مِسْكِيًنَا وَأَمِتْنِي مِسْكِيًنَا وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ
யா அல்லாஹ்! என்னை “மிஸ்கீன்” ஆக வாழ வைப்பாயாக! மிஸ்கீனாகவே என்னை மரணிக்கச் செய்வாயாக! மறுமையில் மிஸ்கீன்களுடன் என்னை எழுப்புவாயாக! என்று “துஆ” செய்துள்ளார்கள். நாமும் இவ்வாறு “துஆ” செய்வோம்.
மிஸ்கீன் என்ற சொல்லுக்கும், பகீர் என்ற சொல்லுக்கும் ஏழை என்று தமிழில் சொல்லிக் கொண்டாலும் விளக்கத்தில் வித்தியாசமுண்டு. “பகீர்” என்பதற்கு விளக்கம் சொல்லிவிட்டேன்.
“மிஸ்கீன்” என்றால் அவன் தனி மனிதனாயிருந்தால் அவனுக்கு அன்றாட அவசியத் தேவைக்கு கிடைக்கின்ற வருவாய் போதுமானவன். அதேபோல் மனைவி மக்களுடன் அவன் வாழ்ந்தால் அவர்கள் அனைவருக்கும் அன்றாட அவசியத் தேவைகளுக்கு கிடைக்கின்ற வருமானம் போதுமானவன்.
“பகீர்” நிலையிலிருப்பவனுக்கு வறுமை இருக்கும். வாழ்க்கையில் கவலையும், பிரச்சினைகளும் இருக்கவே செய்யும்.
இவ்விரு நிலைகளையும் கடந்தவன்தான் “ஙனீ” செல்வந்தன் என்று அழைக்கப்படுவான். செல்வந்தனாவதற்கு விரும்பாதவர்கள் உலகில் ஒரு சிலரே இருப்பார்கள். மற்றவர்கள் விருப்பமுள்ளவர்களாகவே இருப்பார்கள்.
நான் “மிஸ்கீன்” ஆக வாழ்வதை விரும்பினாலும் எனக்குள்ள தேவைகளை நினைக்கும் போது நான் செல்வமுள்ளவனாக இருந்தால் நல்லதென்று நினைக்கிறேன்.
ஏனெனில் “தீன்” மார்க்கத்தோடு தொடர்புள்ள பணிகளில் இன்னும் செய்து முடிக்க வேண்டிய பணிகள் உள்ளன. அவற்றை செய்து முடிக்க வேண்டும்.
நான் இன்று வரை சுமார் 65 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதி அச்சிட்டு இலவசமாகவே வழங்கியுள்ளேன். ஒரு நூலைக் கூட நான் விற்கவில்லை.
இறுதியாக நான் எழுதி வெளியிட்ட நூல் “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற நூலாகும். இது 1654 பக்கங்கள் கொண்ட நூல். இதில் 3000 பிரதிகள் அச்சிட இலங்கைப் பணம் 80 இலட்சம் செலவாகியது. இதைக் கூட இலவசமாகவே வழங்கினேன்.
“வஹ்ததுல் வுஜூத்” “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானம் தொடர்பாக 2000 பக்கங்கள் கொண்ட “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற பெயரில் ஒரு நூல் எழுதி முடித்து தற்போது ஒரு முறை வாசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு சுமார் 90 இலட்சம் தேவையாகுமென்று நினைக்கிறேன்.
இது கால வரை நான் வெளியிட்ட நூல்களின் சகல செலவினங்களையும் எனது அன்புக்குரிய முரீதீன்கள் மட்டுமே பொறுப்பேற்றுச் செய்தனர். அல்லாஹ் அவர்களுக்கு மேலான சுவர்க்கத்தையும், கண்மணி நாயகம் அவர்களின் “ஷபாஅத்”தையும் வழங்கி தனது திருமுகக் காட்சியையும் கொடுப்பானாக!
நமது நாட்டில் “ஸுன்னீ” உலமாஉகள்தான் அதிகமாக உள்ளனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தூய்மையான எண்ணமுள்ளவர்களாக உள்ளனர். மற்றவர்கள் விலாங்கு மீன் போன்றவர்களேயாவர். என்னைப் போல் பலர் முன்வந்தார்களானால் ஓரளவு வஹ்ஹாபிஸத்தை முறியடிக்கவும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை நிலை நாட்டவும், தரீகாக்கள் கூறும் இறைஞானத்தை மக்கள் மத்தியில் பரப்பவும் வழி பிறக்கும். ஆழ்ந்த உறக்கத்திலுள்ள தரீகாவின் ஷெய்குமார்களும், அவர்களின் கலீபாஉகளும் விழித்தார்களாயின் சிறப்பாக இருக்கும்.
أيّها المشائخ الكرام للطّرائق كلّها! والخلفاء العظام! يريد الجاهلون الّذين أعمى الله أبصارهم وبصائرهم ولعب بهم الشيطان كما يلعب الصبيان بالكرة أن يطفئوا نور العقيدة السنّيّة والعقيدة الصوفيّة، ويحتالون لإطفائهما بحيل كثيرة متمسّكين بأذيال بعض الأغنياء وأهل المناصب الدنيويّة، وأنتم أيّها المشائخ والخلفاء راقدون على أسرّة فاخرة وغافلون عمّا يفعل المبطلون، فاستيقظوا أيّها المشائخ والخلفاء من رقادكم واطرحوا بُرَدَكم وبَرَّادَكم واخرجوا من بيوتكم كما تخرج الأُسُدُ، والله يبارك فيكم بركة واسعة ويسعدكم فى الدارين، ويدخلكم الجنّة، فإن سكتّم سقطْتُم،
வறுமையில் பேரின்பம் காண முடியும். பெரியார்களின் வாழ்வு இதற்கு சான்றாக அமைகிறது.
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.