தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இறை ஞானமின்றேல் துன்பத்தில் இன்பம் காணவும் முடியாது. வறுமையில் பொறுமை காக்கவும் முடியாது.
ஒரு கல்வியின் சிறப்பு அதன் கருவைப் பொறுத்ததே!
வாசக நேயர்களே! நான் எழுதுவது இறைஞானம். இந்த ஞானம் பல கோடி ரூபாய்கள் செலவிட்டும், பல அறிஞர்களைத் தேடியலைந்து சந்தித்தும் பெற வேண்டிய கிடைத்தற்கரிய பொக்கிஷமாகும். அல்லது பெறுமதி மிக்க புதையலாகும்.
أَفْضَلُ الْعُلُوْمِ عِلْمُ اللهِ
அறிவுகளில் சிறந்தது இறைஞானமாகும். இறைஞானம் தெரியாதவன் உயிர் வாழ்ந்தும் பயனில்லை. أَوَّلُ الدِّيْنِ مَعْرِفَةُ اللهِ மார்க்கத்தின் முதல் அம்சம் இறைஞானமே! (நபீ மொழி)
قال النبي صلّى الله عليه وسلّم: إِنَّ مِنَ الْعِلْمِ كَهَيْئَةِ الْمَكْنُوْنِ لَا يَعْلَمُهُ إِلَّا الْعُلَمَاءُ بالله تعالى فَإِذَا نَطَقُوْا بِهِ لَا يُنْكِرُهُ إِلَّا أَهْلُ الْغِرَّةِ بِالله تعالى
அறிவில் புதை பொருள் போன்ற அறிவு உண்டு. அதை இறைஞான மகான்களே அறிவர். அதை அவர்கள் கூறினார்களாயின் அல்லாஹ்வை அறியாத ஏமாளிகள்தான் அதை மறுப்பார்கள். (நபீ மொழி)
அறிவில் புதை பொருள் போன்ற அறிவுண்டு என்றால் அதிகமானவர்களுக்குத் தெரியாத அறிவு உண்டு என்பது இதன் கருத்தாகும். ஏனெனில் புதை பொருள் என்றால் பூமிக்குள் மறைந்துள்ள பொருட்களில் மாணிக்கம், மற்றும் அது போன்ற விலை மதிப்பற்ற வஸ்த்துக்கள் அடங்கும்.
புதை பொருளை எழிதில் பெற முடியாது. அதை எடுப்பதற்கு சொல்லொணா இன்னல்களை அனுபவிக்க வேண்டும். பூமியை பல அடி ஆழத்தில் தோண்ட வேண்டும். அது மட்டுமல்ல. அதை அரசாங்கத்துக்கு தெரியாமலும் எடுக்க வேண்டும். புதை பொருள் போன்றதே இறைஞானம். அதை உலமாஉகள் அனைவரிடமிருந்தும் பெற முடியாது. அதற்கென்று விஷேடமானவர்கள் இருப்பர். அவர்களிடமிருந்தே அதைப் பெற வேண்டும். அத்தகையோரைத் தேடிப் பிடிப்பது மிகக் கடினம். ஆயிரம் உலமாஉகளில் இரண்டொரு பேர்கள் மட்டுமே இருப்பார்கள். அவ்வாறிருந்தாலும் கூட அவர்கள் இலைமறை காய் போல் மறைந்தே இருப்பார்கள். அவர்களிடமே மாணிக்கக் கற்களில் மிக்கப் பெறுமதியானவை இருக்கும்.
மறை பொருள் போன்ற அறிவுதான் ஸூபீகளான நாங்கள் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” எனும் இறை ஞானமாகும்.
இந்த அறிவு அதிகமானவர்களுக்கு தெரியாமலிருப்பதினால்தான் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனக்கும், நான் பேசியதை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று ஒன்றும் தெரியாத, மனக் கண் குருடானவர்கள் “பத்வா” வழங்கினார்கள். அதுமட்டுமல்ல. தமது அறியாமை காரணமாக என்னையும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டு என்னுடன் கை கோர்த்தவர்களையும் கொலை செய்ய வேண்டுமென்றும் தீர்ப்புக் கூறினார்கள். இந்த நாடு என்ன நாடென்று கூடத் தெரியாத அறிவிலிகளின் “பத்வா” எவ்வாறிருக்குமென்று சொல்லத் தேவையில்லையல்லவா? “பத்வா” வழங்கினோர் தமது “பத்வா”வை வாபஸ் பெற்று நாட்டில் முஸ்லிம்களிடையே ஒற்றுமைக்கு வழி செய்யவில்லையானால் அல்லாஹ் அவர்களின் வயதைக் குறைத்துவிடுவான்.
اللهم خذهم أخذ عزيز مقتدر، وأرح الرقيب والعتيد عنهم، وسدّ أبواب رزقك عليهم، وضيّق عليهم معيشتهم وعجّل سفرهم لزيارة منكر ونكير، اللهم سلط عليهم شياطين الإنس والجنّ
புதை பொருள் போன்ற இறை ஞானத்தை ஞான மகான்கள் பேசினால் அல்லாஹ்வைக் கொண்டு ஏமாற்றமடைந்தவர்கள் மட்டுமே அவர்களை மறுப்பார்கள் என்ற வசனத்தின் கருத்து என்னவெனில் அல்லாஹ் யாரென்று தெரியாத முழு மடையர்கள்தான் அதை மறுப்பார்கள் என்பதாகும்.
இறை ஞானத்தின் பிரதான அம்சம் என்னவெனில் யாரால் எச்செயல் வெளியானாலும் அச் செயல் அல்லாஹ்வின் செயலென்று விளங்கி அச் செயலைப் பொருந்திக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அன்புக்குரிய வாசக நேயர்களே!
இறைஞானமே அறிவுகளில் சிறந்தது என்ற தலைப்பில் எழுதி வந்த நான், குறிப்பாக மனிதர்களால், பொதுவாக படைப்புக்களால் வெளியாகும் செயல்கள் யாருடைய செயல்கள் என்று எழுத விரும்பி எழுதுகிறேன். ஏனெனில் இந்த விபரமும் இறைஞானத்தை சேர்ந்ததேயாகும். தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் اَلْأَفْعَالُ كُلُّهَا للهِ செயல்கள் யாவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியனவாகும். சொந்தமானவையாகும். வேறு எவருக்கும் எச்செயலும் சொந்தமானதல்ல. படைப்புகள் எதுவாயினும் அதற்கு சுயமான செயல் கிடையாது. وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ அல்லாஹ் உங்களையும் படைத்து உங்களின் செயல்களையும் அவனே படைத்தான் என்பது அல்லாஹ்வின் அருள் வாக்காகும். உங்களைப் படைத்தவனும் அவன்தான், உங்கள் செயல்களைப் படைத்தவனும் அவன்தான். ஸூபீ மகான்களின் கருத்தின் படி உங்களாக வெளியானவனும் அவன்தான். உங்கள் செயலாக வெளியானவனும் அவன்தான் என்பதே சரியான முடிவாகும்.
படைப்புகள் எதுவாயினும் அதன் மூலம் வெளியாகும் செயல் அல்லாஹ்வின் செயலேயன்றி படைப்பின் செயலல்ல. படைப்புக்கள் அல்லாஹ்வின் செயல் வெளியாகும் பாத்திரங்களேயன்றி படைப்புக்களில் எதற்கும் எச்செயலும் கிடையாது. எச்செயலும் அதற்குச் சொந்தமானதுமல்ல.
அப்துல்லாஹ்வுக்கும் செயல் கிடையாது. அப்துர் றஊபுக்கும் செயல் கிடையாது. அவ்விருவரும் அல்லாஹ்வின் “மள்ஹர்” பாத்திரங்களாயிருப்பது போல் அவ்விருவரும் அவனின் செயல் வெளியாகும் பாத்திரங்களாகவே உள்ளார்கள்.
கத்தியாய் வெளியானவனும் அவன்தான். அதன் செயலாக வெளியானவனும் அவன்தான். நெருப்பாக வெளியானவனும் அவன்தான். அதன் செயலாக வெளியானவனும் அவன்தான்.
கத்தியின் செயல் வெட்டுதல். நெருப்பின் செயல் எரித்தல். ஆயினும் கத்திக்கு சுயமாக வெட்டவும் முடியாது, நெருப்புக்கு சயமாக எரிக்கவும் முடியாது. கத்தி வெட்டியது, நெருப்பு எரித்தது என்பது “மஜாஸ் அக்லீ” என்ற வகையைச் சேர்ந்ததேயாகும்.
فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَكِنَّ اللَّهَ قَتَلَهُمْ
நீங்கள் அவர்களைக் கொலை செய்யவில்லை. ஆயினும் அல்லாஹ்தான் அவர்களைக் கொலை செய்தான்.
(திருமறை 8-17)
وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى
முஹம்மதே! நீங்கள் எறிந்த நேரத்தில் நீங்கள் எறியவில்லை. எனினும் அல்லாஹ்தான் எறிந்தான்.
(திருமறை 8-17)
கத்திக்கு சுயமாக வெட்டும் சக்தி கிடையாது. அதேபோல் நெருப்புக்கு சுயமாக எரிக்கும் சக்தியும் கிடையாது. கத்திக்கு சுயமாக வெட்டும் சக்தி உண்டு என்றால் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களின் மகன் நபீ இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கத்தியால் அறுத்த நேரம் அது அவர்களை அறுத்திருக்க வேண்டும். இதேபோல் நெருப்புக்கு சுயமாக எரிக்கும் சக்தி உண்டு என்றால் நும்றூத் என்ற அரசன் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நெருப்புக் கிடங்கில் எறிந்த நேரம் நெருப்பு அவர்களை எரித்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல.
يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ
நெருப்பே! நீ இப்றாஹீம் மீது குளிராகவும், ஈடேற்றமாகவும் இருந்து கொள் என்று அல்லாஹ் நெருப்புக்கு கட்டளையிட்டிருக்கவும் தேவையில்லை. நெருப்புக்கு சுயமாக எரிக்கும் சக்தி இருக்குமாயின் அல்லாஹ் அதற்கு அவ்வாறு கட்டளையிட்டிருக்கத் தேவையுமில்லை. நெருப்பு எரிப்பதும், கத்தி வெட்டுவதும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டிலிருந்ததினால் அவ்வாறு ஒன்றுமே நடக்கவில்லை.
இவ் ஆதாரங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் படைப்புகளில் எதற்கும், எவருக்கும் சுயமான சக்தியோ, சுயமான செயலோ, சுயமான எதுவும் கிடையாது என்பதேயாகும்.
முசம்மில் செய்தான், முனாஸ் அடித்தான், நாய் கடித்தது என்று ஒரு செயலை படைப்பின் பக்கம் சேர்த்துச் சொல்வது “மஜாஸ் அக்லீ” என்ற வகையை சேர்ந்ததேயன்றி அது “ஹகீகத் அக்லீ” என்பதைச் சேர்ந்ததல்ல.
ஹகீகத் அக்லீயும், மஜாஸ் அக்லீயும்.
இவ்வாறு இரண்டு விடயங்கள் உள்ளன. இவ்விரண்டையும் தெளிவாக அறிந்து கொண்டால் எவருக்கும் எந்தப் பிரச்சினையோ, சிக்கலோ இல்லை.
ஒன்று – نسبة الفعل إلى من هو له حقيقة عقلية ஒரு செயலை அதற்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்லுதல் “ஹகீகத் அக்லீ” என்று சொல்லப்படும். உதாரணமாக أنبت الله الشجرة அல்லாஹ் மரத்தை முளைக்கச் செய்தான் என்பது போன்றும், شفى الله المرض அல்லாஹ் நோயை சுகமாக்கினான் என்பது போலுமாகும். இவ்விரு உதாரணங்களும் “ஹகீகத் அக்லீ” என்ற விதிக்குரியவையாகும்.
“இன்பாத்” என்றால் முளைக்கச் செய்தல் என்று பொருள். இச் செயல் அல்லாஹ்வுக்குரியதேயன்றி மனிதர்களுக்குரியதல்ல. மேலே கூறிய உதாரணத்தில் முளைக்கச் செய்தல் என்ற செயலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்;த்துச் சொல்லப்பட்டுள்ளது. எனவே இது “ஹகீகத் அக்லீ” என்ற வகையாகும்.
இதற்கு இன்னுமோர் உதாரணம். அல்லாஹ் நோயை சுகமாக்கினான். “ஷிபா” என்றால் சுகமாக்குதல். இச் செயல் அல்லாஹ்வுக்குரியதேயன்றி மனிதர்களுக்குரியதல்ல. மேலே கூறிய உதாரணத்தில் சுகமாக்கி வைத்தல் என்ற செயலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது. எனவே, இது “ஹகீகத் அக்லீ” என்ற வகையாகும்.
இரண்டு – نسبة الفعل إلى غير من هو له ஒரு செயலை அதற்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் அதை வேறொருவனின் பக்கம் சேர்த்துச் சொல்லுதல். இது “மஜாஸ் அக்லீ” என்று சொல்லப்படும்.
உதாரணமாக أنبت المطر الشجرة மழை மரத்தை முளைக்கச் செய்தது என்பது போலும், شفى الطبيب المرض நோயை வைத்தியர் சுகமாக்கினார் என்பது போலுமாகும். இவ்விரு உதாரணங்களும் “மஜாஸ் அக்லீ” என்ற விதிக்குரியதாகும்.
இவ்விரு உதாரணங்களும் மேலே சொன்ன உதாரணங்களுக்கு மாற்றமானவையாகும்.
இவ்விரு உதாரணங்களிலும் முந்தின உதாரணத்தில் முளைக்கச் செய்தல் என்ற செயலை அதற்குரியவன் பக்கம் சேர்க்கமால் அதோடு தொடர்புள்ள வேறொருவனின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
இரண்டாவது உதாரணத்தில் சுகமாக்கி வைத்தல் என்ற செயலை அதற்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் அதோடு தொடர்புடைய வேறொருவன் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
முந்தின உதாரணத்தில் மழை மரத்தை முளைக்கச் செய்துள்ளதென்றால் மழை ஒரு காரணமாக இருந்ததால் அதன் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
இரண்டாம் உதாரணத்தில் வைத்தியன் நோயை சுகமாக்கினான் என்றால் அல்லாஹ் நோயை சுகமாக்குவதற்கு வைத்தியன் ஒரு காரணமாக இருந்ததால் அதன் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு இரண்டு விதமாகவும் சொல்ல முடியும். இவ்வாறு சொல்வதால் “குப்ர்” என்ற நிராகரிப்போ, “ரித்தத்” என்ற மத மாற்றமோ ஏற்படாது. இதற்கு இன்னும் விளக்கம் உண்டு. திருக்குர்ஆனிலும் ஆதாரம் உண்டு. அடுத்த தொடரில் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ். வாசகர்கள் தொடர்ந்து வாசித்தால் பயன் நிச்சயம்.
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.