அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
உங்களின் இவ்வருட “சகாத்” நிதியை ஸூபிஸத்திற்கு மாற்றமான எந்த ஓர் அமைப்புக்கும் கொடுத்துவிடாமல் பயனுள்ள வழியில் கொடுக்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.
நமது பள்ளிவாயலில் மாதாந்தம் சம்பளம் பெறும் அனைவருக்கும் உங்கள் சகாத் நிதியில் முன்னுரிமை கொடுக்குமாறும், அவர்களின் குடும்ப நிலைமைகளை கருத்திற் கொண்டு கூட்டியும், குறைத்தும் கொடுக்குமாறும், மற்றும் உங்களின் இரத்த உறவுகளையும், ஸூபிஸ சமுகத்தவர்களில் நமது பள்ளிவாயலோடு தொடர்புள்ளவர்களையும், தொழில் செய்ய முடியாத அங்கவீனர்களையும், தமது கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தமது வறுமையை வெளிப்படுத்தாமல் வாழும் ஸூபிஸ சமுகத்தைச் சேர்ந்தவர்களையும், றப்பானீ மௌலவீமார்களையும், பள்ளிவாயல் கட்டிட வேலையாட்களையும் சகாத் நிதியில் சேர்த்துக் கொள்ளுமாறும் உங்களை அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.
நீங்கள் ஒருவருக்கு வழங்கும் பணம் அவரின் ஏதாவதோர் தேவையை நிறைவு செய்யக் கூடியதாக இருப்பது மிகவும் சிறந்தது.
மார்க்க கல்வி கற்கும் அல்ஜாமிஅதுர் றப்பானிய்யா மாணவர்களையும் மறந்து விடாதீர்கள். அவர்களுக்கு வழங்கும் நிதி மிகப்பயனுள்ளதாக இருக்கும்.
பின்னால் நான் எழுதுகின்ற நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டு நீங்கள் எவருக்கு எதைக் கொடுத்தாலும் அல்லாஹ்வுக்கே கொடுக்கிறீர்கள் என்பதையும், அவன்தான் நோயாளியாக வருபவனும், பசியாளியாக வருபவனும், தாகமுள்ளவனாக வருபவனும் என்பதை மனதிற் கொண்டு உங்கள் நிதியை வழங்குங்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ، فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي، يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ، فَلَمْ تَسْقِنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي ‘ (صحيح مسلم 2569)
மறுமை நாளில் அல்லாஹ் ஒரு மனிதனிடம், ஆதமின் மகனே! நான் நோயாளியாக இருந்தேன். நீ என்னைப் பார்க்க வரவில்லை என்று அவனிடம் சொல்வான். அதற்கு அவன், நீ உலக மக்களின் இரட்சகனாக இருக்கும் நிலையில் நான் எவ்வாறு உன்னைப் பார்க்க வருவது என்று சொல்வான். அதற்கு அல்லாஹ், எனது அடியான் இன்னான் நோயாளியாயிருந்தான். அவனை நீ அறியவில்லையா? நீ அவனைப் பார்த்திருந்தால் என்னை அவனிடம் பெற்றிருப்பாய் என்று சொல்வான்.
ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ தரவில்லை என்று அவனிடம் அல்லாஹ் சொல்வான். அதற்கவன் நீ உலக மக்களின் இரட்சகனாயிருக்கும் நிலையில் நான் உனக்கு உணவு தருவது எவ்வாறு என்று சொல்வான். அதற்கு அல்லாஹ் நீ எனது இன்ன அடியான் உன்னிடம் வந்து உணவு கேட்டான். நீ அவனுக்கு உணவு வழங்கவில்லை. நீ அவனுக்கு உணவு வழங்கியிருந்தால் அதை என்னிடம் பெற்றிருப்பாய் என்பது தெரியாதா என்று சொல்வான்.
ஆதமின் மகனே! நான் உன்னிடம் குடிக்க நீர் தருமாறு கேட்டேன். நீ எனக்கு தரவில்லை என்று சொல்வான். அதற்கவன் இறைவா! நீ உலக மக்களின் இரட்சகனாயிருக்கும் நிலையில் நான் எவ்வாறு உனக்கு பருகத்தருவது என்று சொல்வான். அதற்கு அல்லாஹ் எனது அடியான் உன்னிடம் பருகத்தருமாறு கேட்டான். நீ அவனுக்கு பருகுவதற்கு வழங்கவில்லை. நீ அவனுக்கு வழங்கியிருந்தால் அதை என்னிடம் பெற்றிருப்பாய் என்று கூறுவான்.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்
ஹதீது எண்: 2569
மேற்கண்ட ஹதீதில் கூறப்பட்ட விடயம் மறுமையில் அடியானுக்கும், இறைவனுக்கும் நடைபெறவுள்ள உரையாடலாகும்.
ஒருவன் நோயுற்றால் அவனை மற்றவர்கள் நோய் பார்க்கச் செல்வது “ஸுன்னத்” நபீ வழியாகும். இதேபோல் ஒருவன் இன்னொருவனிடம் தனது பசிக்காக உணவு கேட்டால் அவனுக்கு உணவு வழங்குவதும் “ஸுன்னத்” நபீ வழியாகும். இதேபோல் ஒருவன் இன்னொருவனிடம் தனது தாகத்திற்காக நீர் கேட்டால் அவனுக்கு நீர் கொடுப்பது “ஸுன்னத்” நபீ வழியாகும்.
உலகில் யார் நோயாளியாக இருந்தான், யார் அவனைப் பார்க்கச் சென்றவன் முதலான மேற்கண்ட அனைத்து விபரங்களையும் அல்லாஹ் அறிந்தவன்தான். மறுமையில் அடியானிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது அவனுக்கில்லை.
மேலும் நீ அவ்வாறு செய்தாயா? இவ்வாறு செய்தாயா? என்று கேட்டு நீ அவ்வாறு செய்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய் என்றெல்லாம் சொல்லத் தேவையில்லை.
இவ்வாறெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க எந்த வேலையுமில்லாமல் அவன் ஓய்வாக இருப்பவனுமல்ல. அவனுக்கு ஒரு நொடியில் கோடிக்கணக்கான “தஜல்லீ” வெளிப்பாடுகள் உண்டு. “தஜல்லீ” உண்டு.
எனவே, இவ்விடயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வருதல் வேண்டும். அதாவது “வஹ்ததுல் வுஜூத்” அடிப்படையில் உலகில் நோயாளியாவதும், தாகமுள்ளவனாவதும், பசியுள்ளவனாவதும் அல்லாஹ்தான் என்ற, இன்று உலமாஉகளிற் பலரால் எதிர்க்கப்படுகின்ற குறித்த ஞானம் உண்மைதான் என்பதை உணர்த்துவதற்காகவே அவ்வாறு அல்லாஹ் அடியானோடு உரையாடினான் என்பதை ஆலிம்களும், மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றை சிந்திக்காமலும், இது தொடர்பாக விடயம் தெரிந்தவர்களிடம் விசாரிக்காமலும், இவ்வாறான கருத்தை வெளியிட்ட என்னை ஒரு தரமேனும் விசாரிக்காமலும் “பத்வா” வழங்கிய முல்லாக்கள் எவராயினும் அல்லாஹ்வின் பிடியிலிருந்து ஓர் அணுவளவேனும் தப்பமாட்டார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக வட்டிலப்பம் கொடுத்து நீதிவான்களை மயக்கி எனக்கு எதிராக அவர்களை இயக்க நினைத்த படுபாவி, மனக்கண்ணும், வெளிக்கண்ணும் குருடான அந்தகன் ரிஸ்வி புரிந்து கொள்ள வேண்டும். சாம்பல் கேட்டு சாதனை படைத்த, இன்று சத்தமே இல்லாமல் தலை மறைவாகியுள்ள ரிஸ்வீ மறுமையில் அல்லாஹ்வின் நீதி மன்றில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். தன்னை மிகைத்த அறிவாளி இலங்கையில் ஒருவருமில்லை என்று மார்தட்டி நின்ற அவரை மறுமையில் மக்கள் கண்டு தலையில் கை வைத்து வியந்து வியர்த்துப் போக வேண்டும்.
اللهم خذه أخذ عزيز مقتدر، وأعدِمه بقدرتك التي تُعجز الملوك والسلاطين، وقَهِّرْه يا قهّار ويا من بيده ملكوت كلّ شيئ، وخُذْ أيضا أذيالَه الّذين قاموا معه لإحقاق الباطل بحرمة هذا الشّهر المبارك، وبحرمة الصّائمين والقائمين فى هذا الشّهر المبارك، يا أحكم الحاكمين، ويا ذا الجلال والإكرام، ويا من لا يعجزه قهر الجبابرة، يا ربّي أنا عبدٌ من عبادك ذليل حقير فقير عاجز أرفع يديّ إليك أن تبطشه وأذياله الّذين قاموا معه ضدّ العقيدة الصّوفيّة، ببطش شديد، كما قلت فى كتابك إنّ بطش ربّك لشديد،
ஸூபிஸ சமுகமே!
“சகாத்” கொடுக்கும் செல்வந்தர்கள் சரியாக கணக்குப் பாரத்துக் கொடுங்கள். நீங்களாக கற்பனை செய்து கொண்டு ஒரு தொகையைக் கொடுக்காதீர்கள். உங்களுக்கு கடமையாகும் தொகையை கொடுப்பதோடு நின்று விடாமல் உங்களுக்கு கடமையில்லாது போனாலும் மேலதிகமாகவும் கொடுங்கள். உங்களிற் சிலர் இவ்வாறு செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனினும் நான் நினைவூட்டுகிறேன். நீங்கள் மனச்சாட்சிக்கு முரணின்றி நடந்தால் உங்கள் செல்வம் பெருகும். அது நிலைத்தும் நிற்கும்.
ஸூபிஸ சமுகத்தின் நடுத்தரவாதிகளே!
“சகாத்” கொடுப்பது உங்களுக்கு கடமையில்லாது போனாலும் உங்களால் முடிந்தவரை உறவினர்களில் வறுமைக் கோட்டில் நிற்பவர்களுக்கும், அதேபோல் அயலவர்களில் ஏழைகளுக்கும் வழங்கி அவர்களின் “துஆ”வைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
25.04.2021