நான் “அஹத்” என்ற சொல்லுக்கு அந்த வரலாறை ஆதாரமாகக் கொண்டு எழுதிய விளக்கம் மூலம் “அஹத்” என்ற சொல்லுக்கு ஒருவன் என்று பொருள் கொள்ளாமல் ஏகன் என்று பொருள் கொள்வதே சரியென்றும் குறிப்பிட்டு அல்லாஹ் ஏகன், அவன் ஏகமுமானவன் என்று விளக்கம் எழுதியிருந்தேன். உன்னிப்பாக வாசித்தவர்கள் உண்மை எதுவென்று உணர்ந்திருப்பார்கள்.
ஆமிர் இப்னுத் துபைல், முஹம்மதே! நீ சொல்லும் தெய்வம் தங்கத்தினாலானதா? வெள்ளியினாலானதா? இரும்பினாலானதா? என்று கேட்ட போதுதான் இக்லாஸ் அத்தியாயம் இறங்கியது என்றதோடு அவனின் வரலாறை நிறுத்தியிருந்தேன்.
இப்போது தொடர்கிறேன்.
فقال عامرٌ مَا لِيْ إن أسْلمْتُ؟ قال عليه الصلاة والسلام لَكَ ما لِلْمسلمين، وعليك ما عليهم، قال عامر أتجعلُ لي الأمر بعد موتك؟ قال صلّى الله عليه وسلّم ليس لك ذلك ، ولا لِقومِك، ولكن ذلك إلى الله تعالى يجعله حيث يشاء، قال عامر فتَجْعَلُنِيْ على الوَبَرِ وأنت على المَدَر، قال لا، قال فماذا تجعل لي؟ قال عليه الصلاة والسّلام أجعلُ لك أعنّة الخيل تغزو عليها، قال أَوَ لَيْسَ ذَلِكَ الْيَوم لي؟ قال عليه الصّلاة والسّلام لا، قال عامر قُمْ معي أُكلِّمْكَ، فقام معه رسول الله صلّى الله عليه وسلّم، ووكان قد قال عامرٌ لأربد بن قيسٍ إذا رأيتَنِي أكلّمُه دُرْ خلفه واضربْه بالسيف، فجاء عامر بالنبي صلّى الله عليه وسلّم ووضَعَ يدَه على عاتقه يُكلِّمُه، ويقول له يا محمد إنّ ربّك الّذي تدعونا إليه كيف هو؟ وأيّ شيئ يفعل؟ وما أَشْبَهَ ذلك، وأشار عند ذلك إلى أربد بن قيس أنِ اضْرِبْهُ، فلمّا أراد أربد بن قيس أن يَخْتَرِط سيفَه فاخترطَ مِقدارَ شبرٍ، فحبسهُ الله تعالى فلم يقدر على سلِّه، وجعل عامر يومئ إليه وهو لا يستطيع سلَّه، فرأى رسول الله صلّى الله عليه وسلّم مِن خلفِه، لأنّه كان يُبصرُ من خلفه كما كان بيصر من أمامه، فقال اللهم اكْفِنِيْهِمَا بما شئتَ فولّيا هاربين،
தமிழாக்கம்:
அப்போது ஆமிர், நான் இஸ்லாமானால் எனக்கு என்ன கிடைக்குமென்று பெருமானாரிடம் கேட்டான். நபீ மணி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதுவெல்லாம் கிடைக்கின்றதோ அதுவெல்லாம் உனக்கும் கிடைக்கும் என்றார்கள். அப்போது ஆமிர், நீ மரணித்தால் என்ன கிடைக்குமென்று கேட்டான். அதாவது பதவி கிடைக்குமா என்று வினவினான். உனக்கோ, உனது கூட்டத்தினருக்கோ அவ்வாறு ஒன்றும் கிடைக்காது. அது அல்லாஹ்வைப் பொறுத்த விடயம் என்றார்கள்.
அப்போது ஆமிர், என்னை காட்டில் வைத்துவிட்டு நீ வீட்டில் இருக்கின்றாய் என்று கூறிவிட்டு எனக்கு என்னதான் தருவீர் என்று கேட்டான். அதற்கு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நீ ஏறி யுத்தம் செய்வதற்காக குதிரை தருகிறேன் என்றார்கள். அதற்கவன் இன்று எனக்கு அது இல்லையா என்று கேட்டான். இல்லை என்றார்கள் எங்கள் நபீ.
அப்போது ஆமிர் உன்னுடன் பேச வேண்டும் எழுந்து வா என்றான். அவனுடன் பேசுவதற்காக நபீயவர்கள் எழுந்து சென்றார்கள்.
இந்த ஆமிர் என்பவனும், அர்பத் இப்னு கைஸ் என்பவனும் நபீயவர்களிடம் வருமுன் முஹம்மதைக் கொலை செய்ய வேண்டும். அதற்கு வழி என்னவெனில் நான் முஹம்மதோடு பேசுவதையெல்லாம் பேசிவிட்டு உன்னுடன் தனிமையாக பேச வேண்டும் எழுந்து வா என்று சொல்வேன். அவர் எழுந்து வருவார். நான் அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது நீ அவரின் பின்பக்கமாக வந்து அவரை வாளால் வெட்டிக் கொலை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே ஆமிர், அர்பத் இப்னு கைஸ் என்பவனிடம் சொல்லி வைத்திருந்தான். சதித்திட்டம் தீட்டியிருந்தான்.
நபீ அவர்களை தனிப்பட்ட இடத்திற்கு அழைத்து வந்த ஆமிர் நபீ பெருமானின் திருத் தோளில் தனது கையை போட்டுக் கொண்டு அவர்களுடன் பேசத் தொடங்கினான். முஹம்மதே! நீ சொல்கின்ற கடவுள் எப்படியானவன்? அவன் என்ன செய்கிறான்? இன்னும் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது மற்றவன் பெருமானாருக்குப் பின்புறம் வந்து உறையில் வாளை வைத்துக் கொண்டு ஆயித்தமாக நின்றான். அப்போது ஆமிர் தன் தோழன் அர்பத் என்பவனுக்கு வெட்டு என்று கண்ணால் ஜாடை காட்டினான்.
அர்பத் என்பவன் பெருமானாரை வெட்டிக் கொல்வதற்காக உறையிலிருந்த வாளை உருவினான். ஒரு சான் அளவுதான் வாள் வந்தது. முழுமையாக வரவில்லை. அல்லாஹ் அந்த வாளைப் பிடித்துக் கொண்டான். ஆமிர் வெட்டு என்று சொல்லிக் கொண்டே இருந்தான். அர்பத் என்பவனால் வாளை உருவ முடியாமற் போயிற்று. இவர்கள் இருவரின் நடவடிக்கைகளை முன்னால் பாரப்பது போல் பின்னாலும் பார்க்கும் சக்தி வழங்கப்பட்ட பெருமானார் அவர்கள் கண்டதும் இறைவா! யா அல்லாஹ்! இவ்விருவரின் தீமையிலிருந்தும் என்னைப் பாதுகாத்துக் கொள்வாயாக என்று பிரார்த்தனை செய்தார்கள். அதோடு அவ்விருவரும் பயத்தால் நடுங்கியவர்களாக ஓடிவிட்டார்கள்.
وأرسل الله على أربد بن قيس صاعقة فى يوم صَحْوٍ ليس فيه غَيْمٌ فأحرقتْه، وطعن عامر بن الطّفيل فخرج غدّة من عُنقه، فأتى إلى امرأة سَلُوليّة فاشتدّ وجعه من تلك الطّعنة، فكان يقول غُدّةٌ كغُدّة البعير، فظهر له أثر الموت فى بيت سَلُوليّة، ثمّ دعا بفرسه وركبه وأجراه حتّى مات على ظَهر فرسه،
அவ்விருவரும் ஓடிக் கொண்டிருந்த போது மேகமே இல்லாத தெளிவான நாளில் அர்பத் இப்னு கைஸ் என்பவன் மீது அல்லாஹ் ஓர் இடியை இறக்கி அவனை எரித்தான். ஆமிர் இப்னுத்துபைல் என்பவனின் கழுத்தில் ஒட்டகத்துக்கு ஏற்படுகின்ற ஒரு வகைத் தீரா நோயை ஏற்படுத்தி அவனை அழித்தான்.
இறைவன் பெறவுமில்லை, அவன் பிறரால் பெறப்படவுமில்லை. (அவன் எவரையும் பெறவுமில்லை. எவராலும் பெறப்படவுமில்லை)
இறைவன் இவ்வாறு தன்னை அறிமுகம் செய்ததற்கு ஏதாவதொரு காரணம் இருக்க வேண்டுமல்லவா? சிந்திப்போம். இன்ஷா அல்லாஹ். உண்மையை சந்திப்போம்.
இதற்கான சுருக்கமான காரணம் பின்வருமாறு.
“இக்லாஸ்” அத்தியாயம் அருளப்படுமுன் திரு மக்கா நகரில் வாழ்ந்து கொண்டிருந்த “காபிர்”களிற் சிலர் اَلْمَلَائِكَةُ بَنَاتُ اللهِ மலக்குகள் – அமரர்கள் அல்லாஹ்வின் பெண் மக்கள் என்றும், இன்னும் சிலர் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மகன் اَلْمَسِيْحُ اِبْنُ اللهِ என்றும் கூறினார்கள். அவர்களின் இத்தவறான கூற்றை மறுப்பதற்காகவே இவ்விரு வசனங்களும் அருளப்பட்டவை என்று கூறப்படுகிறது.
இன்னும் இறைவன் எவரையும் பெறவில்லை என்ற வசனம் அவனுக்கு மனைவி இல்லை என்பதையும், அவனை எவரும் பெறவில்லை என்ற வசனம் அவனுக்கு பெற்றோர் இல்லை என்பதையும் உணர்த்துகிறதென்றும் கொள்ள முடியும்.
لَمْ يَلِدْ
அவன் பெறவில்லை என்ற வசனம் படைப்புக்கள் யாவையும் அவன் படைத்தவனாயினும், அல்லது அவையாவும் அவனின் வெளிப்பாடாயினும் அவனிலிருந்து எதுவும் பிரிந்து வரவில்லை என்பதையும், இதேபோல் لَمْ يُولَدْ அவனை யாரும் பெறவில்லை என்ற வசனம் அவன் எதிலிருந்தும் பிரிந்து வரவில்லை என்பதையும் உணர்த்தும் பாணியில் அமைந்துள்ளதென்றும் கொள்ள முடியும்.
அவனோ ஆணுமில்லாத, பெண்ணுமில்லாத ஒளிமயமாயிருக்கும் நிலையில் அவன் யாரைப் பெற்றான்? அவனை யார் பெற்றான்? என்று எவ்வாறு சிந்திக்க முடியும்? அவனின் எதார்த்தம் மனிதனின் அறிவைக் கடந்த விடயமும், அவனின் சிந்தனைக்கு எட்டாத விடயமுமாகும். எட்டாக்கனிக்கு கொட்டாவி விடுதல் எங்கனம் சரியாகும்? அவன் கடவுள். உள்ளத்தில் ஊறும் எண்ணங்கள் யாவையும் கடந்தவன்.
عَلَا رَبُّنَا عَنْ كَيْفَ أَوْ أَيْنَ أَوْ مَتَى – وَعَنْ كُلِّ مَا فِى بَالِنَا يَتَصَوَّرُ
இறைவன், எப்படி? எங்கே? எப்போது? என்பவற்றை விட்டும், இன்னும் மனிதனின் உள்ளத்தில் உருவாகும் அனைத்தை விட்டும் உயர்ந்தவனாவான். இவற்றுக்கு அப்பாலுள்ளவனுமாவான்.
அவன் படைத்த எண்ணற்ற படைப்புக்களில் அவனை எவ்வாறு அறிய வேண்டுமோ அவ்வாறு அறிந்தவர் எவருமில்லை. நபீகட்கரசருமில்லையா? இல்லை. அதனால் அவர்களின் உயர்வில் எக்குறையுமில்லை. ஏனெனில் எவருமில்லையென்றால் அது அவர்களுக்கு குறைவை ஏற்படுத்தாது.
அவர்களே مَا عَرَفْنَاكَ حَقَّ مَعْرِفَتِكَ இறைவா! உன்னை எவ்வாறு அறிய வேண்டுமோ அவ்வாறு நாங்கள் அறியவில்லை என்ற அவர்களின் அருள் மொழியில் வந்துள்ள “நாங்கள்” என்ற பன்மையை குறிக்கும் சொல் நபீமார், றஸூல்மார், வலீமார் அனைவரையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். அவர்களில் ஒவ்வொருவரும் தமது தரத்திற்கேற்பதான் அறிந்து கொண்டார்களேயன்றி அவனின் தரத்திற்கேற்றவாறு அறியவுமில்லை, அறியவும் முடியாது.
இறைஞான மதுக்கடலில் ஒரு சொட்டை அருந்திவிட்டு போதையால் தள்ளாடியவர்களும் உளர். வயிறு புடைக்க அருந்திவிட்டு ஆடாமலும், அசையாமலும் இருந்தவர்களும் உளர்.
அவன் எவரையும் பெறவுமில்லை. அவனை எவரும் பெறவுமில்லை என்றும், அவன் எதிலிருந்தும் பிரிந்து வந்தவனுமல்ல, அவனிலிருந்து எதுவும் பிரிந்து வந்ததுமல்ல என்றும் நம்பிக்கை கொள்வது முதற் கடமை. முதல் நம்பிக்கை.
இறைவன்தான் அனைத்திற்கும் கருவேயன்றி அவனுக்கு கரு இருப்பது அசாத்தியம்.
தானாய்த் தனியவனாய்த்
தன் மயமாய் தற் சொருபாய்த்
தானாய்த் தனி நினைவாய்த்
தானானாய். தானே நீ
ஸல்லல்லாஹுவான நபீ
ஸாதாத்தவரொளியால்
“குல்லுன்” படைத்தனையே கூர்ந்து……
என்று ஓர் இறைஞானி பாடியுள்ளார்.
எது இன்னொன்றைத் தனக்கு கருவாகக் கொள்ளாமல் தானே மற்றதற்கு கருவாயுள்ளதோ அதுவே “தாத்” பிரம்மம் என்றும், “வுஜூத்” உள்ளமை என்றும் சொல்லப்படும்.
அந்தக் கரு மதத்தைக் கடந்தது. மொழியைக் கடந்தது. நிறத்தைக் கடந்தது. எடையைக் கடந்தது. அகலம், நீளம், ஆழம் என்ற கட்டுப்பாடுகளைக் கடந்தது. அனைத்துப் புலன்களையும் கடந்தது. ஆண், பெண் என்ற குறிப்பற்றது.
اِعْلَمْ أَنَّ مُطْلَقَ الذَّاتِ هُوَ الْأَمْرُ الَّذِيْ تَسْتَنِدُ إِلَيْهِ الْأَسْمَاءُ وَالصِّفَاتُ فِى عَيْنِهَا، لَا فِى وُجُوْدِهَا، فَكُلُّ اسْمٍ أَوْ صِفَةٍ اِسْتَنَدَ إِلَى شَيْئٍ فَذَلِكَ الشَّيْئُ هُوَ الذَّاتُ، سَوَاءٌ كَانَ مَعْدُوْمًا كَالْعَنْقَاءِ، فَافْهَمْ، أَوْ مَوْجُوْدًا، وَالْمَوْجُوْدُ نَوْعَانِ، نَوْعٌ مَوْجُوْدٌ مَحْضٌ، وَهُوَ ذَاتُ الْبَارِيْ سُبْحَانَهُ وَتَعَالَى، وَنَوْعٌ مَوْجُوْدٌ مُلْحَقٌ بِالْعَدَمِ، وَهُوَ ذَاتُ الْمَخْلُوْقَاتِ،
பொதுவாக “தாத்” என்பது – அல்லாஹ்வின் விடயத்திலன்றி – எதன் பால் “அஸ்மாஉ” பெயர்களும், “ஸிபாத்” தன்மைகளும் அதன் உள்ளமையைக் கவனிக்காமல் அந்த வஸ்த்தை மட்டும் கவனித்துச் சேர்கின்றதோ அது “தாத்” எனப்படும்.
எனவே, எந்த ஒரு பெயர், அல்லது ஒரு தன்மை எதைச் சேர்கிறதோ அது “தாத்” எனப்படும். அந்த “தாத்” யானையிறாஞ்சிப் பட்சி போல் இல்லாத ஒன்றாயினும் (இதை விளங்கிக் கொள்) அல்லது உள்ளதாயினும் சரியே! உள்ளதென்பதும் இருவகை. ஒன்று. உண்மையில் உள்ளதே. அது அல்லாஹ்வின் “தாத்” போன்று. இரண்டு – இல்லாமற் போவதுடன் சேர்க்கப்பட்ட உள்ளமையாகும். அது படைப்புகளின் “தாத்”துகள் போன்று.
وَاعْلَمْ أَنَّ ذَاتَ اللهِ تَعَالَى عِبَارَةٌ عَنْ نَفْسِهِ الَّتِيْ هُوَ بِهَا مَوْجُوْدٌ، لِأَنَّهُ قَائِمٌ بِنَفْسِهِ، وَهُوَ الشَّيْئُ الَّذِيْ اِسْتَحَقَّ الْأَسْمَاءَ وَالصِّفَاتِ بِهُوِيَّتِهِ، فَيَتَصَوَّرُ بِكُلِّ صُوْرَةٍ يَقْتَضِيْهَا كُلُّ مَعْنًى فِيْهِ، أَعْنِيْ اِتَّصَفَ بِكُلِّ وَصْفٍ يَطْلُبُهُ كُلُّ نَعْتٍ، وَاسْتَحَقَّ لِوُجُوْدِهِ كُلَّ اسْمٍ دَلَّ عَلَى مَفْهُوْمٍ يَقْتَضِيْهِ الْكَمَالُ، وَمِنْ جُمْلَةِ الْكَمَالَاتِ عَدَمُ الْإِنْتِهَاءِ وَنَفْيُ الْإِدْرَاكِ ، فَحُكِمَ بِأَنَّهَا لَا تُدْرَكُ، وَأَنَّهَا مُدْرِكَةٌ لَهُ لِاسْتَحَالَةِ الْجَهْلِ عَلَيْهِ، فَافْهَمْ،
நீ அறிந்து கொள்! அல்லாஹ்வின் “தாத்” என்பது தன்னைக் கொண்டு உண்டானதொன்றாகும். ஏனெனில் அது – அல்லாஹ்வின் “தாத்” தன்னைக் கொண்டு உண்டாகி தன்னைக் கொண்டு நிற்பதாகும். அதுவே அனைத்து திருநாமங்களையும், விட்டுப் பிரியாத தன்மைகளையும் தன்னைக் கொண்டே தகுதியாக்கிக் கொண்டதாகும். அந்த “தாத்” அதிலேற்படுகின்ற பொருளுக்கேற்ப “ஸூறத்” உருவம் பெறத் தகுதியானது. உருவம் பெறும். எனது கருத்து என்னவெனில் அந்த “தாத்” என்னென்ன தன்மைகளில் வெளியாக வேண்டுமோ அத்தன்மையில் வெளியாகும் என்பதாகும்.
கமால் – பூரணம் என்பது என்ன கருத்தை அறிவித்ததோ அந்தக் கருத்திற்குரிய பெயர்கள் அனைத்தையும் அந்த “தாத்” தனதாக்கிக் கொண்டது. பூரணம் என்பதற்கு முடிவுமில்லை. அதைச் சூழ்ந்து கொள்ளவும் முடியாது. இதனால்தான் அந்த “தாத்”தை எட்டிக் கொள்ள முடியாதென்று முடிவு செய்யப்பட்டது. எனினும் அந்த “தாத்” தன்னை அறிந்ததும், சூழ்ந்ததுமேயாகும். ஏனெனில் அல்லாஹ் தன்னை அறியாமலிருக்க முடியாது. அவனுக்கு அறியாமை என்பது அசாத்தியமானதாகும்.
“தாத்” பற்றி மேற்கண்டவாறு கூறியவர் “இன்ஸான் காமில்” நூலாசிரியர் மௌலானா, அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்களேயாவர்.
இன்ஸான் காமில்,
முதலாம் பாகம், பக்கம்: 16.
இறை ஞானத்தாகமுள்ளவர்களே!
“தாத்” தொடர்பாக மேலே அறபு மொழியில் கருத்துக்கள் தந்த மகானின் கருத்துக்களை நான் தமிழில் தந்துள்ளேன்.
இறைஞானம் தொடர்பான முன்னறிவுள்ளவர்கள் மேற்கண்ட கருத்துக்களை நூறு வீதம் விளங்காது போனாலும் ஓரளவேனும் விளங்கியிருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆயினும் இது தொடர்பான முன்னறிவு அறவே இல்லாதவர்கள் தமது தலை முடிகளை இரு கைகளாலும் பிசைந்து பிசைந்து இது என்ன மொழியோ? ஒன்றுமே புரியவில்லை என்று இறைஞானத்தின் பக்கம் தலை வைத்துக் கூட உறங்கமாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நானும் ஒன்றுமே புரியாத ஆரம்ப காலத்தில் தலைமுடியை பிசைந்தவன் மட்டுமல்ல. என் தலைமுடியை பிச்சிப் பிச்சி எடுத்தவனும்தான். அது மட்டுமல்ல. ஞானமும், கத்திரிக்காயும் என்று சொன்னவனாக ஞான நூலொன்றை கிழித்தெறிந்தவனும்தான். அல்லாஹ் என்னை மன்னிப்பான்.
எனினும்
وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا
என்ற இறை மறையாம் திரு வசனத்தாலும்,
وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ
என்ற அருள் மறை வசனத்தாலும், அண்ணலெம் பெருமான் அஹ்மதெங்கள் கோமான் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின்
اَلْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ أَخَذَهَا حَيْثُ وَجَدَهَا
என்ற அருள் மொழியாலும் உணர்த்தப்பட்டும், கவரப்பட்டும், சுண்டி இழுக்கப்பட்டும் இன்று கடலைக் கண்ணால் காணாது போனாலும் அதன் இரைச்சலைச் செவியேற்று கடலென்று ஒன்று உண்டு என்ற நம்பிக்கைக்கு வந்துள்ளேன்.
அறபு வசனங்களின் பொருள்:
எவர்கள் எங்களிலே “ஜிஹாத்” போர் செய்கிறார்களோ அவர்களுக்கு எங்களின் வழிகளைக் காட்டிக் கொடுப்போம். (திருக்குர்ஆன் 29-69)
கற்களிற் கூட சில கற்களுண்டு. அவற்றை அடித்து உடைத்தால் அவற்றிலிருந்து பல நதிகளே பெருக்கெடுக்கும். (திருக்குர்ஆன் 2-74)
இறைஞானம் என்பது ஒரு விசுவாசியின் தவறிப்போன – காணாமற் போன பொருளாகும். அவன் அதை எங்கு கண்டாலும் எடுத்துக் கொள்ள வேண்டும். (நபீ மொழி)
لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ என்ற இரு வசனங்களுக்கும் விளக்கம் எழுதிய நான் அல்லாஹ்வின் “தாத்” தொடர்பான, இன்ஸான் காமில் நூல் ஆசிரியர் குறித்த தனது நூலில் அறபு மொழியில் “தாத்” தொடர்பாக எழுதியதை தமிழில் மொழியாக்கம் செய்திருந்தேன்.
நான் எழுதிய மொழியாக்கத்தின் சுருக்கத்தை இறைஞானத்தின் ஆரம்ப அறிவுள்ளவர்கள் ஓரளவு விளங்கினாலும் கூட அவர்களால் சரியான சுருக்கத்தை விளங்கியிருக்க முடியாதென்று வேதனைப்பட்டவனாக புரியாது போனாலும் தொடர்ந்தும் முயற்சிக்க வேண்டுமென்பதற்காக சில ஆதாரங்களை எழுதியிருந்தேன். ஆயினும் விளக்கம் எழுதக் கிடைக்கவில்லை. இப்போது அவற்றின் விளக்கங்களை ஓரளவு கூறி “தாத்” தொடர்பான விளக்கத்தை எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்.
முதல் ஆதாரம்:
وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا
எங்களில் – எங்களிலே “ஜிஹாத்” போர் செய்பவர்களுக்கு எங்களின் வழிகளை காட்டிக் கொடுப்போம். (திருக்குர்ஆன்: 29-69)
இந்த திரு வசனம் இறைஞானம் விளங்காதவர்களுக்கு மன நிம்மதியை வழங்குவதுடன், தொடர்ந்து கடும் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் உணர்த்துகிறது.
இத்திருவசனம் وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْ سَبِيْلِ اللهِ அல்லாஹ்வின் பாதையில் போர் செய்தவர்கள் என்று வராமல் وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا எங்களில் – எங்களிலே- போர் செய்தவர்கள் என்று வந்துள்ளதால் இப்போர் இஸ்லாமிய கொள்கையை நிலை நாட்ட யுத்த களத்தில் வாளேந்திச் செய்கின்ற போரைக் குறிக்கவில்லை என்பதும், இறைஞானத்தை அடைந்து கொள்வதற்கான போரையே குறிக்கின்றது என்பதும் தெளிவாகின்றது.
ஒரு மனிதன் தனது “நப்ஸ்” எனும் மனவெழுச்சியோடும், மன ஆசையோடும் போராடுவது வாளேந்திப் போராடுவதைக் குறிக்காது. அந்த மனவெழுச்சிக்கும், மன ஆசைக்கும் மாறு செய்து அதற்கு வழிபடாமல் நடப்பதையே குறிக்கும். அவ்வாறிருந்தும் கூட அது “ஜிஹாத்” போர் என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது.
ஸூபிஸக் கலையில் جِهَادُ النَّفْسِ என்றும், مُجَاهَدَةُ النَّفْسِ என்றும் கூறப்படுவது ஒருவன் தனது மனவெழுச்சியுடன் போர் செய்தலையே குறிக்கும்.
இறைஞானம் என்பது இறைவனைப் பற்றிய அறிவாகும். ஒரு கலையில் எது பற்றி ஆய்வு செய்யப்படுகின்றதோ அதுவே அக்கலையின் கருவாகும். இறைவனை அறிதல் என்ற பெரும் பாக்கியம் போல் வேறொன்றுமே அதற்கு நிகராக நிற்காது.
ஒருவன் ஒரு பெண்ணை அடைவதாயின் அவளின் அழகு, செல்வம், நற்குணம், குடும்பம், பரம்பரை முதலானவற்றைப் பொறுத்து அவனின் முயற்சி இருத்தல் வேண்டும்.
ஒன்றுக்கும் உதவாத, எந்த ஒரு சிறப்பம்சமும் இல்லாத ஒரு பெண்ணை அடைவதாயின் கடும் முயற்சி தேவையில்லை. ஒரு சிறிய அன்பளிப்பை வழங்கியே அவளை அடைந்து கொள்ளலாம். அவளை அடைவது மிக இலகுவான விடயம். இதற்காக பசித்திருக்கவோ, தனித்திருக்கவோ, விழித்திருக்கவோ தேவையில்லை.
இறைஞானக்கலையில் நாம் அடைய விரும்பும் பெண்ணோ மிகப் பெறுமதி மிக்கவள். சீமாட்டியென்றால் சாதாரண சீமாட்டியல்ல. ஈருலகங்களும், அவற்றிலுள்ளவையும் அவளுக்கே சொந்தம். அழகோ படைப்புக்கள் அனைத்தையும் ஒன்றிணைத்த அழகு. அவளைக் காணத்துடிக்காத இதயங்கள் மனு ஜின்களிலுமில்லை. மற்றப் படைப்புகளிலும் இல்லை.
இப் பெரும் பாக்கியங்கள் ஒன்றிணைந்த அவ்வழகியில் அழிந்து ஒழிந்து போவதற்காக எத்தனை கோடியாண்டுகளும் தவமிருக்கலாம். தனித்திருக்கலாம். பசித்திருக்கலாம். தாகித்திருக்கலாம். எண்ணற்ற துன்பம், துயரங்களையெல்லாம் அனுபவிக்கலாம்.
ஒரு “பகீர்” ஒரு தெருவால் போய்க் கொண்டிருந்தார். அந் நாட்டு அரசனின் பறைச் சத்தம் அவரின் செவிகளுள் சென்றன. கடலில் “பஹ்றுமான்” என்று இரு முத்துக்கள் உள்ளன. அவற்றை எடுத்து தந்தவனுக்கு எனது மகள் இளவரசியை திருமணம் முடித்துக் கொடுப்பேன் என்ற அரசனின் பறை கேட்ட அந்த “பகீர்” கடலோரம் சென்று தன்னிடமிருந்த சின்னஞ் சிறிய காட்டுத் தேங்காய்ச் சிரட்டையால் கடலை இறைக்கலானார். வருவோர் போவோரெல்லாம் ஏன் இறைக்கிறாய்? என்று கேட்டனர். இளவரசியை அடைவதற்காக என்றார். வந்தவரும், போனவரும் அவரை நையாண்டி பண்ணினர். கடலை இறைத்துக் கரை கண்டவர் யார்? பகீரின் முயற்சி படுதோல்விதான் என்று கூறிச் சென்றனர்.
هِمَّةُ الرِّجَالِ تَهْدِمُ الْجِبَالَ
மனிதர்களின் முயற்சி மலைகளையும் தகர்க்கும் என்ற தத்துவம் அவரை விடவில்லை. இறைத்தார் பகீர். இறைத்துக் கொண்டே இருந்தார். நாட்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்து கொண்டே இருந்தன. நூற்று இருபதாம் நாள் இறையோன் அல்லாஹ் ஏழை பகீரின் நெஞ்சைப் பார்த்தான். அது மலையை விட உறுதியாயிருந்தது கண்டு கடல் வாழ் இரு மலக்குகள் – அமரர்களை அழைத்து
يَا مَلَائِكَتِيْ! اُنْظُرُوْا إِلَى قَلْبِ هَذَا الْفَقِيْرِ، وَإِلَى هِمَّتِهِ الَّتِيْ رَسَخَتْ فِى قَلْبِهِ، فَانْهَضُوْا وَسِيْرُوْا إِلَى قَعْرِ هَذَا الْبَحْرِ فِى مَكَانِ كَذَا كَذَا، وَهُنَاكَ دُرَّتَانِ مُضِيْئَتَانِ، فَخُذْهُمَا بِفِيْكُمَا وَأَلْقِهِمَا أَمَامَ الْفَقِيْرِ،
எனது அமரர்களே! இந்த பகீரின் உள்ளத்தைப் பாருங்கள். அதில் பதிவாகியுள்ள அவனின் விடா முயற்சியையும் பாருங்கள். நீங்கள் எழுந்து கடலின் அடித்தளத்திற்குச் சென்று இன்னின்ன இடங்களிலுள்ள இரு முத்துக்களை உங்கள் வாயால் எடுத்துச் சென்று இந்த பகீருக்கு முன்னால் போட்டு விடுங்கள் என்று பணித்தான். இரு மலக்குகளும் இரு தவளைகளின் உருவில் வந்து அவ்வாறே செய்தனர்.
இரு முத்துக்களையும் எடுத்து வந்த அந்த பகீரை காவற்காரர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த பகீர், நான் இந்நாட்டு இளவரசியின் கணவன் இளவரசன் என்று சத்தமிட்டான். இறுதியில் அரசனின் ஆணைப்படி இளவரசியின் கழுத்தில் மஞ்சக் கயிறு கட்டி மன்னனின் மருமகனார் பகீர்.
இறைஞானமென்ற இளவரசியை நாம் முயற்சித்தால் ஏன் அடையமுடியாது?
எவர்கள் எங்களிலே ஜிஹாத் செய்கிறார்களோ அவர்களுக்கு எங்களின் வழியைக் காட்டிக் கொடுப்போம் என்ற திரு மறை வசனம் மூலம் எமக்கு வாக்களித்த அல்லாஹ்வை நம்புவோம்.
“குத்பிய்யத்”, “விலாயத்” என்பவை சிலருக்கு மட்டும் சொந்தமானவையல்ல. அவை பக்தாதில் வாழும் முஹ்யித்தீன் ஆண்டகை றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், நாஹூர் பாதுஷாஹ் றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், இன்னுமிவர்கள் போன்றவர்களுக்கும் மட்டும் எழுதிக் கொடுக்கப்பட்டவையுமல்ல.
وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا،
அல்லாஹ் அடியானுக்கு வழங்கும் நாற்பெரும் பரிசில்கள்!
எனது அடியான் “நவாபில்” மேலதிக வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே இருப்பான். அப்போது நான் அவனை விரும்புவேன். நான் அவனை விரும்பினால் அவன் கேட்கும் கேள்வியாக நான் ஆவேன். அவன் பார்க்கும் பார்வையாக நான் ஆவேன். அவன் பிடிக்கும் கையாக நான் ஆவேன். அவன் நடக்கும் காலாக நான் ஆவேன் என்று அல்லாஹ் ஹதீது குத்ஸியில் கூறியுள்ளான். (ஆதாரம்: புகாரீ)
இந்த ஹதீதுக் குத்ஸீ மூலம் நாம் பல பாடங்களை விளங்குகின்றோம். அவற்றில் ஒன்று. அடியான் “நவாபில்” “ஸுன்னத்” ஆன வணக்கங்கள் செய்வதன் மூலம் அல்லாஹ்வை நெருங்குகின்றான் என்பதாகும். “குர்புன்னவாபில்” என்றும், “குர்புல் பறாயிழ்” என்றும் இருவகை உண்டு. தேவையேற்பட்டால் எழுதுவோம்.
அடியான் அல்லாஹ்வை நெருங்குதல் என்பது قُرْبٌ مَعْنَوِيٌّ கருத்தோடும், தத்துவத்தோடும் சம்பந்தப்பட்ட நெருக்கத்தைக் குறிக்குமேயன்றி قُربٌ مَكَانِيٌّ இடத்தோடு சம்பந்தப்பட்ட நெருக்கத்தைக் குறிக்காது.
ஏனெனில் இடத்தோடு சம்பந்தப்பட்ட நெருக்கம் ஒரு மனிதனுக்கும், இன்னொரு மனிதனுக்குமுள்ள நெருக்கமேயன்றி அல்லாஹ்வுக்கும், மனிதனுக்குமுள்ள நெருக்கம் அத்தகையதன்று.
ஏனெனில் அடியானின் பிடரி நரம்பு அடியானுக்கு நெருங்கியிருப்பதை விட நான் அடியானுக்கு நெருங்கியுள்ளேன் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ
நாங்கள் – நான் அடியானுக்கு அவனின் பிடரி நரம்பை விட நெருங்கியுள்ளேன் என்று கூறியுள்ளான்.
(திருக்குர்ஆன்: 50-16)
இத்திரு வசனத்தை தெளிவான, விபரமான விளக்கத்தை நாடி சாதாரண வசனமாக்கிப் பார்த்தால்
وَنَحْنُ أَقْرَبُ إِلَى الإنسان مِنْ قُرْبِ حَبْلِ الْوَرِيدِ إليه،
என்று வரும். இதற்கான கருத்தை நான் மேலே எழுதிவிட்டேன்.
“ஹப்லுல் வரீத்” என்ற வசனத்திற்கு பிடரி நரம்பு என்றும், பிடரியிலுள்ள உயிர் நரம்பு என்றுமே நான் சிறுவனாயிருந்த காலத்திலிருந்து அறிஞர்கள் பொருள் சொல்லி வந்ததை நான் செவியேற்றுள்ளேன்.
நான் இதை மறுக்கவில்லையாயினும் பிடரியில் ஏதாவது விஷேட நரம்பு இருப்பதாக வைத்திய நிபுணர்களில் எவரும் கூறியதாக நான் அறியவில்லை. இது “ஸிறாதுல் முஸ்தகீம்” பாலம் என்ற கதை போன்றதென்றே நினைக்கிறேன். அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என்பதற்காக எல்லோரும் சொல்லிப் பழகிவிட்டார்களேயன்றி எவரும் இது பற்றிச் சிந்திக்கவில்லை. இவ்வாறுதான் “நடுமத்தி” என்ற வசனத்தின் கதையுமாகும்.
நான் ஆய்வு செய்த வகையிலும், பல ஆய்வாளர்களிடம் கேட்டறிந்த வகையிலும் “பிடரி நரம்பு” என்பது பிடரியிலிருந்து பின் பக்கம் இறங்கிச் செல்லும் நீளமான முள்ளைக் குறிக்குமென்றே நான் நினைக்கிறேன். அந்த முள்ளின் இறுதி முனையில்தான் – அடியில்தான் சங்குமணி அளவிலான ஒரு வஸ்த்து உண்டு. அதுவே عَجَبُ الذَّنَبِ “அஜபுத்தனப்” என்று சொல்லப்படுகின்றது.
ஒரு மனிதனின் உடல் நெருப்பில் எரிந்து சாம்பலானாற் கூட அது மட்டும் அழியாதென்று சொல்லப்படுகின்றது. விமானத்திற்கு “கறுப்புப் பெட்டி” இருப்பது போல் மனிதனிலுள்ள கறுப்பு பெட்டி இதுவேயாகும்.
நான் மனிதனுக்கு அவனின் பிடரி நரம்பைவிட – அவனின் முதுகு முள்ளை விட நெருங்கியுள்ளேன் என்றால் இதன் சரியான விளக்கம் நான் மனிதனாக இருக்கிறேன் என்பதேயாகும். முதுகு முள்ளே அல்லது பிடரி நரம்பே மனிதனில் ஓர் அங்கமாக இருக்கும் நிலையில் நான் அதை விட நெருங்கியிருக்கிறேன் என்றால் இதன் எதார்த்தம் நான் மனிதனாக வெளியாகியுள்ளேன் என்பதேயன்றி வேறென்ன?
وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
அல்லாஹ்வுக்கு நிகராக எவருமில்லை என்ற தத்துவத்தை இறுதியாகக் கூறி “இக்லாஸ்” அத்தியாயத்தை நிறைவு செய்துள்ளான் அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்.
ஏன் நிகர் இல்லை? இரண்டில்லை. இதனால் நிகரில்லை. இதுவே அடிப்படைத் தத்துவம். இது தெரியாமல் உலமாஉகளிற் பலர் எங்கெங்கோ சென்று நிகரில்லை என்பதற்கு விளக்கம் கொடுக்கின்றார்கள். கேட்பதற்கு கசப்பாகவும், அலுப்பாகும் உள்ளது. “குத்பா” பிரசங்கத்தின் போது பலர் தூங்கிவிழுவதற்கும் பிரசங்கமே காரணம் எனலாம்.
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
அவன் போல் எதுவுமில்லை. அவனே கேட்பவனும், பார்ப்பவனுமாவான்.
மேற்கண்ட இரண்டு திரு வசனங்களும் அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்ற தத்துவத்தைக் கூறினாலும் அவ்விரண்டில் ஒன்று – அதாவது முந்தினது உயர் திணையில் அவனுக்கு நிகரில்லை எனவும், இரண்டாவது வசனம் அஃறிணையில் அவனுக்கு நிகரில்லை எனவும் சுட்டுவதை உற்று நோக்கினால் அறிய முடியும்.
அவனுக்கு நிகர் இல்லை என்பதே எதார்த்தம். இதற்கு மறுக்கவும், அசைக்கவும் முடியாத ஒரேயொரு காரணம் இரண்டில்லை என்பதேயாகும். சிந்தித்தோர் உண்மையை சந்திப்பர்.
திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் கிழறிக் கிழறி ஆய்வு செய்தாலும், நபீ பெருமானின் அருள் மொழிகளை அக்கு வேறாக ஆணி வேறாக ஆய்வு செய்தாலும், “அகீதா” கொள்கை தொடர்பான நூல்களை மடக்கி மடக்கி ஆய்வு செய்தாலும் அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்பதற்கான எதார்த்தமான காரணம் இரண்டில்லை என்பதேயாகும்.
كُفْوٌ
– குப்வுன் என்றாலும், مِثْلٌ – மித்லுன் என்றாலும் , نِدٌّ என்றாலும் கருத்தில் இவையாவும் ஒன்றுதான். ஒரே கருத்துக்குரிய பல சொற்களாகும். இவை அறபு மொழியில் أَلْفَاظٌ مُتَرَادِفَةٌ என்று அழைக்கப்படும். இதன் பொருள் ஒரு பொருளுக்குரிய பல சொற்கள் என்பதாகும்.
அல்லாஹ்வுக்கு مَثَلْ “மதல்” உண்டு. مِثْلْ – “மித்ல்” என்பதே இல்லை. முந்தின சொல்லுக்கு உதாரணம் என்று பொருள். பிந்தின சொல்லுக்கு நிகர் என்று பொருள்.
அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறலாம். தடையில்லை. அல்லாஹ் திருக்குர்ஆனில் وَلِلَّهِ الْمَثَلُ الْأَعْلَى அல்லாஹ்வுக்கு உயர்வான உதாரணம் உண்டு என்று தெளிவாகவே கூறியுள்ளான்.
உயர்வான உதாரணம் என்பது ஒரு நாட்டின் மன்னன் போன்றவன். ஒரு நாட்டின் ஜனாதிபதி போன்றவன் என்று உதாரணம் சொல்வது போன்று. இவ்வாறு உதாரணம் சொல்ல முடியும்.
மேலே குறிப்பிட்ட திரு வசனத்தில் مَثَلْ – மதல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதேயன்றி مِثْلْ – “மித்ல்” என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
இன்னொரு வசனத்தில் مَثَلُ نُورِهِ அவனின் ஒளிக்கு உதாரணம் என்றுதான் சொல்லியுள்ளானேயன்றி مِثْلُ نُورِهِ அவனின் ஒளிக்கு நிகர் என்று அல்லாஹ் கூறவில்லை.
مَثَلْ
– உதாரணம் என்ற பொருளைத் தருகின்ற இச் சொல்லுக்கும், مِثْلْ – “மித்ல்” நிகர் என்ற பொருளைத் தருகின்ற இச் சொல்லுக்கும் ஏகபோக வித்தியாசமுண்டு. மலைக்கும் மடுவுக்குமுள்ள தூரம் உண்டு.
இது பற்றி கடந்த பதிவுகளின் போது நான் எழுதியுள்ளேன். விடயம் புரியாதவர்களின் நன்மை கருதி மீண்டும் எழுதுகிறேன்.
நான் ஏற்கனவே எழுதிய விடயமாதலால் இங்கு சுருக்கமாக எழுதுகிறேன். முழு விபரம் தெரிந்து கொள்ள விரும்புவோர் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல்யவாகீத் வல் ஜவாஹிர்” எனும் நூல் முதலாம் பாகம் 108ம் பக்கத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
وموضِعُ الغَلَطِ فى ذلك لِمَنْ مَنَعَ رؤيةَ الله فى صورةٍ ظَنُّهُ أنّ المَثَلَ بِفَتْحَتَيْنِ كالمِثْلِ بكسـر الميم وسُكون المُثَلَّثَةِ ،وذلك خطأ فاحشٌ، فإنّ المِثْلَ بالسُّكونِ يستدعي المساواةَ فى جميع الصّفات كالسَّوادين والجوهرين، ويقوم كلّ واحد منهما مقامَ الآخر من جميع الوجوه فى كلِّ حالٍ بخلاف المَثَلِ بفَتْحَتَيْنِ، فإنّه لا يُشترطُ فيه المساواةُ من كلِّ وجهٍ، وإنّما يُستعملُ فيما يشاركه بأدنَى وَصْفٍ إلى آخر ما قال الشعراني،
இதன் சுருக்கம் வருமாறு.
அல்லாஹ்வை ஏதாவதொரு உருவத்தில் கனவில் காணலாம் என்பதே சரியான முடிவாகும்.
அல்லாஹ்வை உருவத்தில் காண்பதா? இதெவ்வாறு சாத்தியமாகும்? என்று யாரேனும் சொல்வாரென்றால் “மதல்” என்பதற்கும், “மித்ல்” என்பதற்குமுள்ள வித்தியாசம் தெரியாதவராகவே இருப்பார்.
நிகர் என்ற பொருளுக்கு வருகின்ற مِثْلْ என்ற சொல்லில் “மீம்” என்ற எழுத்து “கஸ்ர்” செய்யப்பட்டதாயும், அதையடுத்த எழுத்தான “தே” “ஸுகூன்” செய்யப்பட்டதாயும் இருக்கும். مِثْلٌ என்பதுபோல்.
உதாரணம் என்ற பொருளுக்கு வருகின்ற مَثَلْ என்ற சொல்லில் உள்ள “மீம்” என்ற எழுத்து “பத்ஹ்” செய்யப்பட்டதாயும், அதையடுத்த எழுத்தான “தே” என்ற எழுத்தும் “பத்ஹ்” செய்யப்பட்டதாயும் இருக்கும். مَثَلْ என்பதுபோல்.
அல்லாஹ்வுக்கு உதாணரம் உண்டு. ஆனால் நிகர் இல்லை. مَثَلْ உண்டு. مِثْلْ இல்லை.
فإنّ المِثْلَ بالسُّكونِ يستدعي المساواةَ فى جميع الصّفات كالسَّوادين والجوهرين، ويقوم كلّ واحد منهما مقامَ الآخر من جميع الوجوه فى كلِّ حالٍ
நிகர் என்ற பொருளைத்தருகின்ற مِثْلْ என்ற சொல்லுக்கான வரைவிலக்கணமே மேலே நான் எழுதிக்காட்டிய அறபு வசனம்.
எதை எதற்கு நிகராக கூறப்படுகின்றதோ அவ்விரண்டும் சகல அம்சங்களிலும் ஒன்றுபோல் சமமாக இருக்க வேண்டும். இது இருக்கும் இடத்தில் அதையும், அது இருக்கும் இடத்தில் இதையும் வைத்தால் இரண்டும் எந்தவொரு விதம்தியாசமுமின்றி சமமாக ஒன்று போல் இருக்க வேண்டும். இவ்வாறிருந்தால்தான் அது நிகர் ஆகும். அல்லாஹ்வுக்கு நிகர் இல்லையென்பது இதை அடிப்படையாக கொண்டதேயாகும்.
உதாரணம் என்பது நிகர் போன்றதல்ல. நிகருக்கு சொல்லப்பட்ட அம்சம், நிபந்தனை இதற்குத் தேவையில்லை. எல்லா அம்சங்களிலும் இரண்டும் ஒன்றுபோல் இருக்க வேண்டுமென்பதில்லை. ஏதேனும் ஓர் அம்சத்தில் மட்டும் இரண்டும் ஒன்றுபோல் இருந்தால் உதாரணமாக கொள்ளலாம்.
உதாரணமாக முசம்மில் சிங்கம் போன்றவன் என்று சொல்வது உதாரணமேயன்றி இது நிகரல்ல. சிங்கத்திலுள்ள அம்சங்களில் வீரம் போன்ற ஏதாவதொரு அம்சம் இருந்தால் போதும். உதாரணம் என்று சொல்ல முடியும். அவனில் நான்கு கால்களும், ஒரு வாலும், மற்றும் ஏனைய அமைப்புக்களும் இருக்க வேண்டும் என்பது தேவையில்லை.
ஆயினும் ஒரே அச்சில் எந்த ஒரு அணுவளவும் வித்தியாசமின்றி செய்யப்பட்ட இரண்டு பொருட்களில் ஒன்றை மற்றதற்கு நிகராக கூற முடியும். ஒரே அச்சில் செய்யப்பட்ட இரண்டு தங்க மோதிரம் போன்று.
அல்லாஹ்வுக்கு நிகராக யாருமில்லை, எதுவுமில்லை. ஆயினும் அவனுக்கு உதாரணங்கள் கூற முடியும்.
அல்லாஹ்வுக்கு நிகர் இல்லை என்பதற்கும், இணையில்லை என்பதற்கும் ஆணித்தரமான ஒரேயொரு ஆதாரம் “உள்ளது ஒன்று மற்றது அன்று” எனும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவமாகும்.
اَللهُ مَوْجُوْدٌ وَمَا سِوَاهُ مَفْقُوْدٌ
திருக்குர்ஆனை ஒவ்வோர் எழுத்தாகவும், ஒவ்வொரு “நுக்தா” புள்ளியாகவும் ஆய்வு செய்த மகான்களின் முடிவும், அதேபோல் இலட்சக்கணக்கான ஹதீதுகளை ஒவ்வோர் எழுத்தாக ஆய்வு செய்தவர்களின் முடிவும், மற்றும் இறைஞானக்கடலில் முங்கி உள் நீச்சலடிப்பவர்களின் இறுதியான முடிவும் “அல்லாஹ் தவிர வேறெந்த ஓர் வஸ்த்துவும் இல்லை” என்பதேயாகும்.
اَللهُ فقط، الله فقط، الله فقط،
لا إله إلا الله محمد رسول الله،
الكون كلُّه ظُلمةٌ وإنّما أناره وجود الحق فيه، أي فى صورته،
وكل شيئ هالك فى الأزمنة الثلاثة أي عدم محض،
“குல்ஹுவல்லாஹு அஹத்” ஒரு கண்ணோட்டம் முற்றுப் பெற்றது.