Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நோன்பின் பிரதான சட்டங்கள்.

நோன்பின் பிரதான சட்டங்கள்.

தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)

நோன்பு நிறைவேறுவதற்கான இரண்டு அம்சங்களில் ஒன்று இரவில் “நிய்யத்” வைக்க வேண்டும்.

இங்கு இரவு என்று குறிப்பிடுவது “மக்ரிப்” தொழுகைக்கான “பாங்கு” சொன்ன நேரத்திலிருந்து “ஸுப்ஹ்” தொழுகைக்கான “அதான்” சொல்லும் நேரம் வரையிலான நேரம் – இடைப்பட்ட நேரம் இரவு என்று கணிக்கப்படும்.

குறித்த இந்நேரத்தில் எந்நேரமும் “நிய்யத்” வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு வைத்துக் கொண்டால் நோன்பு நிறைவேறும். “ஸஹர்” நேரம் – இரவின் பிற்பகுதியில் “ஸஹர்” செய்த பின் – சாப்பிட்ட பின்புதான் “நிய்யத்” வைக்க வேண்டுமென்பது அவசியமில்லை. அதாவது அந்நேரம் “நிய்யத்” வைத்தால்தான் நோன்பு நிறைவேறுமென்பது கருத்தல்ல.

இந்த விபரத்தின்படி ஒருவன் “மக்ரிப்” தொழுகைக்கான பாங்கு சொன்னவுடன் நோன்பை திறந்துவிட்டு அதே இடத்தில் இருந்தவாறே மறு நோன்புக்குரிய “நிய்யத்” வைப்பதற்கு முடியும். ஆகும். அவ்வாறு வைப்பதால் நோன்பு நிறைவேறாது என்பது கருத்தல்ல. அவ்வாறு அந்நேரம் நிய்யத் வைத்த ஒருவன் மறுநாள் ஸுப்ஹுடைய பாங்கு வரை எதைக் குடித்தாலும், எதைச் சாப்பிட்டாலும் நோன்பு முறிந்து விடாது. எவ்வளவு சாப்பிட்டாலும், எவ்வளவு குடித்தாலும் நோன்பு முறிந்துவிடமாட்டாது. அதாவது ஏற்கனவே வைத்த நோன்பின் நிய்யத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. வைத்த “நிய்யத்” முறிந்துவிடாது. மீண்டும் “நிய்யத்” வைக்க வேண்டிய அவசியமில்லை.

எதைக் குடித்தாலும், எதைச் சாப்பிட்டாலும் என்று நான் கூறியதால் மார்க்கத்தில் விலக்கப்பட்ட சாராயம், கள் போன்ற குடிபானங்கள் குடித்தாலும், பன்றி இறைச்சி போன்ற சாப்பாடுகளைச் சாப்பிட்டாலும் நோன்பு முறியாதா என்று ஒருவர் கேட்க நினைக்கலாம். இல்லை நோன்பு முறியவுமாட்டாது. ஏற்கனவே வைத்த “நிய்யத்”திற்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

எனினும் அவருக்கு மதுபானம் அருந்தியதற்கான பாவமும், தன்டனையும், அதேபோல் பன்றி இறைச்சி சாப்பிட்டதற்கான பாவமும், தன்டனையும் உண்டு. பன்றி இறைச்சிதான் சாப்பிடலாமேயன்றி அதன் ஏனைய உறுப்புக்களைச் சாப்பிடலாம் என்று கூறும் வஹ்ஹாபிகள் தவிர. இவர்கள் மத்ஹப் இல்லாத மலடர்கள்.

“வுழூ”வின் சட்டமும் இவ்வாறுதான். “வுழூ” உடன் இருக்கும் ஒருவன் மதுபானம் அருந்துவதாலோ, விலக்கப்பட்ட உணவு உன்பதாலோ “வுழூ” முறிந்துவிடாது. ஆயினும் மார்க்கம் விலக்கிய பானம் குடித்ததற்கான பாவமும், தன்டனையும், அதேபோல் மார்க்கம் விலக்கியதைச் சாப்பிட்டதற்கான பாவமும், தன்டனையும் உண்டு.

இந்தக் குறிப்பை நான் ஏன் எழுதினேன் என்றால் இந்த விடயத்தை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு நிகழ்வு என் நினைவுக்கு வந்தது.

சுமார் 15 வருடங்களுக்கு முன் ஒரு றமழான் மாதம் காத்தான்குடியில் எனது வீட்டில் “ஸஹர்” நேரம் சுமார் 3.30 மணியளவில் எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. யார் என்று கேட்டேன். ஒரு முஸ்லிம் கொழும்பிலிருந்து பேசினார். தனது பெயரையும் சொன்னார். அவரின் பெயரை நான் பலர் மூலம், பல சந்தர்ப்பங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒரு தரம் மட்டும் அவரைக் கொழும்பு மெயின் வீதியிலுள்ள கடையொன்றில் சந்தித்து அறிமுகமாகி சுமார் 10 நிமிடங்கள் உரையாடியுமுள்ளேன். வேறு எந்த ஓர் தொடர்பும் அவருக்கும் எனக்குமில்லை.

அவர் ஓர் அரசியல்வாதியும், ஆன்மீகவாதியுமாவார். அவரைப் பலரும் சேர் என்று பேசுவது எனக்குத் தெரியும். ஆங்கில மொழி இலக்கண இலக்கியத்துடன் பேசும் ஆற்றல் உள்ளவர். தற்போது மரணித்துவிட்டார். اللهم اغفر له وارحمه

என்ன சேர் இந்த நேரம் போன் செய்தீர்கள் என்று கேட்டேன். நான் ஏதோ ஒன்றை நினைத்துக் கேட்க அவர் சொன்ன பதில் என் மூச்சை ஒரு கணம் அடக்கிவிட்டது.

அவர் சொன்ன வசனம் இதுதான். நான் “ஸஹர்” செய்வதற்காக எழுந்து இரண்டு “கப்” அருந்திவிட்டு சாப்பிடுவதற்காக அமர்ந்த போது எனது நண்பர் ஒருவர் எனக்கு போன் செய்து றஊப் மௌலவீ மரணித்துவிட்டாராம் என்று சொன்னார். நான் அவருடன் பேச்சைத் தொடராமல் உடனே உங்களுக்கு எடுத்தேன். உங்கள் குரலைக் கேட்டவுடன்தான் எனக்கு கிடைத்த தகவல் பொய் தகவல் என்று புரிந்து கொண்டேன் என்றார். அவர் என்ன கப் அருந்தினார் என்பதை அவரின் குரல் மூலமும், அவர் பேச்சு நடை மூலமும் நான் புரிந்து கொண்டேன்.

நோன்பு நோற்பதற்காக ஸஹர் சாப்பாடு உண்பது மார்க்கத்தில் ஸுன்னத் ஆன ஒரு விடயமாகும். “ஸுன்னத்” ஆன ஒரு விடயத்தை பேணுதலாகச் செய்யுமிவர் இப்படியொரு பாவத்தை செய்கிறாரே என்று மனம் நொந்தவனாக நான் போனை கட் பண்ணிவிட்டேன். நான் தொடர்;ந்து பேசவில்லை. ஏனெனில் நான் தொடர்ந்தால் அவர் என்னையும் ஸஹர் செய்ய விட்டிருக்கமாட்டார். அவரும் “ஸஹர்” செய்திருக்கமாட்டார்.

இந்த நிகழ்வின் மூலம் இப்படியும் மனிதர்கள் உள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்வோம். இவரின் இவ்வேலை தலைப்பாகை கட்டுவது “ஸுன்னத்” என்பதற்காக தானுடுத்திருந்த சாரத்தைக் கழட்டி தான் நிர்வாணியாகிக் கொள்வது போன்றதாகும். ஒரு ஸுன்னத்தை நிலை நாட்டுவதற்காக ஒரு ஹறாமான காரியத்தை செய்வது போன்றதாகும்.

நோன்பிற்கான நிய்யத் வைத்தல் தொடர்பான சுருக்கம் என்னவெனில் ஒருவர் நோன்பு திறந்த நேரத்தலிருந்து “ஸுப்ஹ்” தொழுகைக்கான “அதான்” வரை மட்டுமே “நிய்யத்” வைக்க முடியும். அவர் நிய்யத் வைத்த பின் “ஸுப்ஹ்” உடைய பாங்கு வரை எதையும் சாப்பிடலாம், எதையும் குடிக்கலாம். இதனால் வைக்கப்பட்ட “நிய்யத்”திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

பள்ளிவாயல்களில் “தறாவீஹ்” தொழுகையின் பின் இமாம் நோன்பிற்கான நிய்யத் சொல்லிக் கொடுக்கிறார். மற்றவர்களும் சொல்கிறார்கள். இந்த “நிய்யத்” போதும். இவ்வாறு நிய்யத் சொன்னவர் “ஸுப்ஹ்” உடைய அதான் வரை எதையும் சாப்பிடலாம், எதையும் குடிக்கலாம். பள்ளிவாயலில் வைத்த “நிய்யத்”திற்கு எந்தவொரு பங்கமும் ஏற்படமாட்டாது. “ஸஹர்” செய்த பின் மீண்டும் அவர் நிய்யத் வைக்க வேண்டிய அவசியமில்லை. வைத்துக் கொண்டாலும் அது தப்புமில்லை. தவறுமில்லை.

மக்ரிப் “பாங்கு” சொன்ன பின் நோன்புக்காக “நிய்யத்” வைத்துக் கொண்ட ஒருவர் “ஸுப்ஹ்” தொழுகைக்கான பாங்கு சொல்லும் வரை அதற்கிடைப்பட்ட நேரத்தில் உடலுறவு கொண்டாலும் ஏற்கனவே வைத்த “நிய்யத்” வீணாகாது. “ஸஹர்” செய்தபின் “நிய்யத்” வைக்க வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு “நிய்யத்” வைத்த ஒருவர் தனது மனைவியுடன் “ஹலால்” ஆன முறையில் உடலுறவு கொண்டாலும் அந்த நிய்யத் முறியாது. ஒரு பெண்ணுடன் ஹறாமான முறையில் உடலுறவு கொண்டாலும் அந்த “நிய்யத்” வீணாகாது. ஆயினும் அவரின் பாவச் செயலுக்கு அவருக்கு தண்டனை உண்டு.

“தப்யீதுன் நிய்யத்” இரவில் “நிய்யத்” வைப்பதுதான் கடமை. இரவு என்பது “மக்ரிப்” அதானிலிருந்து “ஸுப்ஹ்” அதான் வரையிலுள்ள நேரத்தைக் குறிக்கும். இவ்விரு அதான்களுக்கும் இடைப்பட்ட நேரத்தில் “நிய்யத்” வைத்தால் நோன்பு நிறைவேறும்.

“நிய்யத்” வைப்பதில் மூன்று முறையுண்டு. ஒன்று. மனமும், நாவும் ஒன்றிணைந்து “நிய்யத்” வைத்தல். அதாவது நாவால் “நிய்யத்” வசனத்தை மொழியும் போது மனதால் அதைக் கிரகித்தல். கவனித்தல். இதுவே சிறந்தமுறை.

இரண்டு. நாவால் மட்டும் மொழிதல். மனதால் அதைக்கிரகிப்பதுமில்லை. கவனிப்பதுமில்லை. உதாரணமாக TV பார்த்துக் கொண்டு “நிய்யத்” வைத்தல். ஒருவரின் கதையை நேரிலோ, போனிலோ செவிமடுத்துக் கொண்டு “நிய்யத்” வைத்தல். இந்த “நிய்யத்” சரிவராது. இதனால் நோன்பு நிறைவேறாது.

மூன்று. நாவால் மொழியாமல் மனதால் மட்டும் “நிய்யத்” வைத்தல். இதுவும் நிறைவேறும்.

இந்த விபரம் இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அத்கார்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

இரவில் வைத்த “நிய்யத்”தை பகல் நேரம் நோன்பாளி சொன்னால் நோன்பு முறிந்துவிடும் என்று சிலர் நினைப்பதுண்டு. இது தவறு. நோன்பு முறியாது.

நோன்பாளி ஒருவன் அதாவது நோன்பு நோற்றிருப்பவன் “ரித்தத்” மத மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு செயலைச் செய்தால் அல்லது ஒரு சொல்லைச் சொன்னால் அதோடு அவன் மதம் மாறியும் விடுவான். நோன்பும் வீணாகிவிடும்.

ஒரு நோன்பாளி மத மாற்றத்தை ஏற்படுத்தாத ஒரு செயலைச் செய்தால் அல்லது ஒரு சொல்லைச் சொன்னால் அவன் மதம் மாறியவனாகவுமாட்டான். அவனின் நோன்பும் முறிந்து விடாது.

ஓர் ஊரில் அல்லது ஒரு நாட்டில் மார்க்கமே தெரியாத ஒரு “ஜாஹில்” மடையனை “முப்தீ”யாக – “பத்வா” வழங்குபவராக நியமிக்கப்பட்டு அவர் தனது அறியாமையால் அல்லது லஞ்சம் வாங்கிக் கொண்டு மத மாற்றத்தை ஏற்படுத்தாத சொல்லுக்காக அல்லது செயலுக்காக ஒருவனுக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்குவாராயின் அவர் நோன்பாளியாயிருந்தால் அவரின் நோன்பும் முறிந்துவிடும். அவரும் “முர்தத்” மதம் மாறியவராகிவிடுவார். நமது நாட்டில் நடந்த சம்பவம் இதற்கு ஆதாரம். இன்று முப்தியுமில்லை. பத்வாவுமில்லை. “பத்வா” குழுவின் கதையுமில்லை.

ஓர் ஊரின், அல்லது ஒரு நாட்டின் முப்தியாக ஒருவர் நியமிக்கபப்டுவதற்கு முதல் அம்சம் அவர் ஸுன்னீயாக இருத்தல் வேண்டும். இரண்டாவது அம்சம் அவர் ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா போன்ற நான்கு கடல்களிலும் உள் நீச்சலடித்த அனுபவ சாலியாக இருக்க வேண்டும். தேங்காய் மடையனும், மாங்காய் மடையனும் முப்தியாக இருப்பதற்கு அருகதையற்றவர்களாவர்.

ஒரு மனிதனின் உடலில் திறக்கப்பட்ட துவாரங்கள் உள்ளன. இரு காதுகள், மூக்கின் இரு துவாரங்கள், வாய், முன்துவாரம், பின் துவாரம்.

இத்துவாரங்கள் மூலம் ஏதாவதொரு பொருள் உட்பகுதி எல்லையை தாண்டினால் மட்டும் நோன்பு முறியும். திறக்கப்படாத துவாரங்கள் மூலம் ஏதாவதொன்று உட்பகுதிக்குச் சென்றால் நோன்பு முறியாது. ஒரு நோன்பாளியின் காலில் முள் குத்தினால் அவனின் நோன்பு முறியாது. இவ்வாறுதான் திறக்கப்படாத இடங்களால் ஏதாவதொரு பொருள் உட்செல்வதுமாகும்.

“ஷரீஆ”வின் சட்டப்படி பொய் சொல்வதால், புறம் பேசுவதால், கோள் சொல்வதால், பொய்ச் சத்தியம் செய்வதால், பொய்ச் சாட்சி சொல்வதால் நோன்பு முறியாது. ஆயினும் அதன் நன்மை இல்லாமற்போகும். எனினும் அந்த நோன்பை “களா” செய்யத் தேவையில்லை. பேணுதலைக் கருத்திற் கொண்டு “களா” செய்வது குற்றமாகாது.

ஆயினும் “தரீகா”வின் சட்டப்படி மேற்கண்ட பாவச் செயல்களால் நோன்பே முறிந்து விடும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. “தரீகா”வின் அந்தரங்கம் தெரியாத பசுக்கள் நோன்பு முறியாதென்று “பத்வா” கொடுக்கும். பசுவை முறைப்படி அறுத்துச் சாப்பிடுவது குற்றமாகாது.

நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அருள் மொழிகள் சில நேரம் “ஷரீஆ” அடிப்படையில் அமைந்திருக்கும். சிலநேரம் “தரீகா” அடிப்படையில் அமைந்திருக்கும். “தரீகா” அடிப்படையில் அமைந்த அருள் மொழிக்கு வலிந்துரை கொடுத்து அதை “ஷரீஆ”வுக்கு திருப்ப வேண்டிய அவசியம் கிடையாது. அதை “தரீகா” அடிப்படையிலேயே விட்டு விட வேண்டும்.

“தரீகா” வழியின் அறிவும், ஸூபிஸ ஞானமும், “வஹ்ததுல் வுஜூத்” தத்துவமும் மங்கிப் போனதற்கு இவ் அறிவு தெரியாத “ஜாஹில்”கள் காரண கர்த்தாக்களாயிருப்பதுபோல் “புகஹஉ” சட்ட வரம்பிற்குள் மட்டும் நிற்கும் “ஷரீஆ” வாதிகளும் காரண கர்த்தாக்களேயாவர். முன்னோர்களான “புகஹாஉ”களை நான் குறிப்பிடவில்லை. இன்று வாழும் குறை குடங்களையே குறிப்பிடுகிறேன்.

அன்று வாழ்ந்த “முப்தீ”கள் – மார்க்க விடயத்திற்கு தீர்ப்புக் கூறுவோர் உள்ளங்கள் சுத்தமானவர்களாகவும், நெஞ்செல்லாம் “தக்வா” இறையச்சம் நிறைந்தவர்களாகவும், “வறஉ” என்ற பேணுதல் உள்ளவர்களாகவும், கால் சறுகி கிணற்றில் விழப் போனவன் கண்டால் அவனைத் தூக்கி காப்பாற்றுபவர்களாகவும், ஒருவனின் செயல், அல்லது சொல் அவனை மதம் மாற்றுவதற்கு சாத்தியமானதாயிருந்தால் அவனை அதிலிருந்து எவ்வழியில் காப்பாற்றலாம் என்று இராப் பகலாகப் பல மாதங்கள் பின்போட்டு சிந்திப்பவர்களாகவும் இருந்தார்கள்.

ஆனால் இன்றுள்ள அரைகுறை முப்தீகள் பேனாவோடும், பேப்பரோடும் யாராவது “பத்வா” கேட்டு வரமாட்டானா? என்று சந்தையிலும், சந்திகளிலும் மீன்களைக் கொட்டி வைத்து விட்டு வாங்குவதற்கு யாராவது வரமாட்டார்களா? என்று எதிர்பாரத்திருக்கும் மீன் வியாபாரிகள் போல் “பத்வா” வழங்குவதற்கு எதிர்பார்த்திருக்கிறார்கள்.

இத்தகையோரால்தான் எனக்கும், எனது கருத்துக்களைச் சரி கண்டவர்களுக்கும் வழங்கப்பட்ட “முர்தத்” “பத்வா” ஆகும்.

பல்லாயிரம் முஸ்லிம்கள் இவ்வாறு “பத்வா” வழங்கி சமுகத்தலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளார்கள் என்பதையுணர்ந்து அதைச் சீர் செய்ய முஸ்லிம் அரசியல்வாதிகளில் முன்வந்து அதற்காகப் பாடுபட்டவர்கள் இருவர் மட்டுமேயாவர்.

ஒருவர் மர்ஹூம் டொக்டர் பரீத் மீராலெப்பை அவர்கள். மற்றவர் கௌரவ முன்னாள் பிரதி அமைச்சரும், மற்றும் இராஜாங்க அமைச்சரும், ஆளுநருமான கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்கள்.

இவ்விருவருமே இது தொடர்பாக தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டவர்களாவர். இவ்விருவர் தவிர வேறெந்த முஸ்லிம் அரசியல்வாதியும் இது தொடர்பாக திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இவர்கள் இவ்வாறு கடந்த காலங்களில் இருந்ததும், இன்றுவரை இருந்து வருவதும் “பத்வா”வினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் முஸ்லிம்களின் நெஞ்சுகளிலும் ஈட்டியால் குத்திக் கீறிக் கிழிப்பதை விடக் கொடிய அநீதியென்றே நான் கருதுகிறேன். அல்லாஹ் “அஹ்கமுல் ஹாகிமீன்”

مَنْ تَشَرَّعَ وَلَمْ يَتَحَقَّقْ فَقَدْ تَفَسَّقْ
وَمَنْ تَحَقَّقَ وَلَمْ يَتَشَرَّعْ فَقَدْ تَزَنْدَقْ
وَمَنْ جَمَعَ بَيْنَهُمَا فَقَدْ تَحَقَّقْ

“அல்லாஹுஸ்ஸமத்” அல்லாஹ் தேவையற்றவன் என்றுதான் நம்ப வேண்டும். தேவையுள்ளவன் என்று நம்புதல் மத மாற்றத்திற்கு வழி கோலும். ஏனெனில் படைப்பு எந்நேரமும் தேவையுள்ளதாகவே இருக்கும். தேவையுள்ளவன் என்று நம்புதல் திருக்குர்ஆன் வசனத்திற்கு முரணானதுமாகும்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் وَاللهُ غَنِيٌّ عَنِ الْعَالَمِيْنَ அல்லாஹ் உலக மக்கள் அனைவரை விட்டும் தேவையற்றவன் என்று கூறியுள்ளான்.

இன்னுமொரு வசனத்தில் وَاللهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ அல்லாஹ் தேவையற்றவன், நீங்கள் அனைவரும் தேவையுள்ளவர்கள் என்றும் கூறியுள்ளான். இவ்வசனத்திற்கு அல்லாஹ் செல்வந்தன், நீங்கள் அனைவரும் ஏழைகள் என்றும் பொருள் கூறப்படுகின்றது.

இது இவ்வாறிருக்கும் நிலையில் அல்லாஹ் எண்ணற்ற மலக்குகளை – அமரர்களைப் படைத்து அவர்களில் பதின்மரை விஷேடமானவர்களாக்கி, அவர்களில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பணிக்கு நியமித்து அவர்களிடம் வேலை வாங்கும் போது வேலை வாங்குபவன் அவனிடம் தேவையாகின்றான் என்பது மறுக்க முடியாத ஒன்றாக உள்ளது. சமாளிப்போம். இன்ஷா அல்லாஹ்!

01. உதாரணமாக வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தனது நபீமாருக்கு செய்திகளைச் சேர்த்து வைப்பதற்காக நியமித்துள்ளான்.

02. மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் என்ற அமரரை காற்று, மழை, மற்றும், நீர் நிலைகளுக்கு பொறுப்பாளராக நியமித்துள்ளான்.

03. இஸ்றாபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை “சூர்” ஊதுவதற்குப் பொறுப்பாளராக நியமித்துள்ளான்.

04. இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை உயிரினங்களின் உயிர்களைக் கைப்பற்றுவதற்கு பொறுப்பாளராக நியமித்துள்ளான்.

05. மாலிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நரகத்திற்கு பொறுப்பாளராக நியமித்துள்ளான்.

06. ரிள்வான் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சுவர்க்கத்திற்குப் பொறுப்பானவராக நியமித்துள்ளான்.

07, 08. றகீப், அதீத் அலைஹிமஸ்ஸலாம் இருவரையும் மனிதர்கள் செய்கின்ற நன்மை, தீமைகளை பதிவு செய்வதற்காக நியமித்துள்ளான்.

09, 10. முன்கர், நகீர் இருவரையும் ஒரு மனிதன் மரணித்த பின் அவனிடம் கேள்வி கணக்கு கேட்பதற்காகவும், இன்னும் சில கேள்விகள் கேட்பதற்காகவும் நியமித்துள்ளான்.

மேலே சொல்லப்பட்ட பதின்மரும் மலக்குகளில் – அமரர்களில் மிக விஷேடமானவர்களாவர். இவர்களை விபரமாக அறிந்து “ஈமான்” கொள்வதும், மற்ற அமரர்களை பொதுவாக “ஈமான்” நம்புவதும் ஒரு முஸ்லிமின் கடமையாகும்.

அல்லாஹ் சகல விடயங்களுக்கும், மற்றும் ஆக்கவும், அழிக்கவும் வல்லமையுள்ளவனாக இருக்கும் நிலையில் அவனுக்கு மேற்கண்ட அமரர்கள் எதற்காக? அவர்களுக்கு அவன் வழங்கிய பொறுப்புக்களை அவனே செய்யலாமே! ஏன் இவர்கள் தேவைப்பட்டார்கள்? அல்லாஹ் தனது ஆட்சியை செவ்வனே செய்வதற்கும், சீரான ஆட்சி நடத்துவதற்கும் தன்னால் மட்டும் முடியாதவனா?

இவ்வாறு சில கேள்விகள் சிந்தனையுள்ள, ஆய்வுத்திறனுள்ள ஒரு மனிதனுக்கு ஏற்படுகிறது. இவ்வடிப்படையில் அல்லாஹ் தனது அமரர்களின் பால் தேவையாகிறான் என்பது விளங்கப்படுகின்றது.

இவ்வாறு வரும் கேள்விகள் நியாயமான கேள்விகள்தான். ஒரு முஸ்லிம் இவ்வாறான கேள்விக்குரிய பதிலை அறிந்தால்தான் அவனுக்கு அல்லாஹ்வில் நம்பிக்கை ஏற்படும். அவன் தேவையற்றவன் என்பதை ஆதாரத்தோடும், அறிவுபூர்வமாகவும் நம்பவும் முடியும்.

எனவே, ஓர் அறிஞன் தானறிந்ததை, தான் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுப்பதும், அறிவித்துக் கொடுப்பதும் அவ் அறிஞனின் கடமை என்ற அடிப்படையிலும், பின்வரும் பெருமானின் எச்சரிக்கையை சிர மேற் கொண்டும் ஏதாவதொரு வழியில் நான் அறிந்ததை மக்களுக்கு நான் விளக்கி வைக்கும் போது இன்றுள்ள இளம் மௌலவீமார்களிற் சிலர் என்னைக் காற்பந்தாக்கி விளையாடுவது வேதனைக்குரியதாயுள்ளது.


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ كَتَمَ عِلْمًا أَلْجَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ».

நபீ பெருமான் அலைஹிஸ்லாம் அவர்கள், “ஒரு மனிதன் ஓர் அறிவை அறிந்து அதை மற்றவர்களுக்குச் சொல்லாமல் மறைத்தானாயின் அல்லாஹ் அவனுக்கு – அவனின் வாய்க்கு நெருப்பினால் கடிவாளம் போடுவான்” என்று கூறியுள்ளார்கள்.

இந்த நபீ மொழியையும், இது போன்ற வேறு பல நபீ மொழிகளையும் என் சிந்தையிற் கொண்டு எனக்குத் தெரிந்ததை எழுதி வருகிறேன். பேசியும் வருகிறேன். எனது எழுத்தில் அல்லது பேச்சில் யாராவது பிழையிருப்பதை அறிந்தால் என்னோடு தொடர்பு கொண்டு எனக்கு அறிவிக்குமாறு எழுதிக் கொண்டும், சொல்லிக் கொண்டுமே இருக்கிறேன்.

நான் இவ்வாறு மனத்தெளிவோடு இருக்கும் நிலையில் எனது பேச்சை திரிவு படுத்தி என்மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்த நினைக்கின்ற, முயற்சிகளை மேற்கொள்கின்ற இளம் மௌலவீமார்களுக்கு “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானம் கற்றுக் கொள்ளுமாறு நான் அவர்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். ஏனெனில் இவர்கள் எனது வயதையும், எனது அனுப அறிவையும் மதிக்காமல் என்னைக் கிண்டல் செய்வது என் அறிவைக் கிண்டல் செய்வதாகவே ஆகும் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்கும், அல்லாஹ் இவர்களை மன்னித்து நல்வழிப்படுத்துவதற்கும் பத்ர் ஸஹாபாக்களின் தினமான இன்று – றமழான் 17ம் நாள் – நான் “துஆ” செய்கிறேன். நான் இவர்களைச் சபிக்காது போனாலும் சத்தியம் இவர்களை என்றும் சபிக்கும் என்பதை இவர்களுக்கு உணர்த்துவதற்கும் விரும்புகிறேன். இவர்கள் எப்போதும் அல்லாஹ்வின் “ஜலாலிய்யத்” என்ற அகோரத் தன்மையை பயந்து வாழ வேண்டுமென்றும் இவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். اِتَّقِ دَعْوَةَ الْمَظْلُوْمِ இது ஏந்தல் நபீயின் எச்சரிக்கை.

لَا يَلْدَغُ المؤمنُ فِى جُحْرٍ مَرَّتَيْنِ
இதுவும் பெருமானாரின் எச்சரிக்கை.

அல்லாஹ் அமரர்கள் பால் தேவையாகின்றான் என்ற கேள்விக்கு நான் கூறும் பதில் ஒன்றுதான். அந்த பதில் கூட “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும்.

தேவையாதல்:

தேவையாதல் என்பதற்கு அறபு மொழியில் الإحتياج என்று சொல்லப்படும்.

தேவையாதல் என்பதற்கு மூன்று அம்சங்கள் வேண்டும். அந்த மூன்றில் ஒன்றேனும் இல்லையெனில் தேவை என்பதும் இல்லை.

அவை مُحْتَاجْ – தேவை உள்ளவன். مُحْتَاجٌ إِليْهِ – தேவையை நிறைவேற்றி வைப்பவன். اَلْإِحْتِيَاجْ – தேவை. இம் மூன்றும் ஒரே நேரத்தில் இருந்தால் மாத்திரமே தேவையாதல் என்று பெயர் வரும்.

முசம்மில் என்பவனுக்கு பணம் தேவை. அதைக் கொடுப்பவன் முனீர் என்றால் முசம்மில் مُحْتَاجْ என்றும், முனீர் مُحْتَاجٌ إِلَيْهِ என்றும், பணம் إِحْتِيَاجْ என்றும் சொல்வோம்.

ஓர் ஊரில் மழை பெய்விப்பதற்காக மழைக்குப் பொறுப்பான மீகாயீல் என்ற அமரர் அல்லாஹ்வுக்கு தேவையானால் அல்லாஹ் مُحْتَاجْ என்றும், மீகாயீல் مُحْتَاجٌ إِلَيْهِ என்றும், மழை إِحْتِيَاجْ என்றும் சொல்வோம்.

ஒருவரை மரணிக்கச் செய்வதற்காக உயிரைக் கைப்பற்றுவதற்குப் பொறுப்பான இஸ்றாயீல் என்ற அமரர் அல்லாஹ்வுக்குத் தேவையானால் அல்லாஹ் “முஹ்தாஜ்” என்றும், இஸ்றாயீல் “முஹ்தாஜ் இலைஹி” என்றும், உயிரைக் கைப்பற்றுதல் “இஹ்தியாஜ்” என்றும் சொல்வோம்.

இவை போல் ஏனைய விடயங்களையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் தவிர ஒன்றுமே இல்லை என்ற தத்துவம் ஸூபீகளினதும், ஞானிகளினதும் கற்பனையில் உருவான தத்துவமல்ல. அது அல்லாஹ்வினதும், கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களினதும், திருக்குர்ஆன், ஹதீதுகள், மற்றும் “லாஇலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவினதும் தத்துவமாகும்.

இந்த தத்துவத்தின் படி ஜிப்ரீலும், மீகாயீலும், இஸ்றாபீலும், இஸ்றாயீலும், மற்றுமுள்ள ஏனைய அமரர்களும் அவனேதான். இத்தத்துவத்தின்படி முஹ்தாஜ், முஹ்தாஜ் இலைஹி, இஹ்தியாஜ் எல்லாமே அவனாயிருக்கும் நிலையில் யார் யாரிடம் உதவி தேடுவது?

ஒருவன் தன்னல்லாத இன்னொருவனிடம் உதவி கேட்கும் போதுதான் குறித்த மூன்று அம்சங்களும் தேவைப்படுகின்றன.

அல்லாஹ்வே ஜிப்ரீலாகவும், மீகாயீலாகவும், இஸ்றாபீலாகவும், இஸ்றாயீலாகவும் “தஜல்லீ” வெளியாகியிருக்கும் நிலையில் அவனே ஜிப்ரீல் என்ற “மள்ஹர்”இல் அவருக்குரிய வேலையைச் செய்கிறான். இவ்வாறுதான் ஏனைய அமரர்களுமாவர்.

எனவே, அல்லாஹ் எதற்கும் தன்னல்லாத எவரளவிலும் தேவையாகவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனும், ஹதீதுகளும் சொல்வது நூறு வீதம் உண்மையேயாகும்.

எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக, எனது ஆரோக்கியத்துக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments