தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
உடையில் ஏமாந்துவிடாமல் உடையில் வந்தவனின் உடலையும் பார்க்க வேண்டும். குஷ்டரோகியும் “மேக்கப்” செய்து வருவான்.
“பிக்ஹுஸ் ஸுன்னஹ்” فِقْهُ السُّنَّةْ நூல் பற்றி ஓர் ஆய்வு:
இந்நூலாசிரியர் தனது நூல் மூன்றாம் வால்யூம், “அல் ஐமான்” என்ற பாடம் 80ம் பக்கத்தில்,
فَمَنْ حَلَفَ بِغَيْرِ اللهِ فَأَقْسَمَ بِالنَّبِيِّ أَوِ الْوَلِيِّ أَوِ الْأَبِ أَوِ الْكَعْبَةِ أَوْ مَا شَابَهَ ذَلِكَ فَإِنَّ يَمِيْنَهُ لَا تَنْعَقِدُ، وَلَا كَفَّارَةَ عَلَيْهِ إِذَا حَنَثَ، وَأَثِمَ بِتَعْظِيْمِهِ غَيْرَ اللهِ،
என்று எழுதியுள்ளார்.
அவரின் அறபு வசனத்திற்கான பொருளை முதலில் எழுதி பின்னர் கருத்தை, அவர் என்ன சொல்கிறார் என்பதை எழுதுகிறேன்.
(அல்லாஹ் அல்லாததைக் கொண்டு ஒருவன் சத்தியம் செய்தானாயின்- அதாவது நபீயைக் கொண்டு, அல்லது வலீயைக் கொண்டு, அல்லது தந்தையைக் கொண்டு, அல்லது “கஃபா”வைக் கொண்டு சத்தியம் செய்தானாயின், அல்லது இவை போன்றவை கொண்டு சத்தியம் செய்தானாயின் அவனின் சத்தியம் நிறைவேறாது. அவ்வாறு செய்த சத்தியத்தை அவன் முறித்தால் அதற்குத் தண்ட குற்றமும் கிடையாது. அதோடு அவன் அல்லாஹ் அல்லாதவற்றை கண்ணியப்படுத்தியதால் பாவியாகவும் ஆகிவிட்டான்)
இவரின் கருத்தில் நான் சுட்டிக் காட்ட விரும்புவதும், பிழையான கருத்தென்று கூற விரும்புவதும் இறுதியாக இவர் கூறிய கருத்தேயாகும்.
அதாவது நபீ, வலீ, தந்தை, கஃபா மற்றும் இவை போன்றவை கொண்டு – அதாவது படைப்புகள் கொண்டு சத்தியம் செய்தல் கூடாது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். எனினும் இவை கொண்டு சத்தியம் செய்தவன் அல்லாஹ் அல்லாததை “தஃளீம்” கண்ணியம் செய்த பாவியாகிவிட்டான் என்று கூறியிருப்பதே எமது ஆட்சேபனைக்குரிய விடயமாகும்.
ஏனெனில் இவரின் கருத்துப்படி நபீமாரை கண்ணியம் செய்தவனும், வலீமாரை கண்ணியம் செய்தவனும், தந்தையை கண்ணியம் செய்த மகனும் பாவிகளாவர் என்று கூறுகிறார்.
இஸ்லாம் இவர் கூறுவதற்கு மாறாகவே மேற்கண்டவர்கள் படைப்புகளாயிருந்தாலும் அவர்கள் கண்ணியம் செய்யப்பட வேண்டியவர்கள் என்று கூறுகிறது. மேற்குறித்த இவர்களை வணங்குவதுதான் தடை செய்யப்பட்டதேயன்றி இவர்களைக் கண்ணியப்படுத்துதல் தடை செய்யப்படவில்லை.
அல்லாஹ் திருக்குர்ஆனில்
وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ
அல்லாஹ்வின் சின்னங்களை – அல்லாஹ்வை நினைவூட்டும் படைப்புக்களை கண்ணியம் செய்வது உள்ளங்களில் உள்ள இறையச்சமென்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன்: 22-32)
மேற்கண்ட இந்த வசனத்தில் تَعْظِيْمْ – கண்ணியம் செய்தல் என்ற சொல்லையே அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.
நபீமார் அல்லாஹ்வை நினைவு படுத்தும் சின்னங்களில்லையா? அவ்லியாஉகள் அல்லாஹ்வை நினைவுபடுத்தும் சின்னங்களில்லையா? பள்ளிவாயல்கள் அல்லாஹ்வை நினைவு படுத்தும் சின்னங்களில்லையா?
இன்னும் அல்லாஹ் திருக்குர்ஆனில் وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ ஒட்டகங்களை – மினா எனுமிடத்தில் அறுப்பதற்காக அடையாளமிடப்பட்ட மேற்கண்ட ஒட்டகங்களை அல்லாஹ்வை நினைவு படுத்தும் சின்னங்கள் என்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன்: 22-36)
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ
மக்கா நகரிலுள்ள ஸபா, மர்வா என்ற இரண்டு இடங்களும் அல்லாஹ்வை நினைவு படுத்தும் சின்னங்கள் என்று கூறியுள்ளான் (02-158)
மேற்கண்ட இவையாவும் படைப்புகளேயாகும். இவற்றை “தஃளீம்” கண்ணியப் படுத்துமாறு அல்லாஹ் மக்களுக்கு ஏவியிருக்கும் நிலையில் இவற்றைக் கண்ணியப்படுத்தியவன் பாவியாகிவிட்டான் என்று “பிக்ஹுஸ் ஸுன்னஹ்” நூலாசிரியர் கூறியிருப்பது முற்றிலும் பிழையாகும்.
மேற்கண்ட وأثم بتعظيمه غير الله அல்லாஹ் அல்லாததை – அதாவது படைப்பை கண்ணியம் செய்வதன் மூலம் அவன் பாவியாகிவிட்டான் என்ற வசனம் நூலாசிரியரின் சொந்த வசனமேயன்றி ஹதீதின் வசனமல்ல.
இவரின் கூற்றுப்படி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் எழுந்து நின்று அவர்களைக் கண்ணியப்படுத்துவதும், பெற்றோருக்கு கண்ணியம் செய்வதும், உலமாஉகளை மற்றவர்கள் கண்ணியம் செய்வதும் பிழையான செயல்களேயாகும். வஹ்ஹாபிகள்தான் இவ்வாறு சொல்வார்களே தவிர ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் இவ்வாறு சொல்லமாட்டார்கள்.
எனவே, இவரின் நூலை வாசிக்கும் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மிக நிதானத்துடன் வாசிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இவரின் வரலாறை அறிந்து கொள்ள விரும்புவோர் தேடியறிந்து கொள்ள வேண்டும்.
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக, எனது ஆரோக்கியத்துக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.