தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
وَالْيَمِيْنُ، وَالْحَلْفُ، وَالْإِيْلَاءُ، وَالْقَسَمُ أَلْفَاظٌ مُتَرَادِفَةٌ
அறபு மொழியில் யமீன், ஹல்பு, ஈலாஉ, கஸம் முதலான சொற்கள் யாவும் சத்தியம் என்ற பொருளுக்குரிய பல சொற்களாகும். ஒரே பொருளுக்குரிய பல சொற்கள் இருந்தால் அவை أَلْفَاظٌ مُتَرَادِفَةٌ ஒரே பொருளைத்தரும் பல சொற்கள் எனப்படும்.
சத்தியம் செய்பவனுக்குரிய நிபந்தனைகள் பின்வருமாறு.
إِنَّمَا تَصِحُّ الْيَمِيْنُ مِنْ كُلِّ بَالِغٍ عَاقِلٍ مُخْتَارٍ قَاصِدٍ إِلَى الْيَمِيْنِ، فَمَنْ سَبَقَ لِسَانُهُ إِلَيْهَا أَوْ قَصَدَ الْحَلْفَ عَلَى شَيْئٍ فَسَبَقَ لِسَانُهُ إِلَى غَيْرِهِ لَمْ يَنْعَقِدْ، وَذَلِكَ لَغْوُ الْيَمِيْنِ،
அவன் வயது வந்தவனாயிருத்தல், புத்தியுள்ளவனாயிருத்தல், சத்தியம் செய்வதை சுய விருப்பத்தின்படி நாடிச் செய்பவனாயிருத்தல்.
சத்தியம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு நான் மேலே குறிப்பிட்டது போல் அறபு மொழியில் பல சொற்கள் இருந்தாலும் கூட சட்டக்கலை மேதைகளான “புகஹாஉ” என்போர் “யமீன்” என்ற சொல்லுக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார்கள்.
இதற்கான காரணம் என்னவெனில் “யமீன்” என்ற இச்சொல்லுக்கு “வலது” – வலதுகை என்ற பொருளும் உண்டு.
اَلْعَرَبُ كَانُوْا إِذَا تَحَالَفُوْا أَخَذَ كُلُّ وَاحِدٍ بِيَمِيْنِهِ وَيَمِيْنِ صَاحِبِهِ،
அறபு மக்கள் சத்தியம் செய்யும் வேளை ஒருவர் தனது வலக்கரத்தால் மற்றவரின் வலக்கரத்தைப் பற்றிக் கொண்டு சத்தியம் செய்யும் வழக்கமுள்ளவர்களாயிருந்தனர். இதனால் சத்தியத்திற்கு “யமீன்” என்ற சொல் பிரசித்தமானது எனலாம்.
சத்தியம் செய்பவன் அதை சுயமாக நாடிச் செய்ய வேண்டுமென்ற நிபந்தனை மூலம் அதை நாடாமல் அவன் எதிர்பாராத வகையில் நாவால் சத்தியம் என்ற சொல் வந்துவிட்டால் அது சத்தியமாகாது. அதை அவனிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறுதான் ஒரு விடயத்திற்கு சத்தியம் செய்ய அவன் சுயமாக நாடி வாயால் சொல்லும் வேளை அவன் நாடிய விடயத்தைச் சொல்லாமல் வேறோர் விடயத்தைச் சொன்னாலும் அது சத்தியமாகாது.
மனித வாழ்வில் இவ்வாறான தவறுகள் நடப்பது சகஜமாகும். இது அறபியில் “ஸப்குல்லிஸான்” سَبْقُ اللِّسَانِ அவன் நினைக்காமல் அவனின் நா – நாக்கு முந்துதல் என்று சொல்லப்படும். இது தவறையே சேரும்.
لَا يُؤَاخِذُكُمُ اللهُ بِاللَّغْوِ فِى أَيْمَانِكُمْ
உங்களின் சத்தியங்களிலே வீணானதைக் கொண்டு – வீணான சத்தியம் மூலம் அல்லாஹ் உங்களைக் குற்றம் காணமாட்டான். (திருக்குர்ஆன் – 2-225 )
இவ்வாறான சத்தியம் لَغْوُ الْيَمِيْنِ – வீணான சத்தியம் என்று திருக்குர்ஆன் மூலம் அல்லாஹ்வே சொல்லிவிட்டான்.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ تَعَالَى تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ»
எனது “உம்மத்” சமுகத்தை விட்டும் தவறையும், மறதியையும், பலாத்காரப்படுத்தப்படுவதையும் அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
நபீமொழி – அல் முஃஜமுல் கபீர் லித்தபறானீ
இதன் விளக்கமென்னவெனில் ஒரு விடயம் பிழையென்று தெரியாமல் அதைச் செய்வது தவறாகும். பிழையென்று தெரிந்தும் அதைச் செய்வது தப்பாகும். தவறுக்குத் தண்டனையில்லை. தப்புக்குத் தண்டனை உண்டு. அல்லாஹ் தவறை மன்னிப்பவன். தப்புக்குத் தண்டனை வழங்குவான்.
மார்க்கத்தில் விலக்கப்பட்ட ஒன்றை அறிந்திருந்தும் கூட அதை மறந்து செய்தால் அதற்கும் மன்னிப்பு உண்டு. மறக்காமலேயே செய்துவிட்டு மறந்து செய்ததாகக் கூறி நடிப்பது கூடாது. அல்லாஹ் யாவும் அறிந்தவன்.
ஒருவன் ஒரு பாவத்தைச் செய்யுமாறு பலாத்காரப்படுத்தப்பட்ட நிலையில் செய்தானாயின் அவனுக்கும் மன்னிப்பு உண்டு.
மேற்கண்ட மூன்று விடயங்கள் மன்னிக்கப்படுவதாயினும் இது தொடர்பாக நிறைய விபரமும், விளக்கமும் உள்ளன. விவரம் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொண்டு அல்லது ஸுன்னீ உலமாஉகளில் தரமானவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
எனக்கு அறிமுகமான ஒருவர் இருக்கிறார். அவர் எப்போது பேசினாலும் واللهِ – வல்லாஹி என்று அடிக்கடி சொல்வது வழக்கம். இவர் சத்தியம் செய்வதை நாடிச் சொல்வதில்லை. நான் இவரிடம் “வல்லாஹி” உன் பிறப்புவாசி என்று சொல்வேன். சிரித்துக் கொள்வார். இவர் இவ்வாறு சொல்வதால் மேற்கண்ட திருவசனத்தின்படி குற்றவாளியாகமாட்டார்.
அறபு நாடுகளில் நல்லாப் படித்தவர்கள் தவிர மற்றவர்களிடம் தேவையோ, தேவையில்லையோ ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்களாயின் واللهِ – “வல்லாஹி” என்று சுமார் பத்து தரமேனும் சொல்லவே செய்வார்கள்.
நான் திரு மதீனா நகர் அல்ஜாமிஅதுல் இஸ்லாமிய்யா பல்கலைக் கழகத்தில் இருந்த காலப்பகுதியில் ஒரு கடைக்குச் சென்று ஏதோ ஒரு பொருளின் விலை பற்றிக் கேட்டால் போதும். விலை சொல்லும் போதே واللهِ خمس ريال – வல்லாஹி கம்ஸு ரியால் என்றே சொல்வார்கள்.
“ஐயாமுல் ஜாஹிலிய்யா” காலத்தில் وَالْعُزَّى وَاللَّاتِ என்று தமது தெய்வங்கள் கொண்டு சத்தியம் செய்து பழகி வந்தவர்கள் இஸ்லாம் வந்த பின் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்யலாகிவிட்டனர். நாகரீகமும், விஞ்ஞான அறிவும் வளர வளர தேவையற்ற, பொருத்தமற்ற அவர்களின் பழக்க வழக்கங்களும் மாறி வருகின்றன.
திரு மக்கா நகரிலும், மற்றும் ஹிஜாஸ் பகுதிகளிலும் இஸ்லாம் மலருமுன் ஆண்கள், பெண்கள் அனைவருமே நின்ற நிலையில் சலம் கழிக்கும் வழக்கமுள்ளவர்களாகவே இருந்துள்ளார்கள் என்று நபீ மொழிகள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. இஸ்லாம் மலர்ந்த பின் ஆண்களும், பெண்களும் குந்தியவர்களாகவே சலம் கழிக்கத் தொடங்கிவிட்டனர்.
இதேபோல் இஸ்லாம் ஒளிரத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்த பாராட்டுதற்குரிய சில நல்ல பழக்க வழக்கங்கள் காலப் போக்கில் குறைந்து போவதையும் காண முடிகிறது.
நான் அறபு நாட்டில் இருந்த 1977 காலப்பகுதியில் அறபிகளில் இருவருக்கிடையில் ஏச்சுப் பேச்சுகள் நடைபெறுமாயின் ஒருவர் மற்றவருக்கு صَلِّ عَلَى مُحَمَّدٍ – ஸல்லி அலா முஹம்மத் (முஹம்மத் அவர்கள் மீது ஸலவாத் சொல்) என்று கூறுவார். அதோடு மற்றவர் பெருமானார் மீது ஸலவாத் சொல்லி அமைதியாகிவிடுவார். இது நான் எனது கண்ணால் கண்ட, காதால் கேட்ட விடயம். ஆனால் இன்று இந்த நல்ல வழக்கமும் நாகரீகத்தின் முன் தலை குனிந்து செல்கிறது. இன்னும் சில வருடங்களில் ஆங்கில நாடுகள் ஹிஜாஸ் நாடுகளிடம் நாகரீகத்தை வாங்கிக் கொள்ளக் கூடும்.
وَلَا تَنْعَقِدُ الْيَمِيْنُ إِلَّا بِاسْمٍ مِنْ أَسْمَائِهِ تَعَالَى، أَوْ صِفَةٍ مِنْ صِفَاتِهِ، لِمَا فِى الْحَدِيْثِ الْمُتَّفَقِ عَلَيْهِ مِنْ قَوْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَلاَ إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ، مَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ أَوْ لِيَصْمُتْ
எதைக் கொண்டு சத்தியம் செய்யலாம்?
அல்லாஹ்வின் திரு நாமங்களில் ஒன்றைக் கொண்டும், அவனின் “ஸிபாத்” தன்மைகளில் ஒன்றைக் கொண்டும் சத்தியம் செய்யலாம். இதற்குப் பின்வரும் நபீ மொழி ஆதாரமாக உள்ளது.
“அறிந்து கொள்ளுங்கள்! உங்களின் தந்தைமார்களைக் கொண்டு சத்தியம் செய்ய வேண்டாமென்று அல்லாஹ் உங்களைத் தடை செய்துள்ளான். எவராவது சத்தியம் செய்ய வேண்டுமாயின் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனியாயிருக்கட்டும்” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
புகாரீ – 6108,
முஸ்லிம் – 1646 – கிதாபுல் ஐமான்
فَلَا تَنْعَقِدُ الْيَمِيْنُ بِالنَّبِيِّ وَلَا بِالْكَعْبَةِ ، وَلَا بِقَوْلِ الْقَائِلِ
நபீயைக் கொண்டு, கஃபாவைக் கொண்டு, அல்லது யாரேனும் ஒருவரின் சொல்லைக் கொண்டு சத்தியம் செய்தால் அது சத்தியமாகாது. நிறைவேறாது.
ஒருவன் தனது தாயின் தலையில், அல்லது தனது பிள்ளையின் தலையில் கை வைத்து என் தாய் மீது ஆணையாக, என் பிள்ளை மீது ஆணையாக என்று சத்தியம் செய்வது குற்றமாகும். அதோடு அது சத்தியமாகவுமாட்டாது.
சத்தியம் தொடர்பாக நான் மிகச் சுருக்கமாக எழுதியுள்ளேன். இவ்விடயத்தில் விபரங்களும், விளக்கங்களும் உண்டு. விடயம் நீண்டு விடுமென்பதற்காக சுருக்கிக் கொண்டேன். நான் எழுதியுள்ள விடயங்கள் தொடர்பாக மேலதிக விபரங்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு கொள்வோர் தமது பெயர், முகவரிகளை விளக்கமாக எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எம்முடன் தொடர்பு கொள்ள வசதியற்றவர்கள் “ஸுன்னத் வல்ஜமாஅத்” கொள்கையுள்ள தரமான மௌலவீயைச் சந்திக்குமாறு ஆலோசனை வழங்குகிறேன்.
அல்லாஹ் தனது படைப்புகளைக் கொண்டு சத்தியம் செய்வது தொடர்பான விடயம் அடுத்த பதிவில் தொடரும்.
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக, எனது ஆரோக்கியத்துக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.