தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
இப்னு அறபீ நாயகமவர்களின் அற்புத அறிவாற்றலை என்னென்று சொல்வது? அவர்கள்தான் சொல்கிறார்களா? அல்லது அவர்கள் மூலம் அல்லாஹ்தான் சொல்கின்றானா? ஸுப்ஹானல்லாஹ்! அறிவெங்கே? நாமெங்கே?
وقال الشّيخ الأكبر فى الأحد وثمانين وأربعمأةٍ، اعلم أنّ مقامَ الإحسانِ هو العملُ على شُهُودِ الحقِّ تعالى فى حال العبادة، وفى ذلك تنبيهٌ عجيبٌ، فإنّه بتِلْكَ المُشاهدة يُبْصِرُ أنّ الفاعل هو الله تعالى لا هُوَ، فإنّ العبدَ إنّما هو محلٌّ لِظُهورِ العملِ لا غيرُ،
(اليواقيت، ج 1، ص – 127)
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் அல்புதூஹாதுல் மக்கிய்யா எனும் நூல் 481ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
அறிந்து கொள்! “இஹ்ஸான்” உடைய “மகாம்” என்பது வணக்கம் செய்கின்ற நிலையில் அல்லாஹ்வை “ஷுஹூத்” காட்சியாக கண்டு அமல் செய்வதாகும். ஏனெனில் அந்த “முஷாஹதா” காட்சி நிலையில்தான் – அதன் மூலம்தான் எதார்த்தத்தில் செய்பவன் அல்லாஹ்தானேயன்றி தானல்ல என்பதை வணக்கம் செய்பவன் காண்பான். ஏனெனில் அடியான் என்பவன் “அமல்” என்ற செயல் வெளியாகும் பாத்திரமேயன்றி வேறல்ல.
“இஹ்ஸான்” என்றாலும், “இக்லாஸ்” என்றாலும் இரண்டும் ஒன்றுதான். வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மாறு வேடத்தில் நபீ பெருமானிடம் வந்து “இஹ்ஸான்” என்றால் என்ன? என்று கேட்ட கேள்விக்கு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்,
أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ
நீ அல்லாஹ்வைக் காண்பவன் போல் அவனை வணங்க வேண்டும். நீ அவனைக் காணாது போனாலும் அவன் உன்னைக் காண்கிறான் என்று கூறிய விளக்கத்தின் தெளிவான சுருக்கமாகும்.
இந்த நபீ மொழியில் இரு நுட்பங்கள் உள்ளன. இவ்விரு நுட்பங்களையும் சுட்டிக் காட்டி ஒரு நுட்பத்துக்கு மட்டும் விளக்கம் எழுதுகிறேன். மற்ற நுட்பத்துக்கான விளக்கம் எனக்கு ஐயமறத் தெளிவான பின் எழுதுகிறேன்.
ஒரு நுடம்பம். இந்த நபீ மொழியில் أن تعبد الله كانّك تراه இக்லாஸ் அல்லது இஹ்ஸான் என்றால் வணங்குபவன் வணங்கப்படுகின்ற இறைவனை ஞானக் காட்சியில் காண்பதாகும். இந்த நிலையை அடையப் பெறுவதற்கு வணங்குபவன் வணங்கப்படுபவனை காண்பது போன்று வணங்குவதாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இறைவனைக் காண்பவனாக வணங்குதல் என்றாலும், காண்பவனைப் போல் வணங்குதல் என்றாலும் காணப்படும் இறைவன் ஏதேனுமொரு தோற்றத்தில் இருக்க வேண்டும். அவ்வாறாயின் அத்தோற்றம் எது? என்பதை “ஷிர்க்” எனும் இணை வந்துவிடாமல் அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான சந்தேகத்தை மனிதனுக்கு ஏற்படுத்துவது மேலே குறித்த நபீ மொழியில் வந்துள்ள كأنك تراه என்ற சொல்லில் உள்ள “காப்” என்ற ஒரேயொரு எழுத்தேயாகும்.
இந்த “காப்” என்ற எழுத்துக்கு “தஷ்பீஹ்” ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பாக்குதல் என்று பொருள் வரும். நீ இறைவனைக் காண்பவனைப் போல் அவனை வணங்க வேண்டுமென்றால் ஏதாவதொரு தோற்றத்தை تخييل கற்பனை பண்ணுமாறு இஸ்லாம் சொல்கிறதா?
இவ்வாறான பல கேள்விகளுக்கு விடை கண்ட பின் விளக்கம் எழுத வேண்டியுள்ளதால் இதற்கான விளக்கத்தை இப்போது எழுதாமல் பின்னர் எழுதுகிறேன்.
இந்த நபீ மொழியில் உள்ள இரண்டாவது நுட்பம் என்வெனில் فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ என்ற வசனத்தில் تَرَاهُ என்ற சொல்லில் “றே” எழுத்துக்கு பின்னால் “அலிப்” என்ற எழுத்து இல்லாமல் فَإِنْ لَمْ تَكُنْ تَرَهُ என்று வசனம் அமைந்தால் “நீ இல்லையென்றால் அவனைக் காண்பாய்” என்ற கருத்து வரும். “இன்” என்ற “ஷர்த்”துக்கு تَرَهُ என்பது ஜவாபாகும். இது மொழியிலக்கண விதியாகும்.
அதாவது நீ எப்போது இல்லாமற் போகின்றாயோ அப்போதுதான் அவனைக் காண்பாய். நீ நீயாக இருந்து கொண்டு அவனைக் காண்பதென்பது அசாத்தியமாகும். எனவே நீ இறைவனைக் காண்பதாயின் உன்னுணர்வில் நீ இல்லாமற் போக வேண்டும்.
இவ்வாறு ஸூபீகள் இந்த நபீ மொழிக்கு விளக்கம் கொடுத்து தொழுகையில் “பனா” என்ற நிலைக்கு வழி காட்டுகிறார்கள்.
இக்கருத்தை நிறுவுவதற்கு ஸூபீகள் இறைஞானி இப்னு அறபீ அவர்களின் ஒரு தத்துவத்தை ஆதாரமாகக் கூறுகின்றார்கள்.
إِنْ تَغَيَّبْتُ بَدَا وَإِنْ بَدَا غَيَّبَنِيْ
நான் மறைந்தால் அவன் வெளியாவான். அவன் வெளியானால் என்னை மறைத்துவிடுவான். இதுதான் இப்னு அறபீ அவர்களின் கூற்று.
இக்கூற்று “பனா” என்ற ஆன்மிக இடத்தை தொட்டுக் காட்டுகின்றது.
(தொடரும்…..)