தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ، وَهُوَ سَاجِدٌ، فَأَكْثِرُوا الدُّعَاءَ»
ஒரு மனிதனின் நிலைகளில் அவன் மிக நெருங்கிய நிலை ‘ஸுஜூத்’ உடைய நிலையாகும். எனவே ‘துஆ’வை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
ஒரு மனிதன் 24 மணித்தியாலங்களைக் கொண்ட ஒரு நாளில் அவன் உறங்கும் நேரம் தவிர ஏனைய நேரங்களில் பல நிலைகளில் இருப்பான். சில நேரம் கவலையால் வாடிப் போயிருப்பான். சில நேரம் மகிழ்ச்சியால் மலர்ந்து போயிருப்பான். இன்னும் சில நேரம் கோபத்தால் சிவந்து போயிருப்பான். சில நேரம் இறையச்சத்தால் இழுக்கப்பட்டு அனைத்தையும் இழந்தவன் போல் மௌனியாயிருப்பான். வேறு சில நேரம் இறைவனின் ‘ஜலாலிய்யத்’ எனும் சக்தி மிகைத்தவனாய் ஆணவம் ஆட்சி செய்பவனாயிருப்பான்.
இவ்வாறு மனிதன் பல நிலைகளில் இருப்பான்.
ஏனெனில் ‘கல்பு’ மனித உள்ளம் என்பது ஒரு நொடி நேரம் கூட எந்தவொரு சிந்தனையுமின்றி காலியானதாயிருக்காது. மாறாக ஏதாவதொன்றோடு தொடர்புள்ளதாகவே இருக்கும். இது உள்ளத்தின் இயற்கை அமைப்பாகும்.
ஒரு மனிதன் தனது இறைவனுடன் மிக நெருங்கிய நேரம் அவன் ‘ஸூஜூத்’ என்ற நிலையில் இருக்கும் போதென்று பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். (முஸ்லிம்)
ஒரு தொழுகையில் பல நிலைகள் உள்ளன. அவை நிற்கும் நிலை, இது ‘கியாம்’ எனப்படும். இன்னொரு நிலை குனிந்து வளைந்து நிற்கும் நிலை. இது ‘றுகூஉ’ எனப்படும். மற்றொரு நிலை நெற்றியை தரையிலும், முழங்கால் இரண்டையும் தரையிலும் இரு கால்களின் இரு விரல்களின் உட்பகுதிகளை தரையிலும் இரு கைகளின் உள்ளங் கைகள் இரண்டையும் தரையில் விரித்தாற் போல் வைத்தல். இவ்வாறு செய்தலே ‘ஸுஜூத்’ எனப்படுகிறது. இவ்வாறு தொழுகையில் பல நிலைகள் உள்ளன.
மேற்குறிப்பிட்ட நிலைகளில் மிகச்சிறந்த நிலை ‘ஸுஜூத்’ நிலையென்று சொல்லப்படும்.
‘ஸுஜூத்’ உடைய நிலைதான் மிகச் சிறந்த நிலையென்று மேலே குறித்த நபீ மொழி கூறுவதாலும், இந்த நிலையில் மனிதனின் ஏழு உறுப்புக்கள் தரையில் பட வேண்டுமென்று பின்வரும் நபீ மொழியும், இஸ்லாமிய ‘ஷரீஆ’ சட்டமும் வலியுறுத்துவதாலும் ‘ஸுஜூத்’ நிலைதான் ஏனைய நிலைகளை விடச் சிறந்ததென்று விளங்க முடிகிறது.
أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ
ஏழு உறுப்புக்களின் மீது ‘ஸுஜூத்’ செய்யுமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். (நபீ மொழி)
மீண்டும் அந்த ஏழு உறுப்புக்களையும் குறிப்பிடுகிறேன். அவை நெற்றி, இரு உள்ளங் கைகள், இரண்டு முழங்கால்கள், இரு கால்களின் விரல்களின் உட்பகுதிகள்.
மேற்கண்ட ஏழு உறுப்புக்களும் ‘ஸுஜூத்’ செய்யும் நிலையில் தரையில் பட வேண்டுமென்பது அவசியமாகும். அவற்றில் ஒன்று கூட தரையில் படவில்லையானால் அந்த ‘ஸுஜூத்’ நிறைவேறாது. தரையில் பட வேண்டுமென்று சொல்வது மண்ணில் அல்லது மார்பிள் கல்லில், அல்லது சீமெந்து தரையில் படுவதை மட்டும் குறிக்காது. பலகை, புல், மெத்தை போன்றவற்றில் படுவதையும் சேர்த்துக் கொள்ளும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் ஒன்று உண்டு. இவ்விடயத்தில் ஆண்களை விட பெண்களே அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதாவது பெண்கள் தமது தலையை மறைத்தும், முகத்தை திறந்தும் தாம் அணிந்துள்ள துணியால் நாடிக்கு கீழே ஒரு முடிச்சு போல் கட்டுவார்கள். இதற்கு இலங்கை – கிழக்கு மாகாணத்தில் எனதூரில் ‘மக்கன்னா’ என்று பெண்கள் சொல்வார்கள். இவ்வாறு கட்டித் தொழும் பெண் நெற்றியை தரையில் வைக்கும் போது கவனமாக நெற்றியை வைக்க வேண்டும். அவள் தனது தலையை மறைத்துள்ள துணி நெற்றி நிலத்தில் படாமல் அது திரையாக அமைந்தால் – அதாவது அந்த துணி நெற்றி தரையில் படாமல் தடுக்குமாயின் அந்த ‘ஸுஜூத்’ நிறைவேறாது. ‘ஸுஜூத்’ நிறைவேறவில்லையானால் தொழுகையும் நிறைவேறாது. இந்த விபரத்தை சட்டம் தெரிந்த ஒருவரிடம் நேரில் கேட்டு விளங்குவது தெளிவுக்கு வழி செய்யும்.
சில ஆண்கள் உள்ளார்கள். இவர்கள் வருடத்தில் இரண்டு நாட்கள் தான் தொழுவார்கள். ஒன்று நோன்புப் பெருநாள் தொழுகை. மற்றது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை.
இன்னும் சிலர் உள்ளார்கள். இவர்கள் வருடத்தில் இரண்டு பெருநாள் தொழுகைகளையும், ஒரு வருடத்தில் வருகின்ற சுமார் 52 வெள்ளிக்கிழமை ‘ஜும்ஆ’ தொழுகைகளையும் தொழுவார்கள்.
இன்னும் சிலர் உள்ளார்கள். இவர்களும் முஸ்லிம்கள்தான். இவர்களுக்கு ‘கிப்லா’ எந்தப் பக்கம் உள்ளது என்று கூடத் தெரியாது. இவர்களுக்காக ‘ஜனாஸா’ தொழுகைதான் நடத்தப்படும். ஆனால் இவர்கள் எத்தனை வயது வரை வாழ்ந்தாலும் கூட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறைவனுக்காக நெற்றியை தரையில் வைக்காதவர்களாவர். இப்படியும் முஸ்லிம்கள் உள்ளார்களா என்று எவரும் வியப்படையத் தேவையில்லை. எத்தனை பேர் தேவையானாலும் கேட்டால் தருவோம்.
இவ்வாறு வாழும் 65 வயதுள்ள ஒருவரை அழைத்து இரண்டு சாட்சிகளையும் வைத்துக் கொண்டு வினவினேன். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எத்தனை தரம் தொழுதுள்ளீர்கள் என்றுதான் முதலில் கேட்டேன். அதற்கவர் ஒரு தரமும் தொழவில்லை என்றார். நீங்கள் இளைஞராயிருந்த காலத்திலும் தொழவில்லையா என்று கேட்டேன். இல்லை என்றே சொன்னார். உங்களின் 65 வருட வாழ்க்கையில் 100 பெருநாட்களையாவது நீங்கள் சந்தித்திருப்பீர்கள். ஒரு பெருநாள் தொழுகையாவது தொழவில்லையா? என்று கேட்டேன். இல்லை என்றே சொல்லிவிட்டார்.
அவரிடம் நீங்கள் மரணித்து அல்லாஹ்வின் நீதி மன்றில் நிறுத்தப்பட்டு வினவப்பட்டீர்களாயின் என்ன பதில் சொல்வீர்கள் என்று கேட்டேன்.
அதற்கவர், என்னுடைய றப்பே தொழாமலிருந்தது பிழைதான். தவறுதான். நீ என்னை மன்னித்துக் கொள்! என்று சொல்வேன் என்றார்.
நான் அவரிடம் அல்லாஹ் உங்களை மன்னிக்காமல் நீங்கள் நரகத்திற்கே செல்ல வேண்டும் என்று கூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன்.
அதற்கவர் முன்னர் சொன்னது போலவே சொன்னார்.
அல்லாஹ் உங்களை மன்னிக்க விரும்பினால் மன்னிப்பான். தண்டிக்க விரும்பினால் தண்டிப்பான். எனினும் நீங்கள் இந்த வயதுவரை தொழாமலிருந்தது ஷரீஆவின் படி தண்டனைக்குரிய குற்றமே என்றேன். அவர் கண்ணீர் வடித்தவராய் என்னைப் பிரிந்து சென்றார்.
‘ஸுஜூத்’ நிலையில் முழங்கால் திறந்திருப்பது கூடாது. நிச்சயமாக அது மறைக்கப்பட்டிருக்க வேண்டும். தொழுபவன் இரு கால்களுக்கும் ‘சொக்ஸ்’ காலுறை பாவிப்பது தடையில்லை. இரண்டு கைகளுக்கும் உறை போட்டிருப்பதும் பிழையாகாது.
தொழுபவர்களில் நூறு வீதமானோர் தரையில் பட வைக்க வேண்டிய ஏழு உறுப்புக்களில் ஐந்து உறுப்புக்களை தரையில் பட வைப்பதில் கவனம் செலுத்துகின்றார்கள். ஆயினும் அவர்களில் 90 வீதமானோர் இரு கால்களின் விரல்களின் உட்பகுதிகளை தரையில் பட வைக்கும் விடயத்தில் மிகவும் கவனக் குறைவாகவே உள்ளனர்.
இது தொடர்பாக பல தரம் விளக்கமாகவும், எச்சரித்தும் பேசியும் பயனளிக்கவில்லை. நல்லவர்கள், புத்திசாலிகளாயினும் தொட்டில் பழக்கம் சுடு காடுவரை என்ற பழ மொழியை சிந்தனையில் எடுத்துக் கொண்டு பொறுமையுடன் வாழ வேண்டியுள்ளது. சிலர் அதை தவறென்று அறிந்திருந்தும் மீண்டும் மீண்டும் செய்வதைக் காணும் போது சகிக்க முடியாமலுள்ளது. மார்க்கம் படித்த மௌலவீமார்களிற் சிலர் கூட பொது சனங்கள் போல் நடந்து கொள்வது மிகப் பெரிய வேதனையாக உள்ளது.
சிலர் இரு கால்களின் உட் பகுதி அறவே தரையில் படாதவாறு ஒரு காலின் மேல் மறு காலைப் போட்டுக் கொண்டு தொழுவது – ஸுஜூத் செய்வது வேதனை மேல் வேதானையாக உள்ளது. இவர்களின் தொழுகை எக்காரணம் கொண்டும் நிறைவேறாதென்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளிவாயல்களில் ஐங்காலம் தொழும் பேணுதலும், பக்தியும் உள்ளவர்கள் கூட இவ்விடயத்தில் கவனக் குறைவாக இருப்பது ஏனென்று எமக்குப் புரியவில்லை.
தொடர்ந்து 50 அல்லது 60 வருடங்களாக உரிய நேரத்திற்கு பள்ளிவாயலுக்கு வந்து முதலாவது வரிசையில் நின்று தொழும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட இதே தவறைத் தொடர்ந்து செய்து வருவது அடிக்கடி காணும் எமக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது.
இவர்கள் தொழத் தொடங்கிய காலத்திலிருந்து இவ்வாறே செய்து வந்திருந்தார்களாயின் இவர்கள் தொழுத தொழுகைகள் அனைத்தும் பாழேதான். மறுமையில் தலைமீது கை வைத்தழ வேண்டிய நிலைதான் இவர்களுக்கு ஏற்படும்.
இவர்கள் தமது செயல்கள் பிழையில்லையென்று அல்லாஹ்விடம் சொல்லி விவாதிப்பதற்கு ஆயித்தமாய் இருக்கின்றார்களாம் என்று கேள்விப்பட்டு வாயால் சிரிக்காமல் மற்றதால் சிரிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.
‘ஸுஜூத்’ தரும் தத்துவம்.
‘ஸுஜூத்’ உடைய நிலையில் தொழுபவனின் ஏழு உறுப்புக்கள் தரையில் பட வேண்டுமென்பதற்கான தத்துவம் என்ன? என்பதை அறிந்து அவ்வாறு செய்பவனுக்கும், அறியாமல் செய்பவனுக்கும் வித்தியாசமுண்டு. அறிந்து செய்பவன் எதார்த்தம் புரிந்து செய்பவனாகிறான். எதார்த்தம் புரியாமல் அவனும் செய்கிறான், இவனும் செய்கிறான் என்பதற்காக மற்றவனும் செய்வது அர்த்தமற்ற செயலாகும்.
ஏழு உறுப்புக்கள் தரையில் படும் வகையில் ‘ஸுஜூத்’ செய்ய வேண்டும் என்பதிலுள்ள இரகசியம் என்னவெனில் ஒரு மனிதன் அல்லாஹ்வால் தனக்கு இரவலாக வழங்கப்பட்ட ஏழு தன்மைகளையும் ‘ஸுஜூத்’ என்ற அந்தக் கட்டத்தின் போது தந்தவனிடம் ஒப்படைத்து நடமாடும் மையித் பிணமாக மாறுவதாகும்.
மனிதனுக்கு அல்லாஹ் இரவலாக வழ்கிய ஏழு தன்மைகளையும் ‘ஸுஜூத்’ உடைய நிலையில் அவன் அவற்றை தந்தவனிடமே ஒப்படைத்து தானுமில்லை, தனக்கென்றும் ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வருதலாகும்.
ஏழு தன்மைகளையும் இரவலாகத் தந்தவனிடம் ஒப்படைத்து விடுதல் அவனின் கடமையாகும். ஒப்படைக்க விரும்புகின்றவன் தொழுகையில் ‘ஸுஜூத்’ உடைய நிலையிலும் ஒப்படைக்கலாம். அல்லது இரவில் அனைத்து சத்தங்களும் அடங்கிய பின் தனிமையிலிருந்தும் ஒப்படைக்கலாம். எந்தக் கட்டத்தில் ஒப்படைப்பதாயினும் பின்வரும் வசனங்களை ‘திக்ர்’ என்ற அடிப்படையில் மொழிந்து ஒப்படைக்க வேண்டும்.
01. ‘குத்றத்’ சக்தி
لَا قَادِرَ إِلَّا اللهُ
சக்தியுள்ளவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை.
02.’இறாதத்’ நாட்டம்
لَا مُرِيْدَ إِلَّا اللهُ
நாடுபவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை.
03. ‘ஸம்உன்” கேள்வி
لَا سَمِيْعَ إِلَّا اللهُ
அல்லாஹ்; தவிர கேட்பவன் யாருமில்லை.
04. ‘பஸறுன்’ பார்வை
لَا بَصِيْرَ إِلَّا اللهُ
அல்லாஹ் தவிர பார்ப்பவன் யாருமில்லை.
05. ‘இல்முன்’ அறிவு
لَا عَلِيْمَ إِلَّا اللهُ
அல்லாஹ் தவிர அறிவுள்ளவன் வேறு யாருமில்லை.
06. ‘கலாமுன்’ பேச்சு
لَا مُتَكَلِّمَ إِلَّا اللهُ
அல்லாஹ் தவிர பேசுபவன் வேறு யாருமில்லை
07. ‘ஹயாதுன்’ உயிர்.
لَا حَيَّ إِلَّا اللهُ
உயிருள்ளவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை.
இது ஏழு ‘திகர்’ மூலம் அல்லாஹ் தனக்கு இரவலாகத் தந்த ஏழு தன்மைகளையும் அவனிடமே ஒப்படைத்துவிட்டு தனக்கென்று ஒன்றுமில்லாதவனாக தன்னை நினைக்க வேண்டும். தன்னை உணர வேண்டும். இவ்வாறு அவன் தொடர்ந்து செய்து வந்தால் தன்னில் வியக்கத்தக்க ஒரு மாற்றத்தை அவன் காண்பான். சொற்ப நேரம் செய்தாலும் தொடர்ந்து செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
இவ்வாறு செய்வதற்குப் பொருத்தமான நேரம் இரவின் பிற்பகுதியில் அமைதியான நேரமாகும்.
‘வுழூ’ செய்து கொள்ளுதல் நல்லது. ‘வுழூ’ இல்லாமலும் செய்யலாம்.
ஏழு ‘திக்ர்’களில் ஒன்றை அதன் கருத்தை சரியாப் புரிந்த நிலையில் பல தரம் சொல்ல வேண்டும். உடலைக் குலுக்கியும், அசைத்தும் ‘திக்ர்’ செய்தல் வேண்டும். பே ஓணான் தலையை அசைப்பது போல் மட்டும் தலையை அசைத்துக் கொண்டிருப்பதால் பலனில்லாமற் போய்விடும்.
‘ஜத்பு’ எனும் பரவச நிலை ஏற்படுவதற்கு உடலை அசைத்து சத்தத்தை உயர்த்தி ‘திக்ர்’ செய்தல் பெரிதும் உதவும்.
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக, எனது ஆரோக்கியத்துக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.