தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
கௌரவ ரிஸ்வீ முப்தீ அவர்களே! சில மாதங்களாக உங்களின் குரலைக் கேட்க வாய்ப்பில்லாததையிட்டு என் மனம் அழுகிறது. அதை யாரிடம் சொல்லி என் வாய் அழுமோ?
என் பெயர், முகவரியோடு உங்களின் விலாசத்திற்கு நான் அனுப்பும் கடிதங்கள் முகவரி பிழை என்று எனக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. எனது பெயர், முகவரி எழுதாமல் உங்களின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும் கடிதம் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதில்லை. உங்கள் அலுவலகமே “கறாமத்” உடையதாயிற்றோ என்று எண்ணத் தோணுகின்றது.
நீங்கள் எனக்கும், எனது ஸூபிஸ ஞானக் கருத்துக்களை சரி கண்ட மக்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கியது போதாதென்று என்னையும், எனது ஆதரவாளர்களையும் கொலை செய்ய வேண்டுமென்றும் “பத்வா” வழங்கிவிட்டு தலைமறைவாகிவிட்டீர்கள்.
“பத்வா”வில் சதி செய்தது போல் உங்கள் மறைவின் மூலமும் மக்களுக்கு சதிதான் செய்துள்ளீர்கள். நீங்கள் கண் மூடித்தனமான “பத்வா” கொடுத்து நாட்டு மக்களுக்கிடையே பிளவையும், பிரச்சினையையும் தோற்றுவித்துவிட்டு நீங்கள் நிம்மதி தேடிச் சென்றுள்ளீர்கள்.
அன்றொரு நாள் காத்தான்குடிக்கு வந்த நீங்கள் மக்கள் கூட்டத்திற்கு சலூட் அடித்து விட்டு நீங்கள் சொன்னது என்ன? நினைவிருக்கிறதா? “ஜம்இய்யதுல் உலமா கொடுத்த “பத்வா” வை வாபஸ் பெற்றதற்கு வரலாறே இல்லை” என்று வாயால் சொல்லிக் கொண்டு நெஞ்சில் கையால் அடித்தீர்களே! இது என்ன பேச்சென்று உங்களிடம் கேட்கின்றேன். கர்வமா? மமதையா? அகங்காரமா? ஆணவமா? எவ்வாறாயினும் அல்லாஹ் உங்கள் மூளையில் ஒரு சிறு நரம்பை நக்கினால் போதுமே! இதை உணரவில்லையா? நீங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டும் “பத்வா”வை வாபஸ் பெறலாம்.
அல்லாஹ்வின் பேச்சு ஒன்று மட்டுமே மாற்ற முடியாதது. புரட்ட முடியாதது. لَا تَبْدِيْلَ لِكَلِمَاتِ اللهِ ஆயினும் மனிதனின் பேச்சோ, பத்வாவோ அவ்வாறானதல்ல. இது புரியாத நீங்கள் எவ்வாறு நாட்டு மக்களைச் சமாளிப்பீர்கள்? உங்கள் உள்ளத்தில் ஓர் அணுப்பிரமானமேனும் “ஈமான்” விசுவாசம் இருந்தால், அதேபோல் இறை பக்தியும் இருந்திருந்தால் அல்லாஹ்வை எதிர்க்கும் வார்த்தை உங்களின் வாயிலிருந்து வந்திருக்க முடியாது.
ஆகையால் நீங்கள் ஊரை ஏமாற்றவும் தேவையில்லை, ஊர் மக்களை ஏமாற்றவும் தேவையில்லை. நடிக்கவும் தேவையில்லை. நாடகம் நடத்தவும் தேவையில்லை. நீதிவான்களுக்கு வட்டிலப்பக் கோப்பை கொண்டு போனதே உங்களின் ஊழல்களை மறைப்பதெற்கென்ற உண்மையை பொது மக்கள் விளங்கிக் கொண்டார்கள். பொது மக்கள் உங்கள் போல் நீதிவான்களின் சட்ட திட்டங்கள், நடைமுறைகள் தெரியாத மடையர்களல்ல.
ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு பிரதான காரணமாயிருந்தது உங்களின் இயக்கமற்ற மூளையிலிருந்து வெளியான “சாம்பலையாவது தாருங்கள்” என்ற முட்டாள் தனமான பேச்சு என்றால் யார் அதை இல்லை என்பார்? எரிக்காமல் சாம்பலைத் தருவது எவ்வாறு? அவ்வாறு எரிக்காமல் சாம்பலை எடுப்பதற்கு ஏதாவது விஷேட கருவிகள் கண்டுபிடித்திருக்கிறார்களா? அவ்வாறிருந்தாலும் சொல்லுங்கள்! “ஈழத்தின் இலக்கற்ற விஞ்ஞானி” என்று ஒரு பட்டம் சூட்டி பாராட்டு விழா ஒன்றும் நடத்தலாமல்லவா? خَالِفْ تُعْرَفْ வழமைக்கு மாற்றம் செய். பிரபல்யமாகலாம் என்ற தத்துவம் நீங்கள் சொன்னதா? அல்லது வேறு யாரும் சொன்னதா?
ரிஸ்வீ அவர்களே! நீங்கள் என்னை மட்டும் “முர்தத்” என்று சொல்லியிருந்தால் கதை என்னோடு மட்டும் நின்றிருக்கும். ஆனால் நீங்களோ ஸூபிஸ தத்துவத்தை ஏற்றுக் கொண்ட இந் நாட்டவர்களுக்கும், வெளி நாட்டவர்களுக்கும் “ஹோல்ஸல்” பத்வா வழங்கிவிட்டீர்கள். இதனால் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் குற்றவாளிக் கூண்டில் நீங்கள் நிறுத்தப்பட்டு துருவித்துருவி வினவப்படுவீர்கள். அங்கே வட்டிலப்பம் கொடுத்துவிடாதீர்கள். பணத்திமிர், அறியாமைத்திமிர் என்பன ஒரு வகை மசக்கமேயாகும். அந்த மசக்கத்தால் வட்டிலப்பம் கொடுக்கும் எண்ணம் வராமற் போகாது. நீங்கள் வாங்கிப் பழக்கப்பட்டவர்கள். உங்களின் சுய புத்தி அங்கேயும் இயங்கிவிடுமென்தற்காக இதை நான் எழுதினேன்.
ரிஸ்வீ ஸாஹிப் அவர்களே! நீங்கள் “பத்வா”வை வாபஸ் பெறத்தேவையுமில்லை. அதனால் அவமானத்தை அள்ளிக் கட்டவும் தேவையில்லை. முடியுமாயின் ஒன்று செய்யுங்கள். அதுவே எமக்குப் போதும். அதாவது பின்னால் நான் எழுதியுள்ள “துஹ்பதுல் முர்ஸலா” என்ற நூல் 8ம் பக்கத்தில் வந்துள்ள வசனத்தையும், இன்னுமிது போன்ற பிரசித்தி பெற்ற இமாம்கள், குத்புமார்களின் வசனங்களையும் உங்களிடம் தருவேன். அவற்றை நீங்கள் மொழியிலக்கணப் பிழையின்றி வாசிப்பதுடன் அவ்வசனங்கள் தருகின்ற விளக்கத்தையும் இலங்கை வானொலியிலும் – ரேடியோவிலும், தொலைக் காட்சியிலும் – டீவியிலும் பேச வேண்டும். இதை மட்டும் நீங்கள் செய்தால் போதும். இதற்கான சகல ஏற்பாடுகளையும் உங்களின் பத்வாக் குழு செய்வார்கள்.
நீங்கள் உங்கள் “பத்வா” நூல் அறபுப் பகுதி 28ம் பக்கத்தில் “அத்துஹ்பதுல் முர்ஸலா” என்ற நூல் ஆசிரியர் சொன்னது போல் என்று கூறியுள்ளீர்களேயன்றி அந்நூலின் பக்கத்தை நீங்கள் குறிப்பிடவில்லை. ஏன் பக்கம் குறிப்பிடவில்லையென்று ஆய்வு செய்து பார்த்த போது நீங்கள் “துஹ்பதுல் முர்ஸலா” நூலாசிரியரின் வசனத்தில் கூட்டல், குறைத்தல் மூலம் இருட்டிப்புச் செய்துள்ளீர்கள் என்று தெரிய வந்துள்ளது.
துஹ்பதுல் முர்ஸலா நூல் என்னிடமுள்ள பிரதி 8ம் பக்கத்தில் பின்வருமாறு வந்துள்ளது.
وَأَنَّ ذَلِكَ الْوُجُوْدَ مِنْ حَيْثُ الْكُنْهِ لَا يَنْكَشِفُ لِأَحَدٍ، وَلَا يُدْرِكُهُ الْعَقْلُ وَلَا الْوَهْمُ وَلَا الْحَوَاسُّ وَلَا يَتَأَتَّى فِى الْقِيَاسِ، لِأَنَّ كُلَّهُنَّ مُحْدَثَاتٌ، وَالْمُحْدَثُ لَا يُدْرِكُ بِالْكُنْهِ إِلَّا الْمُحْدَثَ، فَتَعَالَى ذَاتُهُ وَصِفَاتُهُ عَنِ الْحُدُوْثِ عُلُوًّا كَبِيْرًا، وَمَنْ أَرَادَ مَعْرِفَتَهُ مِنْ هَذَا الْوَجْهِ وَسَعَى فِيْهِ فَقَدْ ضَيَّعَ وَقْتَهُ،
அத் துஹ்பதுல் முர்ஸலா எனும் நூல் 8ம் பக்கத்தில் மேலே நான் எழுதியவாறுதான் வசனம் உள்ளது.
وَلَوْ نَبِيًّا مُرْسَلًا أَوْ مَلَكًا مُقَرَّبًا لَا فِى الدُّنْيَا وَلَا فِى الْآخِرَةِ
இந்த வசனம் அவர்கள் குறித்த துஹ்பதுல் முர்ஸலா என்ற நூலில் கிடையாது. இது முப்தீ ஸாஹிபு தனது பொக்கட்டிலிருந்து போட்டாரா? அல்லது இதையெல்லாம் ஆராய இங்கு யார் உள்ளார்? என்ற இறுமாப்புடன் எழுதினாரா? யார் எழுதியவர்?
கோடிட்டு சுட்டிக் காட்டப்பட்ட வசனம் அவர்கள் குறித்த நூலில் இல்லை. இது உலமாஉகளின் கண்ணியத்திற்குரிய இருட்டடிப்புகளில் ஒன்றென எவர்தான் சொல்லமாட்டார்.
இதே போல் அந்த அறபுப் பந்தியின் இறுதியில் கூறப்பட்ட ஒரு நீண்ட வசனம் கூட விடப்பட்டுள்ளது. அந்த வசனம் இதோ.
وَمَنْ أَرَادَ مَعْرِفَتَهُ مِنْ هَذَا الْوَجْهِ وَسَعَى فِيْهِ فَقَدْ ضَيَّعَ وَقْتَهُ،
இந்த வசனம் அவர்கள் குறிப்பிட்ட நூலில் உள்ளது. ஆனால் அதை அவர்கள் விட்டு விட்டார்கள். அது இருட்டடிப்பில் சேர்ந்துவிட்டது போலும்.
அத்துஹ்பதுல் முர்ஸலா.
இந்நூல் முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்களால் எழுதப்பட்டதாகும். இந்நூல் ஆரம்பம் முதல் முடியும் வரை “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் எழுதப்பட்ட நூலாகும். உலமாஉகளில் தலைவர் ரிஸ்வீ அவர்களுக்கும், “பத்வா” குழுவினருக்கும் மூளை இல்லையா? அல்லது அது செயலிழந்து போயிற்றா? சந்தேகமாக உள்ளது. ஒரு தரம் இவர்கள் தமது தலையை “ஸ்கேன்” பண்ணிப் பார்ப்பது நிலைமை மோசமாகாமல் பாதுகாக்க உதவும்.
“அத்துஹ்பதுல் முர்ஸலா” என்ற நூல் 100 வீதம் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் ஆதாரங்களோடு சரியானதென்று நிறுவப்பட்ட நூலாகும். இத்தகைய ஒரு நூலை “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பிழை என்று பத்வா கொடுப்பதற்கு யாராவதொருவன் ஆதாரமாக எடுத்தானாயின் அவன் 100 வீதம் அங்கோடை செல்ல வேண்டியவனேயாவான். ஸுப்ஹானல்லாஹ்!
اللهم اجْعَلْ تَفْكِيْرَهُمْ فِى تَدْمِيْرِهِمْ
என்ற ஸூபிஸ சமுகத்தின் வெடில் சரியாக வெடித்துள்ளது.
ஜுஹலாஉகள் கூட்டம் தமது “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்த “துஹ்பதுல் முர்ஸலா” ஆசிரியர் “எல்லாம் அவனே” என்ற ஸூபிஸ தத்துவத்தை எவ்வாறு விளக்கியுள்ளார்கள் என்பதைப் பாருங்கள். சிறு பிள்ளைகளுக்கு வாழைப்பழத்தை தேன் கலந்த பாலில் தொட்டுக் கொடுப்பது போல் கொடுக்கிறார்.
முல்லா மகான்கள் என்னை எதிர்க்க, என்னையும், எனது ஆதரவாளர்களையும் “முர்தத்” மதம் மாறியவர்களென்று எம்மை ஒதுக்கி வைத்து அநீதி செய்வதற்கு அல்லது அவர்கள் “பத்வா” தீர்ப்பில் சொன்னது போல் எம்மைக் கொலை செய்வதற்கு ஆதாரமாக எடுத்த அதே நூல் “துஹ்பதுல் முர்ஸலா” 11ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள தகவலை இங்கு முழுமையாக தருகிறேன். நாங்கள் வட்டிலப்பம் கொடுத்து நீதிவான்களை வளைய நினைப்பவர்களுமல்ல. சாம்பல் கேட்டு எரியூட்ட பத்வா கொடுப்பவர்களுமல்ல. இருட்டில் அடிப்பவர்களோ, இருட்டடிப்புச் செய்பவர்களோ அல்ல.
“துஹ்பதுல் முர்ஸ்லா” என்ற நூல் 8ம் பக்கத்தில் இருந்த விடயம் உலமாஉகளின் கண்ணுக்குத் தெரியவந்தும், நான் பின்னால் எழுதப் போகின்ற அதே நூல் 11ம் பக்கத்திலுள்ள விடயம் தெரியாமற் போனதும் ஏன்? மனச்சாட்சிக்கு முரணில்லாமல் விடை சொல்ல வேண்டும்.
11ம் பக்கத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.
وَأَنَّ جَمِيْعَ الْمَوْجُوْدَاتِ مِنْ حَيْثُ الْوُجُوْدِ عَيْنُ الْحَقِّ سُبْحَانَهُ وَتَعَالَى، وَلَكِنَّهَا مِنْ حَيْثُ التَّعَيُّنِ غَيْرُ الْحَقِّ سُبْحَانَهُ، وَالْغَيْرِيَّةُ اِعْتِبَارِيَّةٌ، وَأَمَّا مِنْ حَيْثُ الْحَقِيْقَةِ فَالْكُلُّ هُوَ الْحَقُّ سُبْحَانَهُ وَتَعَالَى،
وَمِثَالُهُ الْحَبَابُ وَالْمَوْجُ وَالثَّلْجُ، فَإِنَّ كُلَّهُنَّ مِنْ حَيْثُ الْحَقِيْقَةِ عَيْنُ الْمَاءِ، وَمِنْ حَيْثُ التَّعَيُّنِ غَيْرُ الْمَاءِ،
وَالسَّرَابُ (وهذا اللّفظ معطوف على لفظة الحبابُ) فَإِنَّهُ مِنْ حَيْثُ الْحَقِيْقَةِ عَيْنُ الْهَوَاءِ، وَمِنْ حَيْثُ التَّعَيُّنِ غَيْرُ الْهَوَاءِ، وَلِأَنَّ السَّرَابَ فِى الْحَقِيْقَةِ هَوَاءٌ ظَهَرَ بِصُوْرَةِ الْمَاءِ،
மேலே நான் எழுதிய “துஹ்பதுல் முர்ஸலா” நூலாசிரியரின் வசனங்களுக்கான சுருக்கம் இதோ!
(அனைத்துப் படைப்புகளும் “வுஜூத்” உள்ளமை அடிப்படையில் அல்லாஹ் தானானவையாகும். அவை அல்லாஹ்வாகவே உள்ளன. ஆயினுமவை “தஅய்யுன்” குறிப்பு என்ற அடிப்படையில் அவனுக்கு வேறானவையாகும். வேறு என்பது கூட ஒன்றை இன்னொன்றுடன் கவனித்தே சொல்லப்படும்.
وَأَمَّا مِنْ حَيْثُ الْحَقِيْقَةِ فَالْكُلُّ هُوَ الْحَقُّ سُبْحَانَهُ وَتَعَالَى
எதார்த்தத்தில் எல்லாமே அல்லாஹ்தான்!
இத்தத்துவத்திற்கு உதாரணங்களாக குமிழி, அலை, ஐஸ்கட்டி என்பவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவை மூன்றும் எதார்த்தத்தில் நீரேதான். ஆயினும் குமிழி, அலை, ஐஸ்கட்டி என்ற வகையில் மட்டும் நீருக்கு வேறானதாகும்.
இன்னும் மேற்கண்ட உதாரணங்களுடன் கானல் நீரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் கானல் நீரென்பது எதார்த்தத்தில் ஆகாயமேதான். குறிப்பு என்ற வகையில் ஆகாயத்திற்கு வேறானதாகும். கானல் நீர் என்பது எதார்த்தத்தில் நீரின் உருவத்தில் தோன்றிய ஆகாயமேதான்.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் இவ்வாறு தெளிவாகச் சொல்லப்பட்ட நூலை அதே ஞானத்தை எதிர்ப்பதற்கு ஆதாரமாக எடுத்த உலமாக்கள் எந்த மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டியவர்கள் என்பதை பொது மக்களே சொல்ல வேண்டும். குறிப்பாக அவசர சிகிச்சைப் பிரிவில் இவர்கள் சேர்க்கப்பட வேண்டியவர்களாவர். மூட்டை, முடிச்சுகளுடன் பாதைக்கு வந்து விடாமல் எல்லாமாயுள்ள ஏகன் இவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
உலமாஉகளின் வண்டவாளங்கள் தொடரும்.
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக, எனது ஆரோக்கியத்துக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.