Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“எனது சொந்த மகனை விட ஆன்மீக மகனே என்னிடம் கௌரவத்திற்குரியவராவார்” (இது குத்புமார்களின் சின்னம்)

“எனது சொந்த மகனை விட ஆன்மீக மகனே என்னிடம் கௌரவத்திற்குரியவராவார்” (இது குத்புமார்களின் சின்னம்)

தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)

اِبْنُ الْقَلْبِ أَعَزُّ عِنْدِيْ مِنْ اِبْنِ الصُّلْبِ
(هذا شعار الأقطاب)
“எனது சொந்த மகனை விட ஆன்மீக மகனே என்னிடம் கௌரவத்திற்குரியவராவார்”
(இது குத்புமார்களின் சின்னம்)

உலகில் வாழ்ந்து மறைந்த, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற “குத்பு”மார் – ஞான மகான்களில் அநேகர் தமது சொந்த மகன்களை விட தமது ஆன்மீக வழி நடக்கும் மகன்களையே தமக்கு மிக விருப்பமானவர்களாகவும், தம்மிடத்தில் கௌரவமுள்ளவர்களாகவும் கருதியும், கணித்தும் வாழ்ந்து வந்துள்ளார்கள். ஞானமகான்களின் வாழ்வும், வாக்குமே இதற்கு ஆதாரமாக உள்ளன.
ஞான மகான்கள் தமது ஆன்மீக மகன்களையே தமது சொந்த மக்களை விட அதிகம் நேசித்து வந்ததற்கு ஆதாரம் உண்டு. அவர்கள் நேசித்தது மட்டுமல்ல. அவர்களையே தமது பிரிவின் பிறகு தமது “கலீபா” பிரதிநிதிகளாக்கியும் உள்ளார்கள்.
 
அவர்களுக்கு எத்தனையோ சொந்த மகன்கள் இருந்தும் கூட அவர்களைத் தமது மறைவுக்குப்பின் “கலீபா” பிரதிநிதிகளாகவும், ஷெய்குமார்களாகவும் ஆக்காமல் தமது ஆன்மீக மக்களுக்கே அத்தகைய பதவிகளையும், சிறப்புக்களையும் வழங்கி வந்துள்ளார்கள்.
 
உலகில் தோன்றி மறைந்த பிரசித்தி பெற்ற ஷெய்குமார், வலீமார் ஆகியோர் தமக்கு சொந்த மக்கள் இருந்தும் கூட அவர்களுக்கு “கிலாபத்” கொடுத்து அவர்களைத் தமது மறைவுக்குப் பின் ஷெய்குமார்களாக நியமிக்காமல் தமது முரீதுகளில் – சிஷ்யர்களில் தரமானவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கே “இஜாஸா”, “கிலாபத்” என்பவற்றை வழங்கியுள்ளார்கள். இன்னும் சிலர் இதற்கு மாறாகவும் நடந்துள்ளார்கள். இது மிகக் குறைவு.
 
அன்று வாழ்ந்த ஷெய்குமார்களுக்கும், இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஷெய்குமார்களுக்கும் வித்தியாசமுண்டு. ஷெய்குமார் அனைவரையும் ஒரே கோர்வையில் கோர்த்துக் காட்ட முடியாது. அதை நானும் விரும்பவில்லை. ஏனெனில் இன்று வாழும் ஷெய்குமார்களிலும் அன்று வாழ்ந்த ஷெய்குமார்கள் போன்ற “ஷெய்கே றப்பானீ”கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே! எனினும் இன்றுள்ள ஷெய்குமார்களில் பெருமையுள்ளவர்களே அதிகம் உள்ளனர். பெருமை என்று நான் குறிப்பிடுவது அழகாக உடுப்பதையோ, கௌரவமாக வாழ்வதையோ அல்ல. பெருமைக்கு வரைவிலக்கணம் உண்டு. அதை ஒரு தராசாக வைத்து நிறுத்துப் பார்த்து இனம் கண்டு கொள்ளலாம்.
 
اَلْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ
பெருமை என்பது உண்மையை – சத்தியத்தை மறுப்பதும், மனிதர்களைக் கீழ்த்தரமாக நினைப்பதும், கருதுவதுமாகும். பெருமைக்குரிய வரைவிலக்கணம் இதுவேதான். தவிர அழகிய உடை உடுப்பதோ அல்லது விலையுயர்ந்த உடைய உடுப்பதோ, அழகிய பாதணி அணிவதோ, அல்லது விலை கூடிய பாதணி அணிவதோ, அழகிய வாகனம் பாவிப்பதோ, அல்லது விலை கூடிய வாகனம் பாவிப்பதோ, பல மாடிகளில் வீடு கட்டுவதோ பெருமையல்ல.
 
எனவே சத்தியத்தை, சரியானதை, உண்மையை மறுப்பதுதான் பெருமை என்றும், அவ்வாறு செய்பவனே பெருமைக்காரன் என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
இன்று உலமாக்களிற் சிலர் – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும், அதன் “புத்வா” குழுவும் – திருக்குர்ஆனைக் கொண்டும், அவ்லியாஉகள், இறைஞானிகளின் தத்துவங்கள் கொண்டும் சரியென்று நிறுவப்பட்ட “வஹ்ததுல் வுஜூத்” இறைஞானம் பொய் என்றும், பிழையென்றும் பகிரங்கமாகச் சொல்கின்றார்கள். சொல்லியும் விட்டார்கள். அதுமட்டுமல்ல குறித்த ஞானம் பேசிய நானும், அதைச் சரிகண்ட பல்லாயிரம் முஸ்லிம்களும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், எம்மைக் கொலை செய்வது முஸ்லிம்களின் கடமை என்றும் பகிரங்கமாக எழுத்து மூலம் கூறியுமுள்ளார்கள். எனவே, பெருமைக்கு நான் கூறிய வரைவிலக்கணப்படி சத்தியத்தை மறைத்த, அதை மறுத்த பெருமைக்காரர்களே உலமா சபையினர் என்பது தெளிவாகும்.
 
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொறுப்புமிக்க தலைவரும், பொறுப்பு மிக்க “புத்வா” குழுவினரும் இப்படியொரு மார்க்க துரோகத்தைச் செய்துவிட்டு மனிதர்களாக நடமாடுவதை கண்டும் காணதவர்கள் போல் ஏனைய உலமாஉகளும், தரீகாவின் ஷெய்குமார்களும், மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் பிரமுகர்களும் நடந்து கொள்வது இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய விடயமாகும்.
 
எனவே, நீதிக்காக குரல் கொடுக்காமலும், அநீதியைத் தட்டிக் கேட்காமலும் ஊமையர்களாகிக் கிடப்போர் அனைவரும் இறைவனின் நீதி மன்றில் நிச்சயமாக ஒரு நாள் நிற்கவே வேண்டும். இதை சத்தியத்தை அசத்தியமாக்கிய பொய்யர்களும், பெருமைக்காரர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
“பைஅத்” வழங்கி மக்களை “தரீகா” வழியில் வளர்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு ஷெய்கு – ஞானகுரு “காமில்” ஆன்மிகத்தில் பூரணம் பெற்றவராயிருந்தால் அவர் எதைச் செய்தாலும் சரியாகவே செய்வார். தனக்கு எத்தனை மகன்கள் இருந்தாலும் அவர்களின் “கிலாபத்” பிரதிநிதிப் பதவிக்கு தகுதியுள்ளவர் இருந்தால் மட்டுமே அவருக்கு அதை வழங்குவார். தனது மகனாயினும் தகுதியில்லாதவர் என்றால் அவருக்கு வழங்கமாட்டார்கள். தனது மகன்களில் எவரும் தகுதியானவர் இல்லையெனில் தனது முரீதுகளில் சொந்த பந்தம் பார்க்காமல் அவர்களில் எவர் தகுதியானவரோ அவருக்கே அதை வழங்குவார்கள். இவ்விடயத்தில் எவரின் வேண்டுகோளையும் ஏற்றுக் கொள்ளவுமாட்டார்கள். “இல்ஹாம்” மூலம் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கும் கட்டளைப்படியே செயல்படுவார்கள்.
 
இவ்வாறான ஷெய்குமார்தான் காமிலான ஷெய்குமார்களாவர். எனினும் முரீதுகளில் “கிலாபத்” வழங்கத் தகுதியற்றவர் எவருமில்லை என்றால் மட்டுமே தமது ஆண்மக்களில் எவர் அதற்குத் தகுதியானவரோ அவருக்கு அதை வழங்குவார்கள்.
 
இன்றுள்ள ஷெய்குமார்களிற் சிலர் உள்ளனர். அவர்கள் ஒழுங்காக “ஷரீஆ” கற்றவர்களுமல்ல. அதேபோல் ஒழுங்காக “தரீகா”, “ஹகீகா”, “மஃரிபா” கற்றவர்களுமல்ல. ஆயினும் ஷெய்குமார் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும், அவர்களின் வம்சா வழி வந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சத்தியத்தை மறைக்காமலும், மறுக்காமலும் இருக்கும் வரை இவர்கள் கண்ணியம் செய்யப்பட வேண்டியவர்களேயாவர். ஆயினும் இவர்களிடம் “பைஅத்” செய்வதும், இவர்கள் காட்டித்தரும் கொள்கை வழியிற் செல்வதும் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.
 
இவ்வாறுதான் ஒரு பள்ளிவாயலின் நிர்வாகிகள் தெரிவும், அறபுக் கல்லூரி நிர்வாகிகள் தெரிவும், உலமா சபை நிர்வாகிகள் தெரிவும், மற்றும் பொது அமைப்புக்களின் நிர்வாகிகள் தெரிவும் நடைபெற வேண்டும்.
 
அதாவது ஒரு பதவிக்கு தகுதியானவர் எவரோ அவர்தான் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். குறிப்பாக பொருளாளர் பதவிக்கு தெரிவு செய்யப்படும் ஒருவர் நூறு வீதம் களவு, பொய் இரண்டும் இல்லாதவராயிருப்பது அவசியம்.
 
மேற்கண்ட பொது அமைப்புகளுக்கான நிர்வாகிகள் தெரிவின் போது நீதி, நேர்மை பேணப்பட வேண்டும். ஒரு நிர்வாகத்தின் தலைமைப் பதவிக்கு நிர்வாகத் திறமையுள்ள ஒருவரே தெரிவு செய்யப்பட வேண்டும். அதேபோல் அவர் தலைமைப் பதவிக்கு அமர்த்தப்பட்டாலும் அவர் பதவி மோகத்திற்கு அடிமையாகாதவராய் இருத்தல் வேண்டும். பொருளாளராயிருப்பவர் நாணயத்தோடு தொடர்புள்ளவராயிருப்பதால் அவரும் நாணயமுள்ளவராக இருத்தல் அவசியமாகும். அதேபோல் அவர் பணத்திற்குத் தன்னை அடிமையாக்கி விடாமல் அதை தனக்கு அடிமையாக்கியவராயுமிருத்தல் வேண்டும். தலைவர் தலை சிறியவராயிருந்தாலும் அதி விவேகமுள்ளவராயிருத்தல் வேண்டும்.
 
இவ்வாறு எவர் என்ன பதவிக்கு பொருத்தமானவரோ அதே பதவியையே அவருக்கு கொடுத்தல் வேண்டும்.
 
உலமா சபையொன்றின் நிர்வாகிகள் தெரிவு மட்டும் ஏனைய சபைகளின் நிர்வாகிகள் தெரிவை விட எல்லா அம்சங்களிலும் சிறந்ததாயிருத்தல் வேண்டும்.
 
உலமா சபைத் தலைவர் ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா ஆகிய நாற் பெருங் கடல்களிலும் உள் நீச்சல், வெளி நீச்சல் தெரிந்தவராயும், தன்னை வளர்க்காமல் தனது தாபனத்தை வளர்ப்பதில் திறமையுள்ளவராயிருத்தல் வேண்டும். குறிப்பாக மாசு படியாத கையுள்ளவராகவும், மாசற்ற “கல்பு”ள்ளவராயுமிருத்தல் வேண்டும்.
 
உலமா சபையின் “புத்வா” குழுவினர் மேற்கண்ட நாற்பெருங் கடல்களிலும் குழியோடும், சுழியோடும் திறமையுள்ளவர்களாகவும், கண் பார்வை கூர்மையானவர்களாகவும், வஞ்சக நெஞ்சற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.
 
மேற்கண்ட அடிப்படையில் நிர்வாகத் தெரிவு நடைபெறாமல் ஒருவன் தலைமைத்துவத்திற்குத் தகுதியற்றவனாயினும் அவன் கோடீஸ்வரன் என்ற ஒரேயொரு காரணத்திற்காக மட்டும் தகுதியற்றவனைத் தலைவனாக்குவதும், தகப்பன் தலைவனாயிருந்ததால் அவனின் மகன்தான் அவ்விடத்தில் இருக்க வேண்டும் என்று தகுதியற்ற மகனை தலைவனாக நியமிப்பதும் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்.
 
பொது விடயத்தில் தந்தை, மகன், மச்சான், மச்சினன் முதலான எந்த உறவும் கருத்திற் கொள்ளப்படாமல் செயல்பட வேண்டும்.
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக, எனது ஆரோக்கியத்துக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments