அன்புக்குரியவர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
உங்களிற் பலர் கூட்டங்களிற் பேசத் தொடங்குமுன் அறபு மொழியில் அல்லாஹ்வைப் புகழ்கிறீர்கள். நபீகள் நாயகம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது “ஸலவாத்” சொல்கிறீர்கள். இது நல்ல காரியமேயாகும். சொல்லுங்கள். உங்களைப் பாராட்டுகிறேன்.
ஆயினும் உங்களிற் சிலர் அறபு வசனங்களை தவறாகவும் ஓதுகின்றீர்கள், பிழையாகவும் மொழிகின்றீர்கள், உச்சரிக்கின்றீர்கள்..
உங்களிற் சிலர் உரை நிகழ்த்துமுன்
اَلْحَمْدُ للهِ رَبِّ الْعَالَمِيْنْ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى مُحَمَّدٍ وَآلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيْنْ
என்று ஓதுகின்றீர்கள் நல்ல வழக்கம்தான். பாராட்டுகிறேன். ஒரு சிறிய ஆலோசனை, “முஹம்மத்” என்ற பெயருக்கு முன் எங்கள் தலைவர் என்ற பொருளுக்குரிய “ஸெய்யிதினா” என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்வது சிறப்புக்குரியதாகும்.
இன்னும் உங்களிற் சிலர்
نَحْمَدُهُ وَنُصَلِّيْ عَلَى رَسُوْلِهِ الْكَرِيْمِ
என்று ஓதி ஆரம்பிக்கின்றீர்கள். இதுவும் நல்ல காரியம்தான். எனினும் நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது ஸலாம் சொல்லாமல் “ஸலவாத்” மட்டும் சொல்வது “மக்றூஹ்” விரும்பத்தக்கதல்ல என்று நல்லடியார்கள் கூறியிருப்பதால் وَنُصَلِّيْ என்ற சொல்லுக்குப் பின் وَنُسَلِّمُ என்று சொல்லிக் கொள்வது விரும்பத்தக்கதாகும்.
உங்களில் இன்னும் சிலர்
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي، وَيَسِّرْ لِي أَمْرِي ، وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي ، يَفْقَهُوا قَوْلِي ، رَبِّ زِدْنِيْ عِلْمًا
என்று ஓதுகின்றீர்கள். இது திருக்குர்ஆன் வசனமாதலால் “பிஸ்மி” சொல்லி ஓதவும் வேண்டும். தவறின்றி சரியான மொழித்தலுடன் ஓதவும் வேண்டும். இது பெரிய வசனமாயிருப்பதால் சரியாக அறபுச் சொற்களை மொழியத் தெரியாதவர்கள் “பிஸ்மி”யை மட்டும் சொல்லி உரையை ஆரம்பிக்கலாம்.
அண்மையில் அரசியல்வாதி ஒருவர் ஒரு கூட்டத்தில் பேசுமுன் மேற்கண்ட இவ்வசனத்தை ஓதி தனது உரையை தொடங்கினார். அவரின் ஓதலில் 11 பிழைகள் இருந்தன. இவர் திருத்தமாக ஓதத் தெரிந்தே ஓத வேண்டும். இன்றேல் விட்டுவிட வேண்டும்.
உரையை முடிக்கும் போது
وَآخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ للهِ رَبِّ الْعَالَمِيْنْ
என்று ஓதி முடிக்க வேண்டும்.
அறபு மொழியில் சொற்களை உரிய முறைப்படி மொழியத் தெரியாதவர்கள் அறபியில் ஓதுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் தமது செல்வாக்கையும், செல்வத்தையும் வளர்த்துக் கொள்வது போல் தம்மைத் தூக்கிவிட்டவர்களின் விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அரசியல்வாதிகள் நாட்டையும், நாட்டு மக்களையும் புறக்கணித்து விட்டு தம்மை மட்டும் வளர்த்துக் கொள்வது அவர்களின் சுய நலமேயாகும்.
நன்றி,
காதிமுல் கவ்மி, மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ