தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ، الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ،أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ ،
பல வஸ்த்துக்கள் – விஷயங்கள் கொண்டு உங்களை நாம் சோதிப்போம். என்று கூறிய அல்லாஹ் அவற்றை ஒவ்வொன்றாக சொல்லிக்காட்டுகிறான். அவை ஒன்று – பயம், இரண்டு – பசி, மூன்று – சொத்துக்கள் – உடைமைகள் குறைதல், நான்கு – உயிரிழப்புக்கள், ஐந்து – பழவர்க்கம் குறைதல்.
இவ் ஐந்து விஷயங்கள் கொண்டும் நாம் சோதிப்போம். எனவே, நபீயே! இவற்றைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு நீங்கள் நன்மாராயணம் – சுபச் செய்தி கூறுவீர்களாக!
அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுக்கு ஏதேனும் ஒரு துன்பம் பீடித்தால் நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கு சொந்தமானவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்பவர்களாக உள்ளோம் என்று கூறுவார்கள்.
அவர்கள் மீதுதான் அவர்களின் இரட்சகனிடமிருந்து நல்லாசியும், கிருபையும் ஏற்படுகின்றன. மேலும் அவர்கள் தாம் நேர்வழியையும் பெற்றவர்கள். (திருக்குர்ஆன் – 02 – 155,156,157)
அடியார்களை அல்லாஹ் பல வஸ்த்துக்கள் கொண்டு சோதிப்பான். அவ்வாறு அவன் அவர்களைச் சோதிக்கும் போது அவற்றைப் பொறுத்துக் கொள்வதும், சகித்துக் கொள்வதும் அவர்களின் கடமையாகும். அவ்வாறு பொறுமை செய்யும் நல்லடியார்களுக்கு சுபச் செய்தி சொல்லுமாறு நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு கட்டளையிடுகிறான்.
அவ்வாறு பொறுமை செய்பவர்கள் எத்தகையோரென்றால் “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்” என்று கூறுவார்கள் என்று அவர்களை அடையாளப்படுத்திக் காட்டியுள்ளான்.
அவ்வாறானவர்கள் மீதுதான் அல்லாஹ்வின் நல்லாசியும், கிருபையும் இறங்குகின்றன.
அல்லாஹ் இத்திருவசனம் மூலமாக நமக்கு சொல்லித் தருகின்ற அறிவுரை என்னவெனில் ஒருவனுக்கு ஒரு “முஸீபத்” துன்பம் – கஷ்டம், வேதனை – சிக்கல் ஏற்பட்டால் அவன் “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்” என்று இவ்வசனத்தின் கருத்தையும், பொருளையும் தெரிந்து சொல்ல வேண்டும்.
மரணச் செய்தி கிடைத்தால் மட்டுமே மேற்கண்ட வசனத்தை முஸ்லிம்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இது ஊர், சமுக வழக்கத்தில் உள்ளதாகும். பொருள் தெரியாமல் சொன்னால் சொன்னதற்கான பயன் கிடைத்தாலும் கூட ஏற்பட்ட துன்பத்திற்குப் பதிலாக ஓர் இன்பமும் வரமாட்டா.
இன்று முஸ்லிம்களில் அனேகர் மரணச் செய்தி கிடைத்தால் மட்டும் இத்திரு வசனத்தை வாயால் மட்டும் மொழிகிறார்கள். தவிர மனதுக்கும், வாய்க்கும் தொடர்பில்லாமற் போகிறது.
எனவே, இவ்வசனத்தை யார் சொன்னாலும் பொருள் விளங்கிச் சொன்னால் மட்டுமே மனச் சாந்தி கிடைக்கும், இன்றேல் உப்பு, உறைப்பு, இனிப்பு இல்லாத உணவை சாப்பிட்டது போலாகிவிடும்.
இதன் பொருள்:
“இன்னா லில்லாஹி” إنا لله என்ற வசனத்திலுள்ள அல்லாஹ் என்ற சொல்லில் ஒரு “லாம்” வந்திருப்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
இந்த “லாம்” என்ற எழுத்துக்கு முன்னால் ஒரு சொல் மறைந்திருக்கும். இது மொழியிலக்கணம் தருகின்ற விளக்கமாகும். இந்த “லாம்” என்ற எழுத்துக்கு முன்னால் ஒரு சொல்லும் மறைந்திருக்கவில்லை என்று ஒருவன் சொன்னால் அவன் அறபு மொழியிலக்கணம் கற்றுக் கொள்ளாதவன் என்று முடிவு செய்ய வேண்டும். அவன் சொல்வது சரியென்று வைத்துக்கொண்டால் “இன்னா லில்லாஹி” என்ற அறபு வசனத்தின் பொருள் “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கு” என்று மட்டுமே வரும். இவ்வாறு பொருள் கொண்டால் ஓர் எழுவாய்க்கு பயனிலை இல்லாமற் போய் விடும். எழுவாய் வந்தால் பயனிலை வேண்டும். பயனிலை இன்றேல் பொருள் பூரணமாகாது. “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கு” என்பது போன்று.
மொழியிலக்கண விதிப்படி إنَّا என்ற சொல்லுக்கு பின்னால் ஒரு சொல் மறைந்துள்ளதென்று நான் மேலே எழுதியுள்ளேன். மறைந்துள்ள அச்சொல் مِلْكٌ என்று இருக்கும். இச் சொல்லையும் சேர்த்து பொருள் கூறுவதாயின் வசனம் இவ்வாறு வர வேண்டும். إِنَّا مِلْكٌ لله இப்போது இதன் பொருள் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு சொந்தமானவர்கள் என்று வரும். அதாவது நாங்கள் அல்லாஹ்வின் சொத்து அல்லது அல்லாஹ்வின் உடைமை என்று பொருள் வரும். இந்த விபரத்தின் படி நாமும், நமக்கென்றுள்ள உடைமைகளும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்றால் அவை தவறிப் போவதாலோ, எரிந்து சாம்பலாய்ப் போவதாலோ, களவு போவதாலோ எமக்கு கவலை வருவது நியாயமற்றதாகிவிடும். ஏற்படுகின்ற கவலைக்கு அர்த்தமில்லாமலாகிவிடும்.
உதாரணமாக யாரோ ஒருவனின் கடை எரிந்து சாம்பலாய்ப் போனால் எமக்கு கவலை வருமா? இல்லை. நமது, நம்முடையது என்றால் மட்டுமே கவலை வரும். இன்னொருவனின் சொத்து எரிந்து சாம்பலானால் எமக்கென்ன நட்டம்.
ஒருவனுக்கு ஒரு பொருள் தன்னுடையது என்ற உணர்விருக்கும் வரைதான் கவலை வருமேயன்றி தன்னுடையதல்ல என்ற உணர்வு இருக்கும் வரை கவலை வர இடமில்லை.
ஒருவரின் மரணச் செய்தி கிடைத்து إنا لله என்று நாம் சொன்னால் நாங்களும் அல்லாஹ்வின் உடைமைதான், உடைமைக்குரியவன் தனது சொத்தை தான் விரும்பிய நேரம் எடுத்துக் கொள்வான் என்ற உணர்வை இந்த வசனம் மூலம் ஏற்படுத்திக் கொண்டால் எவனுக்கு எது போனாலும் அவனுக்கு கவலை வருவதற்கு நியாயமில்லாமற் போய்விடும்.
மரணச் செய்தி கிடைப்பது போன்றதே மனதுக்கு கவலை தருகின்ற எந்தச் செய்தி கிடைப்பதுமாகும்.
எனவே நாமும், நமதுடைமைகளும், நமது மனைவி மக்களும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவைகளே தவிர எமக்குச் சொந்தமானவை அல்ல என்ற உணர்வோடு வாழும் ஒருவனுக்கு வாழ்வில் கவலைக்கே இடமில்லாது போய்விடும். இதை அடிப்படையாகக் கொண்டே ஒருவனுக்கு ஒரு “முஸீபத்” துன்பம் ஏற்படும் போது “இன்னா லில்லாஹி” சொல்வதை மார்க்கம் நல்ல காரியமாக ஆக்கியுள்ளது.
ஸூபிஸம் கவலையற்ற வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகும்.
குறிப்பு: திரு வசனத்தில் குறிப்பிடப்பட்ட ஐந்து சோதனைகளும் கொரோனா என்ற உடையில் உலக மக்கள் அனைவரையும் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.