(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)
இஸ்லாமிய வரலாற்றில் “கொரோனா” போல் ஐந்து முறை அறபு நாட்டில் பயங்கர நோய் பரவி ஓர் இலட்சத்துக்கும் அதிகமானோர் மரணித்தனர் – ஷஹீத்களாயினர் என்றும் வரலாறு கூறுகின்றது.
குறிப்பாக நபீ தோழர் அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் 100 பிள்ளைகளில் 83 ஆண் பிள்ளைகள் மரணித்தனர் – “ஷஹீத்”களாயினர் என்றும் வரலாறு கூறுகிறது.
இலங்கையில் கொரோனா தலை நீட்டிய கால கட்டத்தில் இந்த விபரத்தைப் பதிவு செய்திருந்தேன். எனது பதிவை வாசித்தவர்களுக்கு இது புதிய தகவலல்ல.
பதிவை பார்த்த சிலருக்கு அவர்கள் ஒரு நபீ தோழராயிருந்தும் கூட இத்தனை பிள்ளைகளா? ஏன் பெற்றார்கள்? அந்த அளவு சிற்றின்ப மோகமும், வேகமும் அவர்களுக்கு இருந்திருக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம் என்று என் மனம் கூறியது.
நபீ தோழர் அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாறு முழுவதையும் விபரமாக எழுதுவதாயின் ஒரு சிறிய நூலாவது எழுத வேண்டும். இப்போது நான் வேறொரு பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால் நேரமின்றி வருந்துகிறேன். இன்ஷா அல்லாஹ் வாய்ப்புக்கிடைக்கும் போது எழுதுவேன். எனினும் முக்கிய குறிப்புக்களை மட்டும் இப்பதிவில் தருகிறேன்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திரு மதீனா நகருக்கு “ஹிஜ்றத்” வந்த பின் அனஸ் அவர்களின் தாய் உம்மு ஸுலைம் றழியல்லாஹு அன்ஹா அவர்கள் மகன் அனஸ் அவர்களை அழைத்துக் கொண்டு நபீகளாரிடம் வந்து இவர் எனது மகன், விவேகமானவர், உங்களுக்குப் பணி செய்வதற்காக அழைத்து வந்துள்ளேன். இவருக்காக “துஆ” செய்யுங்கள் என்று கூறி ஒப்படைத்தார்கள் உம்மு ஸுலைம்.
மன மகிழ்வோடு ஏற்றுக் கொண்ட ஏந்தல் எம் பெருமான் அவர்களின் நெற்றி முத்தி,
اَللهم أَكْثِرْ مَالَهُ وَوُلْدَهُ وَأَطِلْ عُمْرَهُ وَاغْفِرْ ذَنْبَهُ
இறைவா! இவரைச் செல்வந்தனாக ஆக்கி வைப்பாயாக! இவருக்குப் பிள்ளைகளை அதிகமாக வழங்குவாயாக! இவரின் வயதை நீளமாக்கி வைப்பாயாக! இவரின் பாவத்தை மன்னித்து விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.
நபீ தோழர் அனஸ் அவர்கள் நபீகளாருக்கு பத்து ஆண்டுகள் பணி செய்தார்கள். அந்தப் பத்து ஆண்டுகளில் ஒரு தரமேனும் பெருமானார் அவர்கள் கோபத்தோடு அவரை பார்த்ததுமில்லை. அவருக்கு அடித்ததுமில்லை, அவரைக் கடிந்து பேசியதுமில்லை என்று அனஸ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அவர்களுக்கு 98 மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். மகன்களில் 83 மகன்கள் ஒரே நாளில் “தாஊன்” எனும் பயங்கர நோயால் மரணித்து “ஷஹீத்”களாயினர். அனஸ் அவர்கள் தங்களின் 109வது வயதில் “வபாத்” மரணித்தார்கள்.
இவர்கள் அதிகமாக நோன்பு நோற்பவர்களாகவும், இரவில் நீண்ட நேரம் வணக்கம் செய்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். இவர்களின் பேரர் துமாமா அவர்கள் இவர்களின் வணக்கம் பற்றிக் கூறுகையில்,
كَانَ أَنَسٌ يُصَلِّيْ حَتَّى تَقْطُرَ قَدَمَاهُ دَمًا مِمَّا يُطِيْلُ الْقِيَامَ،
அனஸ் தொழுவார்கள். நீண்ட நேரம் நிற்பதால் அவர்களின் காற் பாதத்திலிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கும் என்று கூறினார்கள்.
அனஸ் அவர்கள் பொருளாதார நெருக்கடியின்றியும், அதிக பிள்ளைகள் பெற்றும், நீண்ட ஆயுள் பெற்றும் வாழ்ந்ததற்கு பெருமானாரின் “துஆ” பிரார்த்தனையே காரணம் எனலாம்.
இந்த வரலாறின் மூலம் நாம் பல பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். அவற்றில் சிலதைச் சுட்டிக் காட்டுகிறேன்.
நம்மில் பலர் நல்ல மனிதர்களுடன் உரையாடி விட்டு எனக்காக “துஆ” செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். இதற்கு இந்த வரலாறில் ஆதாரமுண்டு. இவ்வாறு சொல்வது பிழையாயின் நபீ பெருமானாரிடம் அனஸ் அவர்களின் தாய் இவருக்காக “துஆ” செய்யுங்கள் என்று சொன்ன போது அவர்கள் மறுப்பொன்றும் கூறாமல் “துஆ” செய்தது ஆதாரமாகும். ஒருவர் இன்னொருவரிடம் தனக்காக “துஆ” செய்யுமாறும் கேட்கலாம், பிறருக்காக “துஆ” செய்யுமாறும் கேட்கலாம் என்பதும் விளங்கப்படுகிறது.
அனஸ் அவர்களின் தாய் உம்மு ஸுலைம் நபீ பெருமானார் மீது கொண்ட “மஹப்பத்” அன்பின் காரணமாக தனது மகனை எந்த ஒரு இலாபத்தையும் கருதாமல் பத்து வருடங்கள் பணி செய்ய விட்டது பாராட்டுதற்குரியதாகும்.
நம்மில் யார் தனது பிள்ளையை ஓர் ஆலிமுக்கு, அல்லது ஒரு ஷெய்குக்கு பணி செய்யக் கொடுத்தார் என்பது கேள்விக்குரியதேயாகும். பெற்றோர் தமக்குப் பல மகன்கள் இருந்தால் அவர்களில் ஒருவரை ஓர் ஆலிமுக்கு அல்லது ஒரு ஷெய்குக்கு பணி செய்ய ஒப்படைக்க வேண்டும். ஆலிமும் ஆலிமாக இருக்க வேண்டும். ஷெய்கு என்பவரும் அவ்வாறே இருக்க வேண்டும்.
நபீ பெருமானாரிடம் வந்து பத்து வருடங்கள் பணி புரிந்த அனஸ் அவர்களை – பணியாளை அவர்கள் எவ்வாறு கண்ணியமாகவும், இரக்கமாகவும் வைத்திருந்தார்களோ அதேபோல் பணியாளர்களை நாமும் வைத்திருக்க வேண்டும். இவ்வாறுதான் வீட்டுப் பணிப் பெண்களையும் வழி நடத்த வேண்டும்.
அளவோடு சாப்பிட்டு, அளவோடு உறங்கி, ஆடம்பரமின்றி வாழ்ந்து, வணக்க வழிபாடுகளில் நேர காலத்தைக் கழித்து, தொடர்ந்து நோன்பு நோற்று வந்த நபீ தோழர் அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிற்றின்ப மோகம் உள்ளவராக இருந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறிருந்தும் 100 பிள்ளைகள் பெற்றுள்ளார்கள் என்ற செய்தி எமக்கு வியப்பாகவே உள்ளது.
இவற்றுக்கெல்லாம் பிரதான காரணம் ஆன்மிகப் பலமேயன்றி வேறொன்றுமே இல்லை.
வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் 49, பிள்ளைகள் பெற்றதும், நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரே இரவில் 500 மனைவியருடன் உடலுறவு கொண்டதும், நபீகட்கரசர் எம்பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் 21 மனைவியர்களை வைத்திருந்ததும், “வபாத்” ஆகும்போது கூட ஒன்பது மனைவியர் இருந்தார்கள் என்பதும் அவர்களின் ஆன்மிக பலத்தையே காட்டுகின்றன.
மேற்கண்ட நிகழ்வுகளையும், நபீமாரினதும், வலீமாரினதும் வாழ்க்கையைக் கருத்திற் கொண்டு சிந்தித்தால் அவர்கள் சிற்றின்பத்தைக் கழிப்பதற்காக பெண்களை விரும்பவில்லை என்பதும், அதிக பிள்ளைகள் பெறவில்லை என்பதும் தெளிவாகிறது.
ஆன்மீகத்திற்கும், “ஹலால்” ஆன முறையில் பெண்களுடன் உடலுறவு கொள்வதற்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு என்பது உண்மைதான். ஆயினும் இவ்வாறான அறிவு ஞானத்தை ஓர் ஆன்மிக ஆசானிடம் நேரில் கேட்டறிவதே சிறந்தது. எழுத்தில் தருவதை ஆன்மிக வாதிகள் விரும்புவதில்லை.
அன்பிற்குரியவர்களே!
உங்கள் குடும்பத்தில் கொரோனா நோயால் யாராவது மரணித்தால் நபீ தோழர் அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் 83 பிள்ளைகள் ஒரே நாளில் மரணித்ததை நினைத்து சாந்தி பெறுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்வதுடன் இன்று வரை கொரோனாவால் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எனது அனுதாபத்தைத் தெரிவித்து மரணித்தவர்களுக்காக என்னால் முடிந்தவரை “துஆ” செய்வேன் என்பதையும் கூறிக் கொள்கிறேன்.
மரணம் என்பது மனிதன் தனது காலில் அணிந்திருக்கும் செருப்பைவிட அவனுக்கு மிக நெருங்கியதென்பது நபீ மொழி.