Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்100 பிள்ளைகளின் தந்தை நபீ தோழர் அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு

100 பிள்ளைகளின் தந்தை நபீ தோழர் அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு

இஸ்லாமிய வரலாற்றில் “கொரோனா” போல் ஐந்து முறை அறபு நாட்டில் பயங்கர நோய் பரவி ஓர் இலட்சத்துக்கும் அதிகமானோர் மரணித்தனர் என்றும், நபீ தோழர் அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் 100 பிள்ளைகளில் 83 ஆண் பிள்ளைகள் மரணித்தனர் என்றும் பதிவு செய்திருந்தேன். எனது பதிவைப் பார்த்தவர்களுக்கு இது தெரியும். பதிவைப் பார்த்த சிலருக்கு அவர்கள் ஒரு நபீ தோழராயிருந்தும் கூட இத்தனை பிள்ளைகள் ஏன் பெற்றார்கள்? அந்த அளவு சிற்றின்ப மோகம் ஒரு நபீ தோழருக்கு இருந்திருக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம் என்று என் மனம் கூறியது.

நபீ தோழர் அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாறு முழுவதையும் எழுதுவதாயின் சிறிய அளவிலேனும் ஒரு நூல் தான் எழுதவேண்டும். அது இப்போது சாத்தியமற்றது. எனினும் முக்கிய குறிப்புகளை மட்டும் தருகிறேன்.

நபீ பெருமான் அவர்கள் திரு மதீனா நகருக்கு “ஹிஜ்றத்” வந்தபின் அனஸ் அவர்களின் தாய் உம்மு ஸுலைம் மகனை அழைத்துக் கொண்டு நபீகளாரிடம் வந்து இவர் எனது மகன். விவேகமானவர். உங்களுக்கு பணி செய்வதற்காக அழைத்து வந்தேன். இவருக்காக “துஆ” செய்யுங்கள் என்று ஒப்படைத்தார்கள்.

மன மகிழ்வோடு ஏற்றுக் கொண்ட ஏந்தல் அவர்கள் அவரின் நெற்றி முத்தி

اللهم اَكْثِرْ مَالَهُ وَوُلْدَهُ وَاَطِلْ عُمْرَهُ وَاغْفِرْ ذَنْبَهُ

இறைவா! இவரைச் செல்வந்தனாக ஆக்கி வை, இவருக்கு பிள்ளைகளை அதிகமாக வழங்கு, இவரின் வயதை நீளமாக்கி வை, இவரின் பாவங்களை மன்னித்து விடு என்று “துஆ” செய்தார்கள். அனஸ் அவர்கள் சுமார் 10 ஆண்டுகள் அண்ணலாருக்குப் பணி செய்தார்கள். 10 ஆண்டுகளில் ஒரு தரமேனும் பெருமானார் அவர்கள் அவரைக் கோபத்தோடு பார்த்ததுமில்லை. அடித்ததுமில்லை. கடிந்து பேசியதுமில்லை.

இவர்களுக்கு 98 மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். இவர்களின் மகன்களில் 83 மகன்கள் ஒரே நாளில் “தாஊன்” நோயால் மரணித்தனர். அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது 109 ஆவது வயதில் மரணித்தார்கள்.

இவர்கள் அதிகமாக நோன்பு நோற்பவர்களாகவும், இரவில் நீண்ட நேரம் வணக்கம் செய்பவர்களாகவும் இருந்தார்கள். இவர்களின் பேரர் துமாமா என்பவர் இவர்களின் வணக்கம் பற்றிக் கூறுகையில்

كَانَ اَنَسٌ يُصَلِّى حَتَّى تَقْطُرَ قَدَمَاهُ دَمًا مِمَّا يُطِيْلُ القِيَامَ
அனஸ் றழியல்லாஹு அன்ஹு தொழுவார்கள். நீண்ட நேரம் நிற்பதால் அவர்களின் கால் பாதத்திலிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கும் என்று கூறினார்கள்.

அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பொருளாதார நெருக்கடியின்றியும், அதிக பிள்ளைகள் பெற்றும், நீண்ட ஆயுள் பெற்றும் வாழ்ந்ததற்கு பெருமானாரின் பிரார்த்தனையே காரணம் எனலாம்.

அளவோடு சாப்பிட்டு அளவோடு உறங்கி ஆடம்பரமின்றி வாழ்ந்து வணக்க வழிபாடுகள் செய்வதில் நேரகாலத்தைக் கழித்து வந்த அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிற்றின்ப மோகம் கொண்டிருக்க வாய்ப்பில்லை. அவ்வாறிருந்தும் 100 பிள்ளைகள் பெற்றுள்ளார்கள் என்ற செய்தி எமக்கு வியப்பாகவே உள்ளது.

இவற்றுக்கெல்லாம் பிரதான காரணம் ஆன்மீகப் பலமேயன்றி வேறொன்றுமே இல்லை. வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் 49 அல்லது 45 பிள்ளைகள் பெற்றதும், நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரே இரவில் 500 மனைவியருடன் உடலுறவு கொண்டதும் ஆன்மீகப் பலமேயன்றி சிற்றின்ப மோகமல்ல.

அண்ணலெம்பிரான் அஹ்மதெங்கள் கோமான், அகழ்ப்போரின் போது வயிற்றில் கல்லைக் கட்டிக்கொண்டு பசியையும், தாகத்தையும் பொருட்படுத்தாமல் பெட்டியில் மண் சுமந்த மன்னர் நபீ 21 திருமணம் வரை செய்தார்கள் என்பதும், “வபாத்” ஆகும் வேளை 9 மனைவியர் உயிருடன் இருந்தார்கள் என்பதும் அவர்களின் ஆன்மீக பலத்தையே காட்டுகின்றன.

மேற்கண்ட நிகழ்வுகளையும், நபீமார்களினதும், வலீமார்களினதும் வாழ்க்கையையும் கருத்திற் கொண்டு சிந்தித்தால் அவர்கள் சிற்றின்பத்தைக் கழிப்பதற்காக பெண்களை விரும்பவில்லை என்பதும், அதிக திருமணம் செய்யவில்லை என்பதும், அதிக பிள்ளைகளைப் பெறவில்லை என்பதும் தெளிவாகிவிட்டது.

அஜ்மீர் அரசர் கரீப் நவாஸ் ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் 89வயது வரையும் திருமணம் செய்யாமல் ஒரு மனிதனின் ஆசை பாசமெல்லாம் அடங்கும் வயதான 90ல் திருமணம் செய்து நான்கு குழந்தைகளைப் பெற்ற வரலாறும் அவர்களின் ஆன்மீக பலத்தைக் காட்டுகிறதேயன்றி சிற்றின்ப மோகத்தைக் காட்டவில்லை.

நபீமார், வலீமார் அல்லாதவர்கள் திருமணம் செய்வது “ஸுன்னத்” என்ற வணக்கத்தைக் கருத்திற் கொண்டல்ல என்பதும், அவர்கள் திருமணம் செய்வது தமது சிற்றின்ப மலத்தைக் கழிக்கும் மல கூடங்களாக பெண்களை ஆக்குவதற்கே என்பதும் தெளிவாகும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments