– மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ )
அடியானுக்கும் இறைவனுக்கும் இடையில் எழுபதாயிரம் திரைகள் ஆனாலும் இறைவன் அடியானின் பிடரி நரம்பைவிட அவனுக்கு மிகச்சமீபமாக இருக்கின்றான். இவ்வளவு நெருக்கத்திலும் அவனை காண முடியவில்லை. காரணம் தூரத்தை போலவே அண்மையும் ஒரு திரை தான்.
غاية القرب حجاب كما غاية البعد حجاب
இறைவா திரைக்கப்பால் நீ மறைந்தால் நீ மறைக்கப்பட்டு எல்லையிடப்பட்டவனாகிவிடுவானாய்.
இறைவா திரை என்பதும் நீ தான். திரைகள் ஒளியாகவும் இருளாகவும் இருக்கின்றன. அவற்றைக்கூட நாம் காணவில்லை.
இறைவா உன்னைக்கொண்டே உன்னை மறைத்துள்ளாய். நீ வெளியானதனால்தான் எங்களுக்கு மறைந்துள்ளாய்.
-அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ்-
ஹக் தஆலா மறைக்கப்பட்டவனல்ல. (மனிதனே!) நீ தான் அவனை பார்க்காமல் மறைக்கப்பட்டுள்ளாய். அவனை ஒரு வஸ்து மறைத்தால் அவனது வுஜூதுக்கு கட்டுப்பாடு ஏற்பட்டுவிடும்.
அவனை திரை ஒன்று மறைப்பது அசாத்தியம். ஏனெனில் அவன் எல்லாமாய் வெளியாகியுள்ளான். அவனுடன் எந்த வஸ்துவும் வெளியாகவில்லை. அவனைத் தவிர யதார்த்தத்தில் எதுவுமில்லை. (அல்லாஹ் வேறு படைப்புகள் வேறு என்ற) வேற்றுமையை நீ நம்பியுள்ளதால் அவனை பார்க்காமல் நீ மறைக்கப்பட்டுள்ளாய். வேற்றுமைத்திரைகள் நீங்கினால் படைப்புகளின் தோற்றத்தில் ஹக் தஆலா வெளியாகியுள்ளதை நீ காண்பாய்.
அல்லாஹ்வை எந்த ஒருபொருளும் மறைக்கவில்லை. அவனுடன் ஒருபொருள் இருப்பதாக நீ எண்ணும் உன் பேதமைதான் உனக்கு அவனை மறைக்கிறது.
-இப்னு அதாஇல்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ்-
வானமோ பூமியோ அர்ஷோ குர்ஸியோ அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையிலுள்ள திரையல்ல. நான் எனும் உணர்வே உனக்கு அல்லாஹ்வை மறைக்கிறது. நீ அதை நீக்கினால் அவனை அடைந்து விடுவாய்.
– அஷ்ஷெய்க் அபூ ஸயீத் இப்னு அபுல்ஹைர் றஹிமஹுல்லாஹ்-
திரை என்பது பேதமை மெய்யான உள்ளமையே உண்மையில் உள்ளது. அதைத்தான் அல் குர்ஆன் கூறுகிறது.
நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் -2:115)
“நாங்கள் மனிதனுக்கு, அவனின் பிடரி நரம்பு அவனுக்கு நெருங்கியிருப்பதை விட அதி நெருக்கமாக உள்ளோம்”
(அல் குர்ஆன் -50:16)
“நாங்கள் அவனுக்கு (மரணம் நெருங்கிய மனிதனுக்கு) உங்களைவிட (அவனை நெருங்கியிருப்பவர்களை விட) நெருங்கியிருக்கிறோம். எனினும், நீங்கள் காணாமல் இருக்கின்றீர்கள்” (அல் குர்ஆன் 56:85)
நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான்.
(அல் குர்ஆன் 57-04)
“(நபியே!) என்னைப் பற்றி என்னுடைய அடியார்கள் உங்களிடம் கேட்டால் நான் (ஹகீகத்தை-எதார்த்தத்தைக் கொண்டு) சமீபமாக இருக்கிறேன்” (என்று சொல்வீராக!)
(அல்குர்ஆன் 2:186)
“அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தமது (றப்பு) இரட்சகனைக் காண்பதில் சந்தேகமுள்ளவர்களாக உள்ளனர். (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் சகல வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான்” (திருக்குர்ஆன் 41:54)
“உங்களிலே (எனது வுஜூதை) நீங்கள் பார்க்க வேண்டாமா?”
(அல்குர்ஆன் 51:21)