தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அண்ணல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பதினெட்டாவது தலைமுறையில் தோன்றிய சிலுவைப் போர் வீரர் அப்துல் கபூர் றஹிமஹுல்லாஹ் அவர்களின் மகனார், திரு மதீனாவின் ஆளுநர் அஹ்மத் றஹிமஹுல்லாஹ் அவர்களின் அருந்தவத் திரு மைந்தர்தான் ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள்.
ஒரு வெள்ளி இரவு திரு மதீனாவில் “யர்பாத்” என்ற பகுதியில் இருந்த தம் இல்லத்தில் அயர்ந்து படுத்து உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அப்பொழுது அண்ணலெம் பெருமான் முஹம்மதெங்கள் நபீகள் கோமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் திருக்காட்சி வழங்கி, மகனே! நீங்கள் இறைவனின் பேரருளைப் பெறுவதற்காக அயல் நாடு சென்று மக்களை அவனுடைய மார்க்கத்தில் இணைக்கும் திருப்பணியில் ஈடுபடுவீர்களாக! அமுத வாய் விண்டு மறைகிறார்கள்.
திடுக்கிற்று விழித்தெழுந்த ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள் அடுத்த நாளே அதற்கான ஆயத்தங்களைச் செய்தார்கள். அவர்கள் கண்ட கனவைக் கேட்டு வியந்த மக்கள் சாரிசாரியாக வந்து அவர்களின் அணியில் சேரலாயினர். அவ் அணி மூவாயிரம் பேர் அடங்கிய அணியாக உருவாகியது. அப்படை ஹிஜ்ரீ 557ம் ஆண்டில் – இற்றைக்கு சுமார் 885 வருடங்களுக்கு முன் இறாக், ஈரான் வழியாக இந்தியாவை நோக்கிப் புறப்பட்டது.
ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள் முதன் முதலாக தமது திருப்பாதத்தை இந்தியாவில் சிந்து மாநிலத்திலேயே வைத்தார்கள். முதன் முதலாக அங்கேயே தமது பணியைத் தொடங்கினார்கள். சிந்து மாநில மக்கள் அவர்களின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு அணியணியாக இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தனர். சிந்து மாநிலத்தில் பள்ளிவாயல்களும், மத்ரஸாக்களும் உருவாயின.
இதைக் கண்ட அரசன் ஆப்தாம் சிங் சீறியெழுந்து முஸ்லிம்களின் படையை அழித் தொழிக்க தனது படையை திரட்டி போர் தொடுத்தான். அந்தப் போரில் ஸெய்யித் இப்றாஹீம் அவர்களின் வாளுக்கு இரையாகி அவன் இறந்தான்.
அதன் பின் ஆப்தாப் சிங்கின் இளவர் மெஹ்தாப் சிங் முஸ்லிம்களுடன் போர் தொடுத்து அவனும் அப்போரில் உயிர் துறந்தான்.
சிந்துவில் இஸ்லாம் நிலை பெற்றது கண்ட ஏந்தல் ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள், தம் கவனத்தை குஜ்றாத்தின் பக்கம் திருப்பினார்கள். அங்கு பிரச்சாரத்திற்காகச் சென்ற அவர்களை அதன் அரசர் கஜராடாசிங் பெரும் படையுடன் எதிர்த்தான். அவன் போர்க்களத்தில் மாண்டான். இஸ்லாம் குஜ்றாத்திலும் கடும் வேகத்தில் பரவியது. அவ்வேளை அரச குடும்பத்தைச் சேர்ந்த இப்றத் சிங் இஸ்லாத்தில் இணைந்தார். அவர் இஸ்லாத்தில் இணைந்தது கண்டு மக்களும் அணியணியாக இஸ்லாத்தில் இணைந்தனர்.
குஜ்றாத்தில் தம் பணி நிறைவுற்றதைக் கண்ட ஸெய்யித் இபறாஹீம் இரு மாநிலங்களிலும் தமது படையைப் பலப்படுத்திவிட்டு இரண்டு வருடங்களின் பின் ஆயிரம் போர் வீரர்களுடன் மட்டும் தாயகம் திரும்பினர். அந்நேரம் அவர்களுக்கு ஐம்பது வயது.
திரு மதீனா பள்ளிவாயலிலேயே முழு நேரத்தையும் கழித்து வரும் காலத்தில் மீண்டும் பெருமானாரைக் கனவில் கண்டு இந்தியாவில் தமிழகம் சென்று இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யுமாறு பணிக்கப்பட்டு ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள் பலம் வாய்ந்த படையோடும், தேiவாயன ஆயுதங்களோடும் தமிழகம் வர ஏற்பாடு செய்தார்கள்.
இந்தச் செய்தி அவ்வேளை துருக்கியில் ஆட்சி செய்து கொண்டிருந்த கலீபாவுக்கு கிடைத்தது. அவர் தனது படைத் தளபதி அப்பாஸ் அவர்களையும், படை வீரர்களையும் கொடுத்து உதவினார்.
பெரும் பலம் வாய்ந்த படை உருவாகியது. ஸெய்யித் இப்றாஹீம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 121 பெண்களும் படையணியில் சேர்ந்து கொண்டனர்.
மொத்தம் ஐயாயிரம் போர் வீரர்களுடன் ஜித்தாவிலிருந்து கப்பல் மூலம் கண்ணணூர் துறை முகம் வந்து சேர்ந்தார்கள்.
அங்கு சில காலம் தங்கியிருந்து பிரச்சாரம் செய்து பல்லாயிரம் பேர்களை இஸ்லாத்தில் இணைத்துவிட்டு தமிழ் நாடு நோக்கி ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள் படைகளோடு வந்து சேர்ந்தார்கள்.
அப்பொழுது பாண்டிய நாட்டை மூன்று உடன் பிறந்த சகோதரர்கள் பங்கு வைத்துக் கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள். மதுரையையும் அதன் சூழலையும் மூத்தவனான திருப் பாண்டியன் என்று அழைக்கப்பட்ட வீர பாண்டியன் ஆண்டு வந்தான். சேது நாட்டை விக்கிரம பாண்டியனும், திருநல்வேலி மாவட்டத்தை குல சேகர பாண்டியனும் ஆண்டு வந்தான்.
முஸ்லிம்களுக்கும், காபிர்களுக்குமிடையில் தமிழ் நாட்டில் பல பகுதிகளிலும் போர்கள் நடைபெற்றுள்ளன. நடைபெற்ற போர்களில் முஸ்லிம்கள் தரப்பிலும், எதிரிகள் தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். பலர் காயப்பட்டனர். சுமார் 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் உயிர் துறந்துள்ளனர். தொடர்ந்து பத்து நாட்கள் போர் நடந்தது.
பத்தாம் நாள் ஸெய்யித் இப்றாஹீம் அவர்களும், திருப் பாண்டியனும் நேருக்கு நேர் எதிர்த்து நின்று போர் செய்தார்கள். அப்பொழுது ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள் திருப் பாண்டியனை தம் வேலாயுதத்தினால் குத்த அது அவனின் உடலில் காயத்தை ஏற்படுத்தியது. எனினும் அதை சமாளித்துக் கொண்டு அவன் வாளாயுதத்தை ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள் மீது வீச அவர்கள் வெட்டுப் பட்டு கீழே சாய்ந்து உயிர் நீத்தார்கள். இது நிகழ்ந்தது ஹிஜ்ரீ 595ம் ஆண்டு துல் கஃதா மாதம் இருபத்து மூன்றாம் நாளிலாகும்.
ஸெய்யித் இப்றாஹீம் அவர்கள்தான் தங்களின் ஊரின் பெயரான “யர்பாத்” என்ற பெயரை அவ்விடத்திற்கு சூட்டினார்கள். அப்பெயர்தான் காலப் போக்கில் ஏர்வாடி என்று மருவியிருக்க இடமுண்டு.
ஏர்வாடியில் நடந்த போரில் முஸ்லிம்களில் இருநூறுக்கும் அதிகமானோர் “ஷஹீத்”களாகி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. எதிரிகளில் இதனைவிட அதிகமானோர் மாண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
ஏர்வாடி கீழக்கரைக்கு அண்மையில் உள்ளது. ஸெய்யித் இப்றாஹீம் றஹிமஹுல்லாஹ் அவர்களின் “தர்ஹா” கட்டிடத்தில் அவர்களுக்கு அருகிலுள்ள அறையிலேயே ஸெய்யித் அபூ தாஹிர் வலிய்யுல்லாஹ் அவர்களின் அடக்கவிடம் உள்ளது. தர்ஹாவுக்குப் பக்கத்தில் ஜும்ஆப் பள்ளிவாயல் ஒன்றும் உள்ளது. தேனீர், சாப்பாட்டுக் கடைகள், லாட்ஜுகளும் உள்ளன.
எல்லா வகை நோயாளர்களும் ஸெய்யித் இப்றாஹீம் ஷஹீத் வலிய்யுல்லாஹ் அவர்களின் தர்ஹாவுக்கு வந்து நேர்ச்சைகள் செய்து தமது நோய்களிலிருந்து சுகம் பெற்றுச் செல்வார்கள். நான் சுமார் ஏழு வருடங்களுக்கு முன் சுமார் பத்து முறை அங்கு சென்று நாயகம் அவர்களையும், அவர்களோடு இஸ்லாமிய போருக்காக வந்த “ஷஹீத்” களான பலரையும் தரிசித்திருக்கிறேன்.
நான் நீண்ட காலமாக எழுதி வந்த தற்போது முடித்து விரைவில் அச்சகம் செல்லவுள்ள “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் “வஹ்ததுல் வுஜூத்” ஞான நூலை – கையெழுத்துப் பிரதியை அவர்களின் அருளை நாடி அவர்களின் கப்று ஷரீபின் மீது வைத்து எடுப்பதற்காக அங்கு எடுத்துச் சென்ற நேரம் எனக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கீழக்கரைக்கும், ஏர்வாடிக்கும் இடையிலுள்ள ஆயிஷா நகர் அறபுக் கல்லூரியில் தங்கியிருந்தேன். நான் அங்கு செல்ல வாய்ப்பில்லாது போனதால் நான் எழுதிய கையெழுத்துப் பிரதியை என்னுடன் பயணித்த மௌலவீ ALM இஸ்மாயீல் பலாஹீ அவர்களையும், அறபுக் கல்லூரி மெனேஜர், மற்றும் அதிபர் மௌலவீ அப்துர் றஊப் அவர்களையும் இணைத்து அந்தப் பணியை செய்து வருவதற்காக அனுப்பி வைத்தேன்.
அவ்விரு மௌலவீகளும், மெனேஜரும் அங்கு சென்று வந்து என்னைச் சந்தித்த போது அழுதார்கள். சுமார் ஐந்து நிமிடங்கள் அவர்களால் என்னுடன் பேச முடியாமற் போயிற்று. பின்னர் விபரத்தைக் கூறினார்கள். அவர்கள் கையெழுத்துப் பிரதியை கப்ர் ஷரீப் மீது வைத்தவுடன் அந்த நூல் மீது மலர்கள் சொரியப்பட்டதாம். அவ்வேளை இவர்கள் தவிர வேறெவரும் அங்கு இருக்கவில்லையாம். இது அவர்களின் “கறாமத்” என்று கூறினார்கள். அல்லாஹ் என்னை அங்கு போகாமலாக்கி அவர்களைப் போக வைத்ததில் இறைவனின் இரகசியம் உண்டு என்பதை நான் புரிந்து கொண்டேன். நான் போயிருந்தால் இந்த கறாமத்தை நான்தானே சொல்ல வேண்டும். எழுதிய நானே சொல்வது பொருத்தமற்றதல்லவா?
இக்கையெழுத்துப் பிரதி அஜ்மீர் ஹாஜா அவர்களின் தலையோரமாக இரண்டு இரவுகள் இருந்துள்ளதென்பதும், நாகூர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா அவர்களின் கப்றின் மீதும் ஓர் இரவு இருந்துள்ளதென்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
ஸெய்யித் இப்றாஹீம் ஷஹீத் பாதுஷா அவர்கள் ஓர் அரசராவார்கள். அவர்களுடன் போருக்காக துருக்கி அரசால் அனுப்பி வைக்கப்பட்ட போர் தளபதியும், அமைச்சருமான ஸெய்யித் அப்பாஸ் மந்திரி ஷஹீத் அவர்கள் அங்கிருந்து கடற்கரை செல்லும் வழியில் அடக்கம் பெற்றுள்ளார்கள். இதேபோல் அவர்களுடன் வந்த டொக்டர் ஒருவரும் ஷஹீதாகி அங்கேயே அடக்கம் பெற்றுள்ளார்கள். இவர்கள் போல் இன்னும் பல ஷுஹதாஉகள் அடக்கம் பெற்றுள்ளனர்.
அவர்களின் “கறாமத்”துகள் வித்தியாசமானவையும், விஷேடமானவையுமாகும்.
847 வருடங்களுக்கு முன் ஏர்வாடி நகரில் இஸ்லாமியப் புனிதப் போரில் உயிர் துறந்து “ஷஹீத்” ஆகி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டு பக்தர்கள், பக்தைகளின் கண் முன்னே “கறாமத்” எனும் அற்புதங்கள் காட்டி அவர்களை நாடிச் செல்லும் பக்தர்களினதும், பக்தைகளினதும் தேவைகளை நிறைவேற்றி வரும் ஸுல்தான் இப்றாஹீம் பாதுஷா அவர்களின் வருடாந்த கந்தூரிக்கான கொடியேற்ற வைபவம் 12.06.2021ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமானது.
“கறாமாத்” அற்புதங்கள்:
நான் நேரில் கண்ட அற்புதங்களிற் சிலதை மட்டும் இங்கு எழுதுகிறேன்.
வட நாட்டில் கோடீஸ்வரன் ஒருவரின் படிக்கின்ற மகளுக்கு இடது மார்பில் ஒரு நோய், மார்பு அடிக்கடி வீங்குவதும், வலிப்பதுமாகும். ஆங்கில வைத்தியம் முதல் அனைத்து வைத்தியங்கள் செய்தும் கூட பயன் கிடைக்கவில்லை. சென்னை, மதுரை, டில்லி, மும்பாய் முதலான இடங்களில் பிரசித்தி பெற்ற ஆங்கில டொக்டர்கள், மற்றும் நாட்டு வைத்தியர்களாலும் கைவிடப்பட்ட நிலையில் குடும்பத்திலுள்ள படித்தவர்களின் ஆலோசனைப்படி சிங்கப்பூர் அழைத்துச் சென்று வைத்தியம் செய்தும் பயன் கிடைக்கவில்லை.
இறுதியில் வட நாட்டிலுள்ள கோவில் பூசாரி ஒருவரின் ஆலோசனைப்படி ஏர்வாடி ஸுல்தான் இப்றாஹீம் ஷஹீத் பாதுஷா அவர்களின் தர்ஹாவுக்கு அந்த மாணவி கொண்டு வரப்பட்டு அங்கு தங்கியிருக்கும் போது அந்த மாணவியின் கனவில் தோன்றிய ஸுல்தான் இப்றாஹீம் அவர்கள், ஏர்வாடியிலுள்ள சாதாரண ஆங்கில டொக்டர் ஒருவரின் தோற்றத்தையும், அவரின் வீட்டையும் கனவில் காட்டி அவரிடம் வைத்தியம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
அதே இரவு மாணவிக்கு கனவில் காட்டப்பட்ட டொக்டரின் கனவில் தோன்றிய ஸுல்தான் இப்றாஹீம் குறித்த மாணவியின் தோற்றத்தை டொக்டருக்கு காட்டி இவள் காலையில் வருவாள். இவளின் இடது மார்பை வெட்டி அதிலுள்ள அசுத்தங்களை அகற்றி விடவும் என்று கூறியுள்ளார்கள். டொக்டரின் வீட்டுக்கு போகும் வழியையும், வீட்டு இலக்கத்தையும் அந்த மாணவிக்கு கனவில் சொல்லியிருந்தார்கள்.
காலையில் மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததைச் சொன்னதும், அவர்கள் காரியம் வெற்றியாக முடியப் போகிறதென்று மகிழ்ச்சியடைந்தவர்களாக மகளை அழைத்துக் கொண்டு ஏர்வாடியிலுள்ள டொக்டரைத் தேடி வந்து கொண்டிருக்கும் போது அம்மாணவியின் வருகையை எதிர்பார்த்து வெளியே நின்றிருந்தார் டொக்டர். இருவரும் ஒருவரையொருவர் கண்டதும் புரிந்து கொண்டார்கள்.
டொக்டர் மாணவியின் பெற்றோரிடம் நான் MBBS படித்த ஒரு சாதாரண டொக்டர்தான். என்னால் சத்திர சிகிச்சை செய்ய முடியாது. ஆயினும் ஸுல்தான் பாதுஷா அவர்களின் கட்டளையை சிரமேற் கொண்டு அவர்களின் உதவியோடு இதைச் செய்கிறேன் என்று தனது சமையலறையிலிருந்த சாதாரண கத்தியால் மாணவியின் மார்பை கீறினார்.
அவ்வளவுதான். மார்பின் உள்ளே இருந்து பிலேட் துண்டுகளும், ஊசிகளும், கடலில் உள்ள ஊரீகளும், சிப்பிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன. உள்ளே இருந்த எல்லாமே வெளி வந்த பிறகு டொக்டர் தனக்குத் தெரிந்தவாறு மருந்து செய்து மாணவியை அனுப்பி வைத்தார்.
சூனியப் பொருட்கள் யாவையும் எடுத்து சுத்தம் செய்தபின் அவற்றைக் கண்ணாடி போத்தல் ஒன்றில் போட்டு வைத்துக் கொண்டார்.
மாணவி மூன்று நாட்கள் மட்டும் தர்ஹாவில் தங்கியிருந்து பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவீ அவர்களிடம் கலிமாச் சொல்லி மூவரும் இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து கொண்டார்கள்.
மார்பிலிருந்து எடுக்கப்பட்ட குறித்த சூனியப் பொருட்களை நானும், என்னுடன் வந்தவர்களும் எங்களின் கண்ணால் கண்டோம்.
இன்னுமோர் அற்புதம். ஒரு நாள் வெள்ளியிரவு ஸுல்தான் இப்றாஹீம் பாதுஷா நாயகம் அவர்களின் தர்ஹாவில் ஒரு மணியளவில் அமர்ந்து ஓதிக் கொண்டிருந்தேன்.
தர்ஹாவுக்கு முன்னால் பெருங் கூட்டமொன்று கூடி நிற்பதைக் கண்ட நான் எழுந்து சென்று பார்த்தேன். சுமார் 50 பேர் கொண்ட ஒரு கூட்டம் வட்டமாக நிற்கிறது. கூட்டத்தின் நடுவே ஒருவன் சப்பணம் போட்டு அமர்ந்திருக்கிறான். அவனுக்கு எதிரில் ஒரு பெண் அமர்ந்து கொண்டு அவனைத் திட்டுகிறாள், சபிக்கிறாள். தனது கையை நாகப் பாம்பு படம் எடுத்தாடுவது போல் வைத்துக் கொண்டு அவனைத் தனது கையால் பாம்பு கொத்துவது போல் அவனைக் கொத்திக் கொண்டும், கேள்விகளைத் தொடர்ந்து கொண்டுமிருக்கிறாள்.
“அடேய் குடிகாரா! நாகப் பாம்பு வேஷம் போட்டு உன்னைக் கடித்து அழிப்பேன், சூனியத்தை எங்கே வைத்திருக்கிறாய்? சொல்லுடா” இவ்வாறு சொல்லிக் கொண்டே இருக்கிறாள். சனக் கூட்டத்தில் யாரிடம் விபரம் கெட்பதென்று இருக்கும் வேளை தர்ஹா ஜும்ஆப் பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவீ ஒருவர் நின்றதைக் கண்டேன். அவரை அழைத்து விளக்கம் கேட்டேன்.
அதற்கவர், நடுவில் இருப்பவன் ஒரு சூனியக் காரன். அந்தப் பெண்ணுக்கு சூனியம் செய்துள்ளான். அந்தப் பெண்ணின் கனவில் தோன்றிய ஸுல்தான் இப்றாஹீம் பாதுஷா, அவனின் தோற்றத்தை அந்தப் பெண்ணுக்கு கனவில் காட்டி இவன் இன்ன ஊரில், இன்ன தெருவிலுள்ள, இன்ன இலக்கமுடைய வீட்டில் இப்போது யாரோ ஒருவருக்கு சூனியம் செய்து கொண்டிருக்கிறான். இப்போது போனால் அவனைப் பிடிக்கலாம் என்று அவர்கள் சொன்னதையடுத்து தர்ஹாவின் தொண்டர்களிற் சிலர் சென்று அவனைப் பிடித்து வந்துள்ளார்கள். அவனிடம் எங்கே வைத்துள்ளாய் என்று சூனியம் செய்யப்பட்ட பெண் தற்போது கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவன் இப்போது சொல்வான். சொன்னதும் தர்ஹாவின் தொண்டர்கள் அவனையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்குச் சென்று சூனியப் பொருட்களைக் கொண்டு வருவார்கள். அதன் பின் அவன் தண்டிக்கப்படுவான் என்று என்னிடம் சொன்னார். இரவு மூன்று மணியாகிவிட்டதால் நான் தங்குமிடம் போய்விட்டேன். காலையில் வந்த போது பாழடைந்த கிணறொன்றில் அவன் வைத்திருந்ததை எடுத்து வந்து அவனுக்கு தண்டனையும் கொடுத்து விட்டார்கள் என்று மௌலவீ கூறினார்.
இன்னுமொரு அற்புதம். ஏர்வாடியை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனும், மனைவியும் ஆறு வருடங்கள் குழந்தைப் பாக்கியமமின்றி இருந்தார்கள். பண வசதியற்றவர்களாயிருந்ததால் பணம் செலவு செய்து வைத்தியம் செய்ய அவர்களால் முடியாமற் போயிற்று. அவ்விருவரும் வலீமாரின் பக்தர்களாயிருந்ததால் ஒரு நாளிரவு “தர்ஹா”வுக்கு வந்து குழந்தை கிடைப்பதற்கு நேர்ச்சை செய்து “பாதிஹா”வும் ஓதிவிட்டுச் சென்றனர்.
ஸுல்தான் இப்றாஹீம் பாதுஷா அவர்களின் அருளால் மனைவி கர்ப்பமானாள். எட்டு மாதங்கள் அவளின் எண்ணத்தில் மிகவிரைவாக நகர்ந்து சென்றன. ஒன்பதாம் மாதம் அவருக்கு அழகிய மகன் பிறந்தான். கணவனும், மனைவியும் குழந்தையுடன் தர்ஹா வந்து பிள்ளை வழங்கிய மகான் அவர்களின் இப்றாஹீம் என்ற பெயரையே பிள்ளைக்கும் சூட்டி மகிழ்வோடு சென்றனர்.
ஏந்தல் இப்றாஹீம் பாதுஷா வழங்கிய இப்றாஹீம் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக ஆறு வயதை அல்லது பதினான்கு வயதை அடைந்ததும் காய்ச்சல் ஏற்பட்டு மரணித்துவிட்டார்.
ஒருவரையொருவர் கட்டித் தழுவி கண்ணீர் வடித்தவர்களாக இப்றாஹீமின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்யாமல் தந்தவரிடமே கொடுப்போம் என்று முடிவு செய்து ஜனாஸாவை தர்ஹாவுக்கு கொண்டு வந்து, ஸுல்தான் இபறாஹீம் பாதுஷாவே! குழந்தை தந்தது நீங்கள்தான். இப்போது எடுத்துக் கொண்டீர்கள். நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டு போயினர் பெற்றோர்.
ஜனாஸா தர்ஹா வாசற் படியில் இருக்கிறது. உள்ளூர் வாசிகளும், வெளியூர் வாசிகளும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் சென்றனர். பெற்றோர் போனவர்கள் போனவர்கள்தான். மூன்றாம் நாள் காலை ஜனாஸாவைக் காணவில்லை. செய்தி பரபரப்பானது. யார் வாடிப் போனாலும் ஏர்வாடி வாடாது. இப்றாஹீம் வழங்கிய இப்றாஹீம் தந்தையின் கப்றை முத்திமிட்டவராக நின்றிருந்தார். ஸுப்ஹானல்லாஹ்!
சுமார் பத்து வருடங்களுக்கு முன் ஏர்வாடி சென்ற நான் எனக்கு அறிமுகமான ஒருவரின் புத்தகக் கடையொன்றில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அங்கு சுமார் 65-70 வயது மதிக்கத்தக்க, எடையும் சுமார் 200 கிலோ மதிக்கத்தக்க ஒருவர் கோல் ஊன்றியவராக வந்து அமர்ந்தார். கடைக்கார முதலாளி என்னிடம் இவரைத் தெரியுமா? என்று கேட்டார். தெரியாது என்றேன். இவர் ஸுல்தான் இப்றாஹீம் “கறாமத்”தால் மரணித்து உயிர் வந்த இப்றாஹீம் என்றார். அவரின் கை முத்தி அருள் பெற்றுக் கொண்டேன். நான் சந்தித்த நேரம் அவர் பாதுஷா நாயகத்தின் தென்னந்தோட்டத்தில் காவல் காரனாக இருந்தார்.
அன்பிற்குரிய வலீமாரின் பக்தர்களே! பக்தைகளே! அவர்கள் அருளை நீங்கள் பெற விரும்பினால் அவர்கள் பேரில் ஒரு “யாஸீன்” மட்டுமாவது ஓதுமாறு உங்களை அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.