தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
தொடர் – 1
“முர்தத் பத்வா” முற்றிலும் பிழையானதும், திட்டமிட்ட சதியுமேயாகும்!
– தவறான “பத்வா” வழங்கிவிட்டு தலைமறைவானார் ரிஸ்வீ முப்தீ!
– இவர் ரிஸ்வீ முப்தீ அல்ல. “ரித்தத்” முப்தீதான்.
– “முப்தீ” என்ற பட்டம் கேட்டு நடுங்கும் முல்லாக்களிற் சிலர் அவர் வெறும் முட்டிதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
– “முப்தீ” என்பவரில் இருக்க வேண்டிய நிபந்தனைகளில் இவரிடம் ஒன்றுமே கிடையாது.
– இவர் இரும்புக் கோட்டைக்குள் இருந்தாலும் இலங்கை நாட்டுக்கு வரவே வேண்டும்.
– இவரும், இவரின் “பத்வா” குழுவினரும் சரி கண்டு தமது “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்த நூல்களிலிருந்தே இவர்களுக்கு பதிலடியும், வாய்ப்பூட்டும்.
– இவரும், இவரின் “பத்வா” குழுவினரும் ஆதாரத்திற்கு எடுத்த அறபு நூல்களை பொது மக்கள் மத்தியில் ரிஸ்வியோ, அவரின் “பத்வா” குழுவினரோ மொழியிலக்கணத் தவறின்றி வாசித்து விளக்கம் சொல்லவும் வேண்டும். நாம் கேட்கும் கேள்விகளுக்கு விடை சொல்லவும் வேண்டும். அதோடு காதிரிய்யா, ஷாதுலிய்யா, ரிபாஇய்யா, நக்ஷபந்திய்யா, ஜிஷ்திய்யா, மற்றும் ஸஹ்றவர்திய்யா தரீகாக்களின் தாபகர்கள் கூறியுள்ள ஸூபிஸ தத்துவத்திற்கும் விளக்கம் சொல்ல வேண்டும்.
– இவர்கள் என்னையும், எனது கருத்தை சரி கண்டவர்களையும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “புத்வா” வழங்கியதன் மூலம் இவர்கள் அனைவரும் “முர்தத்” மதம் மாறிவிட்டார்கள். இவர்கள் அனைவரும் மீண்டும் திருக்கலிமாவை மொழிந்து இஸ்லாமில் இணைந்து கொள்ள வேண்டும்.
– தற்போதுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கலப்பு உலமா சபையாகும். ஸுன்னீகளும், வஹ்ஹாபீகளும் கலந்த உலமா சபையால் ஏகமனதாக எந்த ஒரு தீர்மானம் எடுப்பதற்கும் சாத்தியமே இல்லை. கயிறு இழுத்தே வெற்றி பெற வேண்டும். கலப்பு உலமா சபையால் கலகமே பிறக்கும்.
– “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைவாதிகள் இந்நாட்டில் 15 இலட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்களுக்கென்று தனியான உலமா சபை உருவாக வேண்டும். அந்த உலமா சபையின் தலைவராக இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரீ அவர்களின் கொள்கையைச் சரிகண்ட, மத்ஹபுகள், தரீகாக்களுக்கு ஆதரவான அசல் ஸுன்னீ ஒருவர் தலைவராக இருத்தல் வேண்டும். இத்தகைய ஒரு மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே ஒரே இனத்திற்கிடையில் மார்க்க ரீதியான பிரச்சினை எதுவுமின்றி மக்கள் ஒற்றுமையாக வாழ முடியும்.
– தற்போதுள்ள கலவன் உலமா சபை கலைக்கப்பட்டு கௌரவ நீதி அமைச்சர் அவர்களின் தலைமையில் கலப்பற்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
– உலமா சபை அநீதியாக “முர்தத்” தீர்ப்பு வழங்கி 42 வருடங்களாகியும் இதுவரை இது தொடர்பாக இலங்கை வாழ் முஸ்லிம் அரசியல்வாதிகளோ, முஸ்லிம் சமுகப் பிரமுகர்களோ, எழுத்தாளர்களோ, சிந்தனையாளர்களோ, ஸுன்னத் வல் ஜமாஅத் அமைப்புக்களோ, தரீகாவாதிகளோ, தர்ஹாவாதிகளோ, அறபுக் கல்லூரி அதிபர்கள், மற்றும் ஹஸ்றத்மார்களோ எந்த ஒரு எதிர் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் அனைவரும் அசத்தியத்திற்கும், அநீதிக்கும் துணை போனவர்களாகவே இறைவனால் கணிக்கப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவர் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நம் நாட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளில் அதிகமானோர் தம்மை வளர்த்துக் கொள்பவர்களேயன்றி நாட்டையோ, நாட்டு மக்களையோ வளர்க்கும் எண்ணமுள்ளவர்களாகத் தெரியவில்லை. இவர்களுக்கு அரசியல் இலாபம் கிடைக்குமென்றிருந்தால் மட்டும் ஆர்ப்பாட்டமும் நடத்துவார்கள், அலை திரண்டும், அணி திரண்டும் அனைத்தையும் செய்வார்கள். அரசியல் இலாபம் இல்லையென்றால் ஆட்களைக் கூட காண முடியாமல் போய்விடும். தேர்தல் காலம் வந்தால் இவர்களின் வதனத்தில் “ஜமாலிய்யத்” ஜொலிக்கும். அழுக்கான சிறுவர்களைக் கூட அள்ளி அணைப்பார்கள். வெற்றி பெற்றால் அன்றிரவே கொழும்பு சென்று ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வெற்றிப் பெருவிழா கொண்டாடுவார்கள். இவர்களுக்காக இராப்பகலாய் கண்விழித்து எதிர் தரப்பினரால் அடி உதை வாங்கினவனும், பாடுபட்டவனும் கொழும்பு சென்று சந்திப்பதற்கு போன் செய்தால் கௌரவ அமைச்சர் முக்கியமான “கொன்பிறஸ்” ஒன்றில் இருக்கிறார் என்று கார் ட்றைவர் சொல்லிவிடுவார். இரவைக்கு சந்திக்கலாமா? என்று கேட்டால் இரவைக்கு இரண்டு “ப்றோக்ராம்” உள்ளதால் சந்திக்க வாய்ப்பில்லை என்று பதில் வரும். வெற்றிக்கு முன் “ஜமாலிய்யத்”, வெற்றிக்குப் பின் “ஜலாலிய்யத்”. எல்லாம் பதவியும், பணமும் படுத்தும் பாடுதான். இது மட்டுமல்ல. வெற்றிக்குப் பின் ஒரு வகை நாய்ப் பாய்ச்சலும் வந்துவிடும். இதனால்தானோ என்னவோ ஒரு கவிஞர் பின்வருமாறு கூறியுள்ளார்.
لَجَوْبُ الْبِلَادِ مَعَ الْمَتْرَبَةْ – أَحَبُّ إِلَيَّ مِنَ الْمَرْتَبَةْ
لِأَنَّ الْوُلَاةَ لَهُمْ نَبْوَةٌ – وَمَعْتَبَةٌ يَا لَهَا مَعْتَبَةْ
வறுமையோடு ஊர் ஊராக சுற்றிவருவது ஒரு பதவியில் இருப்பதைவிட எனக்கு மிக விருப்பமானதாகும். ஏனெனில் அதிகாரிகளிடம் ஒரு வகை நாய்ப்பாய்ச்சலும், வெறியும் உண்டு. அந்தப் பாய்ச்சலும், வெறியுமே பெரும் தண்டனையாகும்.
அரசியல் பதவிக்காகவும், அதனால் கிடைக்கும் இன்ப சுகத்திற்காகவும் பல்லைக் காட்டும் அரசியல்வாதிகளை விடுவோம்.
ஆயினும் ஆன்மிகவாதிகள், உலமாஉகள், ஸுன்னீகள், ஸூபிஸவாதிகள், தரீகாவாதிகள், தர்ஹாவாதிகள் அனைவரும் எங்கே? 42 ஆண்டுகளாகவும் உறங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்களா? இவர்கள்தானா நாட்டுப் பற்றுள்ளவர்கள்? இவர்கள்தானா மார்க்கப்பற்றுள்ளவர்கள்? இவர்கள்தானா நாட்டு மக்கள் மீது பற்றுள்ளவர்கள்? இவர்கள்தானா நாட்டு மக்களுக்காக வாழ்பவர்கள்? இவர்கள்தானா நபீ தோழர் வரலாறு பேசுபவர்கள்? இவர்கள்தானா அவ்லியாஉகளின் அகமியம் பேசுபவர்கள்? அரசியல்வாதிகளின் தேர்தல் கால வாக்குறுதிகளை நம்பாதீர்கள். அவர்களுக்காக உங்கள் முழு நேரங்களையும் செலவிட்டு இறுதியில் ஒரு பயனுமற்றவர்களாக ஆகிவிடாதீர்கள். நல்லவர்களுக்கு கை கொடுங்கள், பக்தியுள்ளோரை தெரிவு செய்யுங்கள். நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணிப்போரை அணையுங்கள்.
கொரோனா வியாதியால் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம்கள் எரிக்கப்பட்ட காலத்தில் அதை எதிர்த்துப் பாதையில் இறங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளை நான் கேட்கிறேன். வேலிகளில் வெள்ளைத்துணி கட்டி எதிர்ப்பை வெளியட்ட முஸ்லிம்களை, முஸ்லிம் அரசியல்வாதிகளை நான் கேட்கிறேன்.
1979ம் ஆண்டு முதல் இன்று வரை (2021) சுமார் 42 ஆண்டுகளாக “பத்வா” எனும் வாளால் உண்மையான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்களே கொலை காரக் கூட்டத்தை எதிர்த்து இவர்களுக்காக நீங்கள் செய்ததென்ன? எத்தனை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளீர்கள்? எங்கே நடத்தியுள்ளீர்கள்? எத்தனை வெள்ளைச் சீலை கட்டியுள்ளீர்கள்? எங்கே கட்டியுள்ளீர்கள்? “பத்வா” என்ற வாளால் கொல்லப்பட்டவர்களும் அநீதி செய்யப்பட்டவர்களே! அவர்களுக்காக நீங்கள் குரல் கொடுக்காதது ஏன்?
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا قَالَ الرَّجُلُ لِأَخِيهِ يَا كَافِرُ، فَقَدْ بَاءَ بِهِ أَحَدُهُمَا
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள். ஒருவன் தனது சகோதரனுக்கு “காபிர்” என்று சொன்னால் அவ்விருவரில் ஒருவர் “காபிர்” ஆகிவிட்டார்.
ஆதாரம்: புகாரீ
ஹதீது எண்: 6103
அறிவிப்பு அபூ ஹுறைறா
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيُّمَا رَجُلٍ قَالَ لِأَخِيهِ يَا كَافِرُ، فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا»
நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். யாராவதொருவன் தனது சகோதரனுக்கு “காபிர்” என்று சொன்னால் அவ்விருவரில் ஒருவர் “காபிர்” ஆகிவிட்டார்.
ஆதாரம்: புகாரீ
ஹதீது எண்: 6104
அறிவிப்பு: அப்துல்லாஹ் இப்னு உமர்
عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ، وَلَعْنُ المُؤْمِنِ كَقَتْلِهِ، وَمَنْ رَمَى مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ»
கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தைக் கொண்டு பொய்ச் சத்தியம் செய்தவன் அவன் சொன்னது போலாகிவிடுவான். யாராவதொருவன் ஏதேனும் ஒரு வஸ்த்து கொண்டு தற்கொலை செய்தானாயின் அவன் நரகத்தில் அது கொண்டே வேதனை செய்யப்படுவான். ஒரு விசுவாசியை சபித்தல் அவைனக் கொலை செய்வது போன்றாகும். ஒருவன் ஒரு “முஃமின்” விசுவாசியை “காபிர்” என்று சொல்வது அவனைக் கொலை செய்வது போன்றாகும்.
أيّها الإخوة المسلمون بدولة سريلانكا وبسائر الدُّول الإسلاميّة! قد ذكرتُ لكم بعض الأحاديث فقط من باب تكفير المسلم، ولكن فى هذا الأمر أحاديث كثيرة صحيحة، تركتُها خوفا من التّطويل،
ومعنى الأحاديث المذكورة ظاهرٌ، فلا حاجة إلى التفصيل والتّفسير، ولكن أذكر معناها مختصـرا، أنّ من كفَّرَ مسلما فقد قتله، وجَعَلَه مُستحقّا للقَتل، ومُهْدَرَ الدَّمِ بتكفيره إيّاه، وكَفَرَ هو أيضا بتكفيره المسلم، فالمُكفِّرُ للمسلم كقاتله بلا شكٍّ، وله إثمُ قتلِه وإن لم يقتله بيده، لأنّه قد قتله بحُكمه وقولِه وخطِّه،
وكذلك من كفَّرَ جمًّا غفيرا وجمعا كبيرا من المسلمين، كما فعل الجهلاء لي ولِمَنْ صدّق قولي، فلهم إثمُ قتلهم جميعا، كما فهم هذا المعنى من الأحاديث المذكورة، سيظهر حالُ المُفتي السابق وأعوانه السابقين، وحالُ المفتي الحاليّ وأعوانه يوم القيامة، ونسمع بآذاننا يقولون يوم الحشر وا حسرتا على ما فرطت فى جنب الله!
وأمّا المفتي الحاليّ لجمعيّات العلماء بسريلانكا فقد غاب عن دولة سريلانكا منذ شهور، فلا نعرف أحواله وأخباره، لأنّها سرٌّ مَصُونٌ، لا يعرفه إلّا أذياله المقرّبون، وإنّما غاب لخوفٍ أصابه،
தமிழாக்கம்:
ஸ்ரீ லங்கா நாட்டிலும், ஏனைய இஸ்லாமிய நாடுகளிலும் வாழ்கின்ற இஸ்லாமிய சகோதரர்களே! ஒரு முஸ்லிமை காபிராக்கி வைத்தல் தொடர்பான, பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளிச் சென்ற சில அருள் மொழிகளை மட்டும் மேலே எழுதினேன். இந்த விவகாரம் தொடர்பாக பெருமானார் அருளிய பல அருள் மொழிகள் உள்ளன. விடயம் விரிந்துவிடும் என்பதற்காக அவற்றை எழுதாமல் விட்டேன்.
மேலே நான் எழுதியுள்ள இந்த விவகாரம் தொடர்பான அண்ணலெம் பெருமானின் அருள் மொழிகளின் பொருள் வெளிப்படையாக விளங்கக் கூடியதாகையால் விபரமும், விளக்கமும் தேவையில்லை என்று கருதுகிறேன். எனினும் சுருக்கமாக அவற்றின் விளக்கத்தை எழுதுகிறேன்.
ஒருவன் – ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை “காபிர்” என்று சொன்னால் அவ்வாறு சொன்னவன் அவனைக் கொலை செய்துவிட்டான். அதோடு அவன் கொலை செய்யப்பட வேண்டியவன் என்றும் சொல்லிவிட்டான். அது மட்டுமல்ல. அவனைக் “காபிர்” என்று சொன்னதால் அவனின் இரத்தம் முஸ்லிம்களுக்கு “ஹலால்” என்றும் சொல்லிவிட்டான். அதாவது அவனைக் கொலை செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதென்றும் சொல்லிவிட்டான். அது மட்டுமல்ல ஒரு முஸ்லிமை “காபிர்” என்று சொன்னதால் அவனும் “காபிர்” ஆகிவிட்டான். ஒரு முஸ்லிமை “காபிர்” ஆக்கியவன் – அதாவது சொன்னவன் அல்லது “பத்வா” வழங்கியவன் சந்தேகமின்றி அவனைக் கொலை செய்தவனேதான். அவ்வாறு சொன்னவன் தனது கையால் கொலை செய்யாவிட்டாலும் அவனுக்கு கொலை செய்த பாவம் உண்டு. அவன் தனது கையால் கொலை செய்ய வேண்டுமென்பதில்லை. எழுத்து மூலம் அல்லது சொல் மூலம், அல்லது சட்டத்தின் மூலம் “காபிர்” ஆக்குவதும் ஒன்றேதான்.
ஒருவனுக்கு “காபிர்” என்று சொல்வது இத்தனை பெரிய குற்றமென்றால் பெருங் கூட்டமொன்றையே “காபிர்” என்று சொன்னவனின் நிலை எவ்வாறிருக்குமென்று சொல்லத் தேவையில்லை. எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் “காபிர்” என்று “பத்வா” வழங்கியவன் உலகில் வாழும் முஸ்லிம்களில் பெருங் கூட்டமொன்றையே கொலை செய்துவிட்டான். அவனுக்கு அத்தனை முஸ்லிம்களையும் கொலை செய்த பாவம் உண்டு.
எனக்கும், எனது கருத்துக்களைச் சரி கண்டவர்களுக்கும் “காபிர்” என்று “பத்வா” வழங்கியவனுக்கும், அவனுடன் அந்த “பத்வா”வில் கலந்து கொண்டவர்களுக்கும், தற்போது உலமா சபையின் “முப்தீ” பத்வா வழங்குபபவராக இருப்பவருக்கும், இவரின் வால்களுக்கும் சட்டம் ஒன்றேதான். இவர்கள் அனைவரும் மறுமையில் அல்லாஹ்வின் விடயத்தில் நாங்கள் கவனயீனமாக நடந்து கொண்டோம் என்று அழுகைக்குரல் எழுப்புவார்கள். அதை நாங்கள் மறுமையில் கேட்போம். இன்ஷா அல்லாஹ்!
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தற்போதைய தலைவர் பல மாதங்களாக நாட்டில் இல்லை என்று அறிகிறோம். அவரின் செய்திகள், நிலைமைகள் அவரை நெருங்கிய அவரின் வால்களுக்கே தெரியும். எமக்குத் தெரியாது. அவரின் செய்தி பரம ரகசியமாகும். அவரின் தலை மறைவுக்கு அவருக்கு ஏற்பட்டுள்ள பயமே காரணம் எனலாம். (மொழியாக்கம் முற்றுப் பெற்றது)
அன்புள்ள முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!
இஸ்லாமிய வரலாற்றில் பல்லாயிரம் ஸூபீகளும், ஞானிகளும், வலீமார்களும், “காபிர்” என்றும், “சிந்தீக்” என்றும் “பத்வா” வழங்கப்பட்டு கொலை செய்யப்பட்டுமுள்ளார்கள். அவர்களிற் பலரின் விபரங்கள் அண்மையில் வெளியாகவுள்ள “அல் கிப்ரீதுல் அஹ்மர்” என்ற எனது நூலில் இடம்பெறவுள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில் பல மகான்கள் கொலை செய்யப்பட்டிருந்தாலும் அவர்களில் வரலாற்றடிப்படையில் பிரசித்தி பெற்றவர்கள் இமாம் மன்சூர் அல்ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்களேயாவர்.
இவர்கள் ஹிஜ்ரீ 244ல் பிறந்து 309ல் மறைந்தார்கள் – கொலை செய்யப்பட்டார்கள். கி.பி 858 – 922 வயது 63 அல்லது 64 ஆகும். இவர்கள் கொலை செய்யப்பட்டு 1099 வருடங்களாகின்றன.