2004ம் ஆண்டு புனித றழான் மாதம் 17ம் இரவு “பத்ர்” ஸஹாபாக்களின் நினைவுதின நிகழ்வுக்கான ஏற்பாடு பள்ளிவாயலில் வழமைபோல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் “பத்ர்” ஸஹாபாக்களின் “தபர்றுக்” நார்ஸா சட்டி அடுப்பில் இருக்கிறது.
”தறாவீஹ்” தொழுகையின் பின் நிகழ்வு தொடங்கவுள்ள நிலையில் திடீரென்று குண்டொன்று வெடித்த சத்தம் இவ் ஊரை அதிர வைத்தது. எங்கே என்ன நடந்ததென்று எவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. பொது மக்கள் சிதறியோடத் தொடங்கினர். சிறிது நேரத்தின் பின் காத்தான்குடியிலுள்ள அதிகமான பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கியில் அறிவித்தல் சத்தம் கேட்டது. அவ் அறிவித்தலில் “றஊப் மௌலவீயின் ஆதராவளர்கள் மெயின் வீதியிலுள்ள இரும்புத் தைக்காவில் தொழுது கொண்டிருந்த மக்களுக்கு குண்டு எறிந்து விட்டார்கள். மக்கள் அனைவரும் தங்களிடமுள்ள ஆயுதங்களுடன் வெளியே வந்து விடிவதற்குள் றஊப் மௌலவீயை கொலை செய்ய வேண்டும். அவனின் ஆதரவாளர்களின் வீடுகளையும், பள்ளிவாயல்களையும் எரிக்க வேண்டும்” என்று சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து எனது ஆதரவாளர்களின் பலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பலர் அடித்து துன்புறுத்தப்பட்டனர்.
இந்த அமதுளிதுளியின் போது நான் எனது பள்ளிவாயலுக்குப் பக்கத்திலுள்ள வீடொன்றில் ஒழிந்து கொண்டேன். வெடில் சத்தமும், வீடுகளை உடைக்கும் சத்தமும் என்னை நடுங்கச் செய்தன. நான் தங்கியிருந்த வீட்டுக்கு சிறிது தொலைவில் இருந்த “ஜாமிஉழ்ழாபிரீன்” ஜும்ஆப் பள்ளிவாயலில் ஒருவர், “றஊப் மௌலவீயின் ஆதரவாளர்கள் வீடுகளை உடைக்கிறார்கள், ஆட்களை அடிக்கிறார்கள். ஆகவே இன்றிரவு விடியுமுன் றஊப் மௌலவீயை கொலை செய்ய வேண்டியுள்ளதால் பொது மக்கள் தங்களிடமுள்ள ஆயுதங்கள் எதுவாயினும் அதை எடுத்துக் கொண்டு வெளியில் வாருங்கள்” என்று அறிவித்தல் செய்தார். அறிவித்தல் செய்தவர் ஒரு மௌலவீ என்பதை அவரின் குரலை ஆதாரமாகக் கொண்டு நான் புரிந்து கொண்டேன். அவரின் பெயரைக் கூற நான் விரும்பவில்லை. இது தொடர்பாக அரசாங்கம் என்னிடம் விசாரித்தால் மட்டும் அவரை நான் காட்டிக் கொடுப்பேன்.
அன்றிரவு விடியும் வரை அந்த வீட்டிலேயே தங்கியிருந்து அன்று அதிகாலை எவருக்கும் தெரியாமல் நான் வெளியூர் சென்றுவிட்டேன்.
இந்நிகழ்வு நடந்து சில மாதங்களின் பின் (சரியான காலம் என் நினைவில் இல்லை) ஒரு தேர்தல் வந்தது. அத்தேர்தலின் போது காத்தான்குடி 05 கலியத்து மூலை என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய சகோதரர் மௌலவீ MBM பிர்தவ்ஸ் நளீமீ நான் இப்போது எழுதிய இரும்புத் தைக்கா பள்ளிவாயலில் நோன்பு 17ம் இரவு வெடித்த குண்டு தொடர்பாக பேசுகையில் “இரும்புத் தைக்காப் பள்ளிவாயலில் நோன்பு 17ம் இரவு எறியப்பட்ட குண்டு றஊப் மௌலவீயின் ஆதரவாளர்களால் எறியப்பட்டதல்ல. இது ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஆதரவாளர்களால்தான் எறியப்பட்டதென்று அரசியல் மேடையில் ஊர் மக்கள் அறிய ஒலிபெருக்கியில் பகிரங்கமாகப் பேசினார்.
அந்த மௌலவீயின் பேச்சுக்குப் பிறகுதான் எனக்கு இந்த விபரம் தெரிய வந்தது. அதுவரை யார் செய்தார் என்பதை அறியாதவனாகவே இருந்தேன். இவ்வாறுதான் இவ்வூர் மக்களில் பலரும் இருந்தனர்.
இத்தகவலை அரசியல் மேடையில் பகிரங்கமாகப் பேசிய மௌலவீ அத்தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்பதும், மார்க்கக் கொள்கையில் எனக்கு எதிரானவர் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
என்மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் தவறான அபிப்பிராயம் வைத்திருந்த இவ்வூர் மக்களில் பலர் மௌலவீ அவர்கள் பேசிய பிறகு என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்டுச் சென்றார்கள். அதுவரை அதிகமான மக்கள் நான் செய்ததாகவே நம்பியிருந்தார்கள்.
தேர்தல் முடிந்த பின் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அரசியல் மேடையில் பேசிய மௌலவீக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக ஊர் மக்கள் பேசிக் கொண்டார்கள். இவை தவிர வேறொன்றும் நான் அறியேன். இது தொடர்பான உண்மையை அல்லாஹ்வே மிக அறிந்தவன். நான் மௌலவீ அவர்களையும், ஹிஸ்புல்லாஹ் அவர்களையும் அல்லாஹ்வுக்கு வேறாகாத மனித வெளிப்பாடாகவே பார்க்கிறேன்.
مَنْ حَفَرَ حُفْرَةً لِأَخِيْهِ وَقَعَ فِيْهَا
தனது சகோரதனின் அழிவுக்கு ஒருவன் குழி தோண்டினால் அவனே அக்குழியில் விழுவான் என்பது அறிவுள்ள முன்னோர் சொன்ன செய்தியாகும்.
இரும்புத் தைக்காவில் குண்டெறிந்தவர் யாராக இருந்தாலும் அவரின் குறிக்கோள் மாரக்கமா? அரசியலா? என்று நான் பல நாட்கள் ஆய்வு செய்து கிடைத்த முடிவு அது அரசியல் என்பதேயாகும்.
அரசியலில் இன்ப, சுகத்திற்கு அடிமையான ஒருவன் தான் எந்நேரமும் கொலை செய்யப்படலாம் என்பதை அறிந்திருந்தாலும், முகத்துக்கும், முதுகிற்கும் எதிரே ஒரே நேரத்தில் ஆயிரம் துப்பாக்கிகள் குறி பார்த்த நிலையில் இருந்தாலும் அரசியலை வெறுக்கவே மாட்டான் என்பது மூத்த அரசியல்வாதி ஒருவரின் கருத்தாகும். இக்கருத்தை எனக்கு ஆயிரம் மனங்களிருந்தாலும் அவை அனைத்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன். ஏனெனில் சுவர்க்க சுகம் தெரியாதவர்களுக்கு அரசியல் இன்பம் சுவர்க்க இன்பமாகவே இருக்கும்.
இதுவும் ஒரு சதிதான்.
நான் கூறிய, இப்போதும் கூறிக் கொண்டிருக்கின்ற “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்று என்ற தத்துவம், அல்லது “எல்லாம் அவனே” என்ற தத்துவம் இஸ்லாமிய ஸூபிஸம் கூறும் தத்துவமேயன்றி அது புராணக்கதையுமல்ல. இந்து மத ஞானமுமல்ல, கிரேக்க தத்துவமுமல்ல. ஆயினும் இஸ்லாமிய தத்துவம் தெரியாத, ஸூபிஸ அகமியம் புரியாத சிலர் இக்கொள்கைக்கு சேறு பூசுகிறார்கள். இவர்கள் திருந்தமாட்டார்கள். மற்றவர்கள் திருந்தி நடப்பதற்கு விடவும் மாட்டார்கள்.
ஒருவன் என்ன தத்துவம் பேசினாலும் அதற்கு ஒரு பெயர் இருக்கும். பெயரில்லாமல் தத்துவமில்லை. அத் தத்துவம் பிழையென்று “பத்வா” வழங்குவோர் தமது “பத்வா”வில் அத்தலைப்பை பல இடங்களில் சுட்டிக் காட்டுவது வழக்கம். “முப்தீ”களின் வழக்கமும் இவ்வாறுதான். நூலாசிரியர்களின் வழக்கமும் இவ்வாறுதான்.
எனக்கும், எனது மக்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கிய முல்லாக்கள் “ஏகத்துவத்தில் ஊடுருவல்” என்ற தமது “பத்வா”வின் ஓர் இடத்தில் கூட ”வஹ்ததுல் வுஜூத்” என்ற பெயர் குறித்துக் கூறவில்லை.
முல்லாக்களின் அறபு “பத்வா” 32 பக்கங்கள் கொண்டதாகும். அவற்றில் ஒரு பக்கத்தில் ஒரு வரியில் கூட “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல் கூறப்படவில்லை. அறபு மொழி தெரிந்தவர்கள் 32 பக்கங்களையும் வாசித்துப் பார்த்தார்களாயின் முல்லாக்களின் சதி வெளியாகும். சங்கைக்குரிய உலமாஉகளின் சதி சந்திக்கு வந்துவிடும். அவர்கள் குறித்த சொல்லைக் கூறாமல் விட்டதற்கு நிச்சயமாக ஒரு காரணமோ, பல காரணங்களோ இருக்க வேண்டும். காரணமின்றிக் காரியமில்லை.
இதற்கான காரணத்தை இதோ எழுதுகிறேன். முல்லாக்கள் “பத்வா” வழங்கிய 1979ம் ஆண்டு காலப்பகுதியில் அவர்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” என்றால் என்னவென்று கூட தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை. அவர்கள் அறிந்திருந்தது “ஹுலூல் – இத்திஹாத்” என்ற வழிகேடான கொள்கை மட்டுமேயாகும்.
இதனால்தான் அவர்கள் தமது “பத்வா”வில் “ஹுலூல் – இத்திஹாத்” என்ற சொற்களை பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். இது மட்டுமல்ல. அவர்கள் தமது “பத்வா”வில் கூறியுள்ள ஆதாரங்கள் 90 வீதமானவை “ஹுலூல் – இத்திஹாத்” என்ற வழிகெட்ட கொள்கைக்கு மறுப்பான ஆதாரங்களேயாகும்.
நான் வழிகேடான “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையை எங்கும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேசாமலிருக்கும் நிலையில் அவர்கள் “பத்வா”வில் பல இடங்களில் “ஹுலூல் – இத்திஹாத்” என்ற கொள்கை பிழை என்பதற்கான ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டு சென்றிருப்பது அவர்கள் எனது பேச்சை வழிகெட்ட “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை என்று விளங்கிக் கொண்டதேயாகும்.
அன்பிற்குரியவர்களே!
“ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை இஸ்லாமிய அடிப்படைகளான திருக்குர்ஆனுக்கும், திரு நபீயின் நிறை மொழிகளுக்கும் முரணான, வழிகெட்ட கொள்கை என்று 1970ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை பேசியும், எழுதியும் வருகிறேன். நான் பேசிய அதிகமான பேச்சுக்களில் விளக்கி வைத்துமிருக்கிறேன். எனது கருத்துக்களைக் கேட்டவர்கள் விளங்கியிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
எனினும் அறிவிலிகளின் கண் மூடித்தனமான “பத்வா”வை கண்ணை மூடிக் கொண்டு நம்பின காத்தான்குடி உலமா சபையும், சம்மேளனமும் ஊர் மக்கள் எனது பள்ளிவாயலுக்கு வராமல் தடை செய்ததாலும், யாராவது என்னிடம் என்ன நோக்கத்தில் வந்து போனாலும் அவரை இனங்கண்டு சம்மேளனத்திற்கு அல்லது உலமா சபைக்கு அழைத்து அவரைத் தண்டித்து எச்சரித்து வந்ததாலும் பொது மகக்ளுக்கு என்னை அணுக முடியாமற் போய்விட்டது. இவ்வூர் மக்கள் கூட எனது பேச்சை கேட்க அவர்களால் வாய்ப்பில்லாமற் போயிற்று. அரசாங்கம் வஹ்ஹாபிஸ அமைப்புகளை தடை செய்த பிறகுதான் குறித்த இரு தாபனங்களினதும் ஆட்சியதிகாரமும் குறைந்தது அல்லது நின்றது எனலாம்.
காத்தான்குடி இலங்கை நாட்டின் ஓர் ஊராக இருந்தாலும் கூட அதன் ஆட்சியதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை. குறித்த இரு தாபனங்களுக்குமே உள்ளது. இது காலவரை வஹ்ஹாபிஸத்திற்கு வால் பிடித்துக் கொண்டிருந்த குறித்த தாபனங்கள் இரண்டும் வஹ்ஹாபிஸ அமைப்புகளிற் சில தடை செய்யப்பட்ட பிறகுதான் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளன. இப்போது அவர்களின் விசாரணைகள் குறைந்து கொண்டும் போகின்றன. (தொடரும்….)
குறிப்பு: காத்தான்குடியில் எமது எதிரிகளால் றமழான் 17ம் இரவு நடத்தப்பட்ட அட்டூழியங்களுக்கான அல்லாஹ்வின் தண்டனை “அரசாங்கம்” என்ற பாத்திரம் மூலம் வெளியாகும். இன்ஷா அல்லாஹ்!
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ