Monday, October 14, 2024
Homeஎழுத்தாக்கங்கள்திரை நீக்கம்

திரை நீக்கம்

தொடர் – 12

ஹுலூல் – இத்திஹாத் கொள்கைக்கும், “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கும் வேறுபாடு தெரியாத முல்லா மகான்கள்!

حُمُرٌ مُعَمَّمَةٌ خُشُبٌ مُسَنَّدَةٌ
سُفُنٌ مُثَقَّبَةٌ مَنْ هَؤُلَاءِ سَلُوْا

ஊடுருவலில் ஊடுருவல்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.

1979ம் ஆண்டு எனக்கும், நான் கூறிய ஸூபிஸ ஞானத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் எந்தவொரு விசாரணையும் இன்றி “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” தீர்ப்பு வழங்கி முஸ்லிம்களுக்கிடையே பிளவையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தி வைத்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவருக்கும், “பத்வா” குழுவினருக்கும் அல்லாஹ் நல்வழி காட்ட வேண்டுமென்றும், அவர்களின் நல்வழிக்கு வாய்ப்பின்றி அல்லாஹ்வின் நாட்டத்தில் இருக்குமானால் அவர்களுக்கு நியாயமான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும் பிரார்த்தனை செய்யுமாறு உங்களனைவரையும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

إِنَّ اللهَ لَأَغْيَرُ
அல்லாஹ் நிச்சயமாக அதி ரோஷக் காரனாவான்.

முல்லா மகான்கள் ஸூபிஸ சமுகத்திற்கு எதிராக வெளியிட்ட “பத்வா” தீர்ப்பின் பெயர் “ஏகத்துவத்தில் ஊடுருவல்” என்பதாகும்.

முல்லாக்களே! உங்களிடம் நான் கேட்க விரும்புவது என்னவெனில் “தவ்ஹீத்” என்றால் என்னவென்று உங்களுக்கே தெரியாமலிருக்கும் நிலையில் அதில் ஊடுருவலை கண்டு பிடித்தது எவ்வாறு?

ஏகத்துவக் கொள்கையிலும், “வஹ்ததுல் வுஜூத்” கோட்பாட்டிலும் “சீறோ”வாயிருக்கும் உங்களுக்கு அதில் ஊடுருவல் இருப்பது எவ்வாறு தெரிய வந்தது?

தலைப்பே பிழை என்றால் எல்லாமே பிழைதான். إِذَا صَلُحَ الرَّأْسُ فَلَيْسَ مِنَ الْجَسَدِ بَأْسٌ தலை மட்டும் சரியானால் உடலுறுப்புக்களும் சரியாகவே செயற்படும். ஆனால் தலை கெட்டால் எல்லாமே கெட்டுவிடும்.

முல்லாக்களே! நீங்கள் அறபு மொழியில் 32 பக்கங்களிலும், தமிழ் மொழயில் 28 பக்கங்களிலும் வெளியிட்ட, இரத்த நிற அட்டை போட்ட நூலை திறமையுள்ள ஓர் அறிஞன் வாசித்தானாயின் அதில் காறி உமிழ்ந்து அதைத் தீக்கிரையாக்கிவிடுவான். யார் இந்த பைத்தியங்கள் என்று சத்தமிடுவான். (துறை தெரியாமல் தோணி தொடுத்த முல்லாக்கள்!)

முல்லாக்களே! நான் கூறிய கொள்கை “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப்பொருள் ஒன்றே என்ற கொள்கையாகும். இக்கொள்கை பிழை என்று “பத்வா” வழங்குவதாயின் அது பிழை என்பதற்கான ஆதாரங்கள் கூறி நிறுவ வேண்டும். இவ்வாறு செய்வதே மேல் வீடு சரியாக இயங்குவோரின் செயலாகும்.

ஆனால் நீங்களோ “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்பதற்கு ஓர் ஆதாரம் கூடக் கூறாமலும், குறைந்த பட்சம் “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல்லைக் கூட உங்களின் அறபு “பத்வா”வில் எழுதாமலும் அது பிழை என்று “பத்வா” வழங்கியுள்ளீர்கள். உங்களின் பரிசுத்த அறிவை வர்ணிக்க வார்த்தை இல்லையே! என் செய்யலாம்!

ஒரு விடயத்தை மறுத்து “பத்வா” வழங்குகின்ற ஒருவன் அந்த விடயத்தின் தலைப்பை மட்டுமாவது தனது மறுப்பில் திரும்பத் திரும்ப சொல்வது வழக்கம். உங்கள் அறபு “பத்வா”வின் ஓர் இடத்தில் கூட அச்சொல் (வஹ்ததுல் வுஜூத்) வரவில்லையே! அது ஏன்? இது தந்திரமா? அல்லது சதியா?

இதே நேரம் “ஹுலூல் – இத்திஹாத்” என்ற சொல் உங்கள் பத்வாவில் பல இடங்களில் வந்துள்ளதுடன், அந்தக் கொள்கை பிழை என்பதற்கான ஆதாரங்களும் நிறைய வந்துள்ளன. அவ்வாறு வந்திருந்தாலும் கூட அது பிழையானதற்கான காரணம் கூடக் கூறப்படவில்லை. இதன் மூலம் “ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்பதற்கான காரணம் கூட உங்களுக்குப் புரியவில்லை என்பது தெளிவாகிறது. காரணமின்றிக் காரியமில்லை.

இதன் மூலம் நான் விளங்கிய விடயம் என்னவெனில் நீங்கள் “பத்வா” வழங்கிய வேளை உங்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பான விளக்கம் ஒரு மண்ணளவேனும் தெரிந்திருக்கவில்லை என்பதாகும். இதேபோல் அவ்வேளை “ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்று நீங்கள் அறிந்திருந்தாலும் கூட அதற்கான காரணத்தை அறிந்திருக்கவில்லை என்பதும் தெளிவாகின்றது.

இவ்விரு விடயங்கள் தொடர்பான விளக்கத்தில் நான் எங்கோ நிற்கிறேன். நீங்கள் எங்கோ நிற்கிறீர்கள். நீங்கள் இவ்விரு விடயம் தொடர்பாக என் மூலம் விளக்கம் பெற விரும்பினால் மட்டும் நல்ல திறமையுள்ள நான்கு உலமாஉகளை அழைத்துக்கொண்டு என்னிடம் வந்து நான்கு இரவுகள் மட்டும் தங்கியிருங்கள். சுமார் 12 மணித்தியாலங்கள் நேரமெடுத்து உங்களுக்கு விளக்கி வைக்கிறேன். கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் வர வேண்டும். என்னோடு விவாதிக்கும் நோக்கம் இருந்தால் வரத் தேவையில்லை. நான் விவாதத்திற்குரியவனல்லன். ஸூபிஸ வழியில் விவாதத்திற்கு இடமில்லை.

பிரயாணச் செலவோடு நான்கு நாட்களும் உணவு, தங்குமிட வசதிகள் யாவும் நான் செய்து தருவேன். இன்ஷா அல்லாஹ்! العلم بالتعلم – ولكل فن رجال

நான் பேசிய விடயம் பிழை என்பதற்கு நீங்கள் ஆதாரமாக எடுத்த “அத்துஹ்பதுல் முர்ஸலா” என்ற நூலையும், அதேபோல் நீங்கள் ஏற்றுக் கொண்ட இமாம் கஸ்ஸாலீ, இமாம் இப்னு அறபீ, இமாம் ஷஃறானீ போன்றவர்களின் நூல்களில் “எல்லாம் அவனே” என்ற விளக்கம் கூறப்பட்ட பாடங்களையும் காட்டித் தருகிறேன். அவற்றை நீங்களே வாசித்து விளக்கம் கூறுங்கள்.

நமது நிகழ்வுகள் யாவும் வீடியோ பண்ணி மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட வேண்டும்.

இதற்கு நீங்கள் உடன்படவில்லையானால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள 2000 பக்கங்கள் கொண்ட “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் நூலுக்கு மறுப்பு நூல் எழுதுங்கள். இந்நூல் நூறு வீதம் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைதான் இஸ்லாம் என்று ஆதாரங்களுடன் நிறுவப்பட்ட நூலாகும். நீங்கள் எழுதும் அந்த மறுப்பு நூலை ஸூபிஸ சமுக உலமாஉகளும், நானும் சரி கண்டால் மட்டும் ஒற்றுமைக்கு உடன் படுவோம். இன்றேல் நீங்கள் நீங்கள்தான், நாங்கள் நாங்கள்தான்.
لَكُمْ دِيْنُكُمْ وَلِيَ دِيْنِ

மேற்கண்ட எனது ஆலோசனைகள் முஸ்லிம்களின் ஒற்றுமை, நல்லிணக்கத்தை கருவாக, அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்டதாகும். தவிர உலமாஉகளுக்கு பயந்து சொல்லப்பட்டதல்ல. நீங்கள் எங்களைக் “காபிர்”களாக்கி 42 வருடங்கள் கடந்து விட்டன. அல்லாஹ்வின் அருளாலும், வலீமாரின் “பறகத்”தாலும் நாங்கள் அனைவரும் சிறப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கின்றோம். பொருளாதாரத்திலும், கல்வித்துறையிலும் “பத்வா”வுக்கு முன்னிருந்த நிலையை விட பதின் மடங்கு உயர்ந்துதான் உள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!

எனினும் நீங்கள் சத்தியக் கொள்கையைப் பொய்யாக்கி அல்லாஹ்வினதும், பெருமானாரினதும், வலீமாரினதும் சாபத்துக்குள்ளாகிவிடுவீர்கள் என்ற கவலை மட்டும் எங்களுக்கு உண்டு.

மேலே நான் கூறிய ஆலோசனைகளில் ஒன்றுக்காவது உடன்பட விரும்பவில்லையானால் உங்களின் மனச்சாட்சியில் விரல் வைத்து எந்தவொரு நிபந்தனையுமின்றி “பத்வா”வை வாபஸ் பெறுங்கள். வாபஸ் பெறுவது உங்களுக்கு அவமானமென்று நீங்கள் கருதினால் அந்த அவமானம் ஏற்படாமல் வாபஸ் பெற வழியுண்டு. அதை என்னிடம் கேளுங்கள் சொல்லித் தருகிறேன். நீங்களாக வாபஸ் பெறாமல் வேறு வகையில் அது ரத்துச் செய்யப்படுவது உங்களுக்கு மேலும் அவமானத்தை தருமென்பதை கூறி வைக்க விரும்புகிறேன். والله على كل شيئ قدير இதுவே எங்களின் “ஈமான்” விசுவாசமாகும்.

“பத்வா” வழங்கிய முல்லாக்களே!

உங்களின் ஊடுருவல் நூலில் நீங்கள் செய்த பல சதிகளில் ஒரு சில சதிகளை கடந்த பதிவுகளின் போது சுட்டிக் காட்டியுள்ளேன். இன்னும் பல சதிகள் உள்ளன. அவற்றையும் கட்டம் கட்டமாக சுட்டிக் காட்டுவேன்.

உங்களின் அறபு “பத்வா” முதலாம் பக்கத்தில்
إِنَّ جِبْرِيْلَ عَلَيْهِ السَّلَامْ رَأَى وَأَبْصَرَ فِى غَارِ حِرَاءَ أَنَّ اللهَ تَعَالَى قَدْ رَقَدَ فِيْهِ وَاضِعًا يَدَهُ فِى جَبِيْنِهِ
அல்லாஹ் ஹிறா குகையில் தனது கையை நெற்றியில் வைத்தவனாக உறங்கினான் என்றும், தமிழ் “பத்வா” 18ம் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்தான் என்றும் எழுதியுள்ளீர்கள்.

நான் பேசிய நேரம் படுத்துக் கொண்டிருந்தான் என்றுதான் பேசியுள்ளேனேயன்றி உறங்கினான் என்று பேசவில்லை. இதை நீங்களும் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். ஆயினும் உங்களின் அறபு “பத்வா”வில் رَقَدَ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளீர்கள். இதன் பொருள் உறங்கினான் என்பதேயாகும். ஒருவன் உறங்காமல் படுத்துக் கொண்டிருப்பதற்கு சாத்தியமிருப்பதால் நீங்கள் اضطجع என்ற சொல்லையே பயன்படுத்தியிருக்க வேண்டும். رَقَدَ என்ற சொல் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் நான் பேசியது போன்றே தமிழில் எழுதிவிட்டு அறபியில் உறங்கினான் என்று எழுதியுள்ளீர்கள் இதன் மூலம் நீங்கள் அகராதி அறிவில்லாதவர்கள் என்பது விளங்குகிறது. இது உங்களின் சதியா? தவறா?

முல்லா மகான்களே! உங்களின் அறபு பத்வா 5ம் பக்கத்திலும், தமிழ் பத்வா 22ம் பக்கத்திலும் சில இமாம்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர்கள் அனைவரையும் ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

அறபு “பத்வா”வில் 13 இமாம்களின் பெயர்களைக் குறிப்பிட்ட நீங்கள் தமிழ் பத்வாவில் அவர்களின் ஒருவரின் பெயரை விட்டு 12 இமாம்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். தமிழ் பத்வாவில் இமாம் இப்னு ஹஜர் அவர்களின் பெயரை விட்டுவிட்டீர்கள். இது உங்களின் மறதியா? அல்லது மயக்கமா? அல்லது தயக்கமா? ஏனெனில் அவர்கள் நீங்கள் குறிப்பிட்டுள்ள அதே நூலில் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை சரி கண்டு எழுதியுள்ளார்கள். பின்னால் விபரமாக ஏழுதுவேன்.

உங்களின் அறபு பத்வா 28ம் பக்கத்தில் “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூலில் வந்துள்ள ஒரு செய்தியை குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அதை எழுதிய முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அவர்களை நீங்கள் ஏற்றுக் கொண்ட இமாம்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவில்லை. இது சரியா? தவறா?

நீங்கள் ஏற்றுக் கொண்ட 13 இமாம்களில் 3 இமாம்களை மட்டும் எடுத்து உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். இம்மூன்று இமாம்களையும் நீங்கள் சரி கண்டது மூன்று மடங்கு பயங்கர “றொகட்” தந்து உதவியதற்கு சமமானதாகும். இன்ஷா அல்லாஹ் நீங்கள் தந்த “றொகட்”களாலேயே உங்கள் கணக்கு வழக்குகளைப் பார்க்கலாம் போல் தெரிகிறது. தந்ததற்கு நன்றி.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments