Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்திரை நீக்கம்

திரை நீக்கம்

தொடர் – 13

முர்தத் பத்வாவும், முல்லாக்களின் சதிகளும்.

பத்வா வழங்கிய முல்லாக்களே!

உங்களின் அறபு “பத்வா” 28ம் பக்கத்தில் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்ன செய்தி ஒன்றை “லதாயிபுல் மினன்” எனும் நூலில் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதை எவ்வித மாற்றமுமின்றி இங்கு எழுதுகிறேன்.

قال العارف بالله عبد الوهّاب الشّعراني رحمه الله المُتوفّى سنة 973 فى لطائف المِنن (وقد أشبع الشّيخ محي الدين ابن عربي رضي الله عنه الكلامَ فى الرّدِّ على أهل الحلول والاتّحاد، ومِن كلامه رضي الله عنه ما قال بالاتّحاد إلّاأهلُ الإلحاد، وما قال بالحلول إلّا من دينُه معلول)
முல்லா மகான்களே!

“ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைவாதிக்கு இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கொடுத்த இந்த மறுப்பை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “லதாயிபுல் மினன்” எனும் நூலில் எழுதியிருப்பதாக நீங்கள் உங்கள் பத்வாவில் எழுதியுள்ளீர்கள்.

இந்த ஆதாரத்தை “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனக்கு எதிராக வழங்கிய உங்கள் “பத்வா”வில் குறப்பிட்டதேன்? நான் “ஹுலூல் – இத்திஹாத்” பேசியிருந்தால் தானே எனக்கு மறுப்பாக இதை நீங்கள் எழுதலாம். அதுதானே நியாயமும் கூட.

இது காலவரை நான் எங்காவது, எப்போதாவது “ஹுலூல் – இத்திஹாத்” பேசியதற்கு ஓர் ஆதாரமாவது உங்களால் கூற முடியுமா? நான் கூறிய கருத்தை நீங்கள் அவ்வாறு விளங்கியதற்கு நான் பழியா? நான் என்ன செய்வது? இதற்கு காரணம் என்னை விசாரிக்காமல் நீங்கள் “பத்வா” வழங்கியதேயாகும். பிழை செய்தது நீங்களேயன்றி நான் அல்ல. தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நீங்களேதான். நானல்ல. என்னை விசாரிக்க விடாமல் உங்களை அவசரமாக “பத்வா” வழங்குமாறு வற்புறுத்தியது காத்தான்குடி உலமாஉகளும், சம்மேளனமுமேயாகும். இவர்கள் விசாரிக்கும் நடைமுறையில் விசாரிக்கப்பட்டால் உண்மை வெளியாகும். சத்தியம் சந்திக்கு வரும்.

இந்த நிகழ்வின் மூலம் நீங்கள் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையையும், “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. எந்த விடயத்திற்கு எதை ஆதாரமாக எழுத வேண்டுமென்பது தெரியாமல் எழுதிவிட்டீர்கள். இதற்கு பிரதான காரணம் இந்தப் பிரச்சினையை காத்தான்குடியிலிருந்து உங்களிடம் அள்ளிக் கொண்டு வந்தவர்கள் உங்களை அவசரப்படுத்தியதேயாகும். விசாரணை நடத்தப்படும் போது நான் கூறுவது உண்மை என்பது தெரிய வரும். இது தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்துமென்று எதிர்பார்க்கிறேன்.

முல்லா மகான்களே!

உங்களின் இந்த “பத்வா”வை வாசிக்கின்றவர்களில் விஷயம் தெரியாத வெளியூர்வாசிகள், நான் “ஹுலூல் – இத்திஹாத்” பேசுவதாக விளங்கிக் கொள்வார்கள் என்பது உங்களுக்கு விளங்கவில்லையா? அல்லது அவ்வாறு மக்கள் விளங்கி, நீங்கள் “பத்வா” வழங்கியதுபோல் என்னைக் கொலை செய்யட்டும், அல்லது துன்புறுத்தட்டும் என்பதற்காக வேண்டுமென்றே செய்தீர்களா? உங்களின் மந்திரமும், தந்திரமும் என்னிடம் வேலை செய்யாதென்பதை நீங்கள் புரிந்து இதன் பிறகாவது தூய்மையான எண்ணத்தோடு செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். ஏனெனில் அல்லாஹ் என்னோடு இருக்கிறான்.

“ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைவாதிகளுக்கு எதிராக இப்னு அறபீ நாயகம் எழுதியதை நீங்கள் எனக்கு எதிராக எழுதிய “பத்வா”வில் குறிப்பிட்டுள்ளீர்கள். இது சதியா? அறியாமையா?

“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுப்பதற்கு உங்களிடம் ஆதாரமில்லாமற் போனதால் எதையாவது எழுதி “பத்வா”வின் பக்கங்களை மக்களுக்கு கூட்டிக் காட்டுவதற்காக நீங்கள் கையாண்ட தந்திரமே இது. எனக்குத் திருடத் தெரியாது போனாலும் திருடனைக் கண்டுபிடிக்கத் தெரியும் என்பதை நீங்கள் விளங்கிக் கொண்டால் போதும்.

முல்லா மகான்களே!

உங்களின் அறபு “பத்வா” 23ம் பக்கத்தில் இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல் பதாவல் ஹதீதிய்யா” என்ற நூலில் உள்ள செய்தி ஒன்றைக் கூறியுள்ளீர்கள். அதை எந்தவொரு மாற்றமுமின்றி எழுதுகிறேன்.

وفى الفتاوى الحديثيّة لابن حجر الهيتمي بعد كلام طويل ما نصّه، إذاتَقَرَّرَ هذا فقائل هذه المقالة الّتي هي القولُ بالجهة فوق، إن كان يعتقد الحلولَ والإستِقْرارَ والظّرفيّة أوالتّحيُّزَ فهوكافر، يُسلك به مسلك المرتدّين، إن كان مُظهرا لذلك،

இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையை எதிர்த்துக் கூறிய ஒரு கருத்தை தங்களின் “அல்பதாவல் ஹதீதிய்யா” எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள். அதற்கும், “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கும் எந்தவொரு சம்பந்தமோ, தொடர்போ கிடையாது. அவர்களின் அந்தக் கருத்தை உங்களின் “பத்வா”வில் குறிப்பிட வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லை.

ஆகையால் அவர்கள் “ஹுலூல் – இத்திஹாத்” காரர்களுக்கு எதிராகக் கூறிய கருத்தை நான் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்பதற்கு ஆதாரமாக எடுக்க முடியாது. “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்று நிறுவ ஆதாரம் கிடைக்காத நீங்கள் பசியைப் போக்க உணவு கிடைக்காதவன் எதையாவது சாப்பிட்டு வயிறு நிரப்புவது போல் எதையாவதை எழுதி நூலை பெரிதாக்க நினைத்துவிட்டீர்கள். இது சதியா? தவறா?

முல்லா மகான்களே!

நான் பேசிய கருத்துக்கள் “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்களா? அல்லது “ஹுலூல் – இத்திஹாத்” கருத்துக்களா? என்று முதலில் ஆய்வு செய்து முடிவு செய்த பின்புதான் “பத்வா” எழுதுவதற்கு ஏழுதுகோலை எடுத்திருக்க வேண்டும். எனினும் நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வராமலேயே “பத்வா” எழுதத் தொடங்கிவிட்டீர்கள். இது “பத்வா” வழங்குபவர்களுக்கு அழகல்ல.

உங்களுக்கு என்மீதுள்ள பொறாமையும், எரிச்சலும் உங்களை சிந்திக்க விடவில்லை. இதேபோல் காத்தான்குடி உலமா சபை சார்பில் வந்த நல்ல மனிதர்கள் அவசரமாக வேலையை முடித்துத் தருமாறு உங்களைத் தொல்லைப் படுத்திக் கொண்டும், திரை மறைவில் நின்று உங்களைத் தூண்டிக் கொண்டுமிருந்த வஹ்ஹாபீகளின் சொறிச்சலும் உங்களை ஆய்வு செய்ய விடவில்லை. இதுவே உண்மை. விசாரணை துருவித் துருவி நடை பெறும். அந்நேரம் யார் முனாபிக்? யார் முஃமின் என்பது வெளியாகும்.

“வஹ்ததுல் வுஜூத்” பிழையென்று நிறுவ திருக்குர்ஆனில் ஓர் ஆதாரமும் உங்களுக்கு கிடைக்காதென்பதற்கு அசைக்க முடியாத ஆதாரம் நீங்கள் ஆதாரமாக எடுத்த திருக்குர்ஆன் வசனங்கங்களே ஆதாரமாக இருப்பதாகும். விளக்கம் உரிய இடத்தில் இடம் பெறும்.

மகா முல்லாக்களே!

எனக்கும், எனது ஆதரவாளர்களுக்கும் “முர்தத்” பத்வா வழங்குவதற்கு நீங்கள் திருக்குர்ஆனை ஆய்வு செய்து எடுத்த ஆதாரங்கள் இரண்டு மட்டும்தான்.

ஒன்று – لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ

இரண்டு – இக்லாஸ் அத்தியாயம்.
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، اللَّهُ الصَّمَدُ، لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ،
மொத்தம் ஐந்து வசனங்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுப்பதற்கு உங்களுக்கு ஆதாரமாக கிடைத்துள்ளன. இவற்றில் ஒவ்வொன்றாக சுருக்கமாக ஆய்வு செய்து பார்ப்போம்.

முதல் வசனம் “அவன் போல் எதுவுமில்லை என்றும், அவனே கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் உள்ளான்” என்றும் கூறுகிறது.

“ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை வாதிகளில் எவரும், அதேபோல் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைவாதிகளில் எவரும் அவன் போல் ஏதாவதொன்று இருப்பதாகச் சொல்லவுமில்லை, அவன் பார்ப்பவனுமல்ல, கேட்பவனுமல்ல என்று சொல்லவுமில்லை.

இக்லாஸ் அத்தியாயத்தின் முதல் வசனம் அல்லாஹ் ஒருவனென்று கூறுகிறது.

“ஹுலூல் – இத்திஹாத்” பேசுகின்றவர்களில் எவரும், அதேபோல் “வஹ்ததுல் வுஜூத்” பேசுகின்றவர்களில் எவரும் அல்லாஹ் இருவர் என்றோ, மூவரென்றோ, அல்லது பலர் என்றோ சொன்னதுமில்லை, அவ்வாறு சொன்னதற்கு ஆதாரமுமில்லை.

இரண்டாம் வசனம் அவன் தேவையற்றவன் என்று கூறுகிறது. அவ்விரு சாராரில் எவரும் அவன் தேவை உள்ளவனென்று சொல்லவுமில்லை, அதற்கு ஆதாரமுமில்லை. மூன்றாம் வசனம் அவன் யாரையும் பெறவுமில்லை, அவனை யாரும் பெறவுமில்லை என்று கூறுகின்றது. அவ்விரு சாராரில் எவரும் அவன் யாரையும் பெற்றதாகவோ, அல்லது அவனை யாரும் பெற்றதாகவோ சொல்லவுமில்லை, அதற்கு ஆதாரமுமில்லை. நான்காம் வசனம் அவனுக்கு நிகராக எவருமில்லை என்று கூறுகின்றது. அவ்விரு சாராரில் எவரும் அவனுக்கு நிகர் உண்டு என்று சொல்லவுமில்லை, சொன்னதற்கு ஆதாரமுமில்லை.

எனவே, மேற்கண்ட ஐந்து வசனங்களில் ஒன்றும் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்றோ, “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்றோ கூறவில்லை. இவ்வாறிருக்கும் நிலையில் அவ்விரு கொள்கைகளும் பிழை என்பதற்கு குறித்த ஐந்து வசனங்களையும் ஆதாரமாகக் கூறியிருப்பது நீங்கள் இந்த அறிவில் மிகவும் பள்ளத்தில் படுத்துறங்குகிறீர்கள் என்பதற்கு மறுக்க முடியாத சான்றாக உள்ளது. இது வெட்கித் தலை குனிய வேண்டிய விடயமாகும்.

அவ்வாறாயின் ஹுலூல் – இத்திஹாத் பிழையில்லையென்றா நீங்கள் சொல்கிறீர்கள் என்று என்னை நீங்கள் கேட்கலாம். இல்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக “ஹுலூல் – இத்திஹாத்” பிழை பிழை பிழைதான் என்று ஆயிரம் முறை நான் சொல்வேன். ஆனால் அது பிழை என்பதற்கு நீங்கள் கூறிய ஆதாரம் வெறும் “புஷ”வானம். அது ஆதாரமல்ல. வேறு ஆதாரம் உண்டு. எனது தொடர் பதிவில் நிச்சயமாக நான் அதை விளக்கி வைக்க மிக்க ஆவலுள்ளவனாக இருக்கிறேன். எவரும் கேட்டு வராமலிருப்பது மட்டுமே குறை.

இவ்வூரில்தான் “பத்வா” வழங்கப்பட்ட காலத்திலிருந்து நான் இருக்கிறேன். காத்தான்குடியிலுள்ள உலமாஉகளோ, வெளியூரிலுள்ள உலமாஉகளோ என்னுடன் இது தொடர்பாகப் பேச வரவுமில்லை. பேசவுமில்லை.

நமதூரின் இரு கண்களாக விளங்கும் ஹஸ்றத்மார் இருவர் இடையிடையே என்னிடம் வருவார்கள். சுக செய்தி விசாரிப்பார்கள். நானும் அவர்களுக்கு கண்ணியம் செய்து ஆதரிப்பேன். பேசிக் கொண்டிருந்து போய்விடுவார்கள். ஒரு நாளில் ஒரு கேள்வி கூட அவர்கள் என்னிடம் கேட்டதுமில்லை. நானாக அவர்களுக்கு விளக்கம் ஏதும் சொல்லவுமில்லை. நான் புத்தியைப் பயன்படுத்தி என்னிடம் வருபவர்களை வேதனைப்படுத்தாமலேயே வந்துள்ளேன்.

வெளியூர்களிலிருந்து இடையிடையே மௌலவீமார் வருவார்கள். அவர்களை ஆதரித்து தங்கவைத்து அனுப்புவேன். அவர்களில் அதிகமானவர்கள் இது தொடர்பாக ஒன்றுமே கேட்கமாட்டார்கள். நானாக சில நேரம் சிலரைப் பொறுத்து மட்டும் சில விளக்கங்கள் சொல்வேன். அவர்கள் மனத் திருப்தியோடு போவார்கள்.

“ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்பதற்கும், “வஹ்ததுல் வுஜூத்” சரியான கொள்கை என்பதற்கும் பல ஆதாரங்களும், பல காரணங்களும் உள்ளன. அவற்றை நான் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன்.

“பத்வா” வழங்கிய முல்லாக்களோ, ஏனைய உலமாஉகளோ இது தொடர்பான விபரங்களை என் மூலம் அறிய விரும்பினால் எனது நிபந்தனைக்கு உடன்பட்டவர்கள் மட்டும் என்னிடம் வரட்டும். அல்லது அவ்வாறே இருந்து மரணித்து மறுமையில் அல்லாஹ் வழங்கும் தண்டனையை பெற்றுக் கொள்ளட்டும்.

اَلْعِلْمُ بِالتَّعَلُّمِ، اَلْعِلْمُ يُعْطَى وَلَا يَأْتِيْ

இன்ஷா அல்லாஹ் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ள 2000 பக்கங்கள் கொண்ட “வஹ்ததுல் வுஜூத்” ஞானப் பெட்டகத்தை எதிர்பாருங்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments