தொடர் – 15
அன்பிற்குரியவர்களே!
உலமா சபை வழங்கிய “பத்வா” நூலில் 13 இமாம்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் ஆதாரங்களைக் கொண்டு “பத்வா” எழுதியதாகவும், அவர்கள் 13 பேர்களும் சரியானவர்கள் என்று தாம் ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.
அவர்கள் குறிப்பிட்ட இமாம்களில் மூவர் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையில் முத்திப்பழுத்த மகான்கள். இந்தக் கொள்கையைப் பச்சை பச்சையாகச் சொன்னவர்களும், எழுதியவர்களுமாவர். “எல்லாம் அவனே” எனும் தத்துவத்தை மிகத் தெளிவாகவும், விளக்கமாகவும் சொன்ன “கறாமத்” அற்புதமுடைய அவ்லியாஉகளுமாவர்.
உலமாஉகள் இவர்களை ஏற்றுக் கொள்வதாகக் கூறியிருக்கிறார்களே இவர்களோ “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையின் மன்னர்களல்லவா? ஏன் இவர்களை ஆதாரமாக எடுத்தார்கள் என்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.
அதாவது நானும், எனது மௌலவீமாரும் அல்லாஹ்விடம் “துஆ” கேட்கும் போதெல்லாம் எங்களைக் காபிர் என்றும், எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கியவர்களுக்கு தண்டனை வழங்குவாயாக என்றும்,
اللهم اجْعَلْ تَفْكِيْرَهُمْ فِيْ تَدْمِيْرِهِمْ
இறைவா! அவர்களின் சிந்தனையை அவர்களின் அழிவுக்கே வழியாக ஆக்கி வைப்பாயாக என்றும் கேட்பது வழக்கம். இந்த “துஆ”வை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடுதான் எங்களுக்கு ஆதரவான மகான்களை தமக்கு ஆதரவானவர்களாக எடுத்துக்கொண்டதும், ஏற்றுக் கொண்டதுமாகும் என்று புரிந்து கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்! இனி இவர்கள் வாய் திறக்கவே முடியாது. பாக்கு வெட்டிக்குள் பாக்கு மாட்டிக் கொண்டது போல் மாட்டிக் கொண்டார்கள். ஆப்பிழுத்த குரங்காகிவிட்டார்கள். சிங்கத்தின் வாலைப்பிடித்தவர்கள் போல் சிக்கிக் கொண்டார்கள்.
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!
இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “இஹ்யாஉ உலூமித்தீன்” என்ற நூலில் பல இடங்களில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானக்னருத்துக்களைக் கூறியுள்ளார்கள். அவற்றில் ஆறு இடங்களை மட்டும் தெரிவு செய்து இங்கு எழுதுகிறேன். அதோடு அவர்களின் “மிஷ்காதுல் அன்வார்” எனும் நூலில் இருந்தும் ஓர் ஆதாரமும் எடுத்து மொத்தம் ஏழு ஆதாரங்கள் எழுதுகிறேன்.
இவ் ஏழு இடங்களிலும் சொல்லப்பட்டுள்ள, வலியுறுத்தப்பட்டுள்ள கருத்து என்னவெனில் அல்லாஹ் தவிர வேறொன்றுமில்லை என்பதும், அல்லாஹ்வையும் அவனின் செயல்களையும் தவிர வேறொன்றும் இல்லை என்பதுமாகும்.
குறிப்பாக இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் بَلْ هُوَ الْكُلُّ “பல் ஹுவல் குல்லு” எல்லாம் அவனே என்று சொல்லியிருப்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். இதைவிட ஆதாரம் வேறென்ன வேண்டும்?
இமாம் ஙஸ்ஸாலீ அவர்களின் வசனங்களில் சுட்டிக் காட்டப்பட வேண்டிய வசனங்கள்.
01. وَلَيْسَ فِي الْوُجُوْدِ سِوَى اللهِ تَعَالَى وَأَفْعَالِهِ
அல்லாஹ்வையும், அவனின் செயல்களையும் தவிர வேறொன்றுமில்லை. எந்த ஒரு படைப்புக்கும் “வுஜூத்” உள்ளமை இல்லை.
(இஹ்யாஉ உலூமித்தீன்)
(முதலாம் பாடம், அவ்றாதுகளின் சிறப்பு)
02. إِذْ لَيْسَ فِي الْوُجُوْدِ تَحْقِيْقاً إِلَّا اللهُ وَأَفْعَالُهُ
நிச்சயமாக இருப்பவற்றில் அல்லாஹ்வையும், அவனின் செயல்களையும் தவிர திட்டமாக வேறொன்றுமே இல்லை.
(இஹ்யா உலூமித்தீன்)
(பாடம் – ஆதாபுஸ்ஸமாஇ)
03. إِذْ لَيْسَ فِي الْوُجُوْدِ شَيْءٌ سِوَى اللهِ تَعَالَى وَأَفْعَالِهِ
இருப்பவற்றில் அல்லாஹ்வையும், அவனின் செயல்களையும் தவிர வேறு ஒன்றுமே இல்லை.
(இஹ்யாஉ உலூமித்தீன்)
(பாடம் – பயானு மஃனன் நப்ஸி)
04. أَنْ لَا يَرَى فِي الْوُجُوْدِ إِلَّا وَاحِدًا
இருப்பவற்றில் ஒருவனைத் தவிர வேறொன்றையும் காணாமல் இருப்பதாகும்.
(இஹ்யாஉ உலூமித்தீன்)
(பாடம் – பயானு ஹகீகதித் தவ்ஹீதி)
05. فَإِنَّ مَنْ عَرَفَ نَفْسَهَ وَعَرَفَ رَبَّهُ عَرَفَ قَطْعًا أَنَّهُ لَا وُجُوْدَ لَهُ مِنْ ذَاتِهِ وَإِنَّمَا وُجُوْدُ ذَاتِهِ وَدَوَامُ وُجُوْدِهِ وَكَمَالُ وُجُوْدِهِ مِنَ اللهِ وَإِلَى اللهِ وَبِاللهِ،
وَإِلَّا فَالْعَبْدُ مِنْ حَيْثُ ذَاتِهِ لَا وُجُوْدَ لَهُ مِنْ ذَاتِهِ بَلْ هُوَ مَحْوٌ مَحْضٌ وَعَدَمٌ صِرْفٌ
நிச்சயமாக தன்னையும் அறிந்து, தனது “றப்பு” இரட்சகனையும் அறிந்தவன் திட்டமாக தனக்கு தன்னில் உள்ளமை கிடையாதென்பதை சந்தேகமின்றி அறிந்து கொள்வான், அறிந்து கொண்டான். அவனின் “தாத்” இருப்பதும், அதன் இருப்பு நேமமாயிருப்பதும், அது பூரணம் பெறுவதும் அல்லாஹ்வில் நின்றும், அல்லாஹ் அளவிலும், அல்லாஹ்வைக் கொண்டுமாயிருக்கும்.
இன்றேல் – சொன்னது போல் இல்லையெனில் அடியானின் “தாத்”தின் அடிப்படையில் அவனுக்கு உள்ளமையே கிடையாது. அடியான் சுத்தமாக, அறவே இல்லை.
(இஹ்யாஉ உலூமித்தீன், பாடம் – கிதாபுல் மஹப்பத்)
06. وَلَيْسَ فِي الْوُجُوْدِ إِلَّا ذَاتُهُ وَأَفْعَالُهُ
உண்மையில் அல்லாஹ்வின் “தாத்”தையும், அவனின் செயல்களையும் தவிர வேறு எதுவுமே கிடையாது.
(இஹ்யாஉ உலூமித்தீன், பாடம் – கிதாபுல் மஹப்பத்)
07. وَأَنَّ ذَلِكَ هُوَ اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، وَأَنَّ سَائِرَ الْأَنْوَارِمُسْتَعَارَةٌ، وَإِنَّمَا الْحَقِيْقِيُّ نُوْرُهُ فَقَطْ، وَأَنَّ الْكُلَّ نُوْرُهُ، بَلْ هُوَ الْكُلُّ، بَلْ لَا هُوِيَّةَ لِغَيْرِهِ إِلَّا بِالْمَجَازِ،
அல்லாஹ் ஒருவன், தனித்தவன், அவனுக்கு இணையில்லை. நிச்சயமாக ஏனைய ஒளிகள் யாவும் இரவலானவையாகும். எதார்த்தத்தில் அவனின் ஒளி மட்டுமே உள்ளது. அனைத்தும் அவனின் ஒளியே! இல்லை அனைத்தும் அவனே! அவன் அல்லாத எதற்கும் எதார்த்தத்தில் உள்ளமை இல்லை. ஆயினும் பெயரளவிலேயே உள்ளது.
(மிஷ்காதுல் அன்வார், பக்கம் – 280)
இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் இஹ்யாஉ உலூமித்தீன் எனும் நூலிலிருந்து ஆறு குறிப்புகளும், மேலும் அவர்களின் “மிஷ்காதுல் அன்வார்” எனும் நூலில் இருந்து ஒரு குறிப்பும் எழுதியுள்ளேன்.
இக்குறிப்புக்கள் தருகின்ற கருத்துக்களும், தத்துவங்களும், அகமியங்களும் மிகப் பெறுமதியானவை. பணம் செலவிட்டு இவற்றைப் பெறுவதாயினும் பல கோடி செலவிட வேண்டும். பல கஷ்டங்களையும், இன்னல்களையும் அனுபவிக்கவும் வேண்டும்.
இந்த அறிவை இந்த அளவு நான் பகிரங்கமாகவும், பஞ்சமில்லாமலும் பேசுவதற்கு காரண கர்த்தாக்கள் எனக்கு “பத்வா” வழங்கிய உலமாஉகளும் அவர்களின் பின்னணியாகவிருந்து அவர்களுக்கு தந்தனாபாடி அவர்களை முருங்கை மரத்திலேற்றி வைத்த காத்தான்குடி மூளை சாலிகளுமேயாவர். இவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
மெய்ப் பொருள் ஒன்றே அல்லது எல்லாம் அவனே என்ற தத்துவம் பேசிய ஸூபீ மகான்களும், இறைஞானிகளும் இத் தத்துவத்தின் கருவாகக் கொண்டது திருக்குர்ஆனையும், திரு நபீயின் நிறை மொழிகளையுமேயாகும். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து நான் எழுதும் குறிப்புக்கள், கருத்துக்களை தொடராக வாசிப்பவர்கள் பயன் பெறுவார்கள்.
அடுத்த தொடர் அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம் அவர்களின் தத்துவங்களாகும். உலமாஉகள் இமாம் ஙஸ்ஸாலீ அவர்களைச் சரி கண்டது போல் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ அவர்களையும் சரி கண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இமாம் ஙஸ்ஸாலீ அவர்களை சரியான இமாம் என்று ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கும் சேர்த்து றழியல்லாஹு அன்ஹும் என்று கூறி எழுத்து மூலம் “பத்வா”வில் அறிவித்துள்ள பத்வாவழங்கிய முல்லா மகான்கள் இப்போது என்ன சொல்வார்கள்? இமாம் ஙஸ்ஸாலீ என்ன சொல்கிறார்கள்? அல்லாஹ்வையும், அவனின் செயல்களையும் தவிர வேறொன்றுமே கிடையாதென்றும், “ஹுவல் குல்லு” எல்லாம் அவனே என்றுமல்லவா சொல்லியுள்ளார்கள். முல்லா மகான்கள் இவர்களுக்கு என்ன “பத்வா” கொடுப்பார்களோ?
எங்காவது ஓர் ஊரில் யாராவதொருவர் நான் கூறும் கருத்துக்களைக் கூறினால் போதும். இவன் றஊபுடைய ஆள் என்று அவனுக்கு “சீல்” குத்தி அவர் பள்ளிவாயல் கடமை செய்பவராக இருந்தால் அந்தக் கடமையிலிருந்து அவரை விலக்கி விடுகிறார்கள் முல்லா மகான்கள்! அவர் ஓர் அறபுக் கல்லூரியில் கடமை செய்து கொண்டிருந்தால் அவருக்கும் அதே “சீல்” ஐ குத்தி அவரையும் கடமையிலிருந்து விலக்கி விடுகிறார்கள் அந்த மகான்கள். றஊப் மௌலவீக்கு சுமார் 860 வருடங்களுக்கு முன் வாழ்ந்து மறைந்த இமாம் ஙஸ்ஸாலீ அவர்களையும் றஊபுடைய ஆள் என்று சொல்வார்களா? அவ்வாறு சொன்னால் அவர்கள் இருக்கவேண்டிய இடம் அங்கோடை மருத்துவமனையேயாகும். இந்நிலை உருவாகுமுன் மகான்கள் மனிதர்களாக மாறினால் தப்பிக் கொள்வார்கள். இன்றேல் அதே கதிதான்.