தொடர் – 16
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கு எதிராக வெளியிட்ட “பத்வா”வில் இமாம்களில் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும், அவர்களைச் சரிகண்டும், அவர்களுக்கு றழியல்லாஹு அன்ஹும் என்று “துஆ” செய்தும் எழுதியிருந்தார்கள்.
அவர்கள் சரிகண்டு எழுதியிருந்த 13 இமாம்களில் முஹ்யித்தீன் இப்னு அறபீ, அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ, இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் அடங்குவர்.
பொதுவாக 13 பேர்களும் நான் கூறிவருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற ஞானத்தைச் சரி கண்டவர்களாயினும் அவர்களில் நான் மேலே பெயர் குறித்த மூன்று இமாம்களும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவர்கள் மட்டுமன்றி அதைத் தெளிவாகவும், விரிவாகவும் பல நூல்களில் எழுதியவர்களுமாவார்கள்.
கடந்த தொடரில் இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக கூறியுள்ள கருத்துக்களைப் பதிவு செய்துள்ளேன், அவற்றை “பத்வா” வழங்கிய முல்லாக்கள் பார்த்திருந்தால் அந்த வசனங்கள் “பத்வா” வழங்கிய முல்லாக்களின் வயிற்றையும், மூளையையும் கலக்கியிருக்குமென்று நினைக்கிறேன். இமாம் ஙஸ்ஸாலீ அவர்களைச் சரி கண்டவர்கள் அவர்களின் கருத்துக்களையும் சரிகாண வேண்டும். என்னையும் சரி காணவேண்டும். இன்றேல் அவர்களுக்கும் “முர்தத்” பத்வா வழங்க வேண்டும். முல்லாக்கள் ஒவ்வொருவருக்கும் பத்வா வழங்கி வழங்கி இறுதியில் அவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்கள் தமக்குத் தாமே “பத்வா” கொடுக்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.
இன்றைய தொடரில் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” தத்துவங்களில் சிலதைக் கூறுகிறேன்.
இப்னு அறபீ நாயகம் எழுதிய ஒரு பாடல் பற்றி இங்கு எழுதுகிறேன். இந்தப் பாடலுக்கு நீண்ட வரலாறு உண்டு. அதை எழுதுவதாயின் அதை மட்டுமே எழுதலாம். பாடலுக்கு விளக்கம் எழுத வாய்ப்பில்லாது போய்விடும். எனினும் வரலாறையும் எழுதி பாடலுக்கு விளக்கமும் சொன்னால் சுவையாக இருக்குமாதலால் முதலில் வரலாறை எழுதுகிறேன். இடமிருந்தால் பாடலுக்கான விளக்கத்தையும் எழுதுவேன். இன்றேல் அடுத்த தொடரில் விளக்கம் வரும்.
நான் எழுதப் போகும் வரலாறு சுமார் 150 வருடங்களுக்கு முன்னுள்ள வரலாறாகும்.
வேலூர் “பாகியாதுஸ் ஸாலிஹாத்” அறபுக் கல்லூரியில் அக்காலத்திலிருந்த அப்துல் ஜப்பார் ஹஸ்றத் என்பவர் மிகச் சிறந்த அறிவாளியாகவும், ஆன்மீக வாதியாகவும் இருந்துள்ளார். இவரிடம் உலமாஉகளிற் சிலர் வந்து “ஹைதறாபாதில் ஒரு “குத்பு” இருப்பதாக மக்கள் பேசுகிறார்கள். நீங்களும் வாருங்கள். நாம் ஒரு குழு அங்கு சென்று அவரைச் சந்திப்போம். அல்லது நாம் அவர்களை முறைப்படி இங்கு அழைப்போம்” என்று கூறி ஹஸ்றத் அவர்களிடம் ஆலோசனை கேட்டார்கள்.
அப்து ஜப்பார் ஹஸ்றத் சம்மதம் தெரிவித்ததும் அவர்களைச் சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னையில் வசதியான மண்டபமொன்று ஒழுங்கு செய்யப்பட்டது.
அவர்கள் வந்ததும் அவர்களிடம் என்ன விடயம் சம்பந்தமாக பேசலாம் என்று அப்துல் ஜப்பார் ஹஸ்றத் அவர்களின் தலைமையில் ஆலோசிக்கப்பட்டு ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
அது என்னவெனில் ஷெய்குல் அக்பர் நாயகம் அவர்கள் தங்களின் அநேக நூல்களில் எழுதியுள்ள ஒரு பாடலுக்கு விளக்கம் கேட்பதென்ற முடிவாகும். அந்தப் பாடல் பின்வருமாறு.
إِنَّمَا الْكَوْنُ خَيَالٌ – وَهُوَ حَقٌّ فِى الْحَقِيْقَةِ
كُلُّ مَنْ يَعْرِفُ هَذَا – حَازَ أَسْرَارَ الطَّرِيْقَةِ
ஒரு நாள் ஹைதறாபாத் ஷெய்கு அவர்கள் சென்னை வந்தார்கள். தமிழ் நாட்டைச் சேர்ந்த அநேகமான உலமாஉகள் சென்னைக்கு வந்திருந்தார்கள். பிரமுகர்களில் ஒரு குழு ஷெய்கு அவர்களை அழைத்து வந்தார்கள்.
ஒரு நாளிரவு இஷாத் தொழுகையின் பின் ஷெய்கு அவர்களின் “பயான்” இருந்தது. பெருந்திரளான உலமாஉகள் அங்கு பிரசன்னமாகி இருந்தார்கள்.
ஷெய்கு அவர்கள் கதிரையில் இருந்தவாறே உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் தங்களின் உரையில், ஷெய்குல் அக்பர் நாயகம் அவர்களின் பாடல் ஒன்றுக்கு விளக்கம் சொல்லுமாறு உலமாஉகள் சார்பில் நான் கேட்கப்பட்டுள்ளேன். முடிந்தவரை பேசுகிறேன். எனது பேச்சின் சுருக்கத்தை ஒரு சிறிய நூலாகவும் நான் எழுதித் தருகிறேன் என்று கூறிவிட்டு பேசத் தெடங்கினார்கள். சுமார் மூன்று மணி நேரம் பேசினார்கள்.
உலமாஉகள் குழுவின் தலைவராயிருந்த அப்துல் ஜப்பார் ஹஸ்றத், ஷெய்கு அவர்களிடம் “முஆனகா – முஸாபஹா” செய்துவிட்டு தனக்கு “பைஅத்” தருமாறு கேட்டார்கள். ஷெய்கு அவர்களும் தருவதாகக் கூறினார்கள். அதைத் தொடர்ந்து உலமாஉகள் வரிசையாக வந்து ஸலாம் கூறி “முஸாபஹா” செய்து முடிந்த பின் கூட்டம் கலைந்தது. பொது மக்கள் ஸலாம் சொல்வதற்கு வேறொரு நாள் அறிவிக்கப்பட்டது.
கூட்ட முடிவின் போது ஸூபிஸக் கொள்கைக்கு எதிரானவர்களால் ஒரு சலசலப்பு ஏற்பட்ட போதிலும் அது செயலிழந்த செல்லாக் காசு போலாகிவிட்டது. ஷெய்தான் இல்லாத இடம் எங்கே இருக்கிறது? மனித உடலில் இரத்தம் ஓடுமிடமெல்லாம் அவன் ஓடுகிறான் என்ற நபீ மொழி பொய்யாகாது.
ஷெய்கு அவர்கள் சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து உலமாஉகளுக்கு வாக்களித்தபடி அறபியில் ஒரு நூல் எழுதிக் கொடுத்தார்கள். அதன் பெயர் “அல்ஹகீகா”, என்னிடமும் கெயெழுத்துப் பிரதி ஒன்று உள்ளது.
ஹைதறாபாத் ஷெய்கு அவர்கள் தங்கியிருந்த காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதையும் சுருக்கமாக எழுதுகிறேன்.
தமிழ் நாட்டில் புதக்குடி என்று ஓர் ஊர் உண்டு. அங்கு “அந்நூறுல் முஹம்மதிய்யு” என்று ஓர் அறபுக் கல்லூரி உண்டு. அங்கு பெரிய ஹஸ்றத் ஆக இருந்தவர்கள் ஒரு வலிய்யுல்லாஹ் ஆவார்கள். அவர்களின் பெயர் அப்துல் கரீம் ஹஸ்றத் ஆகும். எனது மதிப்பிற்குரிய அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்களும் அங்கு சில காலம் ஓதியிருக்கின்றார்கள். அது ஸூபிஸ ஞானத்துக்கு ஆதரவான அறபுக் கல்லூரி.
ஹைதறாபாத் ஸூபீ ஷெய்கு அவர்கள் சென்னையில் தங்கியிருந்து “அல்ஹகீகா” நூல் எழுதிக் கொண்டிருந்த நேரம் புதக்குடி அப்துல் கரீம் ஹஸ்றத் அவர்கள் இச் செய்தியறிந்து சென்னை சென்று அந்த மகானை சந்திக்க விரும்பி அதற்கான ஏற்பாடு செய்தார்கள். அவர்களின் கல்லூரி மாணவர்களை ஒன்று கூட்டி குத்புஸ்ஸமான் அவர்களைச் சந்திப்பதற்காக நான் சென்னை செல்கிறேன். அவர்களை நமது கல்லூரிக்கு அழைத்து வர விரும்புகிறேன். அவர்கள் உடன்பட்டால் அழைத்து வருவேன் என்று கூறிவிட்டு பயணித்தார்கள்.
சென்னையில் ஷெய்கு அவர்களைச் சந்தித்து உரையாடிய பின் தனது அறபுக் கல்லூரிக்கு வர வேண்டுமென்று கேட்டுக் கொள்ள, ஆம் வருகிறேன் என்று கூறினார்கள். அப்துல் கரீம் ஹஸ்றத் அவர்கள் மகிழ்ச்சி தாங்க முடியாமல் அழுதுவிட்டார்கள்.
இரண்டு நாட்களின் பின் இருவரும், இன்னும் சிலரும் புதக்குடி நோக்கிப் பயணித்தார்கள். புதக்குடியில் ஷெய்கு அவர்கள் வரவேற்கப்பட்டு ஒரு நாள் அங்கு இருந்தார்கள்.
மாணவர்களுக்கு ஐந்து நிமிடமாவது நல்லுரை வழங்க வேண்டுமென்று அப்துல் கரீம் ஹஸ்றத் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கி மாணவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
பின்னர் தங்களின் பெட்டியை திறந்து சென்னையில் உலமாஉகளுக்கென்று எழுதிய “அல்ஹகீகா” நூல் பிரதிகளை எடுத்து மாணவர்களை வரிசையாக அமர வைத்து ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு “கிதாப்” கொடுத்தார்கள். வரிசையில் அமர்ந்திருந்த மூன்று மாணவர்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை.
பின்னர் மூன்று மாணவர்களில் இருவரை மட்டும் அழைத்து, நீங்கள் இருவரும் இங்கு ஓதி முடித்த பின் உங்களின் நாட்டுக்குப் போகுமுன் ஹைதறாபாத் வந்து என்னைச் சந்திக்க வேண்டும் என்று கூறினார்கள். அவர்களில் ஒருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். மற்றவர் இலங்கையைச் சேர்நதவர். மூன்றாம் நபரை அழைக்கவுமில்லை. அவருக்கு ஒன்றும் சொல்லவுமில்லை.
அவர் தானாக எழுந்து ஷெய்கு அவர்களின் கால் பற்றி நாயகமே எனக்கு கிதாபு தரவுமில்லை, ஒன்றும் சொல்லவுமில்லையே என்று சலித்தவராக கூறி நின்றார். அவரை சற்று கோபமாக நோக்கிய ஷெய்கு அவர்கள் لَا نَصِيْبَ لَكَ مِنْ هَذَا الْعِلْمِ உமக்கு இந்த அறிவில் பாக்கியம் இல்லை என்று கூறினார்கள்.
முந்திய இருவரில் ஒருவர் எமது ஷெய்குனா சங்கைக்கும், மரியாதைக்குமுரிய அல்ஆலிமுல் பாழில், அஷ் ஷெய்குல் காமில், ஸாஹிபுல் கறாமாத் அஷ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ, ஸித்தீகீ, காஹிரீ, காதிரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள். மற்றவர் சங்கைக்குரிய அல்ஆலிமுல் பாழில் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள்.
ஸூபீ ஹஸ்றத் நாயகம் அவர்கள் காயல்பதியைச் சேர்ந்தவர்கள். கொழும்பு குப்பிகாவத்தையில் சமாதி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு அழகிய “தர்ஹா” இருக்கிறது. முரீதீன்கள், முஹிப்பீன்கள் அனைவரும் தினமும் “ஸியாறத்” செய்து வருகிறார்கள். இடையிடையே விஷேட நிகழ்வுகளும், வருடத்தில் ஒரு தரம் அவர்கள் பெயரிலான கந்தூரியும் சிறப்பாக நடைபெறும்.
அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் அவர்கள் இலங்கை, கிழக்கு மாகாணத்தில் அட்டாளைச்சேனை என்ற அவர்களின் ஊரிலேயே அடக்கம் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு ஒரு ஸியாறம் உண்டு. முரீதுகள், முஹிப்புகள் சியாறத்திற்குச் சென்று அருள் பெற்று வருகிறார்கள்.
இவ்விருவரும் புதக்குடியில் ஓதி முடித்துவிட்டு ஷெய்கு நாயகம் சொன்னது போல் ஹைதறாபாத் சென்றார்கள்.
இந்த வரலாறு இன்னும் சில வரிகளில் அடுத்த தொடராக நிறைவு பெறும். அதன் பின் இப்னு அறபீ நாயகம் அவர்களின் தத்துவங்கள் தொடரும்.