Monday, October 14, 2024
Homeஎழுத்தாக்கங்கள்திரை நீக்கம்

திரை நீக்கம்

தொடர் – 19

அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் إنما الكون خيال என்ற தத்துவத்திற்கு விளக்கம் எழுதிய நான் அதோடு தொடர்புடைய வேறு விடயங்களையும் எழுதினேன். நான் எழுதிய விடயங்கள், கருத்துக்கள் யாவும் இக்கால கட்டத்தில் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும், குறிப்பாக முல்லாக்கள் வழங்கிய பொய்யான “பத்வா”வினால் மருட்சியைடந்து அதைச் சரி கண்டு என்னையும், நான் கூறிய கருத்தையும் சரி கண்டு கொள்கையில் என்னோடிருக்கும் மக்களையும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று நம்பிச் செயல்படுகின்ற மக்களும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய கருத்துக்களேயாகும்.

நான் தொடர்ந்து இப்னு அறபீ நாயகம் அவர்கள் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” கருத்துகளுக்கு விளக்கம் கூறுவேன். கூறிக் கொண்டுமே இருப்பேன்.

இவ்விடயத்தில் நான் கடும் காரமாக இருப்பதற்கான காரணம் எனது மௌனம் முல்லாக்களுக்கு சாதகமாக அமைந்தால் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பிழையானதென்றும், நானும், என்னைச் சார்ந்தவர்களும் “முர்தத்” தான் என்றும் தவறான நம்பிக்கை மக்களிடம் வளர்ந்து வலுப் பெற்றுவிடும். எனவே, எனது மௌனத்தால் மக்கள் ஒரு சத்தியக் கொள்கையை அசத்தியக் கொள்கை என்று நம்பிவிடுவார்களாதலால் அதற்கு நான் பொறுப்பாளியாக வேண்டி வரும் என்பதற்காகவே இவ்வியடத்தில் சத்தியத்தை நிலை பெறச் செய்வதற்கு கடும் பாடு படுகிறேன்.

சத்தியத்தை நிலை நாட்டுவதாயின் சத்தியத்தை எதிர்த்தவர்களைச் சாடியே எழுத வேண்டும். தஜ்ஜால் நாயகம் றஹிமஹுல்லாஹ் என்றும், பிர்அவ்ன் பாதுஷா நாயகம் என்றும் சொல்ல முடியாதல்லவா?

அல்லாஹ்வும் சத்தியத்தை எதிர்த்தவர்களை திருக்குர்ஆனில் சாடியே பேசியுள்ளான். அதேபோல் “றஹ்மதுன் லில் ஆலமீன்” உலக மக்கள் அனைவருக்கும் அருட்கொடையான அண்ணல் நபீ அவர்களும் சாடித்தான் பேசியுமுள்ளார்கள். அது மட்டுமல்ல அவர்களைச் சாபமிட்டும் பேசித்தான் இருக்கிறார்கள். றஸூலின் வழியைப் பின்பற்றுவது எப்படித் தவறாகும்?

முல்லாக்கள் வழங்கிய “பத்வா” வை வாபஸ் பெற வேண்டும் என்பதற்கு நியாயமான மூன்று காரணங்களை பொது மக்களுக்கும், முல்லாக்களுக்கும் கூறி வைக்க விரும்புகிறேன்.

ஒன்று – குற்றவாளி விசாரிக்கப்படாமல் தீர்ப்பு வழங்கியது. “ஷரீஆ”வின் சட்டப்படி குற்றவாளி விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளியின் கருத்து “குப்ர்” என்ற இறை நிராகரிப்புக்கும், அது அல்லாத வேறு கருத்துக்கும் சாத்தியாமானதாயின் எழுபது வலிந்துரைகள் கொண்டேனும் அவனின் பேச்சுக்கு வலிந்துரை கொடுத்து அவனைக் காப்பாற்ற வேண்டும். குற்றவாளியின் பேச்சு எந்தக் கலையோடு தொடர்புள்ளதோ அக்கலையில் பாண்டித்தியம் பெற்றவர்களும் தீர்ப்பு வழங்கும் குழுவில் இருக்க வேண்டும். மொழியிலக்கணத்தோடு தொடர்புள்ள ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண அக்கலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தீர்வுக்குழுவில் இருக்க வேண்டும். வானவியலோடு சம்பந்தப்பட்டவர்களல்ல.

இரண்டு – நான் பேசிய தலைப்பு “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையோடு சம்பந்தப்பட்டதாக இருக்கும் நிலையில் தலைப்பு எதுவென்று விளங்காமல் “ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து தீர்ப்பு வழங்கிவிட்டு எனது பெயரைக் குறிப்பிட்டது.

இவர்கள் வழங்கிய தீர்ப்பில் “ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்பதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. ஆயினும் “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்பதற்கான ஓர் ஆதாரமும் இல்லை. இவர்கள் “ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்பதற்கு “பத்வா” கொடுத்துள்ளார்களேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்பதற்கு ஓர் ஆதாரம் கூடக் கூறவுமில்லை. அந்தச் சொல்லைக் கூட ஓர் இடத்திலாவது குறிப்பிடவுமில்லை. இதன் மூலம் இவர்கள் “ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்றுதான் “பத்வா” கொடுத்துள்ளார்களேயன்றி நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்று “பத்வா” கொடுக்கவில்லை. இதனால் இவர்களின் “பத்வா”வை என்னாலோ, “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையுடைய எவராலுமோ ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, முல்லாக்களின் இப்போதுள்ள கடமை என்னவெனில் இவர்கள் வழங்கிய “பத்வா”வை வாபஸ் பெற்றுவிட்டு “வஹ்ததுல் வுஜூத்” சரியென்று ஆதாரங்களுடன் ஒரு “பத்வா” வழங்க வேண்டும்.

இவர்களின் “பத்வா” “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைக்கு எதிரானதேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கு எதிரானதல்ல என்பதற்கு இவர்களின் “பத்வா” அறபுப் பகுதி 29ம் பக்கத்தின் இறுதியிலிருந்து 31ம் பக்கம் வரை – சுமார் இரண்டு பக்கங்கள் வளவளவென்று “ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்பதற்கே ஆதாரம் எழுதியுள்ளார்கள்.

நான் “ஹுலூல் – இத்திஹாத்” பேசியிருந்தால்தானே அதற்கு மறுப்பான ஆதாரங்கள் எழுதவும் வேண்டும், அதில் எனது பெயரைக் குறிப்பிடவும் வேண்டும். முல்லாக்களின் தில்லு முல்லு விளையாட்டு ரொம்ப பிரமாதம். எனது பதிவுகளில் பல இடங்களில் “ஹுலூல் – இத்திஹாத்” என்று குறிப்பிட்டுள்ளேனேயன்றி அது என்ன? எப்படி? என்று விளக்கம் சொல்லாமலிருப்பது வாசகர்களுக்கு பெரும் குறையாக இருக்குமென்று கருதுகிறேன்.

இதோ அதற்கான விளக்கம்:

“ஹுலூல்” என்ற சொல் حَلَّ يَحُلُّ حُلُوْلًا என்ற சொல்லடியிலும், “இத்திஹாத்” என்ற சொல் اِتَّحَدَ يَتَّحِدُ اِتِّحَادًا என்ற சொல்லடியிலும் வந்த சொற்களாகும்.

“ஹுலூல்” என்றால் இறங்குதல் என்றும், “இத்திஹாத்” என்றால் இரண்டு பொருள் ஒன்றாதல் என்றும் பொருள் வரும். “ஹுலூல்” என்பதற்கு உதாரணம் حَلَّ الْمَاءُ فِى الْإِنَاءِ – நீர் பாத்திரத்தில் இறங்கியது என்பது போன்றும், “இத்திஹாத்” என்பதற்கு உதாரணம் اِتَّحَدَ الْمَاءُ بِالسُّكَّرِ நீர் சீனியுடன் கலந்தது என்பது போன்றுமாகும். இவ்விரண்டிற்கும் கூறப்பட்ட உதாரணங்கள் இவ்விரண்டும் மட்டுமே என்பது கருத்தல்ல. ஒன்று இன்னொன்றில் இறங்குதல், இன்னொன்றுடன் சேர்ந்து கரைந்து ஒன்றாதல் என்ற கருத்து வரக் கூடிய எந்தவொரு உதாரணமும் பொருத்தமாகும். “ஹுலூல் – இத்திஹாத்” பேசுவோர் பல்வேறு உதாரணங்கள் கூறுவர்.

ஓர் பாத்திரத்தில் நீரை ஊற்றும் போது நீர் பாத்திரத்தில் இறங்குகிறது. நீருடன் சீனியைக் கலந்தால் சீனி நீரில் கரைந்து இரண்டும் ஒன்றாகின்றன. பறந்து வருகின்ற ஒரு வண்டு ஒரு மலரில் அமர்ந்தால் வண்டு மலரில் இறங்கியது என்றும். உப்பு நீருடன் கலந்து அது கரைந்து இரண்டும் ஒன்றானது என்றும் சொல்வது போன்று.

நீர் பாத்திரத்தில் இறங்குவது போன்று அல்லாஹ் படைப்பில் இறங்குகின்றான், அல்லது வண்டு மலரில் இறங்குவது போன்றும் படைப்பில் அல்லாஹ் இறங்குகிறான் என்று நம்புதல் “ஹுலூல்” எனப்படும்.

சீனி நீருடன் கலந்து அது கரைந்து இரண்டும் ஒன்றாதல் போன்றும், உப்பு நீருடன் கலந்து அது கரைந்து இரண்டும் ஒன்றாதல் போன்றும் அல்லாஹ் படைப்புடன் சேர்ந்து அவன் அதோடு கலந்து இரண்டும் ஒன்றாதல் என்று நம்புதல் “இத்திஹாத்” என்றும் சொல்லப்படும்.

இவ்விரண்டுமே பிழையாகும். இவ்விரு வகையில் எந்த வகையிலேனும் அல்லாஹ் படைப்போடு உள்ளான் என்று நம்புதல் பிழையாகும். பிழை என்றால் “ஷிர்க்” இணை வைத்தலாகும். இவ்வாறு நம்புதல் பிழை என்று மட்டும் சொல்ல முடியாது. இது “ஷிர்க்” இணை வைத்தலையே சேரும்.

முஸ்லிம்கள் அல்லாஹ் பற்றி மேற்கண்ட இரு வகையில் எந்த வகையில் நம்பியுள்ளார்கள் என்றும், முஸ்லிம்கள் அல்லாதவர்கள் எந்த வகையில் நம்பியுள்ளார்கள் என்றும் ஆய்வு செய்து பார்ப்போம்.

பொதுவாக முஸ்லிம்களாயினும், முஸ்லிம் அல்லாதவர்களாயினும் அவர்களில் படித்தவர்களும், சிந்தனையாளர்களும், பக்தியுள்ளவர்களும் மட்டுமே அல்லாஹ்வைப்பற்றியோ, மார்க்கத்தைப் பற்றியோ சிந்திப்பவர்களாக உள்ளனர். முஸ்லிம்களும், மற்றவர்களும் இவ்வாறுதான் உள்ளனர்.

முஸ்லிம்களிலும், முஸ்லிமல்லாதவர்களிலும் படித்தவர்கள் எல்லோருமே கடவுளைப் பற்றி சிந்திப்பவர்களல்லர். அவர்களும் அவர்களின் தொழில்களும் என்று வாழ்ந்து வருகின்றார்கள்.

முஸ்லிம்களிலும், மற்றவர்களிலும் இறை பக்தி உள்ளவர்களும், இறை ஞானத் தாகமுள்ளவர்களுமே இறைவனைப் பற்றி சிந்திப்பவர்களாக உள்ளனர். இறைவனுக்கு இரண்டாம் இடமும், அவர்களின் இவ்வுலக வாழ்வுக்கு முதலாம் இடமும் கொடுப்பவர்களே அதிகமாக உள்ளனர். ஆயினும் முஸ்லிம்களிலும், மற்றவர்களிலும் ஆத்திகர்களே அதிகமாக உள்ளனர். நற் பாக்கியமற்ற நாத்திகர்கள் மிகவும் குறைந்தவர்களேயாவர்.

முஸ்லிம்களில் இறைஞான அறிவில்லாத சாதாரண மக்கள் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று மட்டுமே நம்பியுள்ளார்கள். அவன் பற்றிய வேறெந்தவொரு விபரமும், விளக்கமும் தெரியாது. அதே நேரம் அவன் வேறு, படைப்பு வேறு என்றே நம்பியுள்ளார்கள்.

ஆயினும் முஸ்லிம்களில் ஸூபிஸ வழி செல்வோர் மட்டுமே இறைவன் வேறு, படைப்பு வேறு இல்லை என்றும், அவனே படைப்பாக தோற்றமளிக்கின்றான் என்றும் நம்புகின்றார்கள். நானும், எனது ஆதரவாளர்களான ஸூபிஸ வழி நடப்பவர்களும் இவ்வாறுதான் நம்புகிறோம். நாங்கள் இவ்வாறு நம்புவது பிழை என்றும், இவ்வாறு நம்புவோர் முஸ்லிம்கள் அல்லர் என்றும் இஸ்லாம் சமய அறிஞர்களிற் பலரும் கூறுகின்றனர். இதனால் முஸ்லிம் சமுக ரீதியான சில சிக்கல்களும் எங்களுக்கு இல்லாமலில்லை. எல்லாம் இறைவன் செயல். வேறெவருக்கும் எதையும் செய்ய முடியாது.

முஸ்லிம்கள் தவிர ஏனையோர் இறைவன் தொடர்பாக எவ்வாறு நம்பியுள்ளார்கள் என்ற விபரம் அடுத்த தொடரில் வரும்.

தொடரும்….

அன்பான வேண்டுகோள்! நான் ஆரோக்கியமாக இருந்து மார்க்கப்பணி செய்ய என்க்காக ஒரு நிமிடம் இறைவனிடம் கையேந்துமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments