Monday, October 14, 2024
Homeஎழுத்தாக்கங்கள்திரை நீக்கம்

திரை நீக்கம்

தொடர் – 2

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை எனக்கும், நான் பேசிய ஸூபிஸ ஞானக்கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று வழங்கிய தீர்ப்பு முற்றிலும் பிழையானதும், மனச் சாட்சிக்கு முரணானதும், திட்டமிடப்பட்ட சதியுமேயாகும்.
 
இது தொடர்பாக நான் மரணிப்பதற்கு முன் சில தகவல்களை பொது மக்களுக்கு எத்தி வைப்பது எனது கடமை என்று உணர்ந்து இக்கட்டுரையை எழுதுகிறேன். அல்லாஹ்வும், றஸூலும் சாட்சியாக இக்கட்டுரையில் உண்மைக்கு மாறான, அல்லது கூட்டிக் குறைத்து எந்த ஒரு எழுத்தையும் நான் எழுதவில்லை.
 
எனவே இக்கட்டுரையை வாசிக்க விரும்பும் சகோதர, சகோதரிகள் பக்க சார்பற்ற, பரிசுத்த மனதோடு வாசித்தால் உண்மை எதுவென்பதையும், நியாயம் எதுவென்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். அவர்கள் உண்மையைப் புரிந்து கொள்ள வெண்டுமென்பதற்காகவே இத்தலைப்பில் எழுதுகிறேன்.
 
எனக்கும், நான் கூறிய கருத்தைச் சரிகண்டு என்னுடனிருக்கும் ஆதரவாளர்களுக்கும் உலமா சபை “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கியது 1979ம் ஆண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
1979ம் ஆண்டு நடந்த இந் நிகழ்வை அந்நேரம் சுமார் 15 வயதுக்கு மேற்பட்டவராயிருந்த ஒருவரால்தான் என்ன நடந்தது? எது சரி? எது பிழை? என்பதை அறிந்திருக்க முடியும். அந் நேரம் – 1979ம் ஆண்டு – 15 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தவர்களால் சரியான விபரங்களைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 
நாம் இவ்வாறு வைத்துக் கொண்டாலும் கூட – அதாவது அந் நேரம் – 1979ம் ஆண்டு 15 வயதுள்ளவராக இருந்த ஒருவர் இப்போது – 2021 – 57 வயதுக்கு மேற்பட்டவராகவே இருப்பார்.
 
இதன் மூலம் இன்று 2021 – 57 வயதுக்கு மேற்பட்டவராயிருப்பவருக்கு மட்டுமே 1979ம் ஆண்டு நடந்த நிகழ்வுகளின் முழு விபரமும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
 
57 வயதுக்கு மேற்பட்டவர்களிற் பலர் மரணித்திருப்பார்கள். சிலர் மட்டுமே உயிரோடு இருப்பார்கள். அவர்கள் உயிரோடு இருந்தாலும் கூட அவர்களிற் பலர் 1979ம் ஆண்டு நடந்த நிகழ்வுகளை மறந்திருப்பதற்கும் சாத்தியம் உண்டு. மறக்காதவர்கள் ஒரு சிலர் இருந்தாலும் கூட அவர்கள் மூலம் அக்கால நிகழ்வுகளை அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமலும் இருக்க சாத்தியமுண்டு. ஏனெனில் வயது முதிர்ந்தவர்களிடம் பயம் இயற்கையாகவே இருக்கும். ஆகையால் அவர்கள் சொல்ல மறுத்தும் விடுவார்கள்.
 
எனவே, 1979ம் ஆண்டு நடந்த “பத்வா” தொடர்பான முழு விபரங்களையும் இப்போதுள்ள ஓர் இளைஞனால் தெரிந்த கொள்ள வாய்ப்பில்லை என்பதைக் கருத்திற் கொண்ட நான் இன்று என்னையும், நான் பேசி வருகின்ற இறையியல் தத்துவத்தையும் மறுத்துக் கொண்டும், எதிர் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டுமிருக்கின்ற இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி இக்கட்டுரை மூலம் நடந்தவற்றை எந்தவொரு மாற்றமுமின்றி எழுதுகிறேன்.
 
அத்திவாரம்:
 
1979ம் ஆண்டு கெக்கிராவ பிரதேசத்தில் நடைபெற்ற மீலாத் விழாவொன்றிற்கு நான் அழைக்கப்பட்டு என்னை அழைத்த நண்பர் கௌரவ கவிஞர் மருதமைந்தர் ஹமீத் அவர்களிடம் வருவதாக வாக்களித்திருந்தேன்.
 
இதனிடையில் காத்தான்குடி நவ இலக்கிய மன்ற உறுப்பினர்களான கௌரவ அல்ஹாஜ் கவிஞர் சாந்தி முஹ்யித்தீன் அவர்களும், அவரின் நண்பர்கள் சிலரும் எனது வீட்டில் என்னைச் சந்தித்து நவ இலக்கிய மன்றத்தால் மீலாத் விழாவொன்று ஏற்பாடு செய்கிறோம். உங்களை பிரதம பேச்சாளராக அழைக்க உள்ளோம் என்றார்கள். கெக்கிராவ மீலாத் விழாவுக்கு முடிவு சொல்லிவிட்டேன். மன்னிக்கவும் என்றேன்.
 
அவர்கள் என்னை விடவில்லை. பல நியாயங்கள் கூறி முயற்சித்தார்கள். அவர்கள் எனது ஊரவர்களாகவும், என்னுடன் அன்பாகவும், கண்ணியமாகவும் பழகி வருபவர்களாகவும் இருந்ததால் மறுக்க முடியாத ஒரு சூழலில் சம்மதித்தேன். கெக்கிராவ மீலாத் விழாவும் ஏற்பாடாகியிருந்ததால் அங்கு செல்லாமல் ஊர் மீலாத் விழாவில் கலந்து கொண்டேன். மேடை காத்தான்குடி ஜாமிஉள்ளாபிரீன் மீரா பள்ளிவாயல் மார்க்கட் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் ஏறிய போது டொக்டர் பரீத் மீராலெப்பை அவர்கள் இருந்ததைக் கண்டதுமே இன்று ஏதோ சலசலப்பு ஏற்படலாம் என்று நான் நினைத்துக் கொண்டேன். இதற்கான காரணத்தை இங்கு குறிப்பிட நான் விரும்பவில்லை. தெளிவு தேவையானோர் என்னை நேரில் சந்தித்து அறிந்து கொள்ளலாம்.
 
மேடையில் பேச்சாளர்களிற் பலர் இருந்தார்கள். அவர்களில் மர்ஹூம் அஷ்ஷஹீத் மௌலவீ பாறூக் காதிரீ அவர்களும் ஒருவர். றஹிமஹுல்லாஹ்!
 
அவ்விழாவில் நவ இலக்கிய மன்ற உறுப்பினர்களில் சிலர் பேசிய பின் மௌலவீ MSM பாறூக் காதிரீ அவர்கள் பேசினார்கள்.
 
இவர் திறமையுள்ள ஒரு பேச்சாளர். அதுமட்டுமல்ல தரமான சரக்குள்ள கப்பலாகவும் இருந்தார். இலங்கையில் எப்பகுதிகளுக்கும் பேசுவதற்குச் செல்வார். கவர்ச்சியாகவும், ஆழமான கருத்தோடும் பேசுவார். வஹ்ஹாபிஸம், தப்லீக் ஜமாஅத் போன்ற ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமானோரை சாடிப் பேசும் வழக்கமுள்ளவர்.
 
இவர் தனதுரையில் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சிறப்பியல்புகள் பற்றி அழகாகப் பேசினார். அவர் தனது பேச்சில் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்லாம் அவர்கள் நம் போன்ற சாதாரண மனிதரல்ல என்ற அடிப்படையில் அவர்கள் தனது 63 வருட கால வாழ்க்கையில் ஒரு தரமேனும் ஷெய்தானின் சேட்டையால் ஸ்கலிதமானதுமில்லை, ஏனைய குழந்தைகள் பிறப்பது போல் தாயார் ஆமினா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் பெண் குறியால் பிறக்கவுமில்லை. அல்லாஹ் ஆமினா நாயகி அவர்களின் தொப்புளுக்கும், பெண்குறிக்குமிடையில் விஷேட துவாரமொன்றை தற்காலிகமாக ஏற்படுத்தி அதன் வழியாகவே பெருமானாரை வெளிப்படுத்தினான் என்று கூறினார்.
 
அவரின் பேச்சையடுத்து மர்ஹூம் பரீத் மீராலெப்பை MP அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் மௌலவீ பாறூக் காதிரீ அவர்களின் கருத்துக்களில் நான் மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் தொடர்பாக பேசிய பரீத் மீராலெப்பை அவர்கள் பாறூக் மௌலவீ கூறிய கருத்துக்கள் பிழையானதென்று மௌலவீயை சாடிப் பேசினார்.
 
இறுதியாக நான் பேசினேன். நான் பேச நினைத்துச் சென்ற விடயத்தை பேசுவதை விட மௌலவீ ஆதாரத்தோடு பேசிய கருத்தை மௌலவீயல்லாத ஒருவர் மறுத்துப் பேசியது பிழையென்று பேசினேன்.
 
தொடர்ந்து பேசிய நான் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தோடு நபீ பெருமானின் விஷேட அம்சங்களை தொடர்பு படுத்திப் பேசுகையில் பின்வரும் கருத்துக்களைக் கூறினேன்.
 
கருத்துக்கள்:
 
நான் அந்த மேடையில் கூறிய கருத்துக்கள் யாவும் ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டன. அந்த நாடாக்கள் இப்போதும் எம்மிடமுள்ளன. தேவையானோர் நேரில் வந்து எமது அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அன்பளிப்பாக வழங்கப்படும். அல்லது யூடியூபில் “ஷம்ஸ் மீடியா யுனிட்” என்று டைப் செய்து “ஆரம்ப அமுது” என்று தேடினால் கிடைக்கும்.
 
நான் பேசிய கருத்துக்கள் தொடர்பாக உலமா சபை வெளியிட்ட “பத்வா” நூல் அறபு பகுதியில் ஒரு விதமாகவும், தமிழ் பகுதியில் இன்னொரு விதமாகவும் கூறப்பட்டுள்ளது. இது கூட “தக்வா” நிறைந்த தங்க உலமாஉகள் செய்த சதியோயாகும்.
 
பொது மக்களும், படித்தவர்களும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேணடுமென்பதற்காக எந்தவொரு கூட்டல், குறைத்தலுமின்றி அவர்களின் “பத்வா” நூலில் உள்ளவாறே இங்கு எழுதுகிறேன். தெளிவை விரும்புவோர் நான் எழுதியுள்ளதையும், அவர்களின் நூலில் உள்ளதையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளட்டும். முதலில் அறபு மொழியிலுள்ளதை எழுதுகிறேன்.
 
فيا أيّها العلماء أهل السنّة والجماعة! ما تقولون فى رجلٍ قد صرّح فى محافل النّاس بأنّ لله صورةً وشكلا وجسما، وأنّ كلّ مخلوقٍ هو اللهُ، وأنّ كلَّ مرئيٍّ برؤية العين هو اللهُ، وإن رُؤي فى صورة مختلفةٍ كالخُيوط المفْتُولةِ من القُطن، فإنّ القطنَ والخيطَ واحد، وصرّح بأنّ الله تعالى تصوَّرَ وتشكَّلَ بصورة محمد صلّى الله عليه وسلّم، (فَعَلَى هذا كلِّه يكون الحجر والصنم والوَثَنُ والشمس هو الله) وصرّح أيضا بأنّ جبريل عليه السّلام رأى وأبصرَ فى غار حراء أنّ الله قد رَقَدَ فيه واضعا يدَه فى جبينه، وكان ذلك الرجل يقول إنّ عندي أدلَّةً على ذلك وأنّ لي علم الحقيقة والمعرفة، وليس لغَيري ممّن يَرُدُّ أقوالي هذه علم معرفة ولا حقيقة، وهم الجهلاء بمعرفة الله وإن كانوا فقهاء، وتكرر فى مجامع عوام النّاس كلامه بما ذُكر وغيره ممّا يتعلّق بهذه المسئلة، ومع ذلك أمرهم بتَسجيل أقواله هذا بآلةِ تسجيل الكلام، فسجَّلُوها، فهل هذه الأقوال مقبولة فى عقائد الإسلام أم مردودة، فإن قلتم إنّها مردودة فهل تُورث هذه الأقوال الكفر أم لا؟ أجيبوا تؤجروا، رحمكم الله السّائلون – العلماء وعوامّ الناس الّذين تحيّروا،
இதுவே அறபு மொழியில் அவர்கள் கேட்ட கேள்வியாகும்.
 
கேள்வி தமிழில்:
 
அதே கேள்வி அவர்களின் “பத்வா” நூலில் உள்ளவாறு. இரு மொழிகளில் கேட்ட கேள்விகளில் தமிழில் உள்ள கேள்வி அவர்களின் கையாலும், பொக்கட்டாலும் போட்டுக் கேட்கப்பட்ட கேள்வி என்பது அறபு மொழியையும், தமிழ் மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அறிஞர்களுக்குப் புரியும். கேள்வியிலும் அவர்களின் சதி ஒழித்துக் கொண்டிருப்பது புத்தியுள்ளவர்களுக்குப் புரியும்.
 
றஊப் மௌலவீ என்பவரின் மார்க்க விரோதக் கருத்துக்களில் சில.
 
1. குர்ஆனுடைய ஆதாரங்களிலிருந்தும், திரு நபீ அவர்களின் பொன் மொழியின் தத்துவங்களிலிருந்தும் சொல்கிறேன். பெருமானார் (ஸல்) மானிட உருவத்தில் தோன்றிய ஒரு சக்தி. முஹம்மதை இறைவன் என்று சொன்னால் புகஹாக்கள் – மார்க்கச் சட்ட லோயர்கள் கழுத்தைக் கொய்துவிடுவார்கள். அவர்கள் கழுத்தைக் கொய்தால் கொய்யட்டும் என்ற உணர்வோடு நமக்கு முந்தியவர்கள் – பெருந்தகைகள் – அவ்லியாக்கள் எத்தனை பேர் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைவன் என்று பயமில்லாமலே கூறியிருக்கின்றார்கள். நாம் சொன்னால் கழுத்துப் போய் விடும் என்பதற்காக எத்தனையோ மக்கள் பயந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ மக்களுக்கு இதன் உண்மையான தத்துவம் புரியாமலிருக்கிறது. நான் சொல்கிறேன். இறைவன்தான் முஹம்மதுடைய தோற்றத்திலே உலகத்தில் தோன்றியிருக்கிறான். இதனை நான் திட்டவட்டமாகச் சொல்ல முடியும்.
 
2. ஹிறாக் குகையினுள்ளே ஒருவர் கையை நெற்றியிலே ஊன்றிய வண்ணம் படுத்துக் கொண்டிருக்கிறார். யாரது என்று ஜிப்ரீல் பார்க்கிறார். ஜிப்ரீலிடம் செய்தியை சொல்லி அனுப்பிய இறைவன்தான் அங்கு படுத்துக் கொண்டிருக்கிறான். ஆச்சரியம் ஏற்பட்டது ஜிப்ரீலுக்கு, இறைவனைத்தானே இங்கு காண்கிறேன், முஹம்மதைக் காணவில்லையே என்று ஆச்சரியமடைந்தார் ஜிப்ரீல்.
 
3. முஹம்மத் மனித உருவத்தில் தோன்றிய இறைவன் என்று நாம் சொல்கிறோம். இது ஷரீஅத்திற்கு விரோதமான கருத்து என்று நாம் சொல்ல முடியாது. நீங்கள் இறைவனுக்கு உருவம் இல்லையென்று நினைத்து விடாதீர்கள். இறைவனுக்கு உருவம் உண்டு.
 
4. மக்களை நல்வழிப்படுத்துவதற்காக பெருமானார் (ஸல்) அவர்களின் உருவத்திலே இறைவன் தோன்றினான். இறைவன் உலகத்திலே வருவதாயிருந்தால் எப்படி வர முடியும்? ஏதாவதோர் உருவத்திலேதான் வர முடியும். எனவே இறைவனுக்கு உருவம் இருக்கின்றதென்ற கொள்கையும் எங்களிடத்தில் இருக்க வேண்டும். அவனுக்கு உருவமில்லை என்ற கொள்கையும் இருக்க வேண்டும். இரண்டும் ஒன்று சேர்ந்தால்தான் உண்மையான விசுவாசியாக நாம் வாழ முடியும். இதிலிருந்து நீங்கள் விளங்க வேண்டிய கருத்தென்னவெனில் இறைவனுக்கு ஆதியில் உருவமில்லை. முதலில் படைத்தான் பெருமானார் (ஸல்) அவர்களின் ஒளியை. அது முதல் அவனுக்கு உருவம் வந்துவிட்டது.
 
5. இறைவன் ஒவ்வொரு பொருளையும் சிருட்டித்தான் என்றால் ஒவ்வொரு பொருளுடைய தோற்றத்திலும் அவன்தான் தோன்றியவனாக இருக்கிறான்.
 
6. இறைவன் மக்களைப் பிடித்து அவன் பக்கம் திருப்புவதற்காக ஒரு வேஷம் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு உருவத்திலே தோன்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே அவன் முஹம்மதுடைய உருவத்தில் தோன்றினான்.
 
7. எங்கே இருக்கின்றான் இறைவன்? மதறாஸிலா இருக்கின்றான்? எமன் தேசத்திலா இருக்கின்றான்? மக்காவிலா இருக்கின்றான்? குறிப்பிட்ட எந்த இடமும் இறைவனுக்கு கிடையாது. எங்கும் இருக்கின்றான், எங்கும் இருக்கின்றான் என்றால் சிலர் நினைக்கலாம் மலத்திலும் இருக்கின்றானா? சலத்திலும் இருக்கின்றானா? என்று. பூனொச்சிமுனையிலே மீலாத் விழாவிலே பேசிக் கொண்டிருந்த போது இப்படியொரு கேள்வியை கேட்டார் ஒரு நண்பர். நான் பதில் சொன்னேன். மலத்திலென்ன? சலத்திலென்ன? பீர் முஹம்மத் வலிய்யுல்லாஹ் சொல்கிறார்கள் பன்றியின் பாலிலும் இறைவன் இருக்கின்றான். நாயின் பாலிலும் இறைவன் இருக்கின்றான் என்று.
 
றஊப் மௌலவீ எனப்படுபவரின் மார்க்க விரோதக் கருத்துக்களிற் சில என்ற தலைப்பில் நான் பேசிய கருத்துக்களிற் சிலதை உலமா சபை குறிப்பிட்டிருந்தார்கள். ஏழு தலைப்புகளில் குறிப்பிட்டிருந்தார்கள்.
 
மேற்கண்ட ஏழு தலைப்புக்களில் கூறப்பட்ட விடயங்கள் அறபு கேள்விப் பகுதியில் கூறப்படவில்லை.
 
அறபு மொழிக் கேள்வி விபரம் குறைந்ததாயும், தமிழ் மொழிக் கேள்வி விபரம் கூடியதாயும் உள்ளது. இது கூட சதியின் ஓர் அங்கமாக இருக்கும் என்பதை புத்தஜீவிகள் புரிந்து கொள்வார்கள்.
 
1979ம் ஆண்டு மீலாத் விழாவில் நான் கூறிய கருத்துக்களில் சிலதை – அதாவது எவர் அறிந்தாலும் அவர் ஆத்திரமடைவதற்குப் பொருத்தமான அம்சங்களை மட்டும் பொறுக்கியெடுத்து கேள்வியில் சேர்த்திருப்பது “பத்வா” வழங்கியோரின் எரிச்சலையும், பொறாமையையும் படம் பிடித்துக் காட்டுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
واللهُ خير الماكرين
RELATED ARTICLES

Most Popular

Recent Comments