தொடர் 22
பிறக்கும் போதே முடம். பேய்க்கு பார்த்தால் தீருமா? என்று முன்னோர்கள் சொன்னதுபோல் ஒரு மணிதன் பொறாமை, வஞ்சகம், எரிச்சல் போன்ற தீக்குணங்களின் உணர்வோடு வளர்ந்து, அவனில் அக்குணங்கள் வேரூன்றிவிடுமாயின் எளிதில் அவனை அக்குணங்களிலிருந்து மாற்றுவது மிகக் கடினம். இவ்வாறு சொல்வதைவிட முடியாதென்றுதான் சொல்ல வேண்டும். நமதூர் மூதாட்டிகள் “பழக்கத்தை மாற்ற படைத்தவனாலும் முடியாது” என்று சொல்வார்கள்.
இவ்வசனம் மார்க்க கண்ணோட்டத்தில் பிழையாக இருந்தாலும் கூட இது ஓர் உண்மையையே கூறுகிறது.
ஒருவனின் பழக்கத்தை எளிதில் மாற்ற முடியாதென்ற உண்மையை உணர்த்துகிறது.
இவ்வாறுதான் பின்வருமாறு நமது முன்னோர்கள் சொல்வார்கள். “தொட்டில் பழக்கம் சுடு காடுவரை” என்று.
சுடுகாடு என்றால் மையவடியை குறிக்கும். அதாவது சிறு வயதில் பழகிய ஒரு பழக்கம் மரணிக்கும் வரை இருக்கும் என்பதாகும்.
ஒரு மலை இருந்த இடத்திலிருந்து நகர்ந்து விட்டதென்று நீங்கள் கேள்விப்பட்டால் அது உண்மையென்று நம்புங்கள். ஆனால் ஒருவன் தனது கெட்ட பழக்கத்தை விட்டு விட்டானென்று கேள்விப்பட்டால் அதை நம்பாதீர்கள் என்றும் ஒரு பழமொழி உண்டு. இவையாவும் ஒரு கருத்தையே விலியுறுத்துகின்றன.
வாசக நேயர்கள் நான் கூறப் போகின்ற செய்தியை அறிந்திருக்கிறார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆயினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் இங்கு எழுதுகிறேன். இதுவும் ஓர் அறிவுதான்.
திருடும் அரசன்:
ஒரு நாட்டில் ஓர் அரசன் இருந்தான். அவன் ஏதாவது தேவைக்காக வெளியே செல்வதாயின் அவனின் இரகசிய பாதுகாவலன் ஒரு பெட்டியில் பண நோட்டுக்களை அள்ளி வைத்துக் கொள்வான்.
அரசன் எங்காவது ஒரு கடைக்குச் சென்றால் கடையிலுள்ள ஊழியர்களுக்குத் தெரியாமல் தனக்கு விருப்பமான ஏதாவதொரு பொருளைத் திருடி தனது ட்றவ்ஸரில் வைத்துக் கொள்வான். அவனின் பின்னால் பணப் பெட்டியுடன் செல்பவன் கடை முதலாளியிடம் என்ன விலை என்று கேட்டு அதற்கான பணத்தை அவரிடம் கொடுத்தவிடுவானாம்.
இதுவும் ஒருவன் சிறு வயதில் கற்றுக் கொண்ட ஒரு பழக்கத்தை மாற்ற முடியாதென்பதற்கு ஓர் ஆதாரமேயாகும்.
எரிச்சல், பொறாமை, வஞ்சகம் போன்ற தீக்குணங்களை நமது பிள்ளைகள் கற்றுக் கொள்ளாமல் நல்ல பழக்க வழக்கமுள்ள சிறுவர்களுடன் சேரவிட்டு அவர்களைப் பாது காத்துக் கொள்ள வேண்டும்.
இவ் விபரத்தை நான் ஏன் எழுதுகிறேன் என்றால் முல்லாக்களின் “பத்வா” தமிழ் பகுதி 18ம் பக்கத்தில் “றஊப் மௌலவீ எனப்படுபவரின் மார்க்க விரோதக் கருத்துக்களிற் சில” என்ற தலையங்கம் அவர்களின் உள்ளத்திலுள்ள பொறாமை, எரிச்சல், வஞ்சகம் போன்ற அசுத்தங்களையே பிரதிபலிக்கின்றது.
ஏனெனில் “றஊப் மௌலவீ எனப்படுபவரின்” என்ற வசனத்தில் “எனப்படுபவரின்” என்ற வசனம் அவர்களின் நெஞ்சிலுள்ள வஞ்சகத்தை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. அவர்கள் “றஊப் மௌலவீ கூறிய கருத்தக்கள்” என்று எழுதியிருக்கலாம். அவ்வாறு எழுதுவதே மனிதாபிமானமுமாகும். அவர்கள் என் பெயரை எழுதுவதிலேயே குரோதம் காட்டினார்களென்றால் மற்ற விடயங்களில் எவ்வாறு செய்வார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? இத்தலைப்பே அவர்கள் எவ்வாறு “பத்வா” கொடுப்பார்கள் என்பதன் மணி ஓசையாகும். யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்று சொன்னாற் போலுள்ளது. இது ஓர் அம்சம்.
மற்ற அம்சம் நான் கூறிய கருத்துக்கள் எனது கருத்துக்கள் என்று சாடியிருப்பது. நான் கூறிய கருத்துக்கள் திருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழிகளிலிருந்தும், இமாம்கள், மற்றும் ஞானமகான்கள் கூறிய கருத்துக்களிலிருந்தும் பெறப்பட்டவையேயன்றி எனது சொந்தக் கருத்துக்கள் ஒன்றுமே இல்லை. ஆகையால் றஊப் மௌலவீ கூறிய கருத்துக்கள் என்று எழுதுவதே மனிதாபிமானமாகும். மனிதாபிமானம் எனும் சொல்லுக்கு எதிர்ச் சொல் எவ்வாறிருக்குமென்று அவர்களிடம்தான் கேட்டுப் பார்க்க வேண்டும்.
றஊப் மௌலவீ கூறிய கருத்துக்கள் என்று சொல்வது மூக்கை நேரடியாக தொடுவது போன்றும், “றஊப் மௌலவீ எனப்படுபவரின்” என்று சொல்லுதல் கையால் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுதல் போன்றதுமாகும். இவ்விரு வகையாக தொடுவதிலும் எவ்வகையில் தொடுவது புத்திசாலித்தனம்? இதன் எதிர்ச் சொல் எவ்வாறு அமையும்? அவர்களே சொல்லட்டும்.
இத்தகைய வஞ்சக நெஞ்சுடையோர் எவ்வாறு “பத்வா” வழங்கியிருப்பார்கள் என்று நான் சொல்லத் தேவையில்லையல்லவா?
வஞ்சக நெஞ்சுடையான் எதையும் செய்வான். கொலை கூடச் செய்துவிடுவான். இதனால்தான் என்னையும், நான் கூறிய ஸூபிஸ ஞானத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் கொலை செய்ய வேண்டும் என்று எழுதினார்கள் போலும்.
அறபு பத்வா 7ம் பக்கத்தில் فأمّا إذا اعتقد أو قال مكلف என்ற வசனத்திலிருந்து أي أنت الإله என்ற வசனம் வரையுமுள்ள வசனங்கள் எந்த கிதாபில், என்ன பக்கத்தில் வருகிறதென்று எழுதப்படவில்லை. இதற்கு முல்லாக்கள் விளக்கம் தருவார்களா?
முல்லா மகான்களே!
உங்கள் பத்வா தமிழ் பகுதி 9ம் பக்கத்தில், “சன்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் புதிதாகத் தோற்றுவிக்கின்றாரோ அது மறுக்கப்பட வேண்டியதாகும்” எனப் பெருமானார் அவர்கள் நவின்றார்கள் என்று நபீ மொழி ஒன்றை ஆதாரமாக எழுதியுள்ளீர்கள்.
இதை நீங்கள் ஏன் எழுதினீர்கள்? மார்க்கத்தில் இல்லாத ஒன்றை சொல்பவனுக்குத்தானே இந்த நபீ மொழி பொருத்தமானது. நான் மார்க்கத்தில் இல்லாத ஒன்றையா சொல்லியுள்ளேன்? மார்க்கத்தில் உள்ளது எது? இல்லாதது எது? என்பதைக் கூட புரியாமலிருக்கின்றீர்கள். இது என்னடா புதுமை? ஏன்டா இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்?
இவர்களின் முழு உடலையும் அங்கம் அங்கமாக, பாட்ஸ் பாட்ஸாக செக் பண்ண வேண்டும் போல் தெரிகிறதே! இதற்கான டாக்டர் யார் இருப்பார்? அவசியம் கவனிக்க வேண்டுமே! நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் அவசியம் தேவையானவர்களாயிற்றே!
(அடே தம்பி முனாஸ்! செயலாளரைக் கொஞ்சம் வரச் சொல்லு. என்ன சேர்? முழு உடலையும் செக் பண்ணக் கூடிய டொக்டர் யாரென்று நவலோக நம்பருக்கு கோல் அடிச்சிப் பாரு. டொக்டர் லீவாம் சேர். ஒரு மாதம் போகுமாம் வாறத்துக்கு. அப்படியா நஸீப் இல்லை. சரி போகட்டும்)
நான் சொன்ன கருத்துக்கள் யாவும் திருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழிகளிலிருந்தும், இமாம்கள், இறை ஞானிகள், அவ்லியாஉகள் ஆகியோர்களின் சொற்களிலிருந்தும் பெற்றவையேதவிர எனது சொந்தக் கருத்து எதுவுமில்லை.
நீங்கள் இந்த நபீ மொழியை எனக்கு எதிரான ஆதாரமாகக் கூறுவது உங்களின் அறியாமையேயாகும். உங்களுக்கும், علم التصوّف، علم الحكمة، علم الحقيقة، علم وحدة الوجود முதலான அறிவுகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என்பது நன்றாகப் புரிந்து விட்டது. நான் அறிந்தவரை நீங்கள் இறைஞானத்தை பாலர் வகுப்பிலிருந்து தொடங்க வேண்டும். குறைந்த பட்சம் AL வரையாவது என்னிடமோ, இறைஞானிகளிடமோ படிக்க வேண்டும். முதலில் உங்களை முழுமையாக சுத்தம் செய்யுங்கள்.