தொடர் 23
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அன்பிற்குரிய முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! ஸூபிஸ சமுக உறுப்பினர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
மேற்கண்ட தலைப்பில் முல்லாக்கள் தமது பத்வாவில் செய்துள்ள தில்லு முல்லுகள், பொய் புரட்டல்கள் பற்றி இதுவரை 23 தொடர்களில் எழுதியுள்ளேன். ஒரு பக்க சார்பின்றி வாசித்தவர்கள் பத்வா வழங்கிய உலமாஉகள் யார் என்பதை விளங்கியிருப்பார்கள் என்றும், எது சத்தியமோ அதை நிலை நாட்ட ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.
அவர்களின் “ஊடுருவல்” பத்வாவிலிருந்து பக்கங்களினதும், வசனங்களினதும் ஆதாரங்களோடும் அவர்களின் தில்லு முல்லுகளையும், பொய் புரட்டுக்களையும் எழுதியுள்ளேன். விளக்கி வைத்துள்ளேன். எழுதுவதாயின் இன்னும் எழுதலாம்.
ஆயினும் அவர்களின் “பத்வா” முழுவதும் “ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்பதற்கான ஆதாரங்கள் மட்டுமே உள்ளன. வேறொன்றுமே இல்லை. அறிவுள்ளவர்களும், திறமையுள்ளவர்களும் அந்த “பத்வா” நூலை வாசித்தார்களாயின் அவர்களின் பத்வா “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைக்கும், அக்கொள்கை பேசியவர்களுக்கும் மறுப்பானதேயன்றி நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கு மறுப்பானதேயல்ல என்பதை அறிந்து கொள்வார்கள்.
முல்லாக்கள் “பத்வா” வழங்கிய நேரத்தில் நான் “ஹுலூல் – இத்திஹாத்” பேசுகிறேன் என்றுதான் அவர்கள் விளங்கியிருந்தார்களேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” பேசுகிறேன் என்று விளங்கியிருக்கவுமில்லை. அவ்வாறு அவர்கள் விளங்குவதற்கு அவ்வேளை அவர்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” என்றால் அது என்ன சாமான் என்று கூட தெரிந்திருக்கவுமில்லை. இந்த உண்மை படித்தவர்களுக்கும், அவர்களின் “பத்வா”வை நல்ல அவதானத்தோடு படித்தவர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். இருந்தாலும் அவர்கள் என்ன செய்வார்கள்? வாய் திறந்தால் ஒரு பக்கம் சம்மேளனத்தின் எதிர் நடவடிக்கையும், மறு பக்கம் உலமா சபையின் நடவடிக்கையும் மின்னல் வேகத்தில் ஏற்பட்டுவிடும். அவர்களின் நிலை ஊமையன் கண்ட கனவுதான். அவர்களால் இரு சர்வாதிகாரிகளையும் எவ்வாறு எதிர் கொள்ள முடியும்?
நான் “ஹுலூல் – இத்திஹாத்” பேசவில்லை என்றும், எனது பேச்சை முல்லாக்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்றும் நான் எழுதி வந்த தொடர்களில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன்.
முல்லாக்கள் “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்றும், அது தொடர்பாக அவர்கள் அறிந்த ஆதாரங்களையும் தமது பத்வாவில் எழுதியிருந்தார்களாயின் நானும் எனதுயிர் இருக்கும் வரை அவர்களுக்கு மறுப்பு எழுதிக் கொண்டே இருப்பேன்.
நான் இதன் பிறகும் அவர்களின் “பத்வா”வுக்கு மறுப்பு எழுதுவதாயின் அவர்களைச் சாடியும், “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பற்றியும் மட்டுமே எழுதிக் கொண்டிருக்க வேண்டும். வேறு மறுத்தெழுதுவதற்கு அவர்களின் “பத்வா”வில் உருப்படியான எந்தவொரு விடயமும் இல்லை. எல்லாமே “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைக்கு மறுப்பாகவே உள்ளன. நானும் அவர்கள் போல் ஒரே விடயத்தை திரும்பத் திரும்ப வளவளவென்று எழுதுவதற்கு நான் அவர்கள் போல் வளவளத்தான் அல்ல.
ஆயினும் முல்லாக்கள் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று எழுதினார்களே அதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன். அதே வேளை நான் பேசிய இஸ்லாமின் உயிரான “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை “ஹுலூல் – இத்திஹாத்” என்று தவறாகப் புரிந்து கொண்டு என் பெயரைக் குறிப்பிட்டு “பத்வா” வழங்கினார்களே அதற்காக வருந்துகிறேன். வேதனையும் அடைகிறேன்.
அடுத்த தொடரோடு “முர்தத் பத்வாவும், முல்லாக்களின் சதிகளும்” என்ற தலைப்பை நிறுத்திவிட்டு தொடர்ந்து கொள்கை விளக்கம் தொடர்பாக எழுதுவதற்கு முடிவு செய்துள்ளேன். இன்ஷா அல்லாஹ்!
இன்றே கொள்கை விளக்கத்திற்கு அடிக்கல் நட்டுகிறேன். ஓய்வின்றி தொடர்ந்து வேலை நடக்கும்.
“தவ்ஹீத்” என்றால் என்ன?
தவ்ஹீத் – تَوْحِيْدْ என்ற சொல் فَعَّلَ என்ற அமைப்பில் “தப்யீல்” பாடமாகும். இது சொல்லிலக்கணத்தோடு தொடர்புள்ள விடயமாதலால் இதை எழுத்து மூலம் எழுதிப்புரிய வைப்பது கடினம். இவ்விபரம் உலமாஉகளுக்கும், அறபியில் சொல்லிலக்கணம் படிக்கின்ற மாணவர்களுக்கும் மட்டுமே தெரியும். விளக்கம் தேவையானோர் அவர்களை நாடவும்.
இக்காலத்தில் “தவ்ஹீத்” என்ற சொல் படித்தவர், படிக்காதவர், ஆண், பெண் அனைவரும் அறிந்த சொல்லாகவும், தினமும் அவர்களின் நாவால் மொழியும் சொல்லாகவும் உள்ளது.
எனினும் இச் சொல்லுக்கு பொதுவாக ஏகத்துவம் என்று அனைவரும் சொல்லிக் கொண்டாலும் கூட இதன் தாற்பரியத்தை தெரிந்து சொல்கிறார்களா என்பதில் எனக்கு சந்தேகமே இருந்து வருகிறது. நான் அறிந்த வகையில் “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்றுதான் என்ற தத்துவம் இச்சொல்லின் வயிற்றுள் இருப்பதாகவே நான் உணர்கிறேன். எனக்கே இப்படியொரு தத்துவம் புரிகிறதென்றால் கல்வித்துறையிலும், ஆய்வுத்துறையிலும் “அர்ஷ்” ஐக் கூட நெருங்கிய அறிஞர்கள் வாழுமிக்காலத்தில் அவர்களுக்கு இது புரியாமலிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் ஆய்வு செய்யாமலிருப்பதே அவர்களின் குறையென்று நான் நினைக்கிறேன்.
ஏகத்துவம் என்றால் என்ன?
ஏகம் + தத்துவம் = ஏகத்துவம்.
ஏகம் – அனைத்தையும் ஒன்றாகக் குறிப்பிடுவதை ஏகம் என்று சொல்லப்படும். இதை அறபியில் “வஹ்தத்” என்று சொல்லப்படும். ஏகமாக்கல் – பலதாக இருப்பதை ஒன்று படுத்துதல்.
ஏகத்துவம் = வஹ்ததுல் வுஜூத். ஆக ஏகத்துவம் பலவாக விரிந்து காணப்படுகின்ற தத்துவங்களை ஒரே தத்துவமாக அல்லது ஒரே உள்ளமையாக அறிந்து உணர்வதாகும்.
தத்துவம் என்பது உள்ளமையை குறிக்கும். அதாவது எதார்தத்தில் உள்ளதை குறிக்கும். இதை அறபியில் “வுஜூத்” என்று சொல்லப்படும். ஏகத்துவம் “வஹ்ததுல் வுஜூத்”.
ஏகத்துவம் பலவாகப் பிரிந்து காணப்படுகின்ற தத்துவங்களை ஒரே தத்துவமாக அல்லது ஒரே உள்ளமையாக அறிந்து உணர்வதாகும்.
இந்த ஏகத்துவக் கலிமாவின் தத்துவத்தை மக்களுக்குப் போதிக்கவே இஸ்லாமிய ஆன்மிக கல்லூரிகளான “தரீகா”க்கள் உருவாகின. ஆனால் இன்று பல பேருக்கு ஆன்மீக கல்லூரிகள் ஏன், எதற்கு உருவாகின என்று கூட தெரியாமல் வாழ்கின்றார்கள்.
இன்னொரு வசனத்தில் சொல்வதாயின் ஆன்மிக கல்லூரிகள் என்பன (தைக்காக்கள், சாவியாக்கள் என்பன) “திக்ர்” செய்யும், றாதிபு நடத்தும் இடங்களாகிவிட்டன.
ஆனால் இன்று “ஷரீஆ”வை மட்டுமே மக்கள் மத்தியில் பேச வேண்டும். இறையியல், ஸூபிஸம் என்பவை பேசி மக்களின் உள்ளத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்று சொல்லுமளவு ஷெய்குமார்களே மாறிவிட்டார்கள் என்றால் என்ன செய்வது? வைத்தியன் நோயாளியானால் அவனுக்கே வைத்தியம் செய்ய வேண்டும்.
بِالْمِلْحِ تُصْلِحُ مَا تَخْشَى تَغَيُّرَهُ – وَكَيْفَ بِالْمِلْحِ إِنْ حَلَّتْ بِهِ الْغِيَرُ؟
ஒரு வஸ்த்து பழுதாகுமென்று நாம் அஞ்சினால் அதை உப்பால் சரி செய்கிறோம். உப்பே கெட்டுப் போனால் என்ன செய்வது?
توحيد
– தவ்ஹீத் என்ற சொல் فَعَّلَ என்ற “வஸ்ன்” அமைப்பில் تفعيل என்ற பாடத்தைச் சேர்ந்ததாகும். இது சொல்லிலக்கணத்தொடு தொடர்புள்ள விளக்கமாதலால் இதை எழுதிப்புரிய வைப்பது கடினம். தேவையானோர் குறித்த கலையோடு தொடர்புள்ளவர்களை அணுகவும்.
“தவ்ஹீத்” என்ற சொல் وَحَّدَ “வஹ்ஹத” என்ற சொல்லடியில் உள்ளது. இதன் பொருள் “ஒன்றாக்கி வைத்தான்” என்று வரும். இதன்படி “தவ்ஹீத்” என்றால் ஒன்றாக்கி வைத்தல் என்று பொருள் வரும்.
அதாவது توحيد الله அல்லாஹ்வை ஒன்றாக்கி வைத்தல் என்று பொருள் வரும். இவ்வாறு பொருள் வருவது பிழையாகிவிடும். ஏனெனில் ஒன்று என்பது ஒன்றுதான். ஒன்றை ஒன்றாக்கி வைத்தல் என்பது அசாத்தியமான ஒன்றேயாகும்.
இதை ஸூபீ மகான்கள் توحيد الواحد محال ஒன்றை ஒன்றாக்குதல், ஒன்றாக ஆக்கி வைத்தல் அசாத்தியம் என்று சொல்வார்கள். இந்த வசனம் ஸூபீ மகான்கள் இவ்வாறான விடயத்துக்குப் பாவிக்கின்ற அவர்களின் கலைச் சொல்லாகும். இவ் வசனத்தை அவர்களின் எந்த நூலிலும் நிறையக் காணலாம். முல்லாக்களாயினும், மற்றவர்களாயினும் – உலமாஉகளாயினும் ஸூபீ மகான்களின் எந்தவொரு நூலை பார்த்தாலும் இவ்வசனத்தைக் காணலாம்.
ஒன்றை ஒன்றாக்க முடியாதிருப்பதால் ஸூபீகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள். அதாவது “தவ்ஹீத்” ஒன்றாக்கி வைத்தலென்பது அதிகமாயிருப்பதை – பலதாயிருப்பதை ஒன்றாக்கி வைத்தலேயன்றி ஒன்றாயிருப்பதை ஒன்றாக்கி வைத்தல் அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.
அவர்கள் இவ்வாறு சொல்வார்கள். அதாவது توحبد الكثرة ممكن பலதை ஒன்றாக்கி வைத்தல் என்று விளக்கம் சொல்வார்கள். பலதை ஒன்றாக்கி வைக்கலாம். அது சாத்தியமானதேயாகும்.
எனவே, توحيد الله அல்லாஹ்வை “தவ்ஹீத்” ஒன்றாக்கி வைத்தல் என்பது பலதை ஒன்றாக்கி வைத்தலைக் குறிக்குமேயன்றி ஒன்றை ஒன்றாக்கி வைத்தலைக் குறிக்காது.
ஏனெனில் அசாத்தியமான ஒன்றைச் செய்யுமாறு அல்லாஹ் ஒரு போதும் அடியானை ஏவமாட்டான். அது அசாத்தியம்.
அல்லாஹ்வை அவனின் தரத்திற்கும், தகுதிக்கும் ஏற்றவாறுதான் அடியார்கள் அஞ்ச வேண்டுமென்று முதலில் அவன் அடியார்களைப் பணித்திருந்தான். اِتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ நீங்கள் அல்லாஹ்வை அவனின் தரத்திற்கும், தகுதிக்கும் ஏற்றவாறு அஞ்சுங்கள் என்று கூறினான்.
பின்னர் இதை மாற்றி اِتَّقُوا اللهَ مَااسْتَطَعْتُمْ உங்களால் முடிந்தளவு உங்களின் தரத்திற்கும், தகுதிக்கும் ஏற்றவாறு அஞ்சுங்கள் என்று மாற்றிவிட்டான். இவ்வாறு மார்க்க விடயங்களில் நிறைய மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
இதன் மூலம் அசாத்தியமான ஒன்றை செய்யுமாறு அடியார்களுக்கு அல்லாஹ் கட்டளை பிறப்பிக்க மாட்டான் என்பது தெளிவாகிறது. உண்மை இவ்வாறிருக்க وَحِّدُوا اللهَ அல்லாஹ்வை ஒன்றாக்கி வையுங்கள் என்று எவ்வாறு அவன் சொல்வான்? ஒன்றை ஒன்றாக்கி வைத்தல் அசாத்தியமே! அவன் ஒருவன் ஒருவன்தான். அவன் எண்ணிக்கையில் ஒருவன் அல்ல. அவ்வாறு விளங்கினால் அவன் مَعْدُوْدْ எண்ணப்பட்டவனாகிவிடுவான். எண்ணப்பட்டவன் எல்லை போடப்பட்டவன். ஆகையால் அவன் ஒருவன்தான். மொத்தத்தில் ஒருவனேயன்றி எண்ணிக்கையில் ஒருவனல்ல என்று விளங்க வேண்டும்.
ஒருவனிடம் ஒரேயொரு பேனையை – எழுதுகோலைக் கொடுத்து இதை ஒன்றாக்கி வை وَحِّدْ هَذَا القَلَمَ என்று செர்லலலாமா? சொன்னால் ஒன்றை எவ்வாறு ஒன்றாக்குவதென்று அவன் கேட்பானல்லவா? அல்லது சொன்னவனிடம் உங்களுக்குப் பைத்தியமா என்று கேட்பானல்லவா? ஆகையால் அல்லாஹ் ஒருவனாயுள்ள தன்னை ஒருவனாக்கி வை என்று சொல்லவில்லை. மாறாக அடியானே! உனக்குப் பலதாகத் தெரிகின்ற அனைத்தையும் ஒன்றாக்கி வை என்றே சொல்கிறான். எல்லாம் ஒன்றென்று நம்பு என்றே சொல்கிறான். قُلْ هُوَ الْكُلُّ “ஒக்கொம எகய்”