தொடர் – 4
(“வஹ்ததுல் வுஜூத்” பிழை என்று பத்வா வழங்க உலமாஉகள் கண்டுபிடித்த ஆதாரமான مَنْ زَعَمَ أَنَّ اللهَ عَلَى شَيْئٍ أَوْ فِى شَيْئٍ أَوْ مِنْ شَيْئٍ فَقَدْ كَفَرَ، என்பது தொடர்பாக…)
(“வஹ்ததுல் வுஜூத்” பிழை என்று பத்வா வழங்க உலமாஉகள் கண்டுபிடித்த ஆதாரமான مَنْ زَعَمَ أَنَّ اللهَ عَلَى شَيْئٍ أَوْ فِى شَيْئٍ أَوْ مِنْ شَيْئٍ فَقَدْ كَفَرَ، என்பது தொடர்பாக…)
வெளியில் சொன்னால் மானம் மலையேறி அதற்கப்பாலும் சென்றுவிடும் என்றேன். எனினும் யார் தவறு செய்தாலும் அவரின் தவறை அவருக்கு மற்றவர்கள் சுட்டிக் காட்டுவது அவர்களின் கடமை என்ற வகையில் உலமாஉகள் பிடித்திருக்கின்ற கொப்பு முருங்கை மரத்தின் கொப்பேயன்றி முதிரை மரத்தின் கொப்பல்ல என்பதை அவர்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இது கூட விளங்குமோ, என்னவோ தெரியாது.
இதை மிகச் சுருக்கமாக விளக்கி வைப்பதற்கு என்னால் முடியாது. விபரமாக விளக்கி வைப்பதற்கும் இவ்விடம் பொருந்தாது. இருப்பினும் முடிந்தவைர விளக்கி வைக்கிறேன். இதுவும் அவர்களின் மண்டையில் ஏறவில்லையென்றால் அவர்கள் நற்பாக்கியமற்றவர்கள் என்பதே முடிவாகும்.
اَلْعَاقِلُ بِالْإِشَارَةِ، وَالْجَاهِلُ بِالْحِجَارَةِ، وَالْأَحْمَقُ بِالْجَمْرَةِ
புத்திசாலி ஜாடை மூலம் புரிந்து கொள்வான். சாதாரண மடையன் கல்லால் அடித்துச் சொன்னால் புரிந்து கொள்வான். முழு முட்டாளோ தீயால் சுட்டுச் சொன்னால்தான் புரிந்து கொள்வான்.
உலமாஉகள் கண்டு பிடித்துள்ளதாக மர்ஹூம் இஸ்மாயீல் மௌலவீ – முஸ்தபா பஹ்ஜீ அவர்கள் என்னிடம் சொன்ன مَنْ زَعَمَ என்று ஆரம்பமாகும் ஆதாரம் சிறுவர்கள் விளையாடும் உயிரில்லாத வெறும் பொம்மை போன்றதாகும். இது தொடர்பாக நான் கூறவுள்ள விளக்கத்தை சரியாகப் புரிபவர்கள் உலமாஉகளின் பிறந்த நாள் பரிசாக விளையாட்டு பொம்மைகளையே அவர்களுக்கு அன்பளிப்புச் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.
(அல்லாஹ் ஒரு வஸ்த்தின் மீது இருக்கிறான் என்று நம்பினவனும், அல்லது அவன் ஒரு வஸ்த்திலே இருக்கிறான் என்று நம்பினவனும், அல்லது அவன் ஒரு வஸ்த்தில் நின்றுமுள்ளவன் என்று நம்பினவனும் “காபிர்”களாகிவிட்டனர்)
என்னையும், நான் கூறிய ஞானக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களையும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று நாட்டு மக்களை நம்ப வைப்பதற்கு “உ” உலமாஉகள் எடுத்த இரும்புத்துரும்பு போன்ற ஆதாரம் இதுதான்.
இது அவர்களின் பார்வையில் இரும்புத் துரும்பாக இருக்கலாம். ஆயினும் தலைக்கண்ணும், மனக் கண்ணும் பிரகாசமானவர்களின் பார்வையில் இது இத்துப் போன துரும்பேயன்றி இரும்புத் துரும்பல்ல.
இந்த ஆதாரம் “எல்லாம் அவனே” என்ற “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை மறுப்பதற்கான ஆதாரமல்ல. உலமாஉகள் முன்வைக்கும் ஆதாரத்தில் “எல்லாம் அவனே” என்பது பிழை என்பதற்கான எந்த ஓர் ஆதாரமும் கிடையாது. உலமாஉகள் துறை தெரியாமல் தோணி தொடுக்கிறார்கள். இவர்களின் இந்த ஆதாரம் “ஹுலூல் – இத்திஹாத்” எனும் வழிகேடான கொள்கை பிழை என்பதற்கான ஆதாரமேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்பதற்கான ஆதாரமல்ல.
இரும்புத்துரும்பு பற்றி சில வரிகள்.
உலமாஉகளின் இரும்புத் துரும்பில் மூன்று அம்சங்கள் கூறப்பட்டிருப்பது கவனத்திற் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
ஒன்று عَلَى شَيْئٍ என்பது. இரண்டு فِى شَيْئٍ என்பது. மூன்று مِنْ شَيْئٍ என்பது.
யாராவது ஒருவன் அல்லாஹ் ஒரு வஸ்த்தின் மீது – அதாவது ஒரு வஸ்த்தின் மேல் இருக்கிறான் என்று நம்பினால் அவன் “காபிர்” ஆகிவிடுவான். இதற்கான காரணம், அவ்வாறு சொன்னவன் அல்லாஹ்வுக்கு மேல் திசையை தரிபடுத்திவிட்டான். அல்லாஹ்வுக்கு எத்திசையுமில்லை என்பதே சரியான கொள்கையாகும். “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசும் நாங்கள் அவ்வாறு நம்பவுமாட்டோம், சொல்லவுமாட்டோம். மாறாக திசையும் அவனே என்றுதான் சொல்வோம். அதாவது எத்திசையாயினும் பொதுவாக திசையாக வெளியாகியிருப்பவனும் அவனே என்றே சொல்வோம்.
இவ்வாறுதான் அல்லாஹ் ஒரு வஸ்த்திலே இருக்கின்றான் என்று சொன்னவனுமாவான். இவனும் அல்லாஹ்வுக்கு ஓர் இடத்தை தரிபடுத்திவிட்டான். அல்லாஹ் அதிலே இருக்கிறான், அல்லது இதிலே இருக்கிறான் என்று சொல்வதும் பிழைதான். இவ்வாறு சொன்னவனும் “காபிர்”தான். “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசும் நாங்கள் ஷ”எல்லாம் அவனே” என்றுதான் சொல்கிறோம். அவன் அதன் மீதிருப்பான் என்றோ, அதிலே இருப்பான் என்றோ நம்பமாட்டோம், சொல்லவுமாட்டோம்.
இவ்வாறுதான் அல்லாஹ் ஒரு வஸ்த்தில் நின்றுமுள்ளவன் என்று சொன்னவனுமாவான். இவன் மேலே சொன்ன இருவரைவிடவும் கடுமையான “காபிர்” ஆவான். ஏனெனில் இவன் அனைத்திற்கும் அல்லாஹ்வே மூலமாகவும், கருவாகவும் இருக்கும் நிலையில் அவனுக்கு ஒரு கரு இருப்பதாக நம்புகிறான். சொல்கிறான். இவனும் “காபிர்”தான்.
“வஹ்ததுல் வுஜூத்” பேசுகின்ற நாங்கள் “எல்லாம் அவனே” என்றுதான் நம்புகிறோம், பேசுகின்றோம்.
“வஹ்ததுல் வுஜூத்” புரட்சி எழுமுன் உலமாஉகள் உள்ளிட்ட அனைவரும் “இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எமது இறைஞானப் புரட்சி எழுந்தபின் அவ்வாறு சொல்வதை முழுமையாக விட்டுவிட்டார்கள். நாங்களோ அல்லாஹ் தூணாகவும், துரும்பாகவும் இருக்கின்றான் என்றுதான் சொல்வோம். தவிர தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று சொல்லமாட்டோம். இவ்வாறு சொல்வது “ஹுலூல் – இத்திஹாத்” என்ற கொள்கையாகிவிடும்.
மேலே நான் கூறிய விளக்கத்தின் மூலம் உலமாஉகள் எடுத்துள்ள مَنْ زَعَمَ என்று தொடங்கும் இரும்புத்துரும்பு “ஹுலூல் – இத்திஹாத்” என்பதற்கு எதிரானதேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்திற்கு எதிரானதல்ல என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக உலமாஉகளான மகான்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
“ஹுலூல் – இத்திஹாத்” என்ற வழிகெட்ட கொள்கை தொடர்பாக மேலதிக விளக்கம் பெற விரும்புவோர் எமது “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற நூலை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். அது இவ்வருட இறுதிக்குள் வெளிவந்துவிடும். இன்ஷா அல்லாஹ்!
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
1979ம் ஆண்டு காத்தான்குடியில் நடைபெற்ற குறித்த மீலாத் விழா முடிவுற்ற பின் முன்னாள் பட்டினாட்சி மன்ற தலைவர் அஹ்மத் லெப்பை அவர்களின் கட்டளைப்படி காத்தன்குடி உலமா சபை உறுப்பினர்களிற் சிலர் கொழும்பு ஜம்இய்யதுல் உலமாவுடன் தொடர்பு கொண்டு எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் ஒரு “பத்வா” மார்க்கத் தீர்ப்பு வழங்க ஒழுங்கு செய்தார்கள்.
இவ்வாறு உலமா சபை முடிவெடுத்ததே அவர்கள் எனக்கும், எனது மக்களுக்கும் செய்த முதற் சதியாகும். உலமாஉகள் அவர்களுக்குரிய இடத்திலிருந்து செயல்பட்டிருந்தால் அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு எனது கருத்துக்கள் தொடர்பாக என்னிடமே விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.
ஏனெனில் இந்த நிகழ்வுக்கு முந்தின காலத்தில் நான் இவ்வூர் முஹ்யித்தீன் தைக்கா பள்ளிவாயலில், சங்கைக்குரிய ஷெய்குனா அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா றஹிமஹுல்லாஹ் அவர்கள் வீற்றிருந்த சபையில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி சிறிது நேரம் உரையாற்றினேன்.
அக்கால கட்டத்தில் மதிப்புக்குரிய மர்ஹூம் அப்துல் கபூர் ஹாஜியார் (மௌலவீ அமீன் பலாஹீ ஹஸ்றத் அவர்களின் தந்தை) உயிரோடிருந்தார்கள். இந்தியா அதிராம்பட்டணம் மர்ஹூம் அப்துல்லாஹ் ஹஸ்றத் அவர்களும், மற்றும் தப்லீக் ஹஸன் மௌலவீ அவர்களும் உயிருடன் இருந்தார்கள்.
முஹ்யித்தீன் தைக்காப் பள்ளிவாயலில் நான் உரை நிகழ்த்தும்போது குணங்குடி அப்துல் காதிர் ஆலிம் மஸ்தான் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பின்வரும் பாடல்களைப் பாடினேன்.
பாடல்கள்:
என்னைப் போல் மாப்பிள்ளைமார்
எத்தனைபேர் உந்தனக்கு
உன்னைப் போல் பெண் எனக்கு
இல்லை மனோன்மணியே!
கூந்தலுக்கு நெய் தோய்த்து
குளிர் மஞ்சள் நீராட்டி
வார்ந்து சிங்காரித்து
வைப்பேன் மனோன்மணியே!
இந்த நிகழ்வு 1979ம் ஆண்டுக்கு முன் (“பத்வா” வழங்கப்படுவதற்கு முன்) நடந்ததாகும். அக்காலம் வஹ்ஹாபிஸம் தலை நீட்டாமல் இருந்த காலம். இப்போது களத்தில் இறங்கியுள்ள மதனீகளும், ரியாதீகளும் சிறுவர்களாக அல்லது கல்வி கற்றுக் கொண்டிருந்த காலமாயிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
முஹ்யித்தீன் தைக்காப் பள்ளிவாயலில் நான் பேசிய மறுநாள் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவிலிருந்து எனக்கு ஓர் கடிதம் வந்தது. அதில் முஹ்யித்தீன் தைக்காப் பள்ளிவாயலில் நான் பேசிய கருத்துக்கள் தொடர்பாக கலந்துரையாட உலமா சபை கட்டடத்திற்கு வருமாறு எழுதப்பட்டிருந்தது. தனிமையாக வரவேண்டும் என்றும் நிபந்தனை கூறப்பட்டிருந்தது.
அவர்களின் நிபந்தனைப்படி நான் அங்கு தனிமையாகச் சென்றேன். அந்நேரம் உலமா சபைக் கட்டிடம் ஊர் வீதி டொக்டர் றஹ்மான் அவர்களின் வீட்டிற்கு எதிரே இருந்தது.
உள்ளே சென்றேன். மேலே நான் பெயர் குறித்த உலமாஉகளும், வேறு சிலருமாக சுமார் 10 பேர் இருந்தார்கள். அவர்களில் மர்ஹூம் அப்துல் கபூர் ஆலிம் ஹாஜியார் குறிப்பிடத்தக்கவராவார்.
நான் ஐந்து நிமிடம் அமர்ந்திருந்தேன். ஒருவர் கூட என்னுடன் பேசவில்லை. உங்கள் முன் நான் மௌனியாயிருப்பதற்காகவா என்னை அழைத்தீர்கள் என்று கேட்டேன். அதன் பிறகுதான் கனவு கண்டு விழித்தவர்கள் போல் ஒருவர் மற்றவரிடம் நீங்கள் ஆரம்பியுங்கள் என்றார். மற்றவர் இன்னொருவரிடம் நீங்கள் ஆரம்பியுங்கள் என்றார். ஐந்து நிமிடங்கள் வீணாய் போயின.
நான் சற்று உரத்த குரலில் உங்களிடம் ஒரு திட்டமில்லையா? நான் வந்தால் யார் பேசுவது? என்ன பேசுவது என்று நீங்கள் திட்டமிடவில்லையா? என்று கேட்டேன்.
வயதிலும், அறிவிலும் பல படிகள் தாண்டி நின்ற அப்துல் கபூர் ஹாஜியார் அவர்கள் பேசத் தொடங்கினார்கள். அவர்கள் எப்போதும் என்னை அழைக்கும் பாணியில், “தம்பி றஊப்! நீ நேற்றிரவு முஹ்யித்தீன் தைக்காவில் பேசும் போது சில பாடல்கள் பாடினாய். அல்லாஹ்வின் தலைக்கு நெய் போட்டதாகவும், அவனின் தலையை வார்ந்து விட்டதாகவும், மஞ்சள் கலந்த நீரில் அவனைக் குளிப்பாட்டியதாகவும், அவனை சிங்காரித்து வைத்ததாகவும் கூறினாய். இது கேட்ட பொது மக்கள் அல்லாஹ் பற்றி தவறாக விளங்கிக் கொள்வார்களல்லவா? இது பிழை இல்லையா? என்று கேட்டார்கள். (சுவாரஸ்யமான உரையாடல்)
நான் அவர்களிடம், இவ்வாறான கருத்துக்களை எந்த மொழியில் சொன்னால் பிழை? எந்த மொழியில் சொன்னால் சரி? என்று கேட்டேன். அதற்கவர்கள் எந்த மொழியில் சொன்னாலும் பிழைதான் என்றார்கள்.
அவ்வாறாயின் நீங்கள் பள்ளிவாயல்களிலும், வீடுகளிலும் முஹ்யித்தீன் மௌலித் ஓதும்போது,
إِذْ مَا أَرَادَ إلهُ الْعَرْشِ ذِى الْـعِـظَـمِ
تَنْفِيْسَ كُرَبِ أَسَامِيْهِ أُولِى الْحِكَمِ
أَفَاضَ قَبْلَ ظُهُوْرِ الْكَوْنِ مِنْ نَفَسِ
الرَّحْمَنِ نُوْرًا حَـوَى الْـيَدَيْنِ ذَا قِدَمِ
يَـدُ الـنُّـبُـوَّةِ لِـلْإِعْطَاءِ مَا أَخَذَتْ
يَدُ الْوِلَايَةِ مِـنْ مَـوْلَاهُ مِنْ قِـسَـمِ
என்று ஓதுகிறீர்களா இல்லையா? என்று கேட்டேன். ஆம், என்றார்கள் ஹாஜியார் அவர்கள். இந்தப் பாடல்களுக்கான விளக்கத்தை யாராவது சொல்லுங்கள் என்றேன். அவ்வளவுதான். நான் “பீஷாப்” போய் வருகின்றேன் என்று ஹஸன் மௌலவீ எழுந்து சென்றார். ஹஸன் மௌலானா என்பவர் உமிழ்பவர் போல் போனவர் மீண்டும் வரவில்லை.
தலைவர் கேட்ட கேள்விக்கு இவர் பதில் சொன்னால் போதுமல்லவா? இவர் இன்னொரு கேள்வி கேட்கிறாரே இரண்டுக்கும் என்ன தொடர்புள்ளது என்று ஒரு சலசலப்பை ஏற்படுத்தினார்கள். அங்கிருந்த சில வாயாடிகள்.
தலைவர் கேட்ட கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்வதற்கு நான் ஒரு “ஜாஹில்” ஒன்றும் தெரியாத முட்டாளாக இருக்க வேண்டும். அவ்வாறிருக்க என்னால் முடியாது. பாடலடிகளுக்கு உங்களுக்குப் பொருள் கூற முடியாது போனால் முடியாதென்று சொல்லுங்கள் என்றேன். ஹாஜியார் அவர்கள் நீயே சொல் என்றார்கள்.
(தத்துவங்களையுடைய அல்லாஹ்வின் திரு நாமங்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய அவன் நாடியபோது றஹ்மானாகிய அல்லாஹ் தனது சுவாசத்திலிருந்து – மூச்சில் இருந்து ஓர் ஒளியை சொரிந்துவிட்டான். அவ் ஒளிக்கு இரு கைகள் இருந்தன. ஒன்று “நுபுவ்வத்” நபித்துவம் என்ற கை, மற்றது “விலாயத்” ஒலித்தனம் என்ற கை. இரு கைகளிலும் “விலாயத்” ஒலித்தனம் என்ற கை இறைவனிடமிருந்து தனது பங்கை எடுக்கிறது. “நுபுவ்வத்” நபித்துவம் என்ற கை எடுத்ததை மக்களுக்கு கொடுக்கிறது)
இதுவே மேற்கண்ட பாடல்களுக்கான வெளிப்படையான சுருக்கமான பொருளாகும் என்றேன்.
இந்தப் பாடல் மூலம் அல்லாஹ் மூச்சு விடுகிறான் – சுவாசிக்கிறான் என்ற கருத்தும், அவனால் தனது திரு நாமங்களின் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை என்ற கருத்தும், அவனுக்கு இரண்டு கைகள் உள்ளன என்ற கருத்தும், இன்னுமிவை போன்ற “ஷரீஆ”வுக்கு முரணான கருத்துக்களும் விளங்கப்படுகின்றன. இத்தகைய பாடல்களை நீங்கள் அறபியில் பாடுகிறீர்களே! இது குற்றமில்லையா? இது பிழையில்லையா? என்று கேட்டேன்.
அதற்கு அப்துல் கபூர் ஆலிம் அவர்கள் கொடுப்பால் சிரித்தார்களே தவிர ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் மற்றவர்களில் ஒருவர் – துன்யாவும் தெரியாத, ஆகிறாவும் தெரியாத ஒருவர் “அது மௌலித் காசிக்காக ஓதுகிறோம். அதில் என்ன பிழை?” என்று கேட்டார். காசிக்காகப் பாவம் ஒன்றைச் செய்யலாமா? என்று கேட்டேன்.
அவற்றையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த மர்ஹூம் அப்துல் கபூர் ஹாஜியார் அவர்கள் கூட்டத்தை முடிக்க விரும்பினார் போலும். என்னிடம் தம்பி றஊப்! பயனில்லாமல் பேசிக் கொண்டிருக்க முடியாது. ஆகையால் நாம் ஒரு முடிவுக்கு வருவோம். அதாவது நீ பாடிய பாடல்களுக்கு உன்னிடம் ஆதாரம் உண்டு என்று எழுதித் தர முடியுமா? என்று கேட்டார். ஆம் என்றேன். யாரோ ஒருவர் எழுதித் தர நான் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.