தொடர் – 5
1979ம் ஆண்டுக்கு முன் என்னை ஜம்இய்யதுல் உலமாவுக்கு அழைத்து விசாரித்த உலமாஉகள் 1979ம் ஆண்டு ஏற்பட்ட பிரச்சினையின் போது ஏன் என்னை அழைத்து விசாரிக்கவில்லை? இங்குதான் நஞ்சு பரவ ஆரம்பிக்கின்றது.
இந்தப் பிரச்சினையை பெரிது படுத்திய தலைவர் சொல்லிவிட்டார். அவர் சொன்ன வழியில் சென்றால்தான் என்னை வாய் திறக்காமலாக்கவும், தேசிய மட்டத்தில் என்னைக் கட்டிப் போடுவதற்கும் முடியும் என்று சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்த வஹ்ஹாபிகளும், பொறாமைக் காரர்களும் கிடைத்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
இச் செயல் உலமா சபை மூலம் நிகழ்ந்தாலும் கூட இது அல்லாஹ்வின் செயல் என்பதில் எமக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதன் மூலம் எனக்கும், மக்களுக்கும் அல்லாஹ் பெரியதோர் அருள் செய்துவிட்டான்.
الحمد لله رب الرَّحْمَةِ وَالشَّفَقَةِ
உலமாஉகள் தமது சுய நலன் கருதி இவ்விவகாரத்தைப் பெரிது படுத்தியதினால் தான் இன்று இந் நாட்டவர்களிலும், வெளி நாட்டவர்களிலும் பல்லாயிரம் மக்கள் சரியான ஈமானை, உண்மையான தவ்ஹீத் கொள்கையை விளங்கிக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல வலீமாரின் மகத்துவத்தையும், அகமியத்தையும் புரிந்தும் கொண்டார்கள்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் தங்களின் தோழர் முஆத் இப்னு ஜபல் றழியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டிற்கு ஆளுநராக அனுப்பி வைத்த போது
لَأَنْ يَهْدِيَ اللهُ بِكَ رَجُلًا خَيْرٌ لَكَ مِنَ الدُّنْيَا وَمَا فِيْهَا
“முஆதே! உங்களைக் கொண்டு – உங்கள் மூலம் அல்லாஹ் ஒருவரை நல்வழிப்படுத்துவது உங்களுக்கு இவ் உலகமும், இதிலுள்ளவையும் கிடைப்பதைவிடச் சிறந்ததாகும்” என்று உபதேசித்து அனுப்பி வைத்தார்கள்.
இந்த ஹதீதின் அடிப்படையில் நானும், என்னுடன் தவ்ஹீத் கொள்கையை நிலை நாட்டுவதற்காக இராப் பகலாக பாடுபட்ட உலமாஉகளும், எங்களுடன் இணைந்து இவ்விவகாரம் தொடர்பாக எதிரிகளால் அடி, உதை வாங்கிய சகோதர, சகோதரிகளும் பெரும் பாக்கியம் பெற்றவர்களேயாவர். அல்லாஹ் இப்படியொரு பாக்கியத்தை எமக்கு வழங்குவதற்கு காரணமாயிருந்த எதிரிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.
கண்ணை மூடிக் கொண்டு தவ்ஹீத் சமுகத்திற்கு “முர்தத் பத்வா” வழங்கிய முல்லாக்கள் செய்த முதற்சதி என்னை விசாரித்து, சரி, பிழை எது என்பதை அறிந்து செயல்படாமல் விட்டதேயாகும்.
இந்த உலமாஉகளுக்கு திருக்குர்ஆன் தெரியாதா? அல்லது அது விளங்கவில்லையா?
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
நீங்கள் அறியாதவர்களாயிருந்தால் “திக்ர்” உள்ளவர்களைக் கேளுங்கள். (திருக்குர்ஆன்: 21-7)
இத்திருவசனம் எளிய நடையில், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைவதாயின்
فَاسْأَلُوا أَهْلَ الْعِلْمِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
நீங்கள் அறியாதவர்களாயிருந்தால் அறிவுள்ளவர்களிடம் கேளுங்கள் என்று வந்திருக்க வேண்டும். இவ்வாறு வராமல் “திக்ர்” என்ற சொல் அறிவு என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் “திக்ர்” என்பதும் அறிவுதான் என்ற உண்மையும் தெளிவாகின்றது.
காத்தான்குடி உலமாஉகள் நினைத்திருந்தால், இவ்விடயத்தில் தீவிரவாதப் போக்கை கையாளாமல் ஒரு நடுத்தரப் போக்கை கையாண்டிருந்தால் “பத்வா” விவகாரம் எங்குமே பயணிக்காமல் எமதூரிலேயே, நமதூர் உலமாஉகளுக்கிடையே சுமுகமாக முடிந்திருக்கும்.
“முர்தத் பத்வா”வின் மூரியாட்டம்.
ஒருவனுக்கு “முர்தத்” மதம் மாறியவன் என்று “பத்வா” கொடுபப்தற்கும், ஒருவனின் செயல் அல்லது சொல் பிழையென்று “பத்வா” கொடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. ஒருவனின் சொல் அல்லது செயல் பிழையென்று “பத்வா” வழங்குவதற்கு ஒரு தரம் சிந்தித்தால் போதும், அதேபோல் இரண்டொரு நூல்களில் ஆதாரம் இருந்தாலும் போதும். அவ்வாறு “பத்வா” கொடுக்கலாம். ஏனெனில் அதில் பாதிப்பு மிகவும் குறைவு.
ஆயினும் ஒருவன் “முர்தத்” மதம் மாறியவன் என்று “பத்வா” கொடுப்பதற்கு ஒரு தரம் சிந்தித்தால் போதாது. ஆயிரம் தரமேனும் சிந்திக்க வேண்டும். ஒரு நூலில், இரண்டு நூலில் ஆதாரம் இருந்தாலும் போதாது. பலம் வாய்ந்த பல நூல்களில் ஆதாரமும் இருக்க வேண்டும். பிழையென்று ஒரு தவனையிலே “பத்வா” கொடுத்துவிடலாம். ஆனால் “ரித்தத்” மதம் மாற்றம் தொடர்பான “பத்வா” வழங்குவதாயின் பல தவணைகளில் பல்கலை கற்றவர்களின் ஆலோசனையுடன் வழங்க வேண்டும்.
நீதிவானின் பெயரில்லாத “பத்வா” – தீர்ப்பு
உலக நடைமுறையில் தீர்ப்புக்கள் நீதி மன்றங்களிலேயே நடைபெறுகின்றன. வீடுகளிலோ, வீதிகளிலோ நடைபெறுவதில்லை. நடைபெறவும் கூடாது.
எந்த ஒரு தீர்ப்பாயினும் அத் தீர்ப்பை வழங்கிய நீதிவானின் கையெழுத்து அத் தீர்ப்பில் இருக்க வேண்டும். எந்த நீதிமன்றில் வழங்கப்பட்டதென்ற விபரமும் எழுத்தில் இருக்க வேண்டும். இதுவே உலக நடைமுறையும், மார்க்க ரீதியான நடைமுறையுமாகும்.
ஆயினும் “ஏகத்துவத்தில் ஊடுருவல்” என்ற உலமாஉகளின் “பத்வா” தீர்ப்பில் ஒரு “முப்தீ” நீதிவானின் கையெழுத்துமில்லை. பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதாயின் அதன் தந்தையின் பெயர் தேவை. இனிசல் இல்லாமல் பெயர் வராது. அவ்வாறு வந்தால் அக்குழந்தைக்கு ஏதோ ஒரு குட்டி என்றுதான் மக்கள் சொல்வார்கள். நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
“பத்வா” வழங்கிய முல்லாக்களே! “தீர்ப்பு” எழுதிய நீதிபதி யார்? நீதிவானின் ஒப்பமில்லாத தீர்ப்பா உங்களின் தீர்ப்பு? அல்லது நீதிவான் இனிசல் இல்லாதவரா?
“முர்தத்” என்று “பத்வா” வழங்கும் விடயத்தில் அனைவரும் பேணுதலாகவும், பக்தியுடனும் செயல்பட வேண்டும். அதை ஒரு வணக்கமெனக் கருதிச் செய்ய வேண்டும். உலமாஉகளின் சதிகளில் இதுவும் ஒன்றேதான். கெயெழுத்தில்லாத “பத்வா” மொட்டை “பத்வா” என்று சொல்வது தவறாகுமா? முல்லாக்களே! பத்வா வழங்கிய மகான் யார் என்பதை நாங்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். உலமா சபையில் ஸூபீகளும் உள்ளார்கள் என்று தம்பி ரிஸ்வீ எம்மை மிரட்டுகிறார். அவர்களின் பெயர்ப் பட்டியலைத் தந்தால் நாமும் அவர்களைத் தட்டியும், தெறித்தும் பார்க்கலாம் அல்லவா? “பத்வா” வழங்கிய “முப்தீ”களின் பெயர் முகவரியுடன் மீண்டும் ஒரு “பத்வா” வழங்குங்கள்.
“பத்வா” வழங்கிய முல்லாக்களே! உங்களின் உள்ளங்களில் இறையச்சமே இல்லையா? மார்க்கப்பற்றே உங்களிடமில்லையா? பேணுதல் என்பதே உங்களிடமில்லையா?
“அகீதா” கொள்கையில் நாங்கள் இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ அவர்களைப் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறீர்கள். அவர்கள் யாருக்காவது “முர்தத்” என்று “பத்வா” வழங்கியதற்கு உங்களால் ஓர் ஆதாரமாவது கூற முடியுமா? அவர்கள் முஸ்லிம்களை “முர்தத்” ஆக்கும் விடயத்தில், அவ்வாறு “பத்வா” வழங்கும் விடயத்தில் எத்தகைய பக்குவமும், பெருந்தன்மையும் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியாதா? இதோ நாங்கள் கற்றுத் தருகிறோம். படிப்பினை பெறுங்கள். பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களின் உள்ளங்களில் ஓர் அணுப்பிரமாணமேனும் நீதி இருந்தால் எந்த ஒரு நிபந்தனையுமின்றி “பத்வா”வை வாபஸ் பெற்று மனிதர்கள் வரிசையில் சேர்ந்து கொள்ளுங்கள்.
ونقل الشيخ أبو طاهر القَزْوِيْنِيْ فى كتابه ‘ سِرَاجِ الْعُقُوْلِ ‘ عن أحمد بن زاهر السَّرْخَسِيِّ اَجَلِّ أصحابِ الشَّيْخِ أبى الحسن الأشعري رحمه الله تعالى: لَمَّا حَضَرَتِ الشَّيْخَ أبا الحسن الأشعري الوفاةُ فى داري بِبَغْدَادَ، قال لِيْ اِجْمَعْ أَصْحَابِيْ، فَجَمَعْتُهُمْ فقال لنا اِشْهَدُوْا على أَنِّيْ لا اَقُوْلُ بِتَكْفِيْرِ اَحَدٍ مِنْ عَوَامِّ أهل القبلةِ، لِأَنِّيْ رَأَيْتُهُمْ كُلَّهُمْ يُشِيْرُوْنَ إِلَى مَعْبُوْدٍ وَاحِدٍ، وَالْإِسْلَامُ يَشْمَلُهُمْ وَيَعُمُّهُمْ،
(اليواقيت والجواهر، الأوّل، ص 21)
அஷ் ஷெய்கு அபூதாஹிர் அல்கஸ்வீனி றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ஸிறாஜுல் உகூல்” என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ றஹிம{ஹல்லாஹ் அவர்களின் மிக நெருங்கிய தோழர் அஹ்மத் இப்னு ஸாஹிர் அஸ்ஸர்கஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
பக்தாத் நகரிலிருந்த எனது வீட்டுக்கு அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் வந்த சமயம் அவர்களுக்கு மரண வருத்தம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் என்னிடம், இங்குள்ள எனது தோழர்கள் அனைவரையும் ஒன்று கூட்டித் தாருங்கள் என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். தோழர்கள் அனைவரும் ஒன்று கூடிய பின் இமாம் அவர்கள் அவர்களிடம், (நான் முஸ்லிம்களில் பொது மக்களில் எவரையும் “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ சொல்லவுமில்லை. அவ்வாறு “பத்வா” மார்க்கத் தீர்ப்புக் கூறவுமில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் வணங்கப்படுகின்றவன் ஒருவனென்றே நம்பியுள்ளார்கள். இஸ்லாம் என்பது அவர்கள் அனைவரையும் உள்வாங்கிக் கொள்ளும் என்று கூறி இதற்கு நீங்கள் அனைவரும் சாட்சிகளாக இருந்து கொள்ளுங்கள்) என்று கூறினார்கள்.
(அல்யவாகீத் வல்ஜவாஹிர், பாகம் 01, பக்கம் 21, ஆசிரியர் – அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ)
மரணப்படுக்கையில் இருந்த நிலையிலும் கூட இமாம் அவர்கள் இவ்வாறு சொன்னதற்கான காரணம் என்னவெனில் ஒரு முஸ்லிமை “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ சொல்வதும், “பத்வா” வழங்குவதும் பெருங்குற்றச் செயலாதலால் அத்தகைய ஒரு பாவத்தை தான் செய்யவில்லை என்பதை தோழர்களுக்குச் சொல்வதற்காகவும், அவ்வாறான பாவச் செயலை எவரும் செய்யக் கூடாதென்று மற்றவர்களை குறிப்பாக அரை வேக்காடுகளை எச்சரிப்பதற்காகவுமேயாகும்.