தொடர் – 8
“ஷரீஆ” சட்டம் ஒரு புறமிருக்க உலமாஉகளின் உதவாத தீர்ப்பில் உலக நடைமுறை கூட பேணப்படவில்லை.
அரசாங்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளிற் சில பல வருடங்களாகியும் தீர்ப்பு வழங்கப்படாமல் இழுபறியிலேயே கிடக்கின்றது. இதை நாம் நேரில் காண்கிறோம். அறிகிறோம்.
முஸ்லிம் “காழீ” நீதி மன்றில் கூட ஒரு வழக்கு தவணைக்கு மேல் தவணை கொடுக்கப்பட்டு பல வருடங்களாக விசாரணை செய்யப்பட்டே வருகிறது.
நீதிவான்கள் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட முதல் தவணையிலேயே ஏதாவதொரு தீர்ப்பைக் கூறி முடித்து வைக்காமல் பல தவணைகள் கொடுத்து நீண்ட காலம் இழுத்தடிப்பது பிரச்சினைக்குரியவர்களின் ஒற்றுமையை எதிர்பார்த்தேயாகும். நீதிவான் தனது வசதிக்காக செய்வதில்லை.
சாதாரண வழக்குகளே ஒற்றுமை என்ற நன்மை கருதி பல தவணைகள் போடப்படுகின்றதென்றால் பல்லாயிரம் முஸ்லிம்களை காபிர்களாக்கும் இந்தப் பிரச்சினை பல வருடங்கள் தவணைகள் பல போடப்பட்டு விசாரிக்க வேண்டிய ஒன்றாயிருக்க இந்தப் பிரச்சினைக்கான வழக்கு ஒரே நாளில் தீர்ப்புச் சொல்லப்பட்டதற்கும், ஒரு தரமேனும் என்னை விசாரிக்காமல் விட்டதற்கும் பிரதான காரணம் உலமாக்களின் சதியேயாகும்.
காரணங்கள்:
“பத்வா” வழங்கிய முல்லாக்கள் என்னை விசாரிக்காமலும், தவணைகள் மூலம் ஒற்றுமைக்கு வழி தேடாமலும் ஒரே நாளில் அவசரமாக “பத்வா” வழங்கியதற்கான காரணம் தாமதமெதுவுமின்றி என்னைத் தண்டித்து முழு உலகிலும் என்னை இஸ்லாமிய எதிரியாக படம் பிடித்துக் காட்டுவதேயாகும். இச்சதிக்கு நூறு வீதம் வித்திட்டவர்கள் உலமா சபையிலுள்ள கொம்பர்களும், அதற்கு வெளியே நின்ற வஹ்ஹபிகளுமேயாவர்.
நான் இந்நாட்டில் வஹ்ஹாபிஸத்தை எதிர்த்துப் பேசவும், எழுதவும் தொடங்கிய காலத்திலிருந்தே வஹ்ஹாபிகள் என்னை இல்லாமற் செய்ய பயங்கர சதிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதில் ஓர் அங்கமே 2007ம் ஆண்டு என்னைக் கொலை செய்ய வந்த கூலிப்படை எனது அலுவலகத்தில் 34 வேட்டுக்களைத் தீர்த்துவிட்டு தோல்வியைத் தழுவிச் சென்றதாகும்.
வஹ்ஹாபிகள் அல்லாத ஸுன்னீ உலமாஉகளில் அதிகமானோர் கொள்கையில் எனக்கு ஆதரவானவர்களேயாவர். எனினும் இவர்களிலும் இரு நாக்கும், இரு முகமும் உள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வஹ்ஹாபீகள் அல்லாது போனலும் – ஸுன்னீகளாயிருந்தாலும் – இராசிப்பலனோ என்னவோ தெரியவில்லை அவர்களுக்கு என்னைப் பிடிக்காது. நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தையும் பிடிக்காது. ஏதோ ஒரு வகை காழ்ப்புணர்வால் இவர்களின் இதயங்கள் தாக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நான் குற்றமேதும் செய்திருந்தால் மன்னித்துக் கொண்டு என்னைப் பலப்படுத்தாவிட்டாலும் நான் கூறி வருகின்ற சத்தியக் கொள்கையை நிலை நாட்ட என்னுடன் கை கோர்க்க வேண்டுமென்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
ومعنى الحُكم بما أنزل الله فى الآيات المذكورة أن يكون الحكم موافقا ومطابقا للكتاب والسنّة، وللأحكام الشـرعيّة الّتي ذكرها الأئمّة الكبار رضي الله عنهم الغفّار، فى كتب الفقه، فمن كان حُكمُه مخالفا لها فلا يُقبل ذلك، بل يُطرح وراء الحائط ويُرمى فى المزبلة، ولو كان الحاكم مشهورا بين النّاس، كرِزْوِيْ وأضرابه، لأنّ شهرة الحاكم لا تكون دليلا لصِحّة حكمه وفتواه، فكم من حاكمٍ نُصب فى المحاكم بالقُرى والمُدن، ليس من حكمه إلّا الجورُ والظلم، كما نشاهد هذه الحالة فى حُكّام زماننا هذا، فالحاكمُ بغير ما أنزله الله إمّا كافرأو ظالم أو فاسق، كما دلّت الآيات المذكورة،
அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்புச் செய்தல் என்றால் அத்தீர்ப்பு திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிகளுக்கும் முரணில்லாமல் இருப்பதைக் குறிக்கும். அத்துடன் மேலே குறித்த இரண்டு முலாதாரங்களையும் ஆதாரங்களாகக் கொண்டு இமாம்கள் தமது சட்ட நூல்களில் எழுதிய சட்டங்களையும் குறிக்கும்.
எனவே, மார்க்கத்தோடு தொடர்புள்ள எந்தவொரு நீதிவானின் தீர்ப்பும் மேற்கண்ட மூலாதாரங்களுக்கு முரணானதாயிருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அது குப்பைத் தொட்டியில் எறியப்பட வேண்டியதாகும். தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரிஸ்வீயையும், அவர் போன்றவர்களாயினும் சரியே! ஏனெனில் நீதிவான் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றிருப்பது அவரின் தீர்ப்பு சரி என்பதற்கு ஆதாரமாகாது. ஏனெனில் இன்று பல நகரங்களிலும், கிராமங்களிலுமுள்ள மார்க்கத்தோடு தொடர்புள்ள நீதி மன்றங்களில் நீதிபதிகளாயிருப்போரின் மார்க்கத் தீர்ப்புகள் அநீதியானவையாகவும், பிழையானதாகவும் இருப்பதை நாம் காண்கிறோம்.
எனவே, இஸ்லாமிய மூலாதாரங்களை ஆதாரங்களாகக் கொள்ளாமல் எந்த நீதிவான் மார்க்க விடயத்தில் “பத்வா” வழங்கினாலும் அவன் பின்வரும் மூவரில் ஒருவனாகவே இருப்பான். “காபிர்”, “ளாலிம்”, “பாஸிக்”.
سُئل الإمام محي الدين النّووي عن الشّيخ محي الدين ابن عربي، قال: تلك أمّة قد خلت، ولكنّ الّذي عندنا أنّه يحرم على كلّ عاقل أن يسيئَ الظّنّ بأحدٍ من أولياء الله تعالى عزّ وجلّ، ويجب عليه أن يؤوِّلَ أقوالهم ما دام لمْ يَلْحَقْ بدرجتهم، ولا يعجز عن ذلك إلّا قليلُ التوفيق، قال فى شرح المُهذّب، ثمّ إذا أُوّل فليُؤوِّلْ كلامَهم إلى سبعين وجها، ولا نقبلُ عنه تأويلا واحدا، ما ذاك إلّا تَعَنُّتٌ اهـ،
(اليوايت، ج أوّل)
இமாம் முஹ்யித்தீன் அந்நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பற்றிக் கேட்கப்பட்டபோது (அது வாழ்ந்து மறைந்த ஒரு சமுகம். நமது கடமை என்னவெனில் அவ்லியாஉகளில் எவர் மீதும் நாம் தவறான எண்ணம் கொள்ளாமல் இருப்பதேயாகும். அதோடு மட்டும் நாம் நின்று விடக் கூடாது. அவர்களின் பேச்சுக்கள் வெளிக் கண்ணோட்டத்தில் பிழையாகத் தெரிந்தால் பிழையென்று முடிவு செய்யாமல் அவர்களின் பேச்சுகளுக்கும், செயல்களுக்கும் வலிந்துரை கொடுத்து அவர்கள் மீது நல்லெண்ணம் வைத்துக் கொள்வது எமது கடமையாகும். வலிந்துரை கொடுப்பதாயினும் ஒரு வலிந்துரை, இரண்டு வலிந்துரையோடு மட்டும் நின்று விடலாகாது. சுமார் 70 வலிந்துரைகளாவது கொண்டு அவர்கள் தப்புத் தவறு செய்யவில்லை என்று முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு வலிந்துரை கொண்டு அவர்கள் மீது நல்லெண்ணம் கொள்வது கூட எல்லோரும் பெறக் கூடிய சாதாரண பாக்கியமில்லை. அல்லாஹ் எவருக்கு “தவ்பீக்” நல்லணுகூலத்தை நாடியுள்ளானோ அவருக்கு மட்டுமே அந்தப் பாக்கியம் கிடைக்கும். யாராவதொருவன் 70 வலிந்துரையளவு வைக்கத்தேவையில்லை, வைப்பதாயின் ஒரேயொரு வலிந்துரை மட்டும் வைக்கலாம் என்று சொன்னால் அது அவனின் மனமுரண்டேயாகும்.
மேற்கண்டவாறு விளக்கம் சொன்ன மகான் ஷாபிஈ மத்ஹபின் சட்ட மேதைகளில் ஒருவரும், உலகப் பிரசித்தி பெற்ற மார்க்க மேதைகளில் ஒருவருமான இமாம் முஹ்யித்தீன் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களாவார்கள்.
இவர்கள் இவ்வாறு ஸூபீ மகான்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுவார்களென்று நான் நினைத்திருக்கவில்லை. ஏனெனில் இவர்கள் “புகஹாஉ” எனும் சட்ட மேதைகளின் பட்டியலில் சேர்ந்தவர்களேயன்றி ஸூபீகளின் பட்டியலில் சேர்ந்தவர்களுமல்ல, ஸூபீகள் போல் உச்சக்கட்ட ஸூபிஸ ஞானம் பேசி வந்தவர்களுமல்ல. இவ்வாறிருந்தும் இவ்விடயத்தில் சத்தியக் குரலெழுப்பியிருப்பது பாராட்டுதற்குரிய விடயமாகும்.
ஸூபிஸ தத்துவம் பிழையென்று “பத்வா” வழங்கி ஸூபிஸ ஞானத்தையே “குப்ர்” என்று கூறிய புண்ணாக்கு முப்தீகள் இமாம் நவவீ அவர்களின் உறைவிடம் சென்று அவர்களை “ஸியாறத்” தரிசிக்க வருவோர் பாவிக்கின்ற மலசல கூடத்தை சுத்தம் செய்வதற்குக் கூட தகுதியற்றவர்கள் என்று நான் கூறத் தேவையில்லை. என் மூலம் ஞானம் கற்ற வயது முதிர்ந்த மூதாட்டிகள் சொல்வதே பொருத்தமென்று நான் கருதுகிறேன். (இந்த மகானின் சமாதியின் ஒரு பகுதி வஹ்ஹாபிகளால் உடைக்கப்பட்டு பின்னர் புனருத்தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது)
இஸ்லாமிய தத்துவம் என்பது சிங்கப்பூர், சீனா போன்ற ஆடம்பர உணவகங்களுக்கு “ஹலால்” நற்சான்றிதழ் வழங்குவதும், கொரோனாவால் உயரிழந்தோரை எரித்துவிட்டுச் சாம்பல் தாருங்கள் என்று கேட்பதும், வட்டிலப்பத்திற்கே வரைவிலக்கணம் சொல்லும் நீதிவான்களுக்கே வட்டிலப்பம் கொடுப்பதும் போன்றதல்ல. இதை யார் தெரிந்து கொள்ளாது போனாலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவரும், “பத்வா” குழுவினரும், பற்றை மறைவில் நின்று “பத்வா”வுக்கு பச்சைக் கொடி காட்டிய வஹ்ஹாபிகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நான் பொதுவாக உலமாஉகளுக்கு எதிரானவன் அல்ல. அவ்வாறாயின் நானே எனக்கு எதிரானவனாகிவிடுவேன். لَوْ لَا الْعُلَمَاءُ لَصَارَ النَّاسُ كَالْبَهَائِمِ உலமாஉகள் இல்லையானால் மனிதர்கள் மிருகங்கள் போலாகிவிடுவார்கள் என்ற தத்துவத்திற்கும், اَلْعُلَمَاءُ وَرَثَةُ الْأَنْبِيَاءِ மார்க்க அறிஞர்கள் நபீமாரின் “அறிவு” என்ற சொத்தின் பங்காளர்கள் என்ற தத்துவத்திற்கும் தங்க முலாம் பூசி தலையில் சுமப்பவன் நான்.
எனக்கும், எனது கருத்தைச் சரி கண்ட இந்நாட்டு, வெளிநாட்டு மக்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று தீர்ப்பு வழங்கிய அறிவிலிகளுக்கும், அவர்களுக்கு பின் பக்கம் நின்று பலம் கொடுத்தவர்களுக்குமே நான் எதிரியாவேன்.
நான் இலங்கைத் திரு நாட்டின் கௌரவப் பிரஜையாவேன். எவரின் வாலையும், காலையும் பிடித்தோ, பொய்யான “ஹலால்” சான்றிதழ் கொடுத்தோ, லஞ்சம் வாங்கியோ வாழ்பவனல்ல. ஆலிம் என்ற பெயரில் இருந்து கொண்டு அநீதிக்கு துணை போவனும் அல்ல. பகலில் ஸுன்னீகள் மடியிலும், இரவில் வஹ்ஹாபிகளின் மடியிலும் படுத்துறங்கும் நடிகனுமல்ல. இடத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றமாதிரி என் உடைகளையோ, கொள்கையையோ மாற்றி வாழும் வேடதாரியுமல்ல. பொய் சொல்லிப் பொருள், பணம் சேமிக்கும் ஏமாற்றுப் பேர்வளியுமல்ல.
நான் ஒரு “முஃமின்” விசுவாசி. ஸூபிஸ ஞானத்தை தேடிக்கற்றவனும், அது என்னைத் தேடிக் கற்பிக்கப்பட்டவனுமாவேன்.
இன்று எனக்கும், எனது மக்களுக்கும் மதம் மாறியவர்கள் என்றும், எம்மைக் கொலை செய்ய வேண்டும் என்றும் எழுத்து மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்துவிட்டு எனது மரணத்தை எதிர் பார்த்திருக்கும் உலமா சபை நயவஞ்சகர்கள் எனக்கு எதையும் செய்யலாம். அவர்கள் செய்வார்கள் என்பதற்கு ஆதாரம் ஏற்கனவே அவர்கள் செய்ததேயாகும்.
எனக்கு அறிமுகமில்லாத ஒன்பது பேர் பயங்கர ஆயுதங்களோடு காத்தான்குடியிலுள்ள எனது அலுவலகத்திற்கு வந்து 33 அல்லது 34 வேட்டுகள் வைத்து பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு முன் நடத்திய அட்டூழியம் காத்தான்குடி மக்கள் அனைவரும் அறிந்ததே! இவ்வாறு செய்த பொறாமைக் காரர்கள் இனியும் செய்வார்கள் என்பதற்கு அவர்கள் செய்ததே ஆதாரமாகும். யார் எது செய்தாலும் செயலுக்குரியவன் அல்லாஹ்தான் என்றே நான் நம்பி வாழ்கிறேன்.
எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதன் பின்னணியில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாதான் இருக்கும் என்பதை எனது மக்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
நெருப்புக்கு சுயமாக எரிக்கும் சக்தி இருக்குமாயின் அது நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை எரித்திருக்க வேண்டும். கத்திக்கு சுயமாக அறுக்கும் சக்தி இருந்தால் அது நபீ இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கழுத்தை அறுத்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை. இவ்விரு நிகழ்வுகளும் அல்லாஹ் நாடினால் மட்டுமே எதுவும் நடக்கும் என்பதற்கு மறுக்க முடியாத ஆதரமாகும். ஆகையால் நாமாகவே நம்மைக் குழப்பிக் கொள்ளாமல் நம்பிக்கையில் உறுதியாய் இருந்து ஒன்றுபட்டுச் செயல்படுவோம்.
வீடோ என் தேகம் விழுமிடம்தான்
வீதிகளோ, காடோ, செடியோ என் கண்ணே றஹ்மானே!
வீடோ என் தேகம் விழுமிடம்தான்
வீதிகளோ, காடோ, செடியோ என் கண்ணே றஹ்மானே!