தொடர் – 09
உலமாஉகள் வழங்கிய “முர்தத்” பத்வா எனக்கும், எனது ஆதரவாளர்களுக்கும் எதிரான திட்டமிட்ட சதியாகும். இது அவர்களின் திட்டமிட்ட சதிதான் என்பதை நிறுவும் ஆதாரங்களும், காரணங்களும்.
காத்தான்குடி உலமா சபை இந்த விவகாரத்தை கொழும்புக்கு எடுத்துச் செல்லாமல் என்னுடன் கலந்தாலோசித்திருந்தால் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கலாம். அவர்கள் நான் கூறிய கருத்துக்களை மறுக்க முடியாமல் ஏற்றுக் கொண்டு சமாதானத்திற்கு தலை அசைத்தும் இருக்கலாம். அவர்கள் அந்த இடத்திற்கு வரவில்லை. இதை வாசிக்கும் நியாய வாதிகள் நான் கூறும் இக்கருத்தை சரிகாண்பார்கள் என்று நம்புகிறேன்.
எனினும் காத்தான்குடி உலமாஉகளின் தீவிரவாதப் போக்கும், மேல் மட்டத்தின் அழுத்தமும் அவர்களை சிங்கத்தின் முன் சீறிப்பாய முடியாத நிலைக்கு அவர்களைத் தள்ளிவிட்டன. ஆலிம்கள் அதிகாரமுள்ளவர்களுக்கு அடிமையானால், அல்லது பண முதலைகளுக்கு முன் தலை சொறிந்து நின்றால் இவ்வாறான பாவங்களைச் செய்யத்தான் வேண்டும். நரகம் போகத்தான் வேண்டும். யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே! இன்று எல்லாம் சோதனையே!
காத்தான்குடி உலமாஉகளே!
நான் அறிந்த கருத்துக்களைக் கூறினேன். அவை உங்களுக்குப் புரியவில்லையானால் நீங்கள் குழுக்களாகவோ, கூட்டங்களாகவோ என்னைச் சந்தித்து கலந்துரையாட வந்திருக்கலாம்.
فاسئلوا أهل الذّكر إن كنتم لا تعلمون
நீங்கள் அறியாதவர்களாயிருந்தால் அறிந்தவர்களிடம் கேளுங்கள் என்றுதான் அல்லாஹ் சொல்கிறான். நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அவர்களுக்கு “பத்வா” வழங்கி அவர்களைக் கொன்று விடுங்கள் என்றா சொல்லியுள்ளான்? இல்லையே! இறை கட்டளை இவ்வாறிருந்தும் நீங்கள் ஏன் இதைச் செய்யவில்லை? நியாயமான பதில் கூற உங்களால் முடியாது. இது நான் அறிந்ததே!
நீங்கள் அரசியல்வாதிகளுக்கும், அரசர்களுக்கும் முன்னால் தலை சொறிபவர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டதால் بِئْسَ الْفَقِيْرُ عَلَى بَابِ الْأَمِيْرِ அதிகாரியின் வீட்டு வாயலில் ஆண்டி தலை குனிந்துவிட்டான் என்ற நிலை உங்களுக்கு ஏற்பட்டுப் போயிற்று. அன்று தலை குனிந்தீர்கள். அதனால் இன்று தலை சொறிகிறீர்கள். இந்த இழி நிலை நீங்கள் தேடிக் கொண்டதேயன்றி அல்லாஹ் உங்களுக்கு அநீதி செய்யவில்லை.
وَمَا ظَلَمَهُمُ اللَّهُ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ
அல்லாஹ் அவர்களுக்கு அநீதி செய்யவில்லை. எனினும் அவர்களே தமக்கு அநீதி செய்து கொண்டார்கள். (திருமறை )
وَمَنْ تَضَعْضَعَ لِغَنِيٍّ ذَهَبَ ثُلُثَا دِينِهِ
யாராவதொருவன் ஒரு செல்வந்தனுக்கு பணிந்தானாயின் அவனுடைய “தீன்” மார்க்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு போய்விட்டதென்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள். (நபீ மொழி 16-33)
மூன்றில் இரண்டு போய்விட்டதென்றால் செல்வந்தனுக்கு தலை குனிந்தவன் மார்க்கத்தின் ஒரு தொங்கலிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறான் என்ற உண்மை தெளிவாகிறது. ஒரு கொப்பில் தொங்குகிறவன் கீழே விழுவதற்கே சாத்தியம் அதிகம் உண்டு. இதன்படி செல்வந்தனுக்குப் பணிந்தவன் பாக்கியமின்றி போவதற்கே சாத்தியம் அதிகம் உண்டு.
அன்பிற்குரிய காத்தான்குடி உலமாஉகளே!
நான் பொது மக்கள் மத்தியில் கருத்தைக் கூறியவன். நானாக உங்களில் ஒவ்வொருவரின் வீடுவீடாக வந்து எனது கூற்றுக்கு விளக்கம் சொல்ல முடியுமா? இது சாத்தியமா? சாத்தியமாயிருந்தாலும் இது நடைமுறைக்குப் பொருத்தமானதா? இல்லையென்றே சொல்வீர்கள்.
ஆகையால் நீங்கள்தான் என்னிடம் வந்து விளக்கம் கேட்க வேண்டும். நீங்களும் ஆலிம்கள், நானும் ஓர் ஆலிம். என்னால் உங்களை ஏமாற்ற முடியாது. உங்களால் என்னை ஏமாற்ற முடியாது.
நீங்கள் வராமல் விட்டதே ஒரு சதிதான். வந்தால் எனது கருத்தை ஏற்றுக் கொள்வது தவிர உங்களுக்கு வெறு வழியில்லாமற் போய்விடும். நீங்கள் நினைத்ததை உங்களால் சாதிக்கவும் முடியாமற் போய்விடும். எனவே, என் இறகை ஒடித்து என்னை ஆடவிடக் கூடாதென்பதற்காகவும், என் காலை ஒடித்து ஓடவிடக் கூடாதென்பதற்காகவுமே இந்த விவகாரத்தை கொழும்புக்கு அள்ளிச் சென்றீர்கள். இதை ஏற்றுக் கொள்வீர்களா? உள்ளும், புறமும் ஒன்று போல் இருக்கட்டும்.
கொழும்பில் நீங்கள் செய்ததென்ன? அதை நீங்கள் சொல்லமாட்டீர்கள். நீங்கள் சொன்னால் கூட அதை வடித்தெடுத்தே தெளிவு காண முடியும். ஆகையால் சுருக்கமாக நானே சொல்லிவிடுகிறேன்.
நீங்கள் கொழும்பு செல்லும் வழியில் திஹாரிப் பிரதேசத்தில் உடுகொட – றுக்ஹவிலா என்ற ஊருக்குச் சென்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையுடன் வஹ்ஹாபிஸக் கொள்கை தொடர்பாக தூரமாகியிருந்த அதி மரியாதைக்குரிய எனது உஸ்தாத் அப்துஸ்ஸமத் பலகீ ஹஸ்றத் அவர்களைச் சந்தித்து விடயத்தைக் கூறியுள்ளீர்கள். இதற்கு உடனடியாக “பத்வா” தயாரிக்க வேண்டுமென்றும் சொல்லியுள்ளீர்கள்.
அதற்கு ஹஸ்றத் அவர்கள், “அப்துர் றஊப் எனது மாணவன்தான், அவர் திறமை மிக்கவர், என்ன பேசியுள்ளார் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் அவசரப்படாமல் இந்த விவகாரத்தை சற்றுப் பின்போட்டு ஆராய்ந்து பார்த்தபின் ஒரு முடிவுக்கு வாருங்கள்” என்று அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
அவர்களின் அறிவுரையையும் தூக்கியெறிந்து விட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிலுள்ள வஹ்ஹாபிஸத் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டு மருதானை ஸாஹிறாக் கல்லூரியில் உலமாஉகள் சந்திப்புக்கான ஏற்பாடு செய்து அங்கு கூடியுள்ளார்கள். அங்கு கூடியவர்களில் அதிகமானோர் வஹ்ஹாபிஸக் கருத்துக்கு ஆதரவானவர்களாயிருந்ததால் எனக்குப் பாதகமாகவே “பத்வா” எழுத வேண்டுமென்று முடிவு எடுத்துக் கொண்டார்கள்.
காத்தான்குடியிலிருந்து அவர்கள் அள்ளிச் சென்ற எனது பேச்சுள்ள ஒலி நாடாவை இயக்குவதற்குப் பொருத்தமான சாதனமின்றி அலைந்து கொண்டிருந்த போது எனது மிக நெருங்கிய, கொள்கைக்காக கடும் பாடுபட்ட ஒருவர் அங்கு சென்று தனது சொந்த “கெஸட் ப்லேயர்”ஐ கொடுத்து உதவியுள்ளார். இதனால் அவர்களின் கூட்டம் முடியும் வரை அவரும் அங்கேயே இருந்துள்ளார். அவர்தான் அதை இயக்கியுமுள்ளார். எனக்கு நூறு வீதம் ஆதரவான ஒருவரை அல்லாஹ் அவ்வேளை அங்கு அனுப்பி வைத்தது அங்கு நடந்தவற்றை நான் அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியாயிற்று.
அன்றுகாலை சுமார் 10 மணியளவில் ஒலி நாடா இயக்கப்பட்டது. சுமார் 25 பேர்கள் அங்கு கூடியிருந்தார்கள். அனைவரும் ஒலி நாடாவை செவியேற்றுக் கொண்டிருந்தபோது அவர்களில் ஒருவர், இவர் பேசுவது என்ன மொழியென்று கூட எமக்கு புரியவில்லையாகையால் ஒலி நாடாக்கள் அனைத்தையும் கேட்க முடியாது. கட்டம் கட்டமாக கேட்போம் என்றார்.
சுமார் 1.30 மணியளவில் மருதானை புஹாரீ ஹோட்டலில் இருந்து பிரியாணி பார்சல்கள் வந்தன. புஹாரீ ஹோட்டல் பிரியாணி பற்றிச் சொல்லவா வேண்டும். அனைவரும் வயிறு நிரம்பச் சாப்பிட்டார்கள். இதமான காற்றும் வீசியது. ஒரு சிலர் கல்லூரி “பங்கு”களில் உறங்கிவிட்டார்கள். எஞ்சியுள்ள சிலரோடு கூட்டம் நிறைவு பெற்றது. சில நாட்களின் பின் “ஏகத்துவத்தில் ஊடுருவல் – التدسيس على التوحيد “ என்ற பெயரில் அறபும், தமிழும் கலந்த சிவப்பு நிற அட்டை போட்ட ஒரு சிறு புத்தகம் வெளியானது.
சிவப்பு நிற அட்டையில் “பத்வா” புத்தகம்.
இந்நூல் உலமாஉகளின் ஆதாரக் களஞ்சியம். இது அறபு மொழியிலும், தமிழ் மொழியிலும் ஒரே நூலாக அச்சிடப்பட்டது. இந்நூல் அச்சக செலவிற்காக முதலில் பணம் பறிக்கப்பட்டவரும் எனது நண்பர்தான். கடுமையான வற்புறுத்தலின் பின் 1979ம் ஆண்டு ஐந்தாயிரம் கொடுத்துள்ளார். இவர் அநேகமாக மக்ரிப், இஷா இரு தொழுகைகளும் நமது பத்ரிய்யாவில் தொழுவதே இவரின் வழக்கம். மரணித்துவிட்டார். غفر الله ذنوبه ورحمه رحمة واسعة
இந்நூல் அறபுப் பகுதி 32 பக்கங்களையும், தமிழ் பகுதி 28 பக்கங்களையும் கொண்டதாகும்.
நிறங்களில் கண்ணுக்கு கவர்ச்சியான எத்தனையோ நிறங்கள் இருக்கும் நிலையில் உலமா சபை இரத்தத்தின் நிறமான சிவப்பு நிறத்தை தெரிவு செய்ததேன் என்று அக்கால கட்டத்தில் ஒருவர் “பத்வா” வுக்கு ஆதரவான ஒரு வஹ்ஹாபீயிடம் கேட்ட போது அது எச்சரிக்கை என்றாராம். எதற்கு என்று கேட்டதற்கு இருந்துபார் என்றாராம்.
உலமாஉகள் இணைந்து வெளியிட்ட இந்நூலுக்கு சிவப்பு நிறத்தை தெரிவு செய்ததற்கும், பயங்கர ஆயுதங்களுடன் இனம் தெரியாத ஒன்பது பேர் எனது காத்தான்குடி அலுவலகத்தில் 33 அல்லது 34 துப்பாக்கி வேட்டுகள் வைத்து அட்டூழியம் செய்ததற்கும் தொடர்பு உண்டு. இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் நாங்கள் புகார் செய்துள்ளோம். உலமா சபை அரச பிடியிலிருந்து தப்புவதாயின் தமது கண்கெட்ட, மூளை கெட்ட பத்வாவை வாபஸ் பெற வேண்டும். இன்றேல் நீதியும், சட்டமும் செத்துப் போகவில்லை. என்றாவதொரு நாள் அவை வாய் திறக்கும். சிவப்பு நிறம் கொலை அச்சுறுத்தலின் அடையாளம் என்பதை பத்வா வழங்கியோர் புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் கொலையை முன்கூட்டி அறிவித்தல் செய்தவர்கள் குற்றவாளிக் கூண்டில் நின்று விளக்கம் சொல்ல வேண்டும்.