தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
தொடர் – 1
இது கனவு பற்றிய சுருக்கமான ஓர் ஆய்வு. இது தொடர்பான விபரங்களை அறிவது ஸூபிஸ தத்துவங்களைப் புரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவுமென்பதற்காகவும், இறை நம்பிக்கையில் குறை, பிழை ஏற்படாமல் பாதுகாக்குமென்பதற்காகவும் என்னால் முடிந்தவரை சுருக்கமாக எழுதுகிறேன்.
ஒரு மனிதனை உறக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டு இறுதியில் முழுமையாக ஆட்கொண்டு விட்டால் அவன் عَالَمُ الدُّنْيَا – ஆலமுத் துன்யா – இவ்வுலகை விட்டும் عَالَمُ النَّوْمِ – ஆலமுன் நவ்ம் – அல்லது عَالَمُ الْخَيَالْ ஆலமுல் கயால் என்ற உலகுக்கு பயணிக்கிறான்.
அவ்வாறு அவன் பயணித்தவுடன் அவனின் முகக் கண் எதையும் பார்க்காது. அவனின் காது எதையும் கேட்காது, அவனின் வாய் எதையும் பேசாது. இவ்வாறு அவனின் உறுப்புக்கள் செயலிழந்து போய்விடும். அந்நேரம் – கனவு காணும் அவன் தான் காண்பது கனவென்று கூட அவனுக்குப் புரியாது. அவன் விழிக்கும் வரை மேற்கண்ட தன்மைகள் எல்லாம் அவனில் இருக்கும்.
கனவுலகில் அவன் இருக்கும் வரை – அவன் அந்த உலகில் பயணித்திருக்கும் வரை எந்த ஒரு புலனும் இயங்காது. அனைத்தும் அடங்கிவிடும். சுவாசம் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
அவன் அவ்வுலகில் இருக்கும் வரை அவன் செய்கின்ற எந்தவொரு நற்செயலுக்கும் நன்மை கிடைக்கவும் மாட்டாது. அதேபோல் எந்த ஒரு தீச் செயலுக்கும் பாவமும் கிடைக்காது. ஆயினும் இவ்விரு அம்சங்களிலும் முந்தின அம்சத்தில் சிலர் மாறுபட்ட கருத்துக் கூறுவர்.
உதாரணமாக கனவுலகில் ஒருவன் நூறு ஹஜ் செய்யக் கனவு காண்பது போன்றும், ஆயிரம் ஏழைகளுக்கு தர்மம் செய்யக் கனவு காண்பது போன்றும், அதேபோல் அவ்வுலகில் நூறு தரம் “கஃபா”வை உடைத்துத் தரைமட்டமாக்கவும், ஆயிரம் பேர்களைக் கொன்று குவிக்கவும் கனவு காண்பது போன்றுமாகும். இவற்றில் எதற்கும் நன்மையும் கிடைக்காது, அதேபோல் பாவமும் கிடைக்காது.
ஏனெனில் அது வேறோர் உலகமாகும். ஏவலும், விலக்கலும் “துன்யா” எனும் இவ்வுலகிற்கு மாத்திரமேதான்.
“துன்யா” என்ற இவ்வுலகம், “ஆகிறா” என்ற மறுவுலகம், இவைபோல் 18 ஆயிரம் உலகங்கள் இருப்பதாகவும், 14 ஆயிரம் உலகங்கள் இருப்பதாகவும் வரலாறு கூறுகின்றது.
இன்னுமோர் உதாரணம் எழுதுகிறேன். தாயும், மகனும் ஓர் இடத்தில் உறங்கினார்கள். மகன் தனது கனவில் ஓர் எதிரியை வாளால் வெட்டுவது போல் கனவு கண்டான். அவன் அந்தக் கனவிலேயே தனது பக்கத்திலிருந்த வாளை எடுத்து வெட்டினான். அவள் இறந்துவிட்டாள். தனது தாயை உண்மையிலேயே வெட்டிக் கொலை செய்தது கனவில் நடந்ததாயிருந்தால் பின்வரும் ஹதீதின் படி அவன் குற்றவாளியல்ல.
عَنْ عَلِيٍّ عَلَيْهِ السَّلَام، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ‘ رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ، وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ (سنن أبي داؤود
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள்.
மூன்று பேர்களை விட்டும் பேனையை உயர்த்தப்பட்டுள்ளது. உறங்குபவன் விழிக்கும் வரை, சிறுவன் வயது வரும் வரை, பைத்தியக் காரன் சுகம் கிடைக்கும் வரை.
இது அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ள ஆதார பூர்வமான ஹதீதாகும்.
மூன்று பேரை விட்டும் எழுதுகோல் உயர்த்தப்பட்டதென்றால் அவர்கள் செய்கின்ற நன்மை, தீமை எதுவும் எழுதப்பட மாட்டாதென்று கருத்து வரும். அவன் அந்த நேரம் மட்டும் “முகல்லப்” ஏவல், விலக்கலுக்கு உட்பட்டவனல்ல என்பது இந்த நபீ மொழியின் விளக்கமாகும்.
ஆயினும் தூங்குகின்றவன் விழிப்பதற்குள் பர்ழான தொழுகை “களா” ஆனால் – தவறினால் அவன் விழித்தபின் தொழ வேண்டுமென்பதே சட்ட மேதைகளில் அநேகரின் கூற்றாகும். அது கடமையெனக் கருதி நாமும் செய்யவே வேண்டும்.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அருள் மொழிப்படி உறக்கத்தின் போது தவறிய தொழுகையை “களா” செய்ய வேண்டிய அவசியமில்லை என்றல்லவா விளங்க வருகிறது? என்று ஒருவர் கேட்க நினைத்தால் நாம் அவருக்கு கூறும் பதில் அவனுக்கு “களா”வாக்கியதற்காக தண்டனையில்லை என்பதே அதன் அர்த்தமாகுமேயன்றி “களா” செய்யத் தேவையில்லை என்று விளங்கிக் கொள்ளலாகாது.
மூவரின் இரண்டாமவர் சிறுவன் ஆவான். அவனால் ஏற்படுகின்ற சொற் செயல்களுக்கு நன்மையுமில்லை, தண்டனையுமில்லை என்பதாகும். இதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அதாவது அவனுக்கு ஏவல், விலக்கல் கடமையாகும் வயது வரைதான் இந்தச் சலுகை. அதாவது 15 வயதுவரை மட்டுமே இச்சலுகை அவனுக்கு உண்டு.
மூவரில் மூன்றாமவர் பைத்தியக் காரன். அவன் அதிலிருந்து விடுபடும் வரை அவனுக்கு ஏவல், விலக்கல் இல்லை.
மூன்று பேர்களை விட்டும் பேனையை உயர்த்தப்பட்டதென்றால் அதன் விளக்கம் என்னவென்றும், அந்த மூன்று பேரும் யார் என்றும் அறிந்து கொண்டாலும் எனது இத்தலைப்புக்கு பொருத்தமானவர் முதலாம் நபர்தான். உறங்குபவர் விழிக்கும் வரை அவரின் நன்மை, தீமையும் எழுதப்படாமலிருப்பதற்கு காரணம் அவர் இந்த “துன்யா” என்ற உலகைவிட்டும் கனவுலகிற்குப் போனதேயாகும். கனவுலகம் ஏவல் விலக்கலுக்குரிய உலகம் அல்ல.
அந்த உலகின் தன்மை வேறு, “துன்யா” என்ற இவ்வுலகின் தன்மை வேறு.
கனவுலகின் தன்மை:
ومن شأن الخيال أنّ النائم يَرى فيه تجرُّدَ المعاني فى الصُّور المحسوسة، وتجسُّدَ ما ليس من شأنه أن يكون جسدًا، لأنّ حضـرته تُعطي ذلك، فما ثَمَّ أوسع من الخيال، قال : ومن حضـرته أيضاظهرَ وجودُ المُحال، فإنّك ترى فيه واجب الوجود الّذي لا يقبل الصُّورَ فى صورة ، ويقول لك مُعبّرُ المنام صحيحٌ ما رأيتَ، ولكنّ تأويلها كذا وكذا، فقد قَبِلَ المُحالَ الوجودُ، فى هذه الحضـرة، فإذا كان الخيالُ بهذه القوّةِ من التّحكّم فى الأمور من تجسُّدِ المعاني وجعلِه ما ليس قائما بنفسه وهو مخلوقٌ، فكيف بالخالق؟ وكيف يقول بعضهم إنّ الله تعالى غيرُ قادرٍ على خلق المُحال، وهو يشهد من نفسه قدرة الخيال على المحال،
அறபு வரிகளின் சுருக்கம்:
“ஆலமுல் கயால்” எனும் கனவுலகின் தன்மையிலுள்ளதே அவ்வுலகம் உருவமற்ற “மஆனீ” கருத்துக்களை உருவங்களில் காட்டுவதும், சடமற்றவைகளை சடமுள்ளவையாக காட்டுவதுமாகும். இவ்விரு விஷேடங்களும் கனவுலகிற்கு மட்டுமே உண்டு. கனவுலகின் தன்மை – அதன் இயற்கைச் சுவாபம் இவ்வாறுதான் இருக்கும். ஏனெனில் கனவுலகு போல் விசாலமான உலகம் இல்லவே இல்லை.
கனவுலகின் தன்மையில் உள்ளவற்றில் ஒன்று என்னவெனில் அசாத்தியமானதும் கூட அவ்வுலகில் சாத்தியமானதாக தோற்றும். “வாஜிபுல் வுஜூத்” ஆகிய அல்லாஹ்வுக்கு உருவம் இல்லாதிருந்தாலும் கூட கனவுலகில் அவனை உருவமுள்ளவனாக காட்டும் தன்மை அதற்கு உண்டு. ஒருவன் அல்லாஹ்வை கனவுலகில் ஏதாவதொரு உருவத்தில் கண்டு அவன் கனவுக்கு விளக்கம் கூறும் ஒரு மகானிடம் சென்று விளக்கம் கேட்டால் அவர் அவனுக்கு நீ கண்டது சரிதான் பிழையல்ல என்று சொல்வார். ஆயினும் அதன் விளக்கமும், வலிந்துரையும் இவ்வாறுதான் என்றும் சொல்வார்.
கனவுலகிற்கு உருவமில்லாத ஒன்றை உருவமுள்ளதாயும், சடமில்லாத ஒன்றை சடமுள்ளதாயும் காட்டும் சக்தி இருக்குமாயின் அவ்வுலகையே படைத்த அல்லாஹ்வுக்கு அந்த சக்தி இல்லையென்று எவ்வாறு சொல்ல முடியும்? ஒரு சக்தி படைப்புக்கு உள்ளதென்றால் அந்த சக்தி அதைப் படைத்தவனுக்கு இல்லையென்று எவ்வாறு சொல்ல முடியும்? ஸூபீ மகான்களின் கருத்தின்படி அல்லாஹ்வுக்கு அசாத்தியம் என்று ஒன்றுமில்லை. அவன் அசாத்தியமானதையும் செய்ய சக்தியுள்ளவனேதான். இந்த விடயத்தில் “அகீதா” உடையவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு. உரிய இடத்தில் விளக்கி வைப்போம்.
மேலே நான் அறபியில் எழுதிய வசனம் எனது வசனமுமல்ல. எனது கருத்துமல்ல.
இறையியல் மேதை, ஸூபிஸ ஞானக்கடல், அஷ் ஷெய்குல் அக்பர், அல் மிஸ்குல் அத்பர், அல்கிப்ரீதுல் அஹ்மர், அந்நூறுல் அப்ஹர் என்ற பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” என்ற ஞானக் களஞ்சியத்தின் 198ம் பாடத்தில் கூறிய மேற்கண்ட விளக்கத்தை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல் யவாகீத் வல் ஜவாஹிர்” எனும் நூல் முதலாம் பாகம் 115ம் பக்கத்தில் கூறியுள்ளார்கள்.
மேற்கண்ட கருத்தக்கள் காத்தான்குடி அப்துர் றஊப் சொன்ன கருத்தக்கள் அல்ல. சுமார் 800 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஞான உலகின் தாரகைகளான மேற்கண்ட இரு மேதைகளும் சொன்ன கருத்துக்களாகும்.
இவ்வாறான கருத்துக்கள் “ரித்தத்” எனும் மத மாற்றத்தை ஏற்படுத்துமென்று “பத்வா” வழங்குவோர் கருதினால் கருத்துக்குரியவர்களான மேற்கண்ட மேதைகளுக்கு “பத்வா” வழங்கிய பின்புதான் எனக்கு “பத்வா” வழங்க வேண்டும்.
மேற்கண்ட இரு இமாம்கள் பற்றியும் பொது மக்கள் அறிந்தால்தான் ஸுப்ஹானல்லாஹ்! இப்பேர்ப்பட்ட மகான்களா இவ்வாறான கருத்தைக் கூறியுள்ளார்கள் என்று அவர்கள் வியப்படைவார்கள். அதோடு எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று வழங்கப்பட்ட “பத்வா” அநீதியானதென்றும் விளங்குவார்கள்.
இது தொடர்பாக பின்வரும் பல தொடர்களில் விளக்கம் இடம் பெறும். தொடரும்……….