தொடர் – 10
அல்லாஹ்வை எந்த வகையிலும் காணவே முடியாதென்று கூறுவோர் தமது வாதத்திற்கு ஆதாரங்காளக முன் வைக்கும் ஆதாரங்களில் ஓர் ஆதாரம் தவிர மற்றெல்லா ஆதாரங்களுக்கும் மறுப்பாதாரங்கள் எழுதி விளக்கம் எழுதிவிட்டேன். ஒரேயொரு ஆதாரத்திற்கு மட்டுமே மறுப்பெழுத வேண்டும். அதையும் இதே தொடரில் எழுதுகிறேன்.
அவர்களின் ஆதாரம் பின்வருமாறு. لَنْ يَرَى أَحَدُكُمْ رَبَّهُ حَتَّى يَمُوْتَ உங்களில் எவரும் மரணிக்கும் வரை தனது “றப்பு” இரட்சகனான அல்லாஹ்வைக் காண முடியாது.
ஒருவன் மரணிக்கும் வரை அல்லாஹ்வைக் காண முடியாதென்றால் அவனைக் கனவிலும் காண முடியாது என்றே சொல்ல வேண்டும். அவனைக் கனவில் காண முடியுமென்று வந்துள்ள ஹதீதுகள் அனைத்தையும் மறுக்க வேண்டியேற்படும். அதோடு கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வைக் கனவில் கண்டதாக இமாம் தபறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவித்த ஹதீதையும் மறுக்க வேண்டும். அதோடு அந்த ஹதீதுக்கு ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கொடுத்த விளக்கத்தையும் மறுக்க வேண்டும்.
கனவுகளில் சிறந்தது ஒரு அடியான் தனது “றப்பு” இரட்சகனைக் கனவில் காண்பதாகும். அதையடுத்து தனது நபீயை காண்பதாகும். அதையடுத்து தனது பெற்றோர் முஸ்லிம்களாயிருந்தால் அவர்களைக் காண்பதாகும் என்ற நபீ மொழியையும் மறுக்க வேண்டும். .
எனவே, அல்லாஹ்வைக் காண முடியாதென்ற வாதத்தை விட்டு அவனைக் காண முடியும் என்ற முடிவை சரி காண வேண்டும்.
அல்லாஹ்வைக் காண முடியாதென்போர் மேற்கண்ட ஹதீதையும் ஆதாரமாகக் கூறுகிறார்கள். ஆயினும் இந்த ஹதீது மரணத்தின் பின் அவனைக் காண முடியுமென்று கூறுகிறது.
மரணத்தின் பின் விசுவாசிகள் அனைவரும் அவனைக் கண்டு களிப்பார்கள் என்பதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை. இதற்கு திருக்குர்ஆன் வசனங்களும், ஹதீதுகளும் ஆதாரங்காளக உள்ளன. ஆதாரங்கள் தொடராக வரும்.
رؤية الله جائزةٌ عقلا فى الدنيا والآخرة، لأنّ الباري سبحانه وتعالى موجود، وكلّ موجودٍ يصحُّ أن يُرى، فالباري عزّ وجلّ يصحُّ أن يُرى، لكن لم تقع فى الدنيا لغير نبيّنا صلّى الله عليه وسلّم،
அல்லாஹ்வை இவ்வுலகிலும், மறுவுலகிலும் கண்ணால் காண்பது ஆகும். அதாவது அது “அக்ல்” என்ற புத்தியில் முடியாதென்பதல்ல. ஏனெனில் எதெல்லாம் உளதாக இருக்கின்றதோ அதெல்லாம் பார்க்கப்படக் கூடியதாகும். இல்லாத ஒன்றை மட்டுமே பார்க்க முடியாது. இவ்வாறு “ழவ்உஸ்ஸிறாஜ்” நூலாசிரியர் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆயினும் உயர் மட்ட ஞான அடிப்படையில் இல்லாததையும் இருப்பதாகக் காண முடியும். சிருட்டிகள் – படைப்புக்கள் போன்று. படைப்புக்கள் எதார்த்தத்தில் இல்லாதவையே. ஆயினும் அவற்றைப் பார்க்க முடியும். அவை கண்ணுக்குத் தெரியும். இவ்வாறுதான் கானல் நீர், இருள் என்பனவுமாகும். இவையெல்லாம் அதமீ – عَدَمِيٌّ இல்லாதவை என்று ஞானிகள் சொல்வார்கள். அதாவது இவ்விரண்டுக்கும் எதார்த்தத்தில் “வுஜூத்” இருப்பு இல்லை என்பார்கள். அல்லாஹ்வை இவ்வுலகில் பார்க்க முடியுமாயினும் அவனை இவ்வுலகில் தலைக் கண்ணால் கண்டவர்கள் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மட்டுமேயாவார்கள். இதனால் மற்றவர்கள் காண முடியாதென்ற கருத்து வராது. முடியும். எனினும் எவரும் காணவில்லை.
அல்லாஹ்வை இவ்வுலகில் தலைக் கண்ணால் கண்டவர்கள் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மட்டுமாயிருந்தாலும் மற்றவர் எவருக்கும் அவ்வாறு காண்பது அசாத்தியமென்ற கருத்து வராது.
எனினும் விசுவாசிகள் அனைவரும் மறுமையில் தலைக் கண்ணால் காண்பார்கள் என்பதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது. இதுவே ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகளின் முடிவாகும். இதற்கு திருக்குர்ஆனிலும், நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அருள் மொழிகளிலும், மற்றும் “இஜ்மாஉ” எனும் மூலாதாரத்திலும் ஆதாரங்கள் உள்ளன.
அல்லாஹ் திருக்குர்ஆனில் لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ நல்லமல்கள் செய்பவர்களுக்கு “அல்ஹுஸ்னா” சுவர்க்கம் உண்டு. இன்னும் மேலும் ஒன்று உண்டு என்று கூறியுள்ளார்கள்.
فقد رُوي عن أنس قال: سُئل النبيُّ صلى الله عليه وسلّم عن هذه الآية، فقال لِلَّذِينَ أَحْسَنُوا العملَ فى الدنيا الْحُسْنَى، وهي الجنّة، وزيادةٌ، النَّظَرُ إلى وجه الرحمن جلّ جلالُه، وقولُه وجوهٌ يومئذ ناضرةٌ إلى ربّها ناظرة، وقوله لهم ما يشائون فيها ولَدَيْنَا مَزيدٌ، قال عليّ ابن أبي طالب وأنس بن مالك هو النظر إلى وجه الله عزّ وجلّ، فهذه الآياتُ مناديةٌ نداءً صريحا أنّ الله يُرى عِيانا بالأبصار فى الآخرة، وإذا جازت فى الآخرة جازت فى الدنيا لِتَسَاوِى الوقتين بالنّسبة إلى المرئيّ،
மேற்கண்ட
لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ
என்ற திரு வசனம் பற்றி நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் கேட்கப்பட்ட போது இந்த உலகில் நல்லவை செய்தவர்களுக்கு சுவர்க்கம் உண்டு. இன்னும் மேலதிகமாகவும் ஒன்று உண்டு என்று சொல்லப்பட்டது அவனின் திருமுகக் காட்சி என்றும் கூறினார்கள்.
மறுமையில் அல்லாஹ்வை முகக் கண்ணால் காணலாம் என்பதற்கான இன்னோர் ஆதாரம் சில முகங்கள் மறுமையில் சந்தோஷப்பட்ட நிலையில் அல்லாஹ்வைக் காணும் என்ற திரு வசனமாகும்.
சில முகங்கள் என்றால் சில விசுவாசிகள் என்று பொருள். இந்த மொழி நடை நாகரீகமான நடையாகும். அதாவது إطلاق الجزء وإرادة الكل ஒன்றின் – ஒரு வஸ்த்தின் ஒரு பகுதியை வெளிப்படையாகக் கூறி அந்தப் பகுதியை மட்டும் கருத்திற் கொள்ளாமல் அந்த வஸ்த்தையே முழுமையாக கருத்தில் கொள்வதாகும். இந்த நடை நாகரீகமான அறபு மொழி நடையில் உள்ளதாகும்.
இது எது போலென்றால் ஒருவரின் பெயர் குறித்து இன்னான் தலைமறைவு என்பது போன்றும், ஒருவன் தனது நண்பனிடம் நீ எனது வீட்டுக்கு வந்து முகத்தை காட்டியிருக்கலாம் என்று சொல்வது போன்றதுமாகும். தலை, முகம் என்ற சொற்களைக் கொண்டு முழுமையாக ஆட்களையே கருதப்பட்டுள்ளது. இந்த அடிப்படையிலேயே மேற்கண்ட திருவசனம் அருளப்பட்டுள்ளது.
அல்லாஹ்வை மறுமையில் முகக் கண்ணால் – தலைக் கண்ணால் காண முடியும் என்பதற்கான இன்னொரு ஆதாரம்
لَهُمْ مَا يَشَائُوْنَ فِيْهَا وَلَدَيْنَا مَزِيْدٌ
விசுவாசிகளுக்கு சுவர்க்கத்தில் அவர்கள் நாடியது கிடைக்கும். இன்னும் மேலதிகமாகவும் ஒன்று உண்டு என்று அல்லாஹ் திருக்குர்அனில் அருளியுள்ளான்.
மேலதிகமாக ஒன்று உண்டு என்பது அல்லாஹ்வின் திருக் காட்சி கிடைப்பதைக் குறிக்குமென்று அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களும், அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களும் கூறியுள்ளார்கள்.
மேற்கண்ட திருக் குர்ஆன் வசனங்கள் யாவும் விசுவாசிகள் மறுமையில் அல்லாஹ்வை முகக் கண்ணால் காண்பார்கள் என்பதற்கான ஆதாரங்களாகும். ஹதீதுகளின் ஆதாரங்கள் பின்னால் வரும்.
அல்லாஹ்வைக் காண முடியாதென்று சொல்வோர் தமது வாதத்தை நிறுவக் கூறிய ஆதாரங்களை எழுதி அவற்றுக்கான மறுப்பையும் மேலே எழுதியுள்ளேன்.
ஆயினும் ஒரு நபீ மொழிக்கு மட்டும் விளக்கம் எழுத தவறிவிட்டேன். அந்த நபீ மொழி இதோ!
لَنْ يَرَى أَحَدُكُمْ رَبَّهُ حَتَّى يَمُوْتَ
உங்களில் எவரும் மரணிக்கும் வரை அவரின் “றப்பு” இரட்சகனைக் காண முடியாது. இந்த நபீ மொழி ஓர் அடியான் மரணித்த பின் அல்லாஹ்வைக் காண்பான், ஆனால் அதற்கு முன்னர் காண மாட்டான் என்ற கருத்தை தருகிறது.
இங்கு ஆன்மிகத்துடன் தொடர்புள்ள ஒரு விளக்கம் உண்டு. அதாவது “மவ்து” மரணத்தில் இரண்டு வகையான மரணங்கள் உள்ளன. ஒன்று – “மவ்து ஹகீகீ” موت حقيقي எல்லோருக்கும் ஏற்படுகின்ற எதார்த்த மரணமாகும். மற்றது موت مجازي எதார்த்தமில்லாத ஆன்மீக மரணமாகும். இது பற்றி விரிவாக எழுத வேண்டுமாதலால் அடுத்த தொடரில் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்.