தொடர் – 11
மரணிக்குமுன் அல்லாஹ்வைக் காண முடியாதென்று கூறுவோர் மனக் கண்ணாலும் காண முடியாது, கனவிலும் காண முடியாதென்று கூறுவார்களாயின் அவர்களின் இக்கூற்றை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
ஒருவன் மரணிக்குமுன் அல்லாஹ்வைகனவில் காணலாம் என்பதையும், மனக் கண்ணால்காண முடியும் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்வோம். அதேபோல் “வஹ்ததுல் வுஜூத்” அடிப்படையில், எல்லாம் அவனே என்ற வகையில் மரணிக்கு முன் காணலாம் என்பதையும், அந்த அடிப்படையில் இப்போதும் கண்டு கொண்டே இருக்கிறோம் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
யார் எப்போது கண்டாலும், எவ்வகையில் கண்டாலும் ஒரு “மள்ஹர்” பாத்திரம் மூலமே காண முடியும். மரணித்த பின் காண்பதும் இவ்வாறுதான், ஆயினும் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மட்டுமே விண் பயணத்தின் போது “மள்ஹர்” எதுவுமின்றி நேரடியாகக் கண்டார்கள்.
أَخِيْ لَا تَنَالُ الذَّاتَ إِلَّا بِمَظْهَرٍ
சகோதரா! நீ அல்லாஹ்வின் “தாத்” அந்த மெய்ப் பொருளை எந்த ஒரு பாத்திரமுமின்றி பெற்றுக் கொள்ளமாட்டாய் என்று அறிவுரை வழங்கியுள்ளார்கள் ஞான மகான்கள். சங்கைக்குணமும், சற்குணமும் நிறைந்த ஷெய்கு அப்துர் றஷீத் மௌலானா வாப்பா அவர்கள் “தகறா” அடித்து றாதிபு செய்யும் போது وَلَسْتَ تَنَالُ الذَّاتَ مِنْ غَيْرِ مَظْهَرٍ என்று பாடியதை செவியேற்றவர்கள் பலர் உள்ளார்கள்.
எல்லாமே அவனாயிருக்க, நீயுமோ அவனாயிருக்கும் நிலையில் அவனை எங்கே தேடப் போகிறாய்? உன்னையும் பிரிந்து, உலகையும் பிரிந்தவனா அவன்? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدْ அவன் உனக்கு பிடரி நரம்பை விட – முதுகுமுள்ளை விட நெருங்கியுள்ளான் என்றால் உனக்கு அதன் கருத்துப் புரிகிறதா? அவன்தான் உன்னாக உள்ளான். நீ உனது அறியாமையினால் அவன் எங்கோ இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய்.
لَوْ زَالَ عَنْكَ أَنَا لَلَاحَ لَكَ مَنْ أَنَا
உன்னிலுள்ள “அன” நீங்கின் நான் யாரென்று உனக்குத் தெளிவாகும். “அன” என்று நான் குறிப்பிடுவது உன்னிடமுள்ள அகங்காரத்தையோ, ஆணவத்தையோ அல்ல. அது أَنَانِيَّةٌ – “அனானிய்யத்” எனப்படும். அதுவும் போகத்தான் வேண்டும். அதற்கு முதல் أَنِّيَّةٌ “அன்னிய்யத்” எனும் நான் ஒருவன் உள்ளேன் என்ற தன்னுணர்வு நீங்க வேண்டும். உன்னிடம் “நான்” இருக்கும் வரை நீ அவனாகமாட்டாய். “நான்” என்ற கருநாகத்தை அவன் என்கிற சூடு வைத்து அகற்று, விரட்டு.
கண்ணுக்குத் தெரிகின்ற ஒன்றை பார்க்கத்தானே முடியும்! கண்ணை விட்டும் மறைந்த ஒன்றைத்தானே நினைக்க முடியும்! அவன் “ளாஹிர்” வெளியாகி கண்ணுக்கு முன்னால் இருக்கும் நிலையில் அவனை நீ எவ்வாறு நினைப்பாய்? நினைக்காதே பார்!
இதனால்தான் ஸெய்யிதுல் ஆரிபீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொன்னார்களோ!
بِذِكْرِ اللهِ تَزْدَادُ الذُّنُوْبُ
وَتَنْمَحِقُ الْبَصَائِرُ وَالْقُلُوْبُ
فَتَرْكُ الذِّكْرِ أَفْضَلُ كُلِّ شَيْئٍ
وَشَمْسُ الذَّاتِ لَيْسَ لَهَا غُرُوْبُ
அல்லாஹ்வை நினைப்பதன் மூலம் பாவங்கள் அதிகமாகும்.
அகப் பார்வைகளும், கல்புகளும் மங்கி அழிந்து போகும்.
ஆகையால் “திக்ர்” செய்தலை – இறைவனை நினைப்பதை விடுவது எல்லாவற்றிலும் மேலானதாகும்.
ஏனெனில் “தாத்” – உள்ளமை என்ற சூரியன் மறைவதே இல்லை.
ஒன்று மறையாமலிருக்கும் நிலையில் அதாவது அது மறையாமல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் உனது அறியாமையினால் அது மறைந்திருக்கிறதென்று நீ நினைப்பது பாவமன்றி வேறென்ன? அல்லாஹ் ஆலமாக – அகில உலகமாக “தஜல்லீ” வெளியாகிக் காட்சி தந்து கொண்டிருக்கும் நிலையில் நீ அவனை மறைந்தவன் என்று நினைத்துக் கொண்டிருப்பது நீ நிரந்தரமாகப் பாவத்திலுள்ளாய் என்பதற்கு அதுவே ஆதாரமாகும்.
அவன் எப்போது வெளியானான் என்று சிந்திக்காதே! அவ்வாறு நீ சிந்தித்தால் அவன் வெளியாகுமுன் மறைந்திருந்தான் என்ற கருத்து வரச் சாத்தியம் உண்டு.
இவ்வுலகில் அல்லாஹ்வை முகக் கண்ணால் கண்டவர்கள் நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மட்டுமேதான். இதனால் வேறெவரும் காண முடியாதென்று கருத்து வராது. பின்வரும் விடயத்தை சற்று வதானத்தோடு படித்துப் பாரக்க வேண்டும்.
اختلفوا هل تجوز رُؤيته تعالى فى الدنيا يقظةً ومناما، فقال بعضُهم يجوز، وقال بعضُهم لا يجوز، دليلُ جوازِها فى اليقظة هو أنّ موسى عليه السّلام طلَبَهَا حيث قال أرني أنظر إليك، وهو عليه الصلاة والسلام لا يجهل ما يجوز ويمتنع عن ربّه عزّ وجلّ، ودليل المنع أنّ قوم موسى عليه السّلام طلبوها فعُوقبوا، قال تعالى فقالوا أرنا اللهَ جهرةً، فأخذتهم الصاعقة بظُلمهم، وقال الجلال المحلّي رحمه الله تعالى واعتُرض هذا بأنّ عقابهم إنّما كان لِعِنادِهم وتعنُّتِهم فى طلبها، لا لامتناعها، (اليواقيت، ج 1، ص 106 – 107 )
இவ்வுலகில் அல்லாஹ்வை விழிப்பிலும், கனவிலும் காணுதல் தொடர்பில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு. சிலர் அது சாத்தியம் என்றார்கள். வேறு சிலர் சாத்தியம் இல்லை என்றார்கள்.
சாத்தியம் என்றவர்கள் தமது வாதத்திற்கு – அதாவது விழிப்பில் காணலாம் என்பதற்கு ஆதாரமாக நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு சமயம் أَرِنِيْ أَنْظُرْ إِلَيْكَ இறைவா! உன்னை நான் பார்க்க வேண்டும், எனக்கு உன்னைக் காட்டுவாயாக என்று கேட்டதை ஆதாரமாகக் கூறுகிறார்கள்.
ஏனெனில் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு நபீ. ஒரு நபீ அல்லாஹ்வை அறிந்த மகானாகவே இருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு எது ஆகும்? எது ஆகாது, எது சாத்தியம், எது சாத்தியமாகாது? என்ற விபரம் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். தெரியாமலிருப்பதற்கு நியாயமில்லை. ஆகையால் அல்லாஹ்விடம் நபீயவர்கள் அவ்வாறு கேட்டதன் மூலம் அவ்வாறு கேட்கலாம் என்பதும், அது அல்லாஹ்வுக்கு சாத்தியமான ஒன்றுதான் என்பதும் விளங்கப்படுகின்றது. இதை ஆதாரமாகக் கொண்டு அல்லாஹ்வை இவ்வுலகில் காணலாம் என்று கூறுகிறார்கள்.
காண முடியாதென்று சொல்பவர்கள் இவர்களின் இந்த ஆதாரத்தை மறுத்து பின்வருமாறு கூறுகிறார்கள்.
அதாவது நபீ மூஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் அவர்களின் கூட்டத்தினர் أَرِنَا اللهَ جَهْرَةً எங்களுக்கு அல்லாஹ்வை பகிரங்கமாக காட்டுங்கள் என்று கேட்டார்கள். அப்போது அவர்கள் மீது அல்லாஹ்வின் வேதனை இறங்கியது.
فَقَالُوْا أَرِنَا اللهَ جَهْرَةً، فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ بِظُلْمِهِمْ
இந்த வரலாறு அல்லாஹ்வைக் காண முடியாதென்று கூறுகிறது. காட்டுங்கள் என்று கேட்டதினால்தான் அல்லாஹ்வின் தண்டனை அவர்கள் மீது இறங்கியது.
இந்த வரலாறை ஆதாரமாகக் கொண்டுதான் காண முடியாதென்பவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள்.
இதற்கு இமாம் ஜலாலுத்தீன் மஹல்லீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு விளக்கம் சொல்கிறார்கள். இந்த விளக்கம் மேலே நான் எழுதியுள்ள அறபு வசனத்தில் இடம் பெற்றுள்ளது.
நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தினர் நபீ முஸாவின் திருப் பொருத்தமின்றி மன முரண்டினாலும், அவர்களின் பிடிவாதத்தினாலும், நபீ மூஸாவை நையாண்டி பண்ணுவதற்காகவும் அவ்வாறு கேட்டார்களேயன்றி அல்லாஹ்வைக் காண வேண்டுமென்ற ஆசையால் கேட்கவில்லை. இதனால்தான் அல்லாஹ் அவர்களைத் தண்டித்தானேயன்றி அல்லாஹ்வைப் பார்க்க முடியாதென்ற கருத்தில் அவர்கள் தண்டிக்கப்படவில்லை. இவ்வாறு விளக்கம் கூறியுள்ளார்கள் இமாம் ஜலாலுத்தீன் அல்மஹல்லீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்.
ஆதாரம்: அல்யவாகீத்.
பாகம் 01, பக்கம்: 106 -107
இமாம் ஜலாலுத்தீன் மஹல்லீ அவர்களின் கருத்து அல்லாஹ்வைக் காணலாம் என்று கூறுபவர்களுக்கு சாதகமான கருத்தாகும்.
அல்லாஹ்வைக் காண முடியாதென்று கூறுபவர்கள் நான் ஏற்கனவே எழுதிக் காட்டிய
لَنْ يَرَى أَحَدُكُمْ رَبَّهُ حَتَّى يَمُوْتَ
உங்களில் எவரும் மரணிக்கும் வரை தனது இரட்சகனை காண முடியாது என்ற ஹதீதையும் தமது வாதத்திற்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள்.
இவர்களின் இக்கூற்றுக்கும் விளக்கம் சொல்லவிருந்தேன். எனினும் வேறு விடயங்களை எழுதியதால் அது தொடர்பாக எழுத முடியாமற் போயிற்று. இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் இந்த ஹதீதுக்கான விளக்கம் எழுதுவேன்.