தொடர் – 12
لَنْ يَرَى أَحَدُكُمْ رَبَّهُ حَتَّى يَمُوْتَ
உங்களில் எவரும் மரணிக்கும் வரை தனது “றப்பு” அல்லாஹ்வைக் காண முடியாது.
இந்த ஹதீது – நபீ மொழி மூலம் ஒருவன் மரணித்த பின் நிச்சயமாக அல்லாஹ்வை விழிப்பில் காண்பான் என்பது தெளிவாகிறது.
மரணத்தில் مَوْتٌ حَقِيْقِيٌّ எதார்த்த மரணம் என்றும், مَوْتٌ مَجَازِيٌّ செயற்கை மரணம் என்றும் இரண்டு வகையுண்டு.
எதார்த்த மரணம் என்று நான் குறிப்பிடுவது இயற்கை மரணமாகும். செயற்கை மரணம் என்று குறிப்பிடுவது ஆன்மிக மரணமாகும். இயற்கை மரணம் பற்றி அதிகம் எழுதத் தேவையில்லை. அது அனைவரும் அனுபவிக்க வேண்டிய மரணமேயாகும். அதன் பிடியிலிருந்து எவரும் தப்பிக் கொள்ள முடியாது.
செயற்கை மரணம் பற்றி மட்டும் ஆய்வு செய்து பார்ப்போம். செயற்கை மரணம் என்றால் அது தற்கொலை செய்தல் என்று சிலர் கருத இடமுண்டு. நான் அது பற்றி எழுதாமல் ஆன்மிக அடிப்படையில் மரணிப்பது எவ்வாறு என்பதை மட்டும் எழுதுகிறேன்.
ஆன்மிக அடிப்படையில் மரணித்தவனும் ஸூபீ மகான்களிடம் மரணித்தவனேதான். வெளியுலகின் பார்வையிலும், அவனின் மனைவி மக்களின் பார்வையிலும் அவன் உயிரோடுள்ளவன் போல் தோற்றினாலும் அவன் மரணித்தவன்தான்.
ஸூபீகளும், இறை ஞானிகளும் مُوْتُوْا قَبْلَ أَنْ تَمُوْتُوْا நீங்கள் மரணிக்குமுன் மரணித்து விடுங்கள் என்று கூறுவார்கள். அதாவது இயற்கை மரணம் வருமுன் ஆன்மிக அடிப்படையில் நீங்கள் மரணித்துவிடுங்கள் என்று முரீதுகளுக்கு அறிவுரை வழங்குவார்கள்.
இதன் விபரமென்னவெனில் அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் நிம்மதியாகவும், எந்தக் குறையுமின்றியும் உயிர் வாழ்வதற்கான சகல வாய்ப்பு வசதிகளையும் வழங்கியுள்ளான். ஐம்புலன்களையும், விஷேடமாக ஆறாவது புலனாக பகுத்தறிவையும் வழங்கியுள்ளான். இவைபோல் ஏழு தன்மைகளையும் வழங்கியுள்ளான். அவை “குத்றத்” சக்தி, “இறாதத்” நாட்டம், “ஸம்உன்” கேள்வி, “பஸறுன்” பார்வை, “கலாம்” பேச்சு, “இல்முன்” அறிவு, “ஹயாதுன்” உயிர் என்பனவாகும். இவையாவும் இறைவனுக்குரிய தன்மைகளேயன்றி மனிதனுக்குச் சொந்தமானதல்ல. அவற்றுக்கு உரிமையாளன் அல்லாஹ்தான். இதுவே உண்மையும், எதார்த்தமுமாகும். மனிதன் உயிர் வாழும் காலம் வரை இவையாவும் அவனுக்கு இருந்தால்தான் அவன் எக்குறையுமின்றி மகிழ்வோடும், மன நிம்மதியோடும் வாழ்வான். ஆறு புலன்களில் ஒன்று கெட்டாலும், அதேபோல் ஏழு தன்மைகளில் ஒன்று கெட்டாலும் அவன் குறையுள்ள உயிர்ப் பிராணிதான். அவன் உடலால் “இன்ஸான் காமில்” அல்ல.
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய புலன்களும், தன்மைகளும் அவன் உயிர் வாழும் காலம் வரை மட்டும் அவனுக்கு அல்லாஹ் இரவலாக வழங்கிய அருட்களாகும்.
இரவல் தந்தவன் என்றாவதொரு நாள் அதைக்கேட்பான். அதை அவன் கேட்குமுன்னே மனிதன் இதை உணர்ந்து அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்து தனக்கென்று எந்தவொரு புலனுமில்லை, எந்தவொரு தன்மையுமில்லை, தான் மரணித்த ஒரு சடலமேயன்றி எனக்கென்று ஒன்றுமில்லை, யாவும் அவனுக்குரியவை என்று அவனிடம் ஒப்படைத்தல் தான்செயற்கை மரணம் – “மவ்துன் மஜாஸீ” என்று சொல்லப்படும்.
அவற்றையெல்லாம் மனிதன் “திக்ர்”கள் மூலம் அல்லாஹ்விடம் ஒப்படைக்கலாம். உதாரணமாக மனிதன் தனது இரவல் தன்மைகளை ஒவ்வொன்றாக ஒப்படைத்தல் வேண்டும்.
உதாரணமாக இரவல் சக்தியை ஒப்படைப்பதற்கு لَا قَادِرَ إِلَّا اللهُ சக்தியுள்ளவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்றும், நாட்டத்தை ஒப்படைப்பதற்கு لَا مُرِيْدَ إِلَّا اللهُ நாடுபவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்றும், لَا سَمِيْعَ إِلَّا اللهُ கேட்பவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்றும், لَا بَصِيْرَ إِلَّا اللهُ பார்ப்பவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்றும், لَا عَلِيْمَ إِلَّا اللهُ அறிவுள்ளவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்றும், لَا مُتَكَلِّمَ إِلَّا اللهُ பேசுகின்றவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்றும், لَا حَيَّ إِلَّا اللهُ உயிருள்ளவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்றும் மேற்கண்ட ஏழு தன்மைகளையும் இரவல் தந்தவனிடம் ஒப்படைத்து தானொரு வெறும் சடலம் என்ற முடிவுக்கு வர வேண்டும். இவ்வுணர்வைப் பெற்றவன் மரணித்தவன்தான்.
இவ்வாறு மரணித்தவன் எதார்த்தத்தில் மரணித்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவான். இப்போது மேலே சொல்லி வந்த لَنْ يَرَى أَحَدُكُمْ رَبَّهُ حَتَّى يَمُوْتَ உங்களில் எவரும் மரணிக்கும் வரை தனது இறைவனைக் காணமாட்டான் என்ற நபீ மொழி இவ்வாறு மரணித்தவனுக்கும் பொருந்தும். இவன் மரணித்துவிட்டான். ஆகையால் இவனும் இறைவனை உயிருடன் இருக்கும் போதே கண்டு கொள்வான்.
உங்களில் எவரும் மரணிக்கும் வரை தனது இறைவனைக் காணமாட்டான் என்ற நபீ மொழியன் படி இவ்வாறு மரணித்தவரும் மரணித்தவராகவே கணக்கெடுக்கப்படுவார் என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இவர் மக்கள் பார்வையில் உயிரோடிருந்தாலும் அவர் அல்லாஹ்வை காண்பார் என்பதில் சந்தேகமில்லை.
قال النبي صلى الله عليه وسلم: مَنْ مَاتَ فَقَدْ قَامَتْ قِيَامَتُهُ
எவன் மரணிக்கின்றானோ அந்த நேரத்திலிருந்து அவனின் மறுமை நாள் ஆரம்பமாகிவிட்டதென்ற நபீ மணியின் அருள்வாக்கின் படி இவ்வாறு மரணித்தவனும் அதில் அடங்கிவிடுவான். இத்தகையோர் மக்களின் பார்வையில் இந்த துன்யாவில் இருந்தாலும் எதார்த்தத்தில் அவன் மறுமையிலேயே இருப்பான். மறுமையின் இன்ப சுகங்களையும் அனுபவிப்பான்.
مُوْتُوْا قَبْلَ أَنْ تَمُوْتُوْا
நீங்கள் மரணிக்குமுன் மரணித்து விடுங்கள் என்ற ஸூபீ மகான்களின் தத்துவம் போல் அவர்களின் இதோடு தொடர்புடைய இன்னொரு தத்துவமும் உண்டு. அது கூட இத்தத்துவத்தையே வலியுறுத்துகின்றது.
இத் தத்துவம் “ஹதீது” நபீ மொழி என்றும், ஸூபீ மகான்களின் தத்துவம் என்றும் சொல்லப்படுகின்றது.
مَنْ لَمْ يُوْلَدْ مَرَّتَيْنِ لَمْ يَدْخُلِ الْجَنَّةَ
இரு முறை பிறக்காதவன் சுவர்க்கத்தில் பிரவேசிக்கமாட்டான். ஸூபீகளில் அநேகர் இது “ஹதீது” என்று சொல்கிறார்கள். ஸூபீகள் ஒன்றை இது ஹதீது என்று சொல்லி ஸூபீகளல்லாத வேறெவரும் அது “ஹதீது” அல்ல என்று சொன்னால் ஸூபீகளின் பேச்சுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் ஸூபீகள் “இல்ஹாம்” என்ற நன்கொடை அறிவுஞானம் பெற்றவர்களாவர். நன்கொடை அறிவு அல்லாஹ் நேரடியாக அடியானின் கல்பில் உதிப்பாக்கும் அறிவாகும். அதில் தவறு இருக்காது. ஏட்டறிவில் – நூலறிவில் பிழை இருக்க சாத்தியமுண்டு. “இல்ஹாம்” மூலம் கிடைக்கின்ற அறிவில் பிழையிருக்கச் சாத்தியமே இல்லை.
இரு முறை பிறக்காதவன் சுவர்க்கம் செல்லமாட்டான் என்றால் ஒருவன் ஆன்மிக அடிப்படையில் மரணித்து மீண்டும் பிறக்காதவன்தான் இரு முறை பிறக்காதவனாவான். இவன் சுவர்க்கம் செல்ல முடியாது. அவன் தாயின் வயிற்றிலிருந்து பிறப்பது ஒரு முறை பிறப்பதைக் குறிக்கும். பின்னர் அவன் ஸூபிஸம், இறைஞானம் கற்று ஆன்மிக அடிப்படையில் மரணித்து மீண்டும் ஒரு முறை பிறப்பது இரண்டாம் முறை பிறப்பதைக் குறிக்கும்.
எனவே, தாயின் வயிற்றிலிருந்து பிறந்த ஒருவன் ஆன்மிக, ஸூபிஸவழி சென்று உண்மையை உணர்ந்து ஆன்மிக அடிப்படையில் மரணித்து பின் பிறந்தால் அவன் “பனா” நிலை அடைந்தவன்தான். இந்நிலை அடைந்தவனிடம் தீக்குணங்கள் எதுவுமே இருக்காது. அவன்தான் “இன்ஸான் காமில்” பூரணத்துவம் பெற்ற மனிதனாவான். இந்நிலை அடையாதவர் எவரும் பூரணத்துவம் பெற்ற மனிதராக முடியாது. பார்வையில் மட்டும்தான் அவன் மனிதனாவான். எதார்த்தத்தில் அவன் பேசாப் பிராணியாகவே இருப்பான்.
يَقُوْلُ السَّيِّدُ عَلِيْ رَضِيَ اللهُ عَنْهُ، نَظِّفْ مِرْآةَ قَلْبِكَ لِكَيْ يَتَجَلَّى فِيْهَا نُوْرُ جَمَالِ الْحَقِّ، فَيُغْنِيْكَ عَنِ الْعَالَمِ وَكُلِّ مَا فِيْهِ، وَتَتَوَهَّجْ بِدَاخِلِكَ نَارَ الْعِشْقِ الْإِلَهِيِّ، وَاللهِ مَا عُمْرُكَ مِنْ أَوَّلِ يَوْمٍ وُلِدْتَ فِيْهِ، بَلْ عُمْرُكَ مِنْ أَوَّلِ يَوْمٍ عَرَفْتَ اللهَ فِيْهِ،
ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“அல்லாஹ்வின் அழகின் ஒளி உன் உள்ளத்தில் வெளியாவதற்காக உன் உள்ளத்தை சுத்தமாக வைத்திரு. அவ்வாறு நீ வைத்திருந்து அதில் அவனின் அழகொளி வெளியானால் உனக்கு உலகமும் தேவையில்லை, அதிலுள்ளவையும் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டு விடும். நீ உன்னுள்ளே இறை காதல் என்ற விளக்கை ஏற்றி வை. அல்லாஹ்வின் மீதாணை. நீ, தாயின் வயிற்றிலிருந்து வெளியான நாள் முதல் உனது வயதைக் கணிக்காதே! கணக்கெடுக்காதே! நீ எப்போது அல்லாஹ்வை அறிந்தாயோ அந்த நாளிலிருந்தே உன் வயதைக் கணக்கெடுத்துக் கொள்”. என் உடலுக்கு வயது 78. என் உயிருக்கு வயது மொத்தத்தில் 40ஐக் கழித்துப்பார். ஒருவன் மரணிக்கும் வரை அல்லாஹ்வை காணமாட்டான் என்ற நபீ மொழிக்கான விளக்கம் முற்றுப் பெற்றது.