தொடர் – 2
“ஆலமுல் கயால்” அல்லது “ஆலமுல் மனாம்” என்றழைக்கப்படும் கனவுலகம் நாம் வாழும் “ஆலமுத் துன்யா” عالم الدنيا “ஆலமுத்துன்யா” அல்லது “ஆலமுல் அஸ்பாப்” عالم الأسباب என்றழைக்கப்படும் ஆலம் போல் ஓர் ஆலமேயாகும். அதாவது உலகமேயாகும்.
18 ஆயிரம் ஆலம், அல்லது 14 ஆயிரம் என்று இறைஞானிகள் கூறுகின்ற عَوَالِمْ ஆலம்களில் நாம் வாழும் “துன்யா” என்ற இவ் உலகமும், “ஆலமுல் கயால்” கனவுலகமும் அடங்கும்.
உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் இவ்வுலகை – துன்யாவை கண்டவர்கள்தான். ஆயினும் இவ்வுலகைக் கண்ட அனைவரும் கனவுலகைக் கண்டிருப்பார்கள் என்று திட்டமாகச் சொல்ல முடியாது. ஏனெனில் 85, 60, 30 வயதுகள் வரை வாழ்ந்து மரணித்தவர்களில் பலர் தமது வாழ்வில் ஒரு தரமேனும் கனவு காணவில்லை என்று என்னிடம் சொல்லியுள்ளார்கள். ஒருவர் எத்தனை வயது வரை வாழ்ந்து மரணித்தாலும் அவர் கனவு காணாமலிருக்க முடியும் என்பதற்கு இதுவே ஆதாரமாகும்.
அல்லாஹ் படைத்த ஆலங்கள் அனைத்தையும் கண்டவர்கள் ஆரிபீன் – அவ்லியாஉகளில் பலர் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். எனினும் நபீகட்கரசர் “அல்மள்ஹறுல் அதம்மு” அவர்கள் அனைத்து ஆலங்களுக்கும் பயணித்து காட்சிகளையும் கண்டவர்கள்தான் என்று என்னால் திட்டமாகச் சொல்ல முடியும்.
இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அவை அவற்றுக்குரிய இடங்களில் இடம் பெறும்.
எனினும் ஒன்றை மட்டும் சொல்ல முடியும். அதாவது அவர்கள் “அல் மள்ஹறுல் அதம்மு” اَلْمَظْهَرُ الْأَتَمُّ “பூரணக் கண்ணாடி” என்று உலகில் தோன்றிய அவ்லியாஉகளாலும், ஸூபிஸ மகான்களாலும் புகழப் பட்டிருப்பது நான் கூறிய கருத்துக்கு மறுக்க முடியாத ஆதாரமாகும்.
இதேபோல் இன்னுமொரு விடயத்தைக் கூறலாம். அதாவது நபீமார், வலீமார் உள்ளிட்ட உலகில் தோன்றிய அனைவரும் தமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுத்தான் பெற்றார்கள். ஆனால் நபீகட்கரசர் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தமது தேவைகள் யாவையும் கேட்காமலேயே பெற்றுக் கொண்டார்கள்.
இது தொடர்பில் இன்னுமொரு விடயத்தையும் கூறலாம். நபீமார், வலீமார், மற்றும் அனைவருக்கும் அல்லாஹ்தான் “கிப்லா” வாக இருந்தான். ஆயினும் நபீ பெருமான் அவர்கள் அல்லாஹ்விற்கும், மற்றும் நபீமார் உள்ளிட்ட அனைவருக்கும் “கிப்லா”வாக இருக்கின்றார்கள்.
ஸுப்ஹான மவ்லிதின் சிறிய “துஆ”வில் قِبْلَةُ الْوَاجِدِ وَالْمَوْجُوْدِ படைத்தவனுக்கும், படைப்புக்கும் நபீ பெருமானே “கிப்லா”வாக இருக்கின்றார்கள் என்று வந்துள்ள வசனம் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.
“துறையா” என்ற நட்சத்திரம் பூமிக்கு வெகு தூரத்தில் இருப்பது போல் “வுஜூத்” உள்ளமையை விட்டும் தூரத்தில் நிற்போர் மேற்கண்ட வசனங்களை வாசித்துவிட்டு என்னைத் தூற்றலாம். அல்ஹம்துலில்லாஹ். அந்தகனுக்கு ஆதவன் தெரியுமா?
قَدْ تُنْكِرُ الْعَيْنُ ضَوْءَ الشَّمْسِ مِنْ رَمَدٍ – وَيُنْكِرُ الْفَمُ طَعْمَ الْمَاءِ مِنْ سَقَمِ
கண்ணோவுள்ளவன் சூரியனுக்கு ஒளி இல்லை என்று கூறுவான். அதேபோல் நா விறைத்தவன் நீரில் ருசி இல்லை என்று சொல்வான். இவ்விருவரும் அவ்வாறு சொல்வதால் அவர்களைக் கோபித்து பயனில்லை. அவர்களோடு விவாதித்தும் பயனில்லை.
ஆனால் எவராயினும் “கிப்லா” என்ற சொல்லுக்கு அகராதிப் பொருள் என்ன? ஷரீஆ வின் பொருள் என்ன? நாட்டு வழக்கில் பொருள் என்ன? என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.
கனவில் அல்லாஹ்வை காணலாமா?
ஆம் காணலாம். காணப்படும் பொருள் உருவமுள்ளதாக இருக்க வேண்டுமே! உருவமில்லாத இறைவனை எவ்வாறு காண முடியும்? என்று வாசகர் ஒருவர் கேட்க நினைத்தால் இத் தொடர் முடியும் வரை வாசித்தபின் அவர் கேட்பது நல்லது.
اعلم أنّ الأصل فى صحّة الرؤية ما رواه الطبراني وغيره مرفوعا رأيتُ اللّيلة ربّي فى صورة شابٍّ أمرد قطط له وفرة من شعر، وفى رجليه نعلان من ذهب، الحديث، قال الحافظ السيوطي رحمه الله وهو حديث صحيح، قال الشيخ محي الدين ابن عربي فى الباب الأحد وثمانين وثلاثمأة فى الفتوحات المكيّة قد اضطربت عقول العلماء فى معنى هذا الحديث وفى صحّته، فَنَفَاهُ بعضُهم،وأثبته بعضُهم، وتوقّفَ فى معناه وأوّله، ولا يحتاج الأمر إلى تأويل، فإنّه صلّى الله عليه وسلّم إنّما رأى هذه الرؤيا فى عالم الخيال، الّذي هو النّوم،
அல்லாஹ்வை கனவில் ஏதேனுமோர் உருவத்தில் காண முடியும் என்பதற்கான அடிப்படை ஆதாரம் ஹதீதுக் கிரந்தங்களில் ஒன்றான தபறானீ என்ற நூலில் இமாம் தபறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிய பின்வரும் “ஹதீது” அருள் மொழியாகும்.
ஹதீது:
قال النبي صلّى الله عليه وسلّم:رأيتُ اللّيلة ربّي فى صورة شابٍّ أمرد قطط له وفرة من شعر، وفى رجليه نعلان من ذهب،
இன்றிரவு எனது “றப்பு” இறைவனைக் கண்டேன். அவன் முகத்தில் முடி முளைக்காத இளைஞனின் தோற்றத்தில் இருந்தான். அவனுக்கு அடர்ந்த முடி இருந்தது. அவனின் இரு கால்களிலும் தங்கச் செருப்புக்கள் இரண்டு இருந்தன என்று அருளினார்கள்.
இமாம் அல்ஹாபிள் அஸ்ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இது “ஸஹீஹ்” சரியான, பலமான ஹதீது என்று சொல்லியுள்ளார்கள்.
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “புதூஹாதுல் மக்கிய்யா” எனும் நூல் 381ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(இந்த ஹதீதின் பொருளிலும், இது “ஸஹீஹ்” சரியானதா? இல்லையா? என்பதிலும் மார்க்க அறிஞர்களான உலமாஉகளின் புத்திகள் தடுமாறித் தடம் புரண்டு போயின. அவர்களிற் சிலர் இது ஹதீதில்லை என்றார்கள். இன்னும் பலர் ஹதீதுதான் என்று கூறினார்கள். இன்னும் சிலர் இதற்கு வலிந்துரை கொண்டு விளக்கம் எடுத்தார்கள். இன்னும் சிலர் இது தொடர்பாக ஒன்றுமே பேசாமல் மௌனிகளானார்கள். உண்மையில் வலிந்துரை கொள்வதற்கோ, அது ஹதீதில்லை என்று சொல்வதற்கோ எந்த ஒரு தேவையுமில்லை. ஹதீது வந்துள்ளபடியே பொருள் கூறி விளக்கம் பெறலாம் என்று இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிவிட்டு பின்வருமாறு விளக்கம் சொல்கிறார்கள். அதாவது நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மேலே சொன்னது போல் கண்டது விழிப்பில் அல்ல. கனவிலேயே கண்டார்கள்)
விழிப்பில் மட்டும் கண்டார்கள் என்றால்தான் சிக்கல்களும், பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் இது ஹதீதா? இல்லையா? என்ற வாதமும் ஏற்படும்.
நான் காத்தன்குடியில் இது தொடர்பாகப் பல வருடங்களுக்கு முன் பேசிய ஒரு CD எப்படியோ வெளியூர்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. அவ்வூர் இளம் மௌலவீமார்களிற் சிலர் ஒரு நாளிரவு இஷா தொழுகையின் பின் கடற்கரை சென்று அதைச் செவிமடுப்பதற்காக கோழி புரியாணியும் ஒழுங்கு செய்து கடற்கரைக்குச் சென்றுள்ளார்கள். அவர்களில் 65 வயதுள்ள, ஹார்ட் நோயாளி ஒருவரும் இருந்துள்ளார்.
மேற்கண்ட இந்த ஹதீதை அவர் செவியேற்றவுடன் அவருக்கு மயக்கம் வந்துள்ளது. மற்றவர்கள் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை செய்த பின் சுகம் பெற்றுள்ளார். அத்துடன் இடையில் வந்த மீனவன் ஒருவன் CD சாமான்களையும், புரியாணி பார்சல்களையும் திருடிச் சென்றுள்ளான்.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கனவில்தான் அவ்வாறு கண்டார்கள் என்று முடிவு செய்தால் எந்தவொரு சிக்கலும் வராது. இந்த உண்மையை விளங்கிய ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கனவுலகின் தன்மைகளை விளக்கி வைத்து சிக்கல்களைத் தீர்த்து வைத்துள்ளார்கள். அவர்கள் கொடுத்த விளக்கமே நான் தொடர் 01ல் அறபு மொழியில் எழுதி தமிழில் விளக்கம் கொடுத்துள்ளதாகும். அதை மீண்டும் எழுதத் தேவையில்லை. தேவையானோர் தொடர் 01ல் கனவுலகின் தன்மை என்ற தலைப்பை பார்க்க வேண்டும்.
சுருக்கமென்னவெனில் கனவுலகு என்பது வித்தியாசமான ஓர் உலகமாகும். அவ்வுலகில் உருவமில்லாத ஒன்றை உருவத்தில் காணலாம். அதேபோல் சடமில்லாத ஒன்றை சடமுள்ளதாகவும் காணலாம். இல்லாத ஒன்றை இருப்பதாகவும் காணலாம். அசாத்தியமான ஒன்றை சாத்தியமானதாகவும் காணலாம். இன்னும் இதன் விபரங்கள் உதாரணங்களோடு பின்னால் வரும்.
இடையில் ஒரு சம்பவம்:
1985ம் ஆண்டளவில் நான் இந்தியாவுக்குச் சென்ற சமயம் அன்மையில் நான் 2000 பக்கங்களில் வெளியிடவுள்ள “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற நூலின் கையெழுத்துப் பிரதியை எடுத்துச் சென்று தமிழ் நாட்டில் சிலரிடம் கையெழுத்து எடுத்தேன்.
நாகூரில் உள்ள உலமாஉகள், அதை உலமாஉகளான நாங்கள் ஒன்று சேர்ந்து படித்துப் பார்க்க வேண்டுமென்று கூறினார்கள். அதற்கான ஏற்பாடும் அவர்களே செய்தார்கள். அது றமழான் காலமாயிருந்ததால் “தறாவீஹ்” தொழுகையின் பின் தைக்காப் பள்ளியொன்றில் உலமாஉகள் கூடி வாசித்துப் பார்த்த பின் கையெழுத்திட்டார்கள். உலமாஉகளின் தலைவர்களாக மதிப்புக்குரிய யாஸீன் ஹஸ்றத் அவர்களும், சங்கைக்குரிய முஹம்மது பாகர் ஆலிம் காதிரீ அவர்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த நூலில் இந்தியாவில் குத்புஸ்ஸமான் என்று எல்லா உலமாஉகளாலும் அழைக்கப்பட்டு வந்த அதிசங்கைக்குரிய அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அவர்களின் ஒப்பமும் உள்ளது. இதற்கு ஒரு வரலாறு உண்டு. பின்னர் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்.