தொடர் – 4
கடந்த 03ம் தொடரில் கனவில் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றவர்கள் போலன்றி நீளமான கமீஸ் – ஷேட் அணிந்து வந்ததை நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் தங்களின் கனவில் கண்ட செய்தியை தோழர்களிடம் சொன்ன போது அல்லாஹ்வின் றஸூலே! அந்தக் கனவுக்கு என்ன விளக்கம் என்று கேட்டார்கள். அது ஈமான் – நம்பிக்கைக்கு உதாரணம் என்றார்கள்.
“ஈமான்” எனும் நம்பிக்கைக்கு எதார்த்தத்தில் உருவம் இல்லை. உருவமில்லாத ஒன்று கனவுலகில் அதற்குப் பொருத்தமான உருவத்தில் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறுதான் உருவமில்லாத “குப்ர்” நிராகரிப்பாகும். இதற்கும் உருவமில்லை. இன்னும் அது கனவுலகில் இருள் உருவத்தில் காட்டப்படும். இவ்வாறுதான் உருவமில்லாத சிறப்பு, கௌரவம் என்பவையுமாகும். இவை கனவுலகில் குதிரையின் உருவத்திலும், உருவமில்லாத திருக்குர்ஆன் முத்தின் உருவத்திலும், உருவமில்லாத நேர்வழி ஒளி உருவத்திலும், உருவமற்ற வழிகேடு குருடு உருவத்திலும் கனவுலகில் காட்டப்படும்.
“கமீஸ்” ஷேட், இருள், குதிரை, முத்து, ஒளி, குருடு என்பன ஈமான் என்ற விசுவாசத்திற்கும், “குப்ர்” இறை மறுப்பிற்கும், சிறப்பு, கௌரவத்திற்கும், திருக்குர்ஆனுக்கும், நேர்வழிக்கும், வழிகேட்டிற்கும் கனவுலகில் காட்டப்பட்ட உதாரணங்களேயன்றி நிகர்களல்ல.
இவ்வடிப்படையில், முகத்தில் முடி முளைக்காத, அடர்ந்த முடியுள்ள, கட்டழகனான, இரு கால்களிலும் தங்கச் செருப்புக்கள் அணிந்தவனாக பெருமானார் கனவில் கண்டது அல்லாஹ்வையேயன்றி வேறு யாரையுமல்ல. ஏனெனில் குறித்த அந்த ஹதீதில் رأيتُ ربِّيْ எனது இரட்சகனான அல்லாஹ்வைக் கண்டேன் என்றுதான் கண்மணி நாயகம் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.
இங்கு ஷரீஆவுக்கோ, அகீதா – கொள்கை கோட்பாட்டுக்கோ முரணான எதுவுமே இல்லை. இந்த அமைப்பில் விழிப்பில் கண்டதாக நபீ பெருமான் சொல்லவில்லை. விழிப்பில் கண்டதாகச் சொல்லியிருந்தால் மட்டும் அந்த ஹதீது பற்றி ஆராயவும், சிந்திக்கவும் வேண்டும். கனவில் கண்ட செய்தியை வைத்துக் கொண்டு பயப்படுவதும், மயங்கி விழுவதும் அறியாமையும், விளக்கமின்மையுமேயாகும்.
அஷ் ஷெய்குல் அக்பர் نَوَّرَ اللهُ مَرْقَدَهُ அர்கள் அதை ஹதீது இல்லையென்று சொல்லாமலும், “அகீதா” கொள்கைக்கு முரணில்லாமல் கனவுலகைக் காரணம் காட்டி விளக்கம் சொல்லியிருப்பதும் அவர்கள் “இல்ஹாம்” என்ற அறிவு வழங்கப்பட்டவர்கள் என்பதற்கு வெளிப்படையான ஆதாரமாகும்.
“பத்வா” வழங்கியோர் தமது “பத்வா” நூலில் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகமவர்களை ஏற்றுக் கொண்டுள்ளதால் அவர்களின் இக் கூற்றையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
அல்லாஹ்வை அழகிய வாலிபனின் உருவத்தில் கண்டேன் என்ற ஹதீதை உலமாஉகளில் யாராவது பேசுவதாயிருந்தால் மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளாத வகையில் விளக்கமாகச் சொல்ல வேண்டும். கனவுலகின் தன்மைகளை ஆதாரத்தோடு எடுத்துக் கூறி விபரமாகக் கூற வேண்டும். அவ்வாறு கூறத் தெரியாதவர்கள் இந்த ஹதீது பற்றிப் பேசாமல் விடுவதே சிறந்ததாகும்.
புதிதாகத் தோன்றிய சில இளம் இறைஞானிகள், ஷெய்குமார்கள், ஸாதாத்மார்கள், தங்கள்மார்கள் நான் எழுதும் இவ்வாறான கருத்தக்களில் பிழை கண்டால் என்னிடம் இதற்கான ஆதாரங்களையும், விளக்கங்களையும் கேட்காமல் இவர் எழுதுவதும், பேசுவதும் பச்சப் பிழையென்று பிரச்சாரம் செய்தார்களாயின் அவர்கள் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் ஹதீதை மறுத்தவர்களாகிவிடுவார்கள். நான் ஹயாத்தோடுதான் இருக்கிறேன். யாரும் என்னைச் சந்திக்க வரலாம். விளக்கம் கேட்கலாம்.
مَنْ أَرَادَ أَنْ يَعْرِفَ عَقِيْدَةَ وَحْدَةِ الْوُجُوْدِ أَوْ عَقَائِدَ الصُّوْفِيَّةِ الصَّافِيَةِ فَلْيَزُرْنِيْ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ، وَإِنَّ بَابِيْ مَفْتُوْحٌ لِمَنْ أَخْلَصَ نِيَّتَهَ وَقَصْدَهُ وَغَرَضَهُ، وَطَهَّرَ قَلْبَهُ مِنَ الْأَخْلَاقِ الْمَذْمُوْمَةِ كَالْكِبْرِ وَالْعُجُبِ، وَزَكَّا نَفْسَهُ مِنَ الْأَنِّيَّةِ وَالْأَنَانِيَّةِ وَالْغَيْرِيَّةِ،
قال الشيخ محي الدين ابن عربي فى الفتوحات، ونقل قوله الشعراني فى كتابه اليواقيت ، والذي عليه جمهور مشائخ السلف رضي الله عنهم أنّه يجوز رؤية الله في صورة في المنام، وبه جائت الاحاديث نحو قوله صلّى الله عليه وسلّم خير الرّؤيا أن يرى العبد ربّه في منامه أو يرى نبيّه أو يرى أبويه إن كانا مسلمين، وقوله صلّى الله عليه وسلّم رأيت ربّي في أحسن صورة الحديث، وقال محمّد بن سيرين من رأى ربّه في المنام دخل الجنّة،
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” எனும் நூலில் கூறியதை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல்யவாகீத் வல் ஜவாஹிர்” முதலாம் பாகம் 107ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(முன்னோர்களில் அநேகர் அல்லாஹ்வை கனவில் ஏதாவதோர் உருவத்தில் காணலாம் என்று கூறியுள்ளார்கள். இதற்கு நபீ மொழிகள் ஆதாரங்களாக உள்ளன. நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், “கனவுகளில் சிறந்தது அடியான் தனது “றப்பு” இரட்சகனை கனவில் காண்பதாகும். அதையடுத்து அவனின் நபீ அவர்களைக் காண்பதாகும். அதையடுத்து அவனின் பெற்றோர் இருவரும் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களைக் காண்பதாகும்” என்று அருளியுள்ளார்கள். இன்னும் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், “எனது “றப்பு” இரட்சகனை அழகிய உருவத்தில் கண்டேன்” என்றும் கூறியுள்ளார்கள். இமாம் முஹம்மத் இப்னு ஸீரீன் றஹிமஹுல்லாஹ் அவர்கள், “ஓர் அடியான் தனது “றப்பு” இரட்சகனை கனவில் கண்டால் அவன் சுவர்க்கம் சென்றுவிட்டான்” என்று கூறியுள்ளார்கள்)
ஆதாரம்: அல்யவாகீத்
பாகம்01, பக்கம் 107
ஓர் அடியான் காணும் கனவுகளில் மிகச் சிறந்தது அவன் தனது “றப்பு” இறைவனைக் காண்பது என்று நபீகளார் கூறியுள்ளார்கள்.
கனவுலகில் யார் யாரைக் காண்பதாயினும் காணப்படுபவருக்கு அல்லது காணப்படும் பொருளுக்கு “ஸூறத்” உருவம் இருந்தால்தான் காண முடியும். உருவமில்லாத ஒன்றைக் காண்பது அசாத்தியம். இது பற்றி கடந்த பதிவுகளில் விளக்கமாக எழுதியுள்ளேன். வாசிக்கத் தவறியவர்கள் அவற்றை வாசித்துக் கொள்ளட்டும்.
கனவில் அல்லாஹ்வைக் காண்பது பெரும் பாக்கியம் என்பது இந்த நபீ மொழி மூலம் வளங்குகிறது. கண்டவன் சுவர்க்கம் செல்வதில் சந்தேகமில்லை. இப்பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்கின்ற ஒன்றல்ல. அவனைக் காண வேண்டும் என்ற ஆசை அல்லது விருப்பம் ஒருவனுக்கு இயற்கையாகவே வர வேண்டும். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதற்காக அந்த விருப்பம் வருவது எதார்த்தமல்ல.
ஓர் அடியான் தான் யார்? தனக்கு மூலம் எது? தனக்கு கரு எது என்று ஆய்வு செய்து தனக்கு அல்லாஹ்தான் கரு என்பதை அறிந்தால் அவன் மீது அன்பும், பாசமும் தானகவே வந்து விடும். இரத்த பாசத்தின் தன்மை இவ்வாறுதான். பெற்றோர் மீது பிள்ளைக்கு வருகின்ற பாசம் இரத்த பாசமாகும். வேறெவரும் சொல்லி வருகின்ற பாசமல்ல. அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமுள்ள “தாதிய்யத்”தான கருவோடு சம்பந்தப்பட்ட பாசம்தான் உண்மையான பாசமாகும். அவ்வாறான பாசம் வருவதாயின் அடியான் தான் யாரென்றும், எங்கிருந்து வந்தவன் என்றும் அறிந்தால் மட்டுமே அந்தப் பாசம் வரும். பாசம் வந்தால் அவனைக் கனவில் காணலாம்.
கனவில் எந்த உருவத்தில் நாம் கண்டாலும் அந்த உருவத்தை அவனுக்கு நிகரானதென்று கருதிவிடலாகாது. அது ஓர் உதாரணம் என்றே விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வுக்கு நிகர் இல்லை. எனினும் அவனுக்கு உதாரணம் உண்டு. ليس كمثله شيئ அவனைப் போல் எதுவுமில்லை என்ற திரு வசனமும், ولم يكن له كفوا أحد அவனுக்கு நிகராக எவருமில்லை என்ற வசனமும் அல்லாஹ்வுக்கு நிகர் இல்லையென்றுதான் கூறுகின்றனவே அன்றி அவனுக்கு உதாரணம் இல்லையென்று கூறவில்லை. நிகர் என்பது வேறு. உதாரணம் என்பது வேறு. இவ்விரண்டுக்குமிடையே உள்ள வித்தியாசம் தெரிந்தவன் அல்லாஹ்வுக்கு நிகர் இல்லையென்றும், உதாரணம் உண்டு என்றும் பயமில்லாமல் சொல்வான். அல்லாஹ் திருமறையில் وَللهِ الْمَثَلُ الْأَعْلَى அல்லாஹ்வுக்கு உயர்வான உதாரணம் உண்டு என்றுதான் சொல்லியுள்ளானே அன்றி உதாரணம் இல்லையென்று சொல்லவில்லை.
எனவே, இவ்விரண்டுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை நாம் அறிந்து கொண்டால்தான் தெளிவு கிடைக்கும். இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் வித்தியாசம் தெளிவாகும்.
தொடரும்…..