தொடர் – 6
قال الشيخ محي الدين ابن عربي قُدّس سـرّه فى الباب الرابع والستّين من الفتوحات المكيّة، اعلم أنّه لا ينبغي لمسلم أن يتوقّف في رؤية الله تعالى في المنام، لأنّه لاشيئ في الأكوان أوسعَ من عالَم الخَيال، وذلك أنّه يحكم بحقيقته على كلّ شيئ وعلى ما ليس بشيئ، ويُصوّر لك العدمَ المحضَ والمُحالَ والواجبَ فضلا عن الممكن، ويجعل الوجود عدما والعدمَ وجودا، ويُريك العلم لبنا والإسلام قُبّة والثباتَ في الدين قيدا، وقال دليلنا فيما قلنا قوله تعالى فأينما تُولّوا فثمّ وجه الله ووجهُ الشيئ حقيقتُه وعينه، فقد صوّر الخيالُ من يستحيلُ عليه بالدّليل العقليّ الصورةَ والتصوير، فعُلم أنّ ما جاز وقوعُه فى المنام والدّار الآخرةِ جاز وُقوعُه وتعجيلُه لمن شاء فى اليقظة والحياة الدّنيا، (اليواقيتـ ج 1، ص 108)
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் “பத்வா” குழு எனக்கு எதிராக வெளியிட்ட பத்வாவில் அவர்கள் ஏற்றுக் கொண்ட இமாம்களின் பட்டியலில் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு, அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ், இமாம் முஹம்மத் அல் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் ஆகியோரையும் இணைத்துக் கொண்டது எனக்கும், ஸூபிஸ சமுகத்துக்கும் சாதகமானதும், அவர்களுக்குப் பாதகமானதும் என்று “முர்தத் பத்வாவும், முல்லாக்களின் சதிகளும்” என்ற தொடரில் எழுதியுள்ளேன்.
அவர்களில் இமாம் ஙஸ்ஸாலீ அவர்களின் கொள்கை “எல்லாம் அவனே” என்ற கொள்கையாகும் என்பதை ஆதாரங்களுடன் நிறுவியிருந்தேன். அதைத் தொடர்ந்து இப்னு அறபீ அவர்களும் அதே கொள்கையுடையவர்கள்தான் என்று அவர்களின் பாடல் ஒன்றை ஆதாரமாகக் கூறி விளக்கி வைத்தேன். இன்னும் தொடர்ந்து அவர்கள் யாரென்று பல தொடர்களில் எழுதவும் உள்ளேன். இதோ இத்தலைப்பிலும் அவர்களின் கருத்துக்களையே எழுதுகிறேன்.
மேற்கண்ட அறபு வரிகளின் சுருக்கம்:
அஷ் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் அல்புதூஹாதுல் மக்கிய்யா என்ற நூல் 64ம் பாடத்தில் கூறியுள்ள தத்துவத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
(எந்தவொரு முஸ்லிமும் அல்லாஹ்வைக் கனவில் காணும் விடயத்தில் சந்தேகம் கொள்ளக் கூடாது. ஏனெனில் அல்லாஹ் படைத்த 18 அல்லது 14 ஆலங்களில் – உலகங்களில் கனவுலகம் போன்ற ஒரு விசாலமான உலகத்தைப் படைக்கவே இல்லை. அது ஒரு விசித்திரமான, வியப்பான உலகமாகும்.
அவ் உலகம் உள்ளதை உள்ளதாகவும், இல்லாததை உள்ளதாகவும் காட்டும் தன்மையுள்ளதாகும். ஒவ்வொரு வஸ்த்துவின் எதார்த்தத்தையும் அவ்வாறே காட்டும். எதார்த்தமில்லாத எதையும் எதார்த்தமுள்ளதாகவும் காட்டும். “வாஜிபுல் வுஜூத்” ஆன அல்லாஹ் இருப்பதாகவும் காட்டும். இல்லாததாகவும் காட்டும். உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ளதாகவும் காட்டும். இத்தகைய ஒரு விசித்திரமான, வியப்பான உலகமாகும்.
அறிவை பாலின் உருவத்திலும், இஸ்லாம் மார்க்கத்தை “குப்பா” ஒரு “டோம்” உருவத்திலும், மார்க்கத்தில் நிலை பெற்றிருப்பதை கை விலங்கின் உருவத்திலும் காட்டும்.
இவ்வாறெல்லாம் அது காட்டும் என்பதற்கு நாம் கூறும் அதாரம், நீங்கள் எங்கு நோக்கினாலும், எங்கு பார்த்தாலும் அல்லாஹ்வின் முகம்தான் அங்கு உள்ளது என்ற திருமறை வசனமேயாகும். ஒரு வஸ்த்தின் முகம் என்பது அவ் வஸ்த்துவையே குறிக்கும். அதாவது அவ் வஸ்த்தை முழுமையாகவே குறிக்கும். கனவுலகம் என்பது உருவமில்லாத இறைவனை உருவத்தில் காட்டும்.
எனவே, எதுவெல்லாம் கனவுலகிலும், மறுமையிலும் நடக்குமோ அது இந்த “துன்யா” என்ற இவ்வுலகிலும், விழிப்பிலும் அல்லாஹ் நாடியவர்களுக்கு நடக்கவே செய்யும்)
அல்யவாகீத், பாகம்01, பக்கம் 108
கனவுலகின் தன்மைகளும், அதன் விசித்திரங்களும், வியப்பான நடவடிக்கைகளும் கனவுக்கு விளக்கம் கூறும் மகான்களுக்கு மட்டுமே நன்றாகத் தெரியும்.
“தஃபீறுல் மனாம்” تعبير المنام கனவுக்கு விளக்கம் சொல்லுதல் தனிப்பட்ட ஒரு கலை. அது எல்லோராலும் முடியாத ஒன்றாகும். ஒருவர் ஆலிமாக, அல்லது ஹஸ்றத்தாக இருப்பதால் அவருக்கு கனவுக்கு விளக்கம் சொல்ல முடியும் என்பது கருத்தல்ல.
تعطير الأنام فى تعبير المنام
என்று அறபியில் ஒரு நூல் உண்டு. அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு நல்ல மனிதன் அப்படியொரு நூலை எழுதி வைத்துள்ளார். அதில் ஒருவன் காணும் கனவுக்கு அவரின் அனுபவத்திற்கும், அறிவுக்கும் ஏற்றவாறு அவர் எழுதி வைத்திருக்கிறார். ஆயினும் அறபு மொழியில் எழுதப்பட்ட நூல்கள் எல்லாம் சரியானவை என்பது கருத்தல்ல.
நான் அறிந்தவரை ஒருவன் காணும் கனவுக்கு உரிய முறைப்படி விளக்கம் சொல்லும் ஆற்றல் “விலாயத்” ஒலித்தனம் பெற்ற, மனோ தத்துவத்தோடு தொடர்புள்ள ஒருவருக்கு மட்டுமே உண்டு.
ஸூபிஸமும், கனவுலகின் எதார்த்தமும் தெரியாத ஓர் ஆலிமிடம் ஒருவன் சென்று, “நான் நேற்றிரவு அல்லாஹ்வை கனவு கண்டேன். அவன் ஒரு கதிரையில் இருக்கிறான். ஸுப்ஹானல்லாஹ்! அந்தக் கதிரையோ விலையுயர்ந்த மாணிக்கம், மரகதம், வைடூரியம் போன்ற இரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தது. ஒளியென்றால் சொல்லி வேலையில்லை. என் கண்கள் மங்கிப் போச்சு” என்று சொல்லி இதன் விளக்கம் என்னவென்று கேட்டால் அவர் நான் மேலே குறிப்பிட்ட ஆலிமாக இருந்தால் “அஸ்தஃபிறுல்லாஹல் அளீம்” இது ஷெய்தானின் கனவு. அல்லாஹ்வுக்கு உருவமில்லை. உருவமில்லாதவனை உருவத்தில் காண்பதெவ்வாறு? உன்னில் ஷெய்தான் நிற்கிறான் போலிருக்கிறது. நாளைக்கு வா. ஒரு இஸ்ம் தருகிறேன். அதை வெள்ளி அரைக் கூடில் போட்டு கழுத்தில் கட்டிக் கொள் என்று அனுப்பிவிடுவார். மறுநாள் அவன் அவரிடம் போனால் ஏதோ ஒன்றைக் கொடுத்துவிட்டு அவன் கொடுப்பதை நைஸாக பொக்கட்டில் வைத்துக் கொள்வார்.
இந்த ஆலிம் எவ்வாறானவர் என்றால் “கனவுலகு காட்டும் காட்சிகள்” என்ற தலைப்பில் தொடர் 05ல் நான் அறபியில் எழுதி மொழியாக்கம் செய்யாத விடயத்தை அறியாதவராகவே இருப்பார். அதன் விபரத்தை இங்கு எழுதுகிறேன். இதன் விபரம் ஆலிம் அல்லாதவர்களுக்குத் தெரியாது போனாலும் ஒவ்வோர் ஆலிமும் “பர்ழ் ஐன்” போல் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.
தொடர் 05ல் “மதலும், மித்லும்” என்ற சிறிய தலைப்பை வாசிப்பவர்களுக்குப் புரியும்.
مَثَلٌ – مِثْلٌ (மதலுன், மித்லுன்) என்று அறபு மொழியில் இரு சொற்கள் உள்ளன. இவ்விரு சொற்களுக்குமிடையே உள்ள வித்தியாசம் தெரியாதவர்களால் பல பிரச்சினைகள் ஏற்பட சாத்தியமுண்டு. ஒவ்வொரு மனிதனும் தனது தாய் மொழியையே சிறப்பாகப் பேசுவான். ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டவன் மொழிகளில் அதுவே சிறந்தது என்பான். அதேபோல் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன் தனது மொழியே சிறந்தது என்பான். அது மட்டுமல்ல, ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் பேசும் மொழியும் தமிழ் மொழிதான் என்றும் சொல்வான். தமிழ்க் கவிஞர்களிற் சிலரும் அவ்வாறுதான் சொல்லியுமுள்ளார்கள். “அம்மா” என்பது தமிழ் வார்த்தை, அதுவே குழந்தையின் முதல் வார்த்தை என்று பாடியுள்ளார்கள். ஆனாவை ஊனாவாக்கினால் முஸ்லிம்களும், அறபு மக்களும் பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். யார் அவ்வாறு பெருமையாகப் பேசினாலும் ஸுர்யானீ – சிரியன் மொழிதான் ஒரு குழந்தை பாலருந்தும் காலம் வரை பேசும் மொழி என்பதற்கு ஆதாரமுண்டு. இன்ஷா அல்லாஹ் எழுத வேண்டிய இடத்தில் அதை நான் எழுதுவேன்.
“மதலுன்” அல்லது “மதல்” என்றால் உதாரணம் என்று பொருள் வரும். “மித்லுன்” அல்லது “மித்ல்” என்றால் நிகர் என்று பொருள் வரும்.
அல்லாஹ்வுக்கு “மதல்” உண்டு. அதாவது உதாரணம் உண்டு என்று திருக்குர்ஆன் கூறுகிறது. وَللهِ الْمَثَلُ الْأَعْلَى அல்லாஹ்வுக்கு உயர்ந்த உதாரணம் உண்டு. திருக்குர்ஆன் 16-60 ) என்பது போன்றும், مَثَلُ نُوْرِهِ كَمِشْكَاةٍ அல்லாஹ்வின் ஒளிக்கு உதாரணம் ஒரு விளக்கு போன்று என்பது போன்றுமாகும். இவ்விரு வசனங்கனளிலும் مَثلٌ என்ற சொல் உதாரணம் என்ற பொருளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
அல்லாஹ்வுக்கு مِثْلٌ நிகரில்லை என்று திருக்குர்ஆன் வசனம் கூறுகிறது. ليس كمثله شيئ அவனுக்கு நிகராக எதுவுமில்லை என்பது போன்று. இந்த இடத்தில் “மித்லுன்” என்ற சொல் நிகர் என்ற பொருளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, நாம் விளங்க வேண்டிய விடயம் என்னவெனில் مَثَلٌ “மதல்” என்ற சொல் உதாரணம் என்ற பொருளுக்கும், مِثْلٌ என்ற சொல் நிகர் என்ற பொருளுக்கும் உரியன என்று விளங்க வேண்டும்.
நிகர் என்றால் என்ன? உதாரணம் என்றால் என்ன? என்பதையும் விளங்க வேண்டும்.
لفظةُ المِثْلِ بالسُّكونِ يستدعي المساواةَ فى جميع الصّفات كالسَّوادين والجوهرين، ويقوم كلّ واحد منهما مقامَ الآخر من جميع الوجوه فى كلِّ حالٍ بخلاف المَثَلِ بفَتْحَتَيْنِ، فإنّه لا يُشترطُ فيه المساواةُ من كلِّ وجهٍ، وإنّما يُستعملُ فيما يشاركه بأدنَى وَصْفٍ،
மேலே அறபியில் எழுதியிருப்பது مَثَلٌ – مِثْلٌ இரண்டுக்குமுரிய வரைவிலக்கணமும், விளக்கமுமாகும்.
ஒன்றுக்கு இன்னொன்று நிகரானதென்றால் ஒன்றிலுள்ள முழு அமைப்புக்களும், தன்மைகளும் மற்றதிலிலும் கூடாமலும், குறையாமலும் ஒன்றுபோல் சமமாக இருக்க வேண்டும். அதாவது ஒன்றிலுள்ள முழு அம்சமும் மற்றதிலும் இருக்க வேண்டும். இவ்வாறிருந்தால்தான் அது இதற்கு நிகரானதென்று கூற முடியும்.
உதாரணமாக ஒரே அச்சில் வார்க்கப்பட்ட இரண்டு பொருட்கள் போன்று. இரண்டு மோதிரம் போன்று. இரண்டு “ப்லேட்” போன்று. நாம் ஒரே அச்சில் வார்க்கப்பட்ட இரண்டு மோதிரங்களை எடுத்து நன்றாகக் கவனித்தால் ஒரு அணுவளவும் வேறுபாடின்றி ஒன்று போலவே மற்றதும் இருக்கும். எந்த ஒரு சிறு மாற்றம் கூட இருக்காது. இவ்வாறிருந்தால் அது இதற்கு நிகரானதென்று சொல்ல முடியும். உதாரணமாக خَاتَمُكَ مِثْلُ خَاتَمِيْ உனது மோதிரம் எனது மோதிரத்திற்கு நிகரானது என்பது போன்று. இரண்டு மோதிரமும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டதாயிருப்பதால் مِثْلٌ – மித்ல் என்ற சொல்லை நிகர் என்ற சொல்லுக்குப் பயன்படுத்தலாம். இந்த நிபந்தனை இல்லையானால் இச் சொல்லைப் பயன்படுத்த கூடாது.
ஆயினும் ஒன்று இன்னொன்றுக்கு எல்லா அம்சங்களிலும் ஒன்றுபோல் இல்லாமல் ஏதாவது ஓர் அம்சத்தில் மட்டும் ஒன்று மற்றது போல் இருந்தால் அது நிகர் அல்ல. அது உதாரணமாகும். مُنَاسٌ مَثَلُ أَسَدٍ முனாஸ் என்பவன் சிங்கம் போன்றவன் என்று சொன்னால் இது நிகராகாது. ஏனெனில் இரண்டும் எல்லா அம்சங்களிலும் ஒன்று போலில்லை. எனினும் சிங்கத்திடமுள்ள ஓர் அம்சம் முனாஸிடம் இருந்தால் அது உதாரணமாகும். மேற்கண்ட உதாரணம் போன்று. அதாவது முனாஸ் சிங்கம் போல் வீரம் உள்ளவன் என்று கருத்து வரும். முனாஸ் என்பவன் வீரத்தில் மட்டும் சிங்கம் போன்றவன் என்று கருத்து வரும். இது உதாரணமேயன்றி நிகர் அல்ல.
அல்லாஹ்வைக் கனவில் காணும் போது அத்தோற்றம் அல்லாஹ்வுக்கு உதாரணமேயன்றி ஒரு போதும் நிகராகாது.
இந்த விபரம் – வித்தியாசம் தெரியாதவர்கள்தான் அல்லாஹ் ஏதேனுமோர் உருவத்தில் கனவில் தோற்றும் போது அதை நிகராக நினைத்து அவ்வாறு காண முடியாதென்று குரங்குப் பிடியில் நிற்கின்றார்கள். இவர்களுக்கு இன்னும் சில தொடரில் விளக்கம் வரும். தொடர்ந்து எனது கட்டுரைகளை வாசிப்பவர்கள் மட்டுமே பயன் பெறுவர்.
எனது ஆக்கங்களை வாசிப்பவர்கள் எனது உடல் நலத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் இறைவனிடம் கையேந்துமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.