தொடர் – 7
அல்லாஹ்வை கனவில் காண முடியுமா?
அல்லாஹ்வை முகக் கண்ணால் காண முடியுமா?
அல்லாஹ்வை மனக் கண்ணால் காண முடியுமா?
அல்லாஹ்வை இவ்வுலகில் வெளிக்கண்ணால் காண முடியுமா?
அல்லாஹ்வை மறுமையில் தலைக் கண்ணால் காண முடியுமா?
எங்கே எப்போது கண்டாலும் ஏதாவது ஓர் உருவமின்றிக் காண முடியுமா?
மேற்கண்ட கேள்விகளில் அல்லாஹ்வைக் கனவில் காண முடியுமா? என்ற கேள்விக்குரிய விளக்கமான பதிலை “கனவுலகம் காட்டும் காட்சிகள்” என்ற தலைப்பில் நான் எழுதிய கடந்த தொடர்களில் எழுதியுள்ளேன்.
எனவே இது தொடர்பாக மீண்டும் எழுதத் தேவையில்லையாதலால் அல்லாஹ்வை விழிப்பில் இவ்வுலகில் காண முடியுமா? என்ற கேள்விக்குரிய விளக்கத்தை இத் தொடரில் கவனிப்போம்.
கடந்த தொடர் 05ல் கனவில் அல்லாஹ்வைக் காண முடியாதென்போர் தமது வாதத்திற்கு கூறும் ஆதாரங்கள் மூன்று என்று குறிப்பிட்டிருந்தேன்.
அவை,
لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ
என்ற திருக்குர்ஆன் வசனமும், மூஸா நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம், எனக்கு உன்னைக் காட்டுவாயாக! என்று கேட்டபோது لَنْ تَرَانِيْ என்று கூறிய திரு வசனமும்,
لَنْ يَرَى أَحَدُكُمْ رَبَّهُ حَتَّى يَمُوْتَ
என்ற நபீ மொழியுமாகும்.
முதலாம் திரு வசனத்தை சற்று ஆய்வு செய்து பார்ப்போம்.
لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ
அவனை – அல்லாஹ்வை பார்வைகள் எத்திக் கொள்ளாது. அவன் பார்வைகளை எத்திக் கொள்வான். அவன் இரக்கமுள்ளவனும், எதையும் அதன் உள், வெளி இரண்டையும் அறிபவனுமாவான்.(திருமறை 06-103)
இத்திரு வசனத்தில் تُدْرِكُ என்று ஒரு சொல் வந்துள்ளது. இதற்கு முன் “லா” என்றும் ஒரு சொல் வந்துள்ளது. இரண்டையும் சேர்த்து பொருள் கூறினால் எத்திக் கொள்ளாது என்று, அல்லது எட்டிக் கொள்ளாது என்று, அல்லது வெளிக் கண்கள் காணாது என்று, அல்லது அடைந்து கொள்ளாது என்று பொருள் வரும்.
சொல்லர்த்தம் பல தமிழ்ச் சொற்களில் சொல்லிக் கொண்டாலும் அதன் விபரம் என்ன? விளக்கம் என்ன? என்பதை தெரிந்து கொள்வதே பிரதான குறிக்கோளாகும்.
நான் அறிந்த வகையில் மேற்கண்ட لَا تُدْرِكُ என்ற சொல்லுக்கு சூழ்ந்து கொள்ளாது என்பதே மிகப் பொருத்தமென்று நான் விளங்குகிறேன்.
لا تُدْرِكُ என்றால் لَا تُحِيْطُ சூழ்ந்து கொள்ளாதென்றே சொல்ல வேண்டும். இதுதான் சரியானதென்பதே எனது கருத்துமாகும்.
சூழ்ந்து கொள்ளல் என்பதற்கும், பார்த்தல் – காணுதல் என்பதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டும் ஒன்றல்ல.
சூழ்தல் என்பது இரண்டு வகை. ஒன்று – விரலை மோதிரம் சூழ்ந்துள்ளது போன்று. இரண்டு – மோதிரத்தை தங்கம் சூழ்ந்துள்ளது போன்று. இவ்விரு வகையில் தங்கம் மோதிரத்தை சூழ்ந்தது போன்ற சூழ்தல்தான் இந்த தலைப்புக்கு பொருத்தமானதாக விளங்குகிறது.
அதாவது விரலை மோதிரம் சூழ்ந்திருந்தாலும் அந்த மோதிரத்திற்கு விரலை மட்டும்தான் பார்க்க முடியும்.
மோதிரத்தை சூழ்ந்துள்ள தங்கத்திற்கு மோதிரத்தை முழுமையாக பார்க்கவும், அறியவும் முடியும். இவ்வாறு பார்வைகளால் அவனைச் சூழவே முடியாது. சூழத்தான் முடியாதேயன்றி பார்க்க முடியாது, அறிய முடியாது என்பது கருத்தல்ல.
அல்லாஹ்வை பார்வைகள் பார்க்கும். ஆயினும் அவனை பார்வைகளால் சூழ்ந்து கொள்ளவே முடியாது. கனவில் அவனைக் காண முடியாதென்று கூறுவோர் இந்த வசனத்தை அவனைக் காண முடியாதென்பதற்கு ஆதாரமாக எடுப்பது பிழையாகும்.
“பார்வை” அவனின் படைப்பு. படைப்பு படைத்தவனை சூழ்ந்து கொள்கிறதென்று வைத்துக் கொண்டால் சூழ்ந்த வஸ்த்து சூழப்பட்ட வஸ்த்தை மிகைத்துவிட்டதென்று கருத்து வரும். இது “குப்ர்” இறை நிராகரிப்பை ஏற்படுத்தும் கருத்தாகும்.
والله غالب على أمره، فلا يكون مغلوبا أبدا
எனவே, அல்லாஹ்வைப் பார்வைகள் சூழ்ந்து கொள்ளாதென்ற வசனத்தை அல்லாஹ்வை காண முடியாதென்று நிறுவ ஆதாரமாக எடுக்க முடியாது.
الإدراك ليس مطلقَ الرُّؤية، بل معنى لا تُدركه الأبصارُ لا تُحيط، كما أنّ العُقولَ لا تُحيط به، فالنّصوصُ الدالّة على نفي الرؤية مُقيَّدَةٌ بنفيِ الإحاطة، ولا يلزم منها نفيُ الرؤية بغير إحاطةٍ معها، فإذا علمتَ ذلك علمتَ أنّ الله تعالى يُرى من غير الكَيفيّاتِ المُعتبرةِ فى رؤية الأجسام، ومن غيرِ إحاطة، بل يحار العبد فى العظمة والجلال حتّى لا يعرفَ اسمَه، ولا يشعُرَ بمنْ حولَه من الخلائق، فإنّ العقلَ يعجز هُنالِكَ عن الفهم، ويَتَلاشَى الكلُّ فى جنب عظمتِه تعالى، لأنّ رؤية الحقّ سبحانه تُسكِرُ عُقولَ الرائين من تمام لذّتها، أذاقنا الله حلاوتها وكلَّ من آمن بها، (ضوء السِّراج، ص 77، سليمان الكردي رضي الله عنه)
“இத்றாக்” எத்திக் கொள்ளுதல் அல்லது எட்டிக் கொள்ளுதல் என்பது கண்ணால் காண்பதை மட்டும் குறிக்காது. எனினும் அதன் பொருள் சூழ்ந்து கொள்ளுதல் என்பதேயாகும். கண் பார்வை மட்டும் சூழ்ந்து கொள்ளாதென்பது மட்டுமல்ல. “அக்ல்” எனும் புத்தியும் கூட அதைப் பூரணமாக சூழ்ந்து கொள்ளவே மாட்டாது.
அவனைப் பார்க்க முடியாதென்று அறிவிக்கும் ஆதாரங்கள் யாவும் அவனை சூழ்ந்து கொள்ளவே முடியாதென்ற நிபந்தனைக்கு உட்பட்டவையாகும். இதனால் சூழ்ந்து கொள்ளாமல் அவனைக் காண முடியாதென்ற கருத்து வராது. மாறாக சூழ்ந்து கொள்ளாமல் பார்க்க முடியுமென்ற கருத்து வரும்.
இந்த விளக்கத்தை அறிந்தவன் சடமுள்ள வஸ்த்துக்களைக் காண்பதற்கு கூறப்பட்ட, தேவையான எந்த ஒரு நிபந்தனையுமின்றியும், அவனைச் சூழ்ந்து கொள்ளாமலும் அவனைக் கண்டு கொள்வான் என்ற உண்மையையும் அறிந்து கொள்வான்.
அல்லாஹ்வைக் காணும் வாய்ப்புக் கிடைத்தவன் அந்த வல்ல அல்லாஹ்வின் வலுப்பம், மற்றும் “ஜலாலிய்யத்” தினால் தடுமாறி தனது பெயரே தனக்குத் தெரியாத நிலைக்கும், தன்னைச் சூழ்ந்திருக்கும் படைப்புக்களை விளங்க, உணர முடியாத நிலையிலும் தடுமாறி நிற்பான். ஏனெனில் அவ்வாறான கட்டத்தில் புத்தியால் எதையும் அறிய முடியாமலும், விளங்க முடியாமலும் போய்விடும். அல்லாஹ்வின் வலுப்பத்தில் அவனுக்கு எல்லாம் அழிந்து போனது போன்றே விளங்கும். ஏனெனில் அவனைக் கண்டதும் கிடைக்கும் ஆன்மிகப் பேரின்பம் அவனை போதையிலாழ்த்திவிடும். அல்லாஹ் நம்மனைவருக்கும் அவனைக் கண்டு பேரின்பம் அனுபவிக்கச் செய்வானாக!
ஆதாரம்: ழவ்உஸ்ஸிறாஜ்
பக்ம் 77, ஆசிரியர்: இமாம் ஸுலைமான் அல் குர்தீ றழியல்லாஹு அன்ஹு
இந்த விளக்கத்தின் மூலம் அல்லாஹ்வைக் காண முடியாதென்று கூறுவோரின் கூற்று முற்றாக ரத்துச் செய்யப்படுகிறது.
அவனைக் காண முடியாதென்பதற்கு அவர்கள் கூறும் இரண்டாவது ஆதாரம் لَنْ تَرَانِيْ என்ற திரு வசனமாகும்.
ஒரு சமயம் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வைக் காண வேண்டுமென்ற விருப்பம் ஏற்பட்டு رَبِّ أَرِنِيْ أَنْظُرْ إِلَيْكَ எனது இரட்சகனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும். எனக்கு உன்னைக் காட்டுவாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள். அப்போது لن تراني நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள் என்று பதில் கூறினான்.
இதன் விபரம் தொடரும்…