தொடர் – 8
اعلم أنّ رؤيتَه تعالى هي المقصودةُ بالذّات للمُحبِّيْنَ، فاشتياقُهم للجَنَّةِ إنّما هو لكونها محلًّا لها، لا لذاتِها، وهي الّتي تَقَطَّعتْ لأجلها أكبادُهم، واحترقتْ شوقا إليها قلوبُهم، فَظَمَئُهم إلى لذيذِ لِقائِه لا يخفى، ولَهِيبُ قلوبِهم إلى مُشاهدة جماله لا يُطفى، وهم الّذين قال قائلُهم
لَيْسَ قَصْدِيْ مِنَ الْجِنَانِ نَعِيْمًا – غَيْرَ أَنِّيْ أُرِيْدُهَا لِأَرَاكَا
ضوء السِّراج ، ص 78
நீ அறிந்து கொள்! அல்லாஹ்வின் காதலர்களின் பிரதான குறிக்கோள் அவனைக் கண்டுகளிப்பதாகும். அவர்கள் சுவர்க்கத்தை ஆசை வைப்பது அங்குதான் அவனின் திருக்காட்சி கிடைக்குமென்பதற்கேயாகும். அவனின் திருக்காட்சி சுவர்க்கத்தில் மட்டுமே கிடைக்கும். வேறெங்கும் கிடைக்காது. சுவர்க்கத்தின் வேறு இன்ப சுகத்திற்காக அல்ல.
அல்லாஹ்வின் திருக்காட்சிக்காக அந்தக் காதலர்களின் ஈரல்கள் எல்லாம் வெடித்து துண்டு துண்டுகளாகின. அவனின் திருக்காட்சிக்காக கல்பு – உள்ளங்களெல்லாம் எரிந்து சாம்பலாகின.
ஆதாரம்: ழவ்உஸ்ஸிறாஜ்
பக்கம் 78, ஆசிரியர்: இமாம் ஸுலைமான் அல் குர்தீ
قَالَتْ رابعة العدويّة مَعَ أَنَّهَا إِمْرَأَةٌ، وَعِزَّتِكَ مَا عَبَدْتُكَ خَوْفًا مِنْ نَارِكَ وَلَا رَغْبَةً فِى جَنَّتِكَ، بَلْ كَرَامَةً لِوَجْهِكَ الْكَرِيْمِ وَمَحَبَّةً فِيْكَ، حَتَّى أَصِلَ إِلَيْكَ وَلَا أَرْضَى مِنْكَ بِدُوْنِكَ،
இறைஞானப் பேரரசி றாபிஅதுல் அதவிய்யா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு பெண்ணாயிருந்தும் கூட பின்வருமாறு கூறியிருப்பது எம்மை இனியில்லை என்ற வியப்பில் ஆழ்த்துகிறது. நான் ஒரு ஆணாக இருந்தும் கூட, நரை உபதேசிக்கும் வயதை அடைந்தும் கூட, பத்து வருடங்களுக்கு மேல் அறபுக் கல்லூரிகளில் கற்று காலம் கடத்தியும் கூட, ஞான பிதா என்று மக்களால் வாழ்த்தப்பட்டும் கூட றாபிஅதுல் அதவிய்யாவின் பாதணிக்கும் தகுதியற்ற பாவியாக நிற்கிறேனே! என்று நினைத்து கவலையடைகிறேன்.
பீற்றற்றுருத்தி தனை பீக்குழியை சாக்கடையை
கார்த்தேன் வளர்த்தேன் என் கண்ணே றஹ்மானே!
என்று இராப்பகலாய்க் கண் விழித்து அழுகிறேன். புலம்புகிறேன். திருமணம் வெறுத்து, திரைகளைக் கடந்து, பேரின்ப வெள்ளத்தில் மிதக்கும் உங்கள் திருவடி வந்து திருப்பாதம் முத்தி, அருட் பாதணி சுமந்து மோட்சம் பெற அருள் செய்யமாட்டீர்களா? ஒரு நொடி நேரம் இப்பாவி முகம் பார்த்து அருள்புரிய மாட்டீர்களா? நீங்கள் துயிலுமிடம் நான் வந்து உங்கள் “தர்ஹா” வாசற்படியில் என் முகம் புதைத்து நான் மனிதப் புனிதனாக மாற உங்கள் நாட்டையாள்பவனிடம் கூறி எனக்கோர் “வீசா” பெற்று அனுப்பி வைக்கமாட்டீர்களா?
றாபிஆவின் கருத்து:
இறைவா! உனது கௌரவத்தின் மீது சத்தியம், நான் உனது நரகைப் பயந்தோ, உனது சுவர்க்கத்தில் ஆசை கொண்டோ உன்னை வணங்கவில்லை. ஆயினும் உன் மீது எனக்குள்ள “மஹப்பத்” அன்பினால்தான் வணங்குகிறேன். வழிபடுகிறேன்.
وَمِنْ حِكَايَاتِ الْمُحِبِّيْنَ، أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَصَرَةِ بَكَى لِشَوْقِهِ حَتَّى ذَهَبَتْ عَيْنَاهُ، ثُمَّ قَالَ: إِلَهِيْ إِلَى مَتَى لَا أَلْقَاكَ، فَبِعِزَّتِكَ لَوْ كَانَتْ بَيْنِيْ وَبَيْنَكَ نَارٌ تَلْتَهِبُ مَا رَجَعْتُ عَنْكَ بِعَوْنِكَ وَتَوْفِيْقِكَ حَتَّى أَصِلَ إِلَيْكَ وَلَا أَرْضَى مِنْكَ بِدُوْنِكَ،
இறை காதலர்களின் செய்திகளில் ஒன்று.
இறாக் நாட்டில் “பஸறா” நகரில் ஒருவர் இருந்தார். அவருக்கு அல்லாஹ்வைக் காண வேண்டுமென்ற ஆசை அளவு கடந்ததால் இராப் பகலாய் அழுதழுது தனது கண் பார்வையை இழந்தார். பின்னர் பின்வருமாறு சொன்னார்.
இறைவா! எதுவரை நான் உன்னைக் காணாமலிருப்பது? உனது கௌரவத்தின் மீது ஆணையாக! உனக்கும், எனக்கும் இடையில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தாலும் உன்னுடைய அருளால் அதையும் தாண்டி நான் வருவேன். திரும்பிச் செல்லமாட்டேன். உன்னைத் தவிர வேறொன்றும் எனக்குத் தேவையுமில்லை என்று கூறினார்.
ومنها ما ورد عن نبي الله شعيب عليه الصلاة والسلام، أنّه بَكَى مِأَةَ عَامٍ، حتّى ذهب بصرُه، فردَّهُ الله عليه، وَبَكَى مِأَةً أُخْرَى حتّى ذَهَبَ بَصَرُه، فَأَوْحَى اللهُ تعالى إليه، يَا شُعَيْبُ! مَا هذا البُكاءُ؟ إن كان خوفا من ناري فقد أَمِنْتُكَ، وَإِنْ كان شوقا إلى جنّتي فقد أَبَحْتُكَ إِيَّاهَا، فقال وعزَّتِكَ وجلالِكَ يا ربُّ! ليس بُكائي شوقا إلى جَنَّتِك ولا خَوْفًا مِنْ نَارِك، ولكن عَقَدَ حُبُّكَ فى قلبي عُقْدَةً، لَا يَحُلُّهَا إِلَّا النَّظَرُ إلى وَجْهِكَ الكريم، فقال الله تعالى إذا كان بُكَائُكَ لِذَلِكَ فَلَأُبِيْحَنَّكَ النَّظَرَ إلى وجهي، (ضوء السراج، ص 79، سليمان الكردي)
நபீ ஷுஐப் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வைக் காணும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று 100 வருடங்கள் அழுதார்கள். அவர்களின் கண் பார்வை போயிற்று. எனினும் அல்லாஹ் மீண்டும் அவர்களுக்கு பார்வையை வழங்கினான். அவர்கள் மீண்டும் 100 வருடங்கள் அழுதார்கள். மீண்டும் பார்வை போயிற்று.
அப்போது அல்லாஹ் அவர்களிடம் ஷுஐபே! ஏன் அழுகிறீர்கள்? உங்களின் அழுகை எனது நெருப்பை பயந்ததற்காக இருந்தால் நீங்கள் பயப்பட வேண்டாம். அது உங்களைத் தொடாது. அதற்கு நான் பொறுப்பு. அல்லது எனது சுவர்க்கம் கிடைக்க வேண்டுமென்றிருந்தால் அதை உங்களுக்கு நான் தருகிறேன் என்றான்.
அதற்கவர்கள், உனது கௌரவத்தின் மீதாணை! எனது அழுகை நரகத்தைப் பயந்ததற்காகவோ, சுவர்க்கத்தில் ஆசை கொண்டதற்காகவோ அல்ல. ஆயினும் உனதன்பு எனதுள்ளத்தில் ஒரு முடிச்சுப் போட்டுள்ளது. அதை அவிழ்ப்பதாயின் உனது திரு முகக் காட்சியால் மட்டுமே முடியும் என்று கூறினார்கள். இதுதான் உங்கள் அழுகைக்குக் காரணமாயின் உங்களுக்கு அதை நான் தருகிறேன் என்றான் இறைவன்.
ழவ்உஸ்ஸிறாஜ்
பக்கம்: 79, ஸுலைமான் அல்குர்தீ
ஒரு நபீயின் சோகமான இவ்வரலாறு நமது கண்களைத் திறக்க வேண்டும். நமக்கு இப்படியொரு பாக்கியம் கிடைக்க வேண்டுமென்று நமது வாழ்க்கையில் எத்தனை நாட்கள் அழுதிருப்போம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அவனிடம் அதைத் தா, இதைத் தா என்று ஆயிரம் முறை கேட்டிருப்போம். வாழ்வில் ஒரு தரமேனும் உனது திருமுகக் காட்சியைத் தா என்று கேட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்திருப்போமா? அதில் நமக்கு அக்கறையுமில்லை, ஆசையுமில்லை. இதற்கு நான் கூறும் ஒரே காரணம் அவனைப் பற்றிய ஞானம் நமக்கு இல்லாதிருப்பதேயாகும்.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا، وَلَبَكَيْتُمْ كَثِيرًا»
நான் அறிந்ததை நீங்கள் அறிந்தால் சொற்பமாக சிரிப்பீர்கள், அதிகமாக அழுவீர்கள் என்று அண்ணலெம்பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். நாம் நமது மனக் கண் மீது பல்லாயிரம் திரைகளை போட்டு அது குருடாயிருக்கும் நிலையில் எதைத்தான் காணப் போகிறோம்.
பொறாமை, வஞ்சகம், எரிச்சல், கபடம், அகங்காரம், ஆணவம் போன்ற தீக் குணங்கள் யாவும் இருட் திரைகளாகும். இத்திரைகள் இருக்கும் வரை உள்ளம் உருகாது. அதில் ஞானம் தோன்றாது. இவற்றை அகற்றிச் சுத்தம் செய்தல் நமது கடமையாகும். இவ்வாறு செய்தால்தான் மனக்கண் திறக்கும்.
இமாம் அப்துல்லாஹ் இப்னு அலவிய்யுல் ஹத்தாத் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு ஞான மேதை. “பைஅத்” வழங்கி மக்களுக்கு ஞானம் கற்றுக் கொடுக்கும் ஒரு ஞான வள்ளல். அவர்கள் இரு கண் பார்வையுமிழந்தவர்கள். பின்வருமாறு பாடியுள்ளார்கள்.
إِنْ يَأْخُذِ اللهُ مِنْ عَيْنَيَّ نُوْرَهُمَا – فَإِنَّ قَلْبِيْ مُضِيْئٌ مَا بِهِ ضَرَرٌ
أَرَى بِقَلْبِيَ دُنْيَايَ وَآخِرَتِيْ – وَالْقَلْبُ يُدْرِكُ مَا لَا يُدْرِكُ الْبَصَرُ
அல்லாஹ் எனது முகக் கண் இரண்டின் ஒளியையும் எடுத்துக் கொண்டானாயினும் எனது மனக் கண் ஆரோக்கியமாக பார்வையுடையதாக உள்ளது.
நான் எனது மனக் கண்ணால் இவ்வுலகையும், மறு உலகையும் பார்க்கிறேன். மனக் கண் என்பது முகக் கண் பார்க்காதவற்றையெல்லாம் பார்க்கும்.
தொடரும்….
இன்ஸான் – மனிதன் 2000 ஆண்டுகள் இறைவன் மடியில் (நாளை தொடரும்.)
குறிப்பு: நபீ ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொடராக 200 வருடங்கள் அழுததால் அவர்களின் கண் பார்வை போயிற்று என்று ضوء السِّراج நூலாசிரியர் ஸுலைமான் அல் குர்தீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ذَهَبَ بَصَرُهُ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தாலும் அதற்கு முற்றாகக் கண் பார்வை இழந்தார்கள் என்று பொருள் கொள்ளாமல் கண் பார்வை மங்கியதென்றே பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் நபீமார்களில் எவருக்கும் குருடு ஏற்படமாட்டாது.