தொடர் – 9
அல்லாஹ்வை காண முடியாது என்று கூறுவோர் தமது வாதத்திற்கு மூன்று ஆதாரங்கள் கூறினார்கள். அவற்றில் மூன்று திருக்குர்ஆன் வசனங்கள், ஒன்று நபிமொழி.
திருக்குர்ஆன் வசனங்கள் மூன்றில் لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ பார்வைகள் அவனை எத்திக் கொள்ளாது என்ற வசனத்திற்கு விளக்கம் கூறி விட்டேன். அந்த விளக்கத்தை அறிந்து கொள்ளாதவர்கள் “கனவுலகு காட்டும் காட்சிகள்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட அனைத்து தொடர்களையும் வாசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மௌலவீமார்களில் தொழிலோடு மட்டும் தொடர்புள்ளவர்கள் தவிர அறிவோடு மட்டும் தொடர்புள்ளவர்களும் பள்ளிவாயல் பேஷ் இமாம் கடமை செய்பவர்களும், அறபுக் கல்லூரி மாணவர்களும், மற்றும் اَلْعِلْمُ صَيْدٌ وَالْكِتَابَةُ قَيْدٌ அறிவு வேட்டைப் பிராணி அதை எழுதி வைப்பது அதை கட்டிப் போடுவதாகும் என்ற தத்துவத்தை புரிந்து கொண்டவர்களும் நான் எழுதும் எந்த ஒரு தலைப்பாயினும் அதில் உள்ள குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்வதும், அல்லது போனிலிருந்து போட்டோ பிரதி செய்து “பைல்” போட்டு வைத்துக் கொள்வதும் பெரிதும் உதவும் என்று அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறேன். இதற்கு காரணம் எல்லா மௌலவீமார்களிடமும் எல்லா கிதாபுகளும் இருக்காதென்பதும், எல்லா மௌலவீமார்களாலும் எல்லா கிதாபுகளையும் வாங்கவும் முடியாது, பார்க்கவும் முடியாது என்பதுமேயாகும்.
அல்லாஹ்வை காண முடியாது என்று சொல்வோர் தமது வாதத்திற்கு கூறும் இரண்டாவது ஆதாரம் என்னவெனில் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம்,
رَبِّ أَرِنِيْ أَنْظُرْ إِلَيْكَ
இறைவா! எனக்கு உன்னை காட்டுவாயாக என்று கேட்டபோது لَنْ تَرَانِيْ நீங்கள் என்னை காண மாட்டீர்கள் என்று அல்லாஹ் சொன்ன பதிலாகும்.
لَنْ تَرَانِيْ
நீங்கள் என்னை காண மாட்டீர்கள் என்று அல்லாஹ் கூறிய பதில் மூலம் அல்லாஹ்வை ஒருபோதும் காண முடியாது என்ற கருத்துக்கு இடமில்லை.
ஏனெனில் لَنْ تَرَانِيْ என்ற வசனம் ஒருபோதும் காண மாட்டீர்கள் என்ற கருத்தைத் தராது. இது தொடர்பாக பின்வரும் விடயங்களை விளங்கினால் உண்மை தெளிவாகும்.
قولهم إنّ كلمةَ ‘ لَنْ ‘ مِن قوله تعالى ‘ لن تراني ‘ للتأبيد، فيكون نصًّا فى أنّ موسى عليه السّلام لا يراه فى الدنيا والآخرة ممنوعٌ، لأنّها لو كانت للتأبيد لَزِمَ التَّناقُضُ بذكر اليوم فى قوله تعالى ‘ فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا ‘ وَلَزِمَ التكرارُ بذكر أبدا فى قوله تعالى فى شأن اليهود ‘وَلَنْ يَتَمَنَّوْهُ أَبَدًا ‘، ‘ وَلَنْ نَدْخُلَهَا أَبَدًا ‘ |لأنّها لو كانت للتأبيد لَمَا صَحَّ أن يقول بعده أبدا، لأنّه معلوم مِنْ لَنْ، والقرآن فى أعلى طبقات البلاغة، فلا يَصِحُّ أن يُؤتَى فيه بكلمة زائدة بلا فائدة، والقول بأنّه للتّأبيد صرفُ الكلام عن أصله بلا دليل، ثمّ استَدْرَك ليُبيِّنَ أنّ تأخير الرُّؤية لا لِامْتِناعها،، بل لأنّه لا يُطيقها،
அல்லாஹ் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு لَنْ تَرَانِيْ என்னை நீங்கள் காண மாட்டீர்கள் என்று சொன்ன பதிலில் உள்ள لَنْ என்பது تَأْبِيْدْ எக்காலமும் என்ற கருத்துக்குரியதாகும். أَبَّدَ يُؤَبِّدُ என்ற சொல்லில் இருந்து تَأْبِيْدًاவந்ததாகும். இது أَبَدًا என்ற கருத்தை காட்டும். இந்த விளக்கத்தின்படி لَنْ تَرَانِيْ என்ற வசனத்தின் பொருள் “ஒருபோதும் காண மாட்டீர்கள்” என்றும், சுவர்க்கத்திற் கூட காண மாட்டீர்கள் என்றும் அறிவிக்கிறது. இவ்வாறு விளக்கம் சொல்லி அவனை எவ்வழியிலும் காணவே முடியாது என்று ஒரு சாரார் கூறி உள்ளார்கள்.
அவர்களின் விளக்கம் பிழையானதென்றும், அல்லாஹ்வை காணலாம் என்றும் கூறுவோர் பின்வரும் ஆதாரங்களை கூறி அவர்களின் கூற்றை மறுக்கின்றார்கள்.
அதாவது لن تراني என்ற வசனத்தில் வந்துள்ள لن என்ற சொல்லுக்கு ஒரு போதும் – أبدا என்ற பொருள் இல்லை. காணமாட்டாய் என்று மட்டும்தான் பொருள் வருமேயன்றி ஒரு காலமும் காணமாட்டாய் என்று பொருள் வராது என்று இவர்கள் அல்லாஹ்வை ஒரு போதும் காண முடியாதென்ற அவர்களின் கூற்றை மறுக்கின்றனர்.
மறுப்பவர்கள் தமது மறுப்புக்கு இரண்டு காரணங்கள் கூறுகிறார்கள். ஒன்று – நான் மேலே எழுதிக் காட்டிய வசனங்கள் தருகின்ற காரணமாகும்.
அதாவது மறுப்பவர்கள் சொல்வதுபோல் لَنْ என்ற சொல் تَأْبِيْدْ ஒருபோதும் என்ற أَبَدًا என்ற பொருள் கொண்டது என்று வைத்துக் கொள்வது திருக்குர்ஆனின் பின்னால் கூறப் போகின்ற மூன்று திருமறை வசனங்களுக்கு முரணாகிறது. திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்று அதன் இன்னொரு வசனத்திற்கு ஒருபோதும் முரணாக முடியாது. ஏனெனில் திருக்குர்ஆன் வசனங்கள் யாவும் அல்லாஹ்வின் பேச்சு என்று உறுதி செய்யப்பட்ட ஒரு விடயமாகும் அல்லாஹ்வின் பேச்சில் பிழை வருவது அசாத்தியமாகும்.
திருக்குர்ஆனில் ஒரு வசனம் வருகிறது. அதாவது மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கணவன் இல்லாமல் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பெற்றெடுத்த வேளை பல பிரச்சினைகள், அவதூறான கதைகள் உருவாக்கின. அப்போது அல்லாஹ் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களுக்கு யாராவது உங்களிடம் விளக்கம் கேட்டு வந்தால்,
فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا
நான் இன்று எந்த மனிதருடனும் பேசமாட்டேன் என்று சொல்லுமாறு அறிவித்தான். அவர்கள் அவ்வாறு சொன்னார்கள். இத்திரு வசனத்தில் அல்லாஹ்வை காண முடியாது என்று கூறுவோர் சொல்லும் காரணம் பிழையாகிவிடுகிறது.
ஏனெனில் لَنْ تَرَانِيْ என்ற வசனத்தில் வந்துள்ள لن என்ற சொல்லுக்கு ஒருபோதும் என்ற أبدا உடைய சொல்லின் பொருள் உண்டு என்று சொன்னால்
فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا
இன்று எந்த மனிதருடனும் நான் பேச மாட்டேன் என்ற வசனத்தில் இன்று என்ற பொருளுக்குரிய اليوم என்ற சொல் வந்திருக்க முடியாது. அது வராமல்
فَلَنْ أُكَلِّمَ إِنْسِيًّا
எந்த மனிதருடனும் ஒரு போதும் நான் பேச மாட்டேன் என்று வசனம் வந்திருக்க முடியாது. لَنْ تَرَانِيْ என்ற வசனத்தில் உள்ள சொல்லுக்கு மறுப்பவர்கள் சொல்வது போல் ஒரு போதும் என்ற பொருள் இருக்குமாயின் பின்னால் اليوم இன்று என்ற சொல் வரமுடியாது. வந்தால் تَنَاقُضْ முரண்பாடு ஏற்படும்.
எனவே, இக்காரணத்தை ஆதாரமாகக் கொண்டு அல்லாஹ்வை காணலாம் என்பவர்கள் மற்றவர்களின் கருத்தை மறுத்து விடுகிறார்கள்.
அவர்களின் இரண்டாவது ஆதாரமான لَنْ تَرَانِيْ என்ற ஆதாரம் போல் இன்னும் இரண்டு வசனங்களையும் ஆதாரமாகக் கூறுகிறார்கள். அவ்விரண்டில் ஒன்று وَلَنْ يَتَمَنَّوْهُ أَبَدًا அவர்கள் ஒருபோதும் அதை – மரணத்தை ஆசை வைக்க மாட்டார்கள் என்ற வசனமாகும்.
இத்திருவசனம் யஹூதிகள் தொடர்பாக அருளப்பட்ட வசனமாகும். அவர்கள் ஒருபோதும் மரணத்தை ஆசை வைக்க மாட்டார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
மேலே لن تراني என்ற அவர்களின் ஆதாரத்தை என்ன ஆதாரம் கொண்டு மறுக்கப்பட்டதோ அதே ஆதாரம் கொண்டு இவ் வாதாரத்தையும் மறுக்க முடியும். திறமை உள்ளவர்களுக்கு விளக்கம் தேவையில்லை. ஆயினும் வாசிப்பவர்கள் எல்லோரும் திறமை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதற்காக விளக்கத்தை நாமே சொல்கிறோம்.
அதாவது لَنْ என்ற சொல்லுக்கு ஒரு போதும் என்ற பொருள் இருக்குமாயின் இத்திருவசனத்தில் أبدا ஒரு போதும் என்ற சொல் வந்திருக்க தேவையில்லை. மறுப்பவர்களின் கூற்றுப்படி أبدا என்ற சொல் வராமலேயே لَنْ என்ற சொல்லுக்கு அதே பொருள் வந்துவிடும்.
எனவே لَنْ என்ற சொல்லின் பின்னால் أبدا என்ற சொல் வந்துள்ளதால் அந்த لَنْ என்ற சொல்லுக்கு ஒரு போதும் என்ற பொருள் கிடையாது என்பது தெளிவாகிறது.
மறுப்பவர்கள் கூறும் இன்னொரு வசனம் وَلَنْ نَدْخُلَهَا أَبَدًا என்ற வசனமுமாகும். இவ்வசனமும் யஹுதிகள் தொடர்பாக அருளப்பட்டதேயாகும். அவர்கள் “நாங்கள் ஒருபோதும் நரகம் செல்ல மாட்டோம்” என்று சொல்வார்கள். இவ்வசனமும் அல்லாஹ்வை ஒருபோதும் காண முடியாது என்று கூறுவோருக்கு சாதகமான வசனம் அல்ல. இவ்வசனத்திற்கும் நான் மேலே இறுதியாக எழுதிய வசனத்திற்கு கூறிய பதிலே பதிலாகும். இதற்கு தனியான ஒரு விளக்கம் தேவையில்லை.
அல்லாஹ்வை ஒருபோதும் காண முடியாது என்று கூறுபவர்களின் ஆதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் பதில் எழுதிவிட்டேன். அவர்களின் ஆதாரங்களில் ஒரு நபிமொழி மட்டும் மிஞ்சியிருக்கிறது. அடுத்த தொடரில் அதற்கான விளக்கம் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்.