தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
தொடர் – 1
“வலீ” என்ற சொல்லுக்கு அதிகாரி – அதிகாரமுள்ளவன் என்ற பொருளும் உண்டு. அடுத்திருப்பவன், பக்கத்திலிருப்பவன் என்ற பொருளும் உண்டு.
ஒரு பெண்ணின் தந்தையும் “வலீ” என்று அழைக்கப்படுவான். அதாவது அவளை ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கான அதிகாரமுள்ளவன் என்று பொருள் படும்.
இவன் وَلِيُّ المَرْأَةِ பெண்ணின் அதிகாரி என்று “ஷரீஆ”வின் பார்வையில் அழைக்கப்படுவான்.
அல்லாஹ்வின் அதிகாரியானவர் ولي الله என்றழைக்கப்படுவார்.
நாம் பெண்ணின் வலீ பற்றி இக்கட்டுரையில் ஆய்வு செய்ய விரும்பவில்லை. வலிய்யுல்லாஹ் பற்றி மட்டுமே ஆராய்வோம்.
“வலீ” என்ற பட்டம் அல்லாஹ்வால் வழங்கப்படும் பட்டமேயன்றி மனிதர்களால் வழங்கப்படும் பட்டமல்ல. இதற்கு மாறானதே “இமாம்” என்ற பட்டமாகும்.
ஓர் ஊரில் தரமான மார்க்க அறிஞர் ஒருவர் இருந்தால் முதலில் அவரை நெருங்கிய, அவரை நேசிக்கின்றவர்கள் அவரை கௌரவிக்கும் நோக்கத்தில் “இமாம்” என்று சொல்வார்கள். அவர்களைப் பின்பற்றி பலர் அவ்வாறு சொல்லத் தொடங்குவார்கள். இவ்வாறு பிரசித்தி பட்டமே “இமாம்” என்ற பட்டமாகும்.
“வலிய்யுல்லாஹ்” என்றால் அல்லாஹ்வின் அதிகாரி என்று பொருள் வரும். அதாவது அவர் அல்லாஹ்வின் அதிகாரம் பெற்றவராவார். அவர் மொத்த அதிகாரம் பெற்றவராக இருப்பவரேயன்றி தேவைக் கேற்ப அதிகாரம் பெற்றவராக இருக்கமாட்டார்.
இதன் விபரமென்னவெனில் அல்லாஹ் அவருக்கு முழு அதிகாரமும் ஒரே நேரத்தில் மொத்தமாக வழங்கிவிடுவான். அவர் எது செய்ய விரும்புகிறாரோ அதை அவர் செய்ய அவருக்கு அதிகாரம் உண்டு. அதற்காக அல்லாஹ்வின் அனுமதி அவருக்குத் தேவையில்லை.
ஒரு வலீ ஒவ்வொரு வேலைக்கும் அனுமதி கேட்பதற்கு அல்லாஹ் “றெஸ்ட்” ஓய்வெடுப்பவனில்லை. அவன் ஒவ்வொரு நொடியிலும் பல கோடி வேலைகள் செய்து கொண்டே இருக்கிறான்.
قال الله تعالى كُلَّ يَوْمٍ هُوَ فِيْ شَأْنٍ
அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையில் உள்ளான். இங்கு ஒரு நாள் என்பது ஒவ்வொரு நொடியையும் குறிக்குமென்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஒரு நாள் என்று வசனத்தில் கூறி அந்த நாளிலுள்ள மொத்த நொடிகளில் ஒவ்வொரு நொடியையும் கருத்திற் கொள்வது நாகரிக மொழி நடையில் உள்ளதாகும். இவ்வாறு கருத்திற் கொண்டால்தான் அல்லாஹ்வின் வெளிப்பாட்டிற்கு அது பொருத்தமானதாயிருப்பதோடு அவனின் “தஜல்லீ”யின் மகத்துவமும் விளங்கும்.
அல்லாஹ் ஒரு நாளில் ஒரு வேலைதான் செய்கிறான் என்று பொருள் கொண்டால் அது எதார்த்தத்திற்கு முரணாகிவிடும். ஏனெனில் ஒரு மனிதனே ஒரு நாளில் பல வேலைகள் செய்யும் போது அல்லாஹ் ஒரு நாளில் ஒரு வேலை மட்டும்தான் செய்கிறான் என்பது அவனின் வல்லமையை குறைத்துக் காட்டுவதாகவே ஆகும்.
ஒரு சிற்றெறும்பின் நகர்வும் அவனின் “தஜல்லீ” வெளிப்பாடேயாகும். இதேபோல் ஒவ்வோர் உயிரினத்தின் அசைவும், நகர்வும் அவனின் அசைவும், நகர்வுமேதான். மரத்தின் ஓர் இலையின் அசைவும் அவனின் அசைவேதான். இவ்வாறு எந்தப் படைப்பின் அசைவாயினும், நகர்வாயினும், பேச்சாயினும், அழுகையாயினும், சிரிப்பாயினும் இவையெல்லாமே அல்லாஹ்வின் செயல்களேயாகும். அவன் தவிர வேறொன்றுமில்லை என்ற திருக்கலிமா இந்தத் தத்துவத்தையே உணர்த்துகிறது. நற்பாக்கியமுள்ளவர்கள் பெற்றனர். மற்றவர்கள் பெறாமல் போயினர்.
ஆகையால் ஒரு வலீ என்பவருக்கு அல்லாஹ் வழங்கும் மொத்த அதிகாரத்தைக் கொண்டு அவர் எதை சாதிக்க நினைக்கிறாரோ அதை அவர் சாதிப்பார். அதற்கு அல்லாஹ்வின் அனுமதி தேவையில்லை.
இதற்கு ஓர் உதாரணம் சொல்வதாயின் பின்வருமாறு சொல்லலாம்.
ஒரு கடையின் உரிமையாளன் தனது கடையின் முழு பொறுப்பையும், அதிகாரத்தையும் ஒருவருக்கு ஒப்படைத்து இன்று முதல் நீங்கள்தான் எனது கடையின் உரிமையாளன். அனைத்து அதிகாரமும் உங்களுக்குத் தருகிறேன். கொள்முதல் செய்வது முதல் வேலையாட்களைச் சேர்ப்பது அல்லது விலக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் நீங்களே பொறுப்பு. என்னிடம் கேட்காமல் எது செய்வதற்கும் உங்களுக்கு அதிகாரம் தருகிறேன் என்று சொல்லிக் கொடுப்பது போன்றதே அல்லாஹ் ஒருவருக்கு “விலாயத்” எனும் ஒலித்தனம் வழங்குவதுமாகும்.
இந்த உதாரணத்தைச் சரியாகப் புரிந்த கொண்டால் ஒரு வலீயால் எது செய்ய முடியும்? எது செய்ய முடியாது? என்பதைப் புரிந்த கொள்ள முடியும்.
அல்லாஹ்வால் எதெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் ஒரு நபீயாலும், ஒரு வலீயாலும் செய்ய முடியும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நாம் சொன்னால் அல்லது எழுதினால் “பத்வா” வழங்கிய முல்லாக்கள் அல்லாஹ்வுக்கு நபீமாரையும், வலீமாரையும் சமமாக்கிவிட்டான், நிகராக்கிவிட்டான் என்று “முர்தத்” பத்வா கொடுத்துவிடுவார்கள். இவ்வாறு “பத்வா” கொடுத்துக் கொடுத்து இலங்கையிலுள்ள முஸ்லிம்களில் அதிகமானோரை, இல்லை அவர்கள் தவிரவுள்ள அனைவரையும் பௌதர்களாக, இந்துக்களாக, கிறித்துவர்களாக ஆக்கிவிடுவார்கள். உலமா சபையின் இப்போதுள்ள நிர்வாகத்தை இன்னும் பத்து வருடங்களுக்கு விட்டு வைத்தால் இலங்கையிலுள்ள பள்ளிவாயல்களில் தொழுவதற்கே ஆட்களில்லாமல் போய்விடும்.
இஸ்லாத்தில் இணைந்து கொள்ள வருகின்ற ஒருவனை எந்த அளவு அவசரமாக இஸ்லாமியனாக இணைத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு அவசரமாக இஸ்லாம் மார்க்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இமாம் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்காக மின்பரில் நின்று பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஒரு “காபிர்” தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் இமாம் பிரசங்கத்தை நிறுத்திவிட்டு மின்பரிலிருந்து கீழே இறங்கி அவருக்கு திருக்கலிமா சொல்லிக் கொடுத்து அவரை இஸ்லாம் மார்க்கத்தில் இணைப்பது அவரின் கடமையென்று இஸ்லாமிய சட்டம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் பரம்பரை முஸ்லிம்களில் பல்லாயிரம் பேர்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றி அவர்களுக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்கிய முல்லாக்களை என்ன செய்ய வேண்டுமென்று பொது மக்களைக் கேட்கிறேன்.
அல்லாஹ்வால் செய்ய முடிந்தவை அனைத்தையும் நபீமார், வலீமார்களாலும் செய்ய முடியும் என்பதை எதிர்ப்பவர்கள் அல்லாஹ்வின் சக்திக்கும், வலீமாரின் சக்திக்கும் வித்தியாசம் தெரியாதவர்களேயாவர். வித்தியாசம் தெரியாத அரை அவியல்களாலேயே குழப்பம் ஏற்படுகிறது.
அல்லாஹ்வின் “குத்றத்” சக்தி “தாதீ” யானதாகும். வலீமார், நபீமாரின் சக்தி “அதாயீ” ஆனதாகும். “தாதீ” என்றால் தனக்குத் தானானதேயன்றி இன்னொருவரால் வழங்கப்பட்டதல்ல. அல்லாஹ்வின் “சக்தி” போன்று. “அதாயீ” என்றால் அல்லாஹ்வால் அடியானுக்கு வழங்கப்பட்டதேயன்றி தனக்குத் தானானதல்ல. மனிதனின் சக்தி போன்று.
“தாதீ” என்பதற்கும் “அதாயீ” என்பதற்கும் பெரும் வித்தியாசமுண்டு. ஒரு வலீயின் சக்தி அல்லாஹ்வின் சக்தி போல் “தாதீ”யானதென்று ஒருவர் நம்பினால் அவர் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராகிறார். இவ்வாறு நம்புவது மட்டும்தான் பிழையாகுமேயன்றி அல்லாஹ்வால் முடிந்ததெல்லாம் நபீமார், வலீமார்களாலும் முடியுமென்று சொல்வது மட்டும் குற்றமாகாது. இவ்வாறு ஒருவன் சொன்னால் அவன் மீது மற்றவர் எவரும் தப்பெண்ணம் கொண்டு அவனை “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ சொல்வது கூடாது. அவன் என்ன கருத்தில் அவ்வாறு சொன்னான் என்று அறிய விரும்பினால் அவனிடம் கேட்க மார்க்கத்தில் இடமுண்டு. ஆயினும் அவன் சொல்ல மறுத்து அது எனக்குத் தெரியும், உனது வேலையை நீ பார் என்று சொன்னால் அவனை வற்புறுத்தச் சட்டமில்லை.
இவ்வாறுதான் ஒரு வலீயின் சமாதிக்குச் செல்பவன் அவர்களிடம் நேரடியாகக் கேட்பதுமாகும். உதாரணமாக முஹ்யித்தீன் ஆண்டகையே எனக்கு உதவுங்கள், ரிபாயீ நாயகமே என் தேவையை முடித்து தாருங்கள், பாதுஷா நாயகமே எனது நோயை சுகமாக்கித் தாருங்கள் என்று கேட்பதுமாகும்.
இவ்வாறு கேட்பவன் அந்த நபீ அல்லது வலீ அல்லாஹ் போல் சுயமாகத் தருகிறார் என்று நம்புதல் கூடாது. மாறாக அல்லாஹ் அவருக்கு அத்தன்மையை வழங்கியதால் அவர் தருகிறார் என்று நம்ப வேண்டும்.
ஒரு முஸ்லிம் ஒரு வலீயின் சமாதியில் இருந்து நேரடியாக அந்த வலீயிடம் கேட்பாராயின் அவர் என்ன நம்பிக்கையில் கேட்கிறார் என்பதை மற்றவர் அறிய விரும்புவது அவருக்கு கடமையில்லை. ஆயினும் நல்லெண்ணத்தோடு அவரிடம் விபரம் கேட்கலாம். அவர் அந்த வலீக்கு அல்லாஹ் வழங்கிய சக்தி கொண்டுதான் எனது தேவையை முடித்துத் தருகிறார் என்று சொன்னால் அவருக்கு துஆ செய்ய வேண்டும். இதற்கு மாறாக அந்த வலீதான் சுயமாகச் செய்கிறார் என்று அவன் சொன்னால் அவனுக்கு சற்று அமைதியாக, கோபப்படாமல் கொள்கை விளக்கம் சொல்லி அவரைச் சீர் செய்ய வேண்டும்.
அவரிடம் நீ என்ன நம்பிக்கையோடு நேரில் கேட்டாய் என்று கேட்கும் போது எனக்கு எல்லா நம்பிக்கையும் தெரியுமென்று சூடானால் அவனுடன் தர்க்கம் புரியாமல் அவனை விட்டு விட வேண்டும்.
தொடரும்…..