(தொடர் 02)
ஹிஜ்ரி 04 ம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழந்த ஸூபி ஞானி அபூ அப்தில்லாஹில் ஹுஸைனிப்னுல் மக்கீ அஸ்ஸபீஹீ றஹிமஹில்லாஹ் அவர்கள் 30 ஆண்டுகள் தனது வீட்டை விட்டு வெளியில் வராமல் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார்கள். அல்லாஹ் தஆலாவின் அஸ்மா ஸிபாத்துகள் பற்றிய இறை ஞானக்கருத்துக்களை அவர்கள் பேசினார்கள். இவர்கள் மீது ஏற்பட்ட பொறாமையின் காரணமாக காபிர் என தீர்ப்பளிக்கப்பட்டார்கள். இதனால் அவர்கள் பஸறாவிலிருந்து வெளியேறி ஈரானிலுள்ள ஸூஸ் நகருக்குச் சென்று அங்கேயே வாழ்ந்து மரணித்தார்கள்.
ஹிஜ்ரி 309 ல் மரணித்த ஸூபி ஞானி அபுல் அப்பாஸ் அஹ்மதுப்னு அதா றஹிமஹில்லாஹ் அவர்கள் மாபெரும் அறிஞராகவும் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார்கள். ஒரே நாளில் அல்குர்ஆன் முழுவதையும் ஓதி முடிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இவ்வாறிருந்தும் அக்காலத்தில் வாழ்ந்தவர்களால் காபிர் என்றும் ஸின்தீக் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டார்கள். இவர்கள் பற்றிய தவறான செய்திகள் அக்காலத்து அரச சபையின் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அமைச்சரின் கட்டளைப்படி சித்திரவதை செய்யப்பட்டார்கள். சித்திரவதையின் வேதனை தாங்க முடியாமல் மரணித்தார்கள்.
ஹிஜ்ரி 215 – 298 காலத்தில் வாழ்ந்த ஸூபி ஞானி ஜுனைதுல் பக்தாதீ றஹிமஹில்லாஹ் அவர்கள் மாபெரும் ஆத்ம ஞானியாகவும் பேரறிஞராகவும் சிறந்த வணக்கசாலியாகவும் காணப்பட்டார்கள். “தாவூஸுல் உலமா” என்றும் “ஸெய்யிதுத்தாஇபா” என்றும் சிறப்புப் பெயர் பெற்ற இவர்கள் ஸூபி ஞானத்தை பகிரங்கமாக பேசிய காரணத்தினால் எதிரிகளால் காபிர் என்றும் ஸின்தீக் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை தமது வீட்டினுள்ளே இருந்து கொண்டு இரகசியமாக ஸூபி ஞானத்தை போதித்தார்கள்.
ஹிஜ்ரி 309 ல் மரணித்த ஸூபி ஞானி முஹம்மத் இப்னுல் பழ்ல் அல் பல்கீ றஹிமஹில்லாஹ் அவர்கள் அல்லாஹ் தஆலாவின் அஸ்மா ஸிபாத்துகள் பற்றிய கருத்துக்களை நேரடியாக தெரிவித்தமைக்காக பல்க் தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்டார்கள். அவர்களை நாடுகடத்தும் போது தனது கழுத்தில் கயிற்றினால் கட்டி கடைத் தெருவில் சுற்றுமாறும் இவர் பித்அத் காரன் இவரை நாங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுகிறோம் என்று அறிவிக்குமாறும் அவர்கள் சொன்னார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. இதன் போது “பல்க் வாசிகளே உங்களின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் தனது ஞானத்தை பிடுங்கிவிடுவானாக” என்று கூறினார்கள். இதன் பின்னர் பல்கில் எந்த ஒரு இறை ஞானியும் தோன்றவில்லை.
ஹிஜ்ரி 334 ல் மரணித்த ஸூபி ஞானி யூஸுப் இப்னு ஹுஸைன் அர் றாஸீ அவர்கள் இமாம் என்றும் ஆரிப் என்றும் ஷெய்குஸ் ஸூபிய்யா என்றும் சிறப்புப் பெயர் பெற்றவராவார்கள். ஆயினும் இவர்கள் தமது சொந்த ஊரான “றை” யிலிருந்து துரத்தப்பட்டார்கள்.
(தொல்லைகள் தொடரும்…..)