(தொடர் 03)
ஸூபிஸத்தின் எதிரிகளால் ஸூபி ஞானிகளுக்கு பன்னெடுங்காலமாக பல்வேறு தொல்லைகள், துன்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது பற்றி கடந்த தொடர்களில் சுருக்கமாக எழுதியிருந்தேன். இவை ஸூபிஸ வரலாற்றில் இரத்தத்தால் எழுதப்பட்ட சம்பவங்கள்.
அந்த வகையில் ஹிஜ்ரி 373 ல் மரணித்த ஸூபி ஞானி அபூ உத்மான் அல்மக்ரிபீ றஹிமஹில்லாஹ் அவர்கள் பூரண அறிவுடையவர்களாகவும் அல்லாஹ்வின் பாதையில் நப்ஸோடு போராடுபவர்களாக இருந்தும் கூட மக்காவிலிருந்து அடித்து துன்புறுத்தப்பட்டு ஒட்டகையில் ஏற்றி ஊர் முழுக்க சுற்றி துரத்தப்பட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை பக்தாதில் வாழ்ந்து மரணித்தார்கள்.
ஹிஜ்ரி 334 ல் மரணித்த ஸூபி ஞானி அபூபக்கர் ஷிப்லீ றஹிமஹில்லாஹ் அவர்கள் பூரண அறிவுடையவர்களாகவும் அல்லாஹ்வின் பாதையில் நப்ஸோடு போராடுபவர்களாக இருந்தும் கூட பல முறை காபிர் என தீர்ப்பளிக்கப்பட்டார்கள்.
ஹிஜ்ரி 363 ல் மரணித்த ஸூபி ஞானி அபூபக்கர் அந்நாபலஸீ றஹிமஹில்லாஹ் அவர்கள் சிறப்புடையவர்களாகவும் பெரும் அறிஞராகவும் இருந்தும் கூட மக்ரிபிலிருந்து மிஸ்ருக்கு வெளியேற்றப்பட்டார்கள். மிஸ்ரின் அரசனிடம் இவர்கள் ஸிந்தீக் என பொய்ச்சாட்சி சொல்லப்பட்டதால் அரசன் இவர்களை தலைகீழாக தொங்கச்செய்து இவர்களின் தோலை உரிக்குமாறு கட்டளையிட்டான். அவர்கள் தோலுரிக்கப்படும்போது அல்குர்ஆனை பயபக்தியுடன் ஓதிக்கொண்டிருந்தார்கள்.
ஹிஜ்ரி 837 ல் மரணித்த ஸூபி ஞானி இமாதுத்தீன் நஸீமீ றஹிமஹில்லாஹ் அவர்கள் ஹலப் என்ற ஊரில் தோலுரிக்கப்பட்டார்கள். இவர்களை குற்றவாளியாக காண்பிப்பதற்காக இவர்களின் எதிரிகள் ஸூறதுல் இக்லாஸை ஒரு காகிதத்தில் எழுதி அதை ஒரு செருப்பினுள் வைத்து அதனை தைத்து வேறொருவர் மூலம் அன்பளிப்புச்செய்தார்கள். இமாமவர்கள் இந்த சூழ்ச்சி பற்றி அறியாமல் அந்த பாதரட்சைகளை அணிந்துகொண்டார்கள். இது பற்றி ஆட்சியாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டபோது அவர்களின் பாதரட்சைகள் சோதனையிடப்பட்டது. அங்கு ஸூறதுல் இக்லாஸ் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டுருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு எந்த பதிலுமளிக்க முடியாமல் இமாம் அவர்கள் அல்லாஹ்விடம் இந்த விடயத்தை ஒப்படைத்தார்கள். இதனால் இவர்கள் தோலுரிக்கப்பட்டார்கள். இவர்கள் தோலுரிக்கப்படும்போது தோலுரிப்பவனை பார்த்து சிரித்துக்கொண்டு 500 ஞானப்பாடல்களை பாடினார்கள்.
ஹிஜ்ரி 594 ல் மரணித்த ஸூபி ஞானி அபூமத்யன் அல் மக்ரிபீ றஹிமஹில்லாஹ் அவர்கள் ஸின்தீக் என தீர்ப்பளிக்கப்பட்டார்கள். அவர்களின் சொந்த ஊரான பிஜாயாவிலிருந்து மஸான் என்ற ஊருக்கு துரத்தப்பட்டார்கள்.
ஸூபி ஞானி அப்துல்லாஹ் இப்னு அபீ ஹம்ஸா றஹிமஹில்லாஹ் அவர்களுக்கு எதிராக பல பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. இதனால் ஜும்ஆவுக்கு மாத்திரம் வெளியில் வந்தார்கள் மற்றய நேரங்களில் தாம் மரணிக்கும் வரை வீட்டிலேயே தனித்திருந்தார்கள்.
ஹிஜ்ரி 320 ல் மரணித்த ஸூபி ஞானி ஹகீம் அத்திர்மிதீ றஹிமஹில்லாஹ் அவர்கள் பல்க் என்ற ஊருக்கு துரத்தப்பட்டார்கள். அவர்கள் எழுதிய நூற்களையெல்லாம் கடலில் எறிந்தார்கள். மீன்கள் அந்த நூற்களை பல வருடகாலம் பாதுகாத்து வெளியில் கொணர்ந்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 348 ல் மரணித்த ஸூபி ஞானி அபுல் ஹஸன் அல் பூஷன்ஜீ றஹிமஹில்லாஹ் அவர்கள் அக்காலத்தில் பெரும் அறிஞராக திகழ்ந்தார்கள். ஆயினும் பெரும் எதிர்ப்பு அவர்களுக்கு ஏற்பட்டு அவர்களின் எதிரிகளால் நைஸாபூருக்கு துரத்தப்பட்டார்கள். மரணிக்கும் வரை அங்கேயே வாழ்ந்து மரணித்தார்கள்.
(தொல்லைகள் தொடரும்…..)