Home எழுத்தாக்கங்கள் ஸூபிஸத்தின் எதிரிகளால் ஸூபி ஞானிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட தொல்லைகள்

ஸூபிஸத்தின் எதிரிகளால் ஸூபி ஞானிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட தொல்லைகள்

0
282

(தொடர் 04)

இறை ஞானம் பேசிய மகான்களிற் சிலர் கொல்லப்பட்டார்கள். இன்னும் சிலர் தோலுரிக்கப்பட்டார்கள். வேறு சிலர் நாடு கடத்தப்பட்டார்கள்.


அந்த வகையில் ஹிஜ்ரி 371 ல் மரணித்த ஸூபி ஞானி அபுல் ஹஸன் அல் ஹஸ் ரீ றஹிமஹில்லாஹ் அவர்கள் அக்காலத்தில் காபிர் என தீர்ப்பளிக்கப்பட்டார்கள். ஜும் ஆவுக்கு சமுகமளிக்கக் கூடாது என நீதிபதியால் தடைவிதிக்கப்பட்டார்கள்.

ஹிஜ்ரி 309 ல் மரணித்த ஸூபி ஞானி மன்ஸூர் அல் ஹல்லாஜ் றஹிமஹில்லாஹ் அவர்கள் எதிரிகளால் சூழ்ச்சி செய்யப்பட்டு காபிர் என தீர்ப்பளிக்கப்பட்டு மிகக்கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் வரலாறு மிக நீளமானது. இந்த இணைப்பில் நீங்கள் கேட்கமுடியும். Link

ஹிஜ்ரி 505 ல் மரணித்த மாபொரும் ஸூபி ஞானி ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹில்லாஹ் அவர்கள் ஸூபிஸத்தின் எதிரிகளால் காபிர் என தீர்ப்பளிக்கப்பட்டார்கள். அவர்களின் இஹ்யாஉ உலூமித்தீன் என்ற உலகப்பிரசித்திபெற்ற நூல் எதிரிகளால் எரிக்கப்பட்டது.
ஹிஜ்ரி 656 ல் மரணித்த ஷாதுலிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் அல்குத்புல் அக்பர் இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹில்லாஹ் அவர்கள் மக்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இஸ்கந்தரிய்யாவுக்கு சென்று கொண்டிருக்கும்போது மக்ரிபைச்சேர்ந்த ஒரு ஸின்தீக் வருகிறார் என இஸ்கந்தரிய்யாவுக்கு செய்தி அனுப்பினார்கள். இதனால் அங்குள்ளவர்கள் இமாம் அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்கள்.

ஹிஜ்ரி 578 ல் மரணித்த ரிபாஇய்யா தரீக்காவின் ஸ்தாபகர் ஸுல்தானுல் அரிபீன் இமாம் அஸ்ஸெய்யித் அஹ்மத் அல்கபீர் அர்ரிபாஈ றஹிமஹில்லாஹ் அவர்கள் ஸின்தீக் என்றும் முல்ஹித் என்றும் அவர்களின் எதிரிகளால் தீர்ப்பளிக்கப்பட்டார்கள்.
ஹிஜ்ரி 261 ல் மரணித்த ஸூபி ஞானி அபூயஸீத் அல்பிஸ்தாமீ றஹிமஹில்லாஹ் அவர்கள் ஏழு முறை பிஸ்தாமில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். நபிமார்கள் வலீமார்களின் ஆன்மீக நிலை பற்றி அவர்கள் பேசியது அந்த ஊரின் ஆட்சியாளருக்கு பிடிக்கவில்லை இதனால் ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஆட்சியாளர் மரணித்த பின்னரே ஊர் திரும்பினார்கள்.

ஹிஜ்ரி 632 ல் மரணித்த ஸூபி ஞானி ஸுல்தானுல் ஆஷிகீன் உமர் இப்னுல் பாரிழ் றஹிமஹில்லாஹ் அவர்கள் பிரபலமான ஸுபி கவிஞராக திகழ்ந்தார்கள். இவர்கள் பலராலும் எதிர்க்கப்பட்டார்கள். இவர்கள் ஸின்தீக் என தீர்ப்பளிக்கப்பட்டார்கள்.
ஹிஜ்ரி 669 ல் மரணித்த ஸூபி ஞானி அப்துல் ஹக் இப்னு ஸப்ஈன் றஹிமஹில்லாஹ் அவர்கள் ஸூபிஸ ஞானத்தை போதித்த காரணத்தினால் மக்ரிபிலிருந்து மிஸ்ருக்கு வெளியேற்றப்பட்டார்கள். இவர்கள் காபிர் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்கள்.

ஹிஜ்ரி 638 ல் மரணித்த மாபொரும் ஸூபி ஞானி இமாம் அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹில்லாஹ் அவர்கள் இன்று வரை பலராலும் எதிர்க்கப்பட்டு வருகின்றார்கள். வஹ்த்துல் வுஜூத் – உள்ளமை ஒன்று எனும் தத்துவத்தை மிகப்பகிரங்கமாக பேசியும் எழுதியும் வந்த காரணத்தினால் ஸின்தீக் என்றும் காபிர் என்றும் ஸூபிஸத்தின் எதிரிகளால் தீர்ப்பளிக்கப்பட்டார்கள். இன்று உலகில் வாழும் வஹ்ஹாபிஸ அடிப்படைவாதிகளும் அவர்களின் முன்னோர்களான இப்னுதைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப் போன்றவர்களின் வழியைப் பின்பற்றி இமாம் அவர்களை கடுமையாக விமர்சிக்கக்கூடியவர்களாகவும் காபிர் என பத்வா வழங்குபவர்களாகவுமே இருக்கின்றனர்.

இதுவரை ஸுபிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட தொல்லைகளை அவர்களின் வரலாற்றுக்கடலிலிருந்து காலத்திற்கேற்றவகையில் மிகச்சுருக்கமாக நான் எழுதினேன்.

இஸ்லாமிய வரலாற்றில் இறை ஞானம் பேசிய ஸூபீ மகான்களில் பலர் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டார்கள், பலர் சித்திரவதை செய்யப்பட்டார்கள், பலர் நாடுகடத்தப்பட்டார்கள், பலர் கொல்லப்பட்டார்கள்.
காபிர், அல்லது “சிந்தீக்”என்ற குற்றச்சாட்டில் தான் இவர்களெல்லாம் கொலை செய்யப்பட்டார்கள். இது தவிர வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டவர்களும் பலர் இருக்கின்றனர். வாளால் வெட்டிக் கொல்லப்படாமல் “பத்வா” வினால் கொல்லப்பட்டவர்கள் பலர் இருக்கின்றனர்.

அவ்வாறு பத்வாவினால் கொல்லப்பட்ட ஒரு சமூகம் இலங்கை இஸ்லாமிய சமூகத்தில் இருக்கின்றது. அந்த பத்வாவினால் கொலையும் நடந்துள்ளது. அது பற்றி அடுத்த தொடரில் நான் சற்று விரிவாக எழுதுவேன் இன்ஷா அல்லாஹ்.

(#தொல்லைகள்_தொடரும்…..)

NO COMMENTS