(தொடர் 05)
இஸ்லாமிய வரலாற்றில் இறை ஞானம் பேசிய ஸூபீ மகான்களில் பலர் காபிர் என்றும் ஸின்தீக் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டார்கள், பலர் சித்திரவதை செய்யப்பட்டார்கள், பலர் நாடுகடத்தப்பட்டார்கள், பலர் கொல்லப்பட்டார்கள் என்பது தொடர்பான விபரங்களை சென்ற நான்கு தொடர்களிலும் சுருக்கமாக எழுதினேன்.
இவர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டமைக்கு காரணம் அக்காலத்தில் வாழ்ந்த ஸூபிஸத்தின் எதிரிகளான வெளிரங்க உலமாக்கள் இவர்களுக்கு காபிர், அல்லது “சிந்தீக்” என்று பத்வா- தீர்ப்பு வழங்கியதாகும்.
இவ்வாறு முர்தத் – மதம் மாறியவர் என பத்வா வழங்கப்பட்ட ஒரு சமூகம் இலங்கை இஸ்லாமிய சமூகத்தில் இருக்கின்றது. அந்த பத்வாவினால் கொலையும் பல விபரீதமான சம்பவங்களும் வன்முறைகளும் நடந்துள்ளது. அது பற்றி சற்று விரிவாக எழுதுகிறேன்.
தற்போது இலங்கையில் ஸூபிஸத்தை போதிக்கும் ஸூபி ஞானி அஷ்ஷெய்ஹ் மெளலவீ அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்களும் அவர்களின் கருத்துக்களைச் சரிகண்ட பல்லாயிரம் முஸ்லிம்களும் 1979ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் முர்தத்கள் – மதம்மாறியவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டார்கள்.
அந்த காலங்களில் நபி பெருமானார் பிறந்த ‘றபீஉல் அவ்வல்’ மாதம் வந்தால் காத்தான்குடியில் மீலாத் விழாக்கள் நடைபெறும். பள்ளிவாயல் அனைத்திலும் பாரம்பரிய நிகழ்வுகள் மெளலித் புகழ் பாடுதல், கந்தூரி அன்னதான வைபவங்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
அந்த வகையில் ஒரு மாபெரும் மீலாதுன் நபி விழா காத்தான்குடி 05ம் குறிச்சி மீரா பள்ளிவாசல் மார்க்கட் வளாகத்தில் 1979-02-11 அன்று ஏற்பாடாகியது.
அதி சங்கைமிகு ஷெய்குனா மெளலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ-பஹ்ஜீ அவர்கள் அங்கு உரை நிகழ்த்தும்போது அண்ணல் நபி (ﷺ) அவர்கள் கொண்டிருந்த விஷேட தன்மைகளை அல்குர்ஆன்-ஹதீஸ் மற்றும் இமாம்களின் நூற்களின் ஆதாரங்களோடு பட்டியலிட்டு விபரித்தார்கள்.
நபி (ﷺ) அவர்களை சாதாரண மனிதன் என்று நினைப்போருக்கு; அவர்கள் நம் போன்றவர்களல்லர்! அவர்கள் அல்லாஹ்வுடைய சம்பூரண வெளிப்பாடு என்ற அகமிய உண்மைகளை வெளியிட்டார்கள். இவற்றுக்கெல்லாம் அடிப்படையான தத்துவமான “வஹ்ததுல் வுஜூத்” (உள்ளது ஒன்றே) எனும் ஏக தத்துவத்தை பேசினார்கள்.
‘வஹ்ததுல் வுஜூத்’ (மெய்ப்பொருள் ஒன்று- அதன் கோலங்களோ பல) எனும் ஸூபிஸ தத்துவத்தின் அடிப்படையில் பெருமானார் (ﷺ) அவர்களுடைய சிறப்புக்களை வலியுறுத்திப்பேசி கருத்து வெளியிட்டார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் ஸூபி மகான்கள் போதிக்கின்ற இறைஞான ஏகத்துவக்கலையில் வரும் “வஹ்ததுல் வுஜூத்” (உள்ளமை ஒன்று) எனும் தத்துவத்தின் வாடையைக்கூட நுகர்ந்திராத, தப்லீக்கிய வஹாபிஸ சிந்தனைகளில் கவரப்பட்டுக்கொண்டிருந்த காத்தான்குடி உலமாக்களுக்கு ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களுடைய கருத்துக்கள் அன்றுதான் முதன்முதலாக கேள்வியுற்ற, பாரிய விந்தையான கருத்துக்களாக தென்பட்டன. அக்கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டிருந்தன.
1979-03-31ம் திகதி கொழும்பு – மருதானை ஸாஹிராக்கல்லூரியின் கபூர் மண்டபத்தில் ஜம்இய்யதுல் உலமாவைச்சார்ந்தவர்கள் ஒன்று கூடினர்.
ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களுடைய பேச்சடங்கிய ஒலிநாடாவின் சில பகுதிகள் மாத்திரம் ஆங்காங்கே ரி-வைண்ட் பண்ணி போட்டுக்கேட்கப்பட்டது. இறுதியில் என்னசெய்வது என ஆலோசித்தனர்.
அப்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச்செயலாளர் மெளலவி MJM.றியாழ் என்பவர், மெளலவி அப்துர் றஊப் 1979-03-28இல் ஜம்இய்யாவுக்கு கடிதம் அனுப்பியதாகவும் அதில் தனக்கும் காத்தான்குடி உலமாக்களுக்கும் இடையே இது சம்மந்தமாக கடிதத்தொடர்புகள் இடம்பெற்றுவருவதாகவும் குறிப்பிட்டு தமக்குக்கடிதம் அனுப்பியிருக்கிறார் என்பதாக அச்சபையில் தெரிவித்தார்.
அங்கிருந்த வெளியூர் உலமாக்களில் சிலர் தற்போது எந்த முடிவும் எடுக்கவேண்டாம் என்றும், மெளலவி அப்துர் றஊபுடன் தொடர்புகொண்டு விசாரித்த பின்னர் இது சம்மந்தமான ஒரு முடிவை எடுக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
அந்நேரம் அங்கிருந்த காத்தான்குடியிலிருந்து சென்ற உலமாக்கள், “முடிவு என்ன எடுப்பது! முர்தத் பத்வா கொடுக்கவேண்டியதுதான். திரும்பவும் இப்படியான ஒரு மாநாட்டை கூட்ட முடியாது. கொடுப்பதை இப்போதே கொடுத்து விடுங்கள். நாங்கள் எங்கள் ஊருக்கு என்ன முகத்துடன் போவது! ஒரு தீர்ப்புடன்தான் போகவேண்டும்!” என விடாப்பிடியாக கூறினர்.
இறுதியில் “மெளலவி A.J. அப்துர் றஊப் என்பவரும் அவரது கருத்தை சரிகண்டவர்களும் முர்தத்- மதம் மாறியவர்கள்” என்று தீர்ப்பு வழங்குவது என தீர்மானித்தனர். அதன்படி மறுநாள் (1979-04-01ம் திகதி) ஊடகங்கள் வாயிலாக அறிவிப்பு செய்தனர்.
“ஏகத்துவ கொள்கையில் ஊடுருவல்” எனும் பெயரில் பத்வா புத்தகம் ஒன்று ஜம்இய்யதுல் உலமாவினால் 01.04.1979 திகதியிடப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது. அதன் 16 ம் பக்கத்தில் ஏ.ஜே.அப்துர் றஊப் மெளலவியும் அவருடைய கருத்தைச்சரிகண்டவர்களும் இஸ்லாத்தை விட்டும் நீங்கியவர்களாக முர்தத்தாக மாறிவிட்டார்கள் என குறிப்பிட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பத்வாவை பிரகடனம் செய்தது.
“அத்துடன் அதன் 20ம் பக்கத்தில் ஒருவன் இஸ்லாத்திலிருந்து மதம் மாறிவிட்டால் இஸ்லாமிய “ஷரீஆ” சட்டப்படி அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்றும் அவன் பாவமன்னிப்பு கோரவேண்டும் என்றும் அவ்வாறு பாவ மன்னிப்புகோராமல் இருந்தால் அவன் முஸ்லிம் ஜமாஅத்தைச்சேர்ந்தவனாக கணிக்கப்படமாட்டான், அவனால் சன்மார்க்க கடமைகள் எவையேனும் நிறைவேற்றப்படின் அவை நிறைவேறாது, அவன் விவாகம் செய்திருந்தால் அவனது நிகாஹ் பிரிந்து விடும், முஸ்லிம்களுடன் அவனுக்கிருந்த தொடர்புகள் அனைத்தும் நீங்கிவிடும், அவன் இறந்தால் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவுக்குரிய கடமைகள் அவனது மையித்திற்கு நிறைவேற்றப்படவேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பத்வா இன்று வரை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டே வருகின்றது.
அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் அநீதியான இந்த பத்வாவினால் காத்தான்குடியிலும் ஏனைய ஊர்களிலும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன.
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலைக்கு பிரதான காரணம் இந்த பத்வா தான் என்பது நிதர்சனமானது. காத்தான்குடியில் அடிப்படைவாதத்தின் தாக்கம் ஏற்பட்டதற்கும் அது தீவிரவாதத்தின் கதவுகளை தட்டியதற்கும் பிரதான காரணம் இந்த பத்வா தான் என்பது வெளிப்படையான உண்மையாகும்.
(#தொல்லைகள்_தொடரும்…..)