Home எழுத்தாக்கங்கள் ஸூபிஸத்தின் எதிரிகளால் ஸூபி ஞானிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட தொல்லைகள்

ஸூபிஸத்தின் எதிரிகளால் ஸூபி ஞானிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட தொல்லைகள்

0
282

(தொடர் 06)

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU) 1979ம் ஆண்டு வெளியிடப்பட்ட “பத்வா“ இன்று வரை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் எமது ஸூபிஸ சமூகம் கொலை, கொலை முயற்சிகள், சொத்திழப்புக்கள், உரிமையிழப்புக்கள், புறக்கணிப்புக்கள் உட்பட பல்வேறு வகையான இன்னல்களை 1979ம் ஆண்டிலிருந்து இன்று வரை அனுபவித்துக் கொண்டு வருகின்றது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய இந்த அநீதியான தீர்ப்பு திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு வழங்கியதுமல்ல. ஹதீதை ஆதாரமாகக் கொண்டு வழங்கியதுமல்ல. அது அவர்களின் “ஹவா” என்ற மனோ இச்சை கொண்டும், பொறாமை கொண்டும் வழங்கப்பட்டது.

இஸ்லாமிய தீர்ப்பு என்பது மேற்கண்ட இரண்டு ஆதாரங்களையும் மற்றும் “இஜ்மாஉ, கியாஸ்” என்பவற்றையும் ஆதாரங்களாகக்கொண்டு வழங்கப்படுகின்ற ஒன்றேயன்றி ஒருவன் தனது சிந்தனை கொண்டும், ஆய்வு கொண்டும் வழங்குகின்ற ஒன்றல்ல.

இமாம் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல் பதாவல் ஹதீதிய்யா” என்ற நூல் 39ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

‎قال الإمام ابن حجر رحمه الله فى الصفحة التاسعة والثلاثين من الفتاوى الحديثيّة، وَمِنْهَا: مَا صرح بِهِ أَئِمَّتنَا كالرافعي فِي الْعَزِيز وَالنَّوَوِيّ فِي (الرَّوْضَة) و (الْمَجْمُوع) وَغَيرهمَا من أَن الْمُفْتِي إِذا سُئِلَ عَن لفظ يحْتَمل الْكفْر وَغَيره لَا يَقُول هُوَ مهدر الدَّم أَو مباحه أَو يقتل أَو نَحْو ذَلِك، بل يَقُول يسئل عَن مُرَاده فَإِن فسره بِشَيْء عمل بِهِ،

இமாம்களான றாபியீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “அல்அஸீஸ்” என்ற நூலிலும், இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “றவ்ழா” மற்றும் “மஜ்மூஉ” என்ற நூல்களிலும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

ஒரு “முப்தீ”யிடம் – தீர்ப்பு வழங்குபவரிடம் – ஒருவன் சொன்ன ஒரு சொல் பற்றியோ, ஒருவன் பேசிய பேச்சு பற்றியோ கேட்கப்பட்டால், அந்தச் சொல் அல்லது அந்தப் பேச்சு “குப்ர்” என்ற நிராகரிப்புக்கும், வேறு நல்ல கருத்துக்கும் சாத்தியமானதாயிருக்கும் நிலையில் கேட்கப்பட்டால் அவர் அவனைக் கொலை செய்ய வேண்டும், அவனைக் கொல்வது ஆகும், அல்லது அவனை வெட்டலாம் என்றோ சொல்வது கூடாது. எனினும் அவனிடம் அவன் சொன்ன சொல்லுக்குரிய அல்லது அவன் பேசிய பேச்சுக்குரிய விளக்கம் பற்றிக் கேட்க வேண்டும். அவன் சொல்கின்ற பதிலையும், விளக்கத்தையும் ஆய்வு செய்துதான் ஏதாவது ஒரு முடிவு செய்ய வேண்டும்.

(அல்பதாவல் ஹதீதிய்யா, பக்கம் – 39, ஆசிரியர் – இமாம் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ்)

இதன் சுருக்கம் என்னவெனில் யாராவது ஒருவன் “குப்ர்” நிராகரிப்பை ஏற்படுத்துவதற்கும், வேறு நல்ல கருத்துக்கும் சாத்தியமான ஒரு சொல்லைச் சொன்னால், அல்லது ஒரு பேச்சைப் பேசினால் சொன்னவனிடம் அல்லது பேசினவனிடம் அது பற்றி விளக்கம் ஒன்றும் கேட்காமல் அவனைக் கொலை செய்யலாம் என்று சொல்வது கூடாது. அவனிடம் விளக்கம் கேட்டு அவன் கூறும் விளக்கத்தை கொண்டே அவனுக்கு தீர்ப்பு வழங்க வேண்டும்.
எந்த ஒரு முஸ்லிமாயினும் மார்க்க விடயத்தில் வித்தியாசமான எந்த ஒரு கருத்தைக் கூறினாலும், அல்லது எந்த ஒரு வசனத்தைச் சொன்னாலும் அவனிடம் விளக்கம் கேட்டு அவன் தரும் விளக்கம் திருக்குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரணாக இருந்தால் மட்டுமே அவனுக்குரிய தீர்ப்பு வழங்க வேண்டும்.

முஸ்லிம் சகோதர, சகோதரிகள் சாதாரணமாகப் பேசும் போது கூட எல்லாம் அல்லாஹ்வின் கையிலுள்ளதென்று சொல்வதை நாம் கேட்கிறோம். இதனால் அல்லாஹ்வுக்கு கை உள்ளதென்று சொல்லிவிட்டானாகையால் அவன் காபிர் ஆகிவிட்டான் அல்லது முர்தத் ஆகிவிட்டான் என்று “பத்வா” வழங்குதல் முட்டாள்தனமானதாகும்.

எனவே, எவர் மார்க்க விடயத்தில் ஒரு சொல்லை, அல்லது எந்த ஒரு வசனத்தை, அல்லது எந்த ஒரு கருத்தைச் சொன்னாலும் சொன்னவரிடம் அதற்கான விளக்கத்தை கேட்டறிந்த பின்புதான் அவனுக்குப் பொருத்தமான தீர்ப்பு வழங்க வேண்டும். சொன்னவரை விசாரிக்காமல் அவருக்கு தீர்ப்பு வழங்குதல் பெருங்குற்றமாகும். இக்குற்றத்திற்கு துணையாக இருந்தவர்களும் குற்றவாளிகள்தான்.

“இல்முல் அகீதா” கொள்கை, கோட்பாட்டின் “இமாம்” என்று உலகப் பிரசித்தி பெற்றவர்களும், “ஸுன்னத் வல்ஜமாஅத்” கொள்கை மக்களால் பின்பற்றப்படுகின்றவர்களுமான இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் இறுதியுபதேசத்தைக் கருத்திற் கொள்ளாமலும், அவர்களின் வழியைப் பின்பற்றாமலும், ஜம்இய்யதுல் உலமா குற்றவாளி என்று கருதுகின்ற ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களிடம் ஒரு வார்த்தை கூட விளக்கம் கேட்காமல் ஒரு சிலர் ஒன்று கூடி தமது மனம் போன போக்கில் தீர்ப்பு வழங்கிய செயற்பாடானாது பெருங்குற்றமாகும். அத்துடன் இலங்கையில் இஸ்லாமிய சமூகத்தின் எதிர்காலம் பற்றிய ஆழமானதும் தீர்க்கதரிசனமானதுமான சிந்னையற்ற செயற்பாடாகும்.

“பத்வா” வழங்கிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, அடிப்படைவாத வஹ்ஹாபிகளின் பொம்மைகளானதே இந்த அவசர “பத்வா”வுக்கு காரணமாகும்.

பெருந்தொகையான மக்களை முர்தத்-இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்றும் அவர்கள் கொல்லப்படல் வேண்டும் என்றும் நாடளாவிய ரீதியில் அறிவித்து, ஸூபிஸத்தை மட்டுப்படுத்தி பாரம்பரியமாக பேணப்பட்டுவந்த இஸ்லாமிய நிகழ்வுகளை அவை வழிகேடு என்று கட்டுப்படுத்தி, அடிப்படைவாதம் பேசும் வஹ்ஹாபிஸத்துக்கு சரியான அடித்தளத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தூரநோக்கற்ற இச்செயற்பாடு இட்டுக்கொடுத்தது.

இலங்கையில் வஹாபிஸ வாதங்கள் காலூன்றுவதற்கு இந்த சந்தர்ப்பமே ஆரம்பப்புள்ளி. அன்றிலிருந்தே பாரம்பரிய முஸ்லிம்கள் கடைப்பிடித்து வந்த மார்க்க விழுமியங்கள் ஒவ்வொன்றாக காணாமல் ஆக்கப்பட்டன. ஜம்இய்யதுல் உலமாவினுடைய பத்வாவைக்காட்டி ஸூபிஸ தத்துவங்கள் பேசப்படுவது தவிர்க்கப்பட்டன. அதனால் மக்கள் ஸூபிஸ ஞானங்களை அறிந்திருப்பது அரிதாகியது. இதனால் வஹ்ஹாபிஸ வாதங்கள் மக்கள் மத்தியில் வெகு இலகுவாக பரவின. பத்வாவைமையப்படுத்தி பல வன்முறைகள் நடந்தேறின.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்கதலில் ஈடுபட்ட ஸஹ்றான் ஹாஷிம் போன்ற தீவிரவாதிகள் கூட இந்த பத்வாவை மையமாகக்கொண்டு பல பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.அதன் மூலம் இளைஞர்களை வஹ்ஹாபிஸ அடிப்படைவாதத்தை தீவிரமாக பின்பற்றச்செய்தனர். அதன் விளைவுகளை இன்று நாம் நிதர்சனமாக கண்டுகொண்டிருக்கின்றோம். இதற்கான தீர்வு என்ன என்பதை முஸ்லிம் சமூகம் சார்பாக சிந்திப்பவர்கள் மிகக்குறைவாகவே இருக்கின்றனர் என்பது துரதிஷ்டவசமானதாகும்.

ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் வாழும் சகல முஸ்லிம் மக்கள் மீதும் இஸ்லாமிய மார்க்கம் மீதும் தப்பபிப்பிராயம் தோன்றியுள்ளது. இவ்வாறு தப்பபிப்பிராயம் தோன்றுவதற்கு பிரதான காரணம் வஹ்ஹாபிஸ அடிப்படைவாதமும் அதனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் ஆகும். இவ்வாறான தப்பபிப்பிராயத்தை ஒரு இனமோ அல்லது மதமோ சுமந்து கொண்டு உண்மையான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த முடியாது.

எனவே உண்மையான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டுமாயின் தப்பபிப்பிராயத்தை சுமந்துள்ள முஸ்லிம் சமூகம் அதற்கு காரணமான வஹ்ஹாபிஸ அடிப்படை வாதத்தை முழுமையாக களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு இஸ்லாம் என்பது வேறு வஹ்ஹாபிஸ அடிப்படைவாதம் என்பது வேறு என்ற உண்மையை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த உண்மைகளை ஒவ்வொரு முஸ்லிமும் தெளிவாக அறிந்திருக்கவேண்டும். இதன்மூலமே முஸ்லிம் சமூகத்தால் உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதற்குரிய பங்களிப்புக்களை வழங்க முடியும்.

வஹ்ஹாபிஸம் தொடர்பாக முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற செயற்பாடுகளையே முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக மற்றும் அரசியல் தலைமைகள் இன்னும் மேற்கொள்ளுமாக இருந்தால் நமது சமூகத்தின் எதிர்காலம் இந்நாட்டில் கேள்விக்குறிதான் என்பதில் சந்தேகமில்லை.

NO COMMENTS