(தொடர் 07)
இஸ்லாமிய வரலாற்றில் இறை ஞானம் பேசிய ஸூபீ மகான்களில் பலர் காபிர் என்றும் ஸின்தீக் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டார்கள், பலர் சித்திரவதை செய்யப்பட்டார்கள், பலர் நாடுகடத்தப்பட்டார்கள், பலர் கொல்லப்பட்டார்கள் அந்த வரிசையில் இலங்கையில் காத்தான்குடியைச் சேரந்த பிரபல ஸூபி மார்க்க அறிஞர் அஷ்ஷஹீத் மெளலவீ அல்ஹாஜ் MSM.பாறூக் காதிரீ அவர்கள் 1998 ஆண்டு கொலை செய்யப்பட்டார்கள்.
ஸுன்னத் வல் ஜமாஅத்தின் சிங்கம் எனப்போற்றப்படும் ஆஷிகுல் அவ்லியா அஷ்ஷஹீத் மெளலவீ அல்ஹாஜ் MSM.பாறூக் காதிரீ அவர்கள் 1957ம் ஆண்டு காத்தான்டியில் பிறந்தார்கள். இவர்கள் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களுடன் தோளோடு தோள் நின்று வஹ்ததுல்வுஜூத் – உள்ளமை ஒன்று என்ற கொள்கைக்காக போராடி கொள்கைக்காகவே ஷஹீதான பெருமகனார் ஆவார்கள்.
1979-02-11ம் திகதி காத்தான்குடியின் மார்கட் சதுக்கத்தில் நிகழ்ந்த மீலாத்விழாவில் ஸூபித்துவ புரட்சி வெடித்தது. அன்றைய தினம் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அவர்கள் வஹ்ததுல் வுஜூதுடன் சம்மந்தப்பட்ட இறைஞானக்கருத்துக்களை பகிரங்கமாக பேசவேண்டியேற்பட்டது.
அவ்விழாவில் உரையாற்றிய அஷ்ஷஹீத் மெளலவீ அல்ஹாஜ் MSM.பாறூக் காதிரீ அவர்கள்,
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நம் போன்ற சாதாரண மனிதர் அல்ல என்ற கருத்தை மையமாகக்கொண்டு நபி பெருமானாரின் விஷேட தன்மைகளை எடுத்துப்பேசினார்கள்.
அதையடுத்து பேசிய மர்ஹூம் பரீட் மீராலெப்பை MP என்பவர் பாறூக் மெளலவியவர்களின் பேச்சு பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளமுடியாதது என்றும் அண்ணல் நபிகள் நம் போன்ற சாதாரண மனிதரே என்றும் மறுத்துப்பேசினார்.
இம்மறுப்புக்கு பதிலளிக்க விரும்பினார்கள் பாறூக் மெளலவி அவர்கள். ஆனால் இறுதியாக பேச வீற்றிருந்த ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அவர்கள், தாம் பரீட் மீராலெப்பை MP க்கு பதிலளிப்பதாக கூறி பாறூக் மெளலவியை அமைதிப்படுத்தினார்கள்.
பின்னர் பேச எழுந்த ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அவர்கள், அதற்கு மறுப்பும் விளக்கமும் அளிக்கும்போது நபிகளாரின் அகமியங்களை எடுத்துச்சொல்லவேண்டியேற்பட்ட போது வஹ்ததுல் வுஜூதுடன் சம்மந்தப்பட்ட ஆழமான கருத்துக்களையும் பேசினார்கள். இதனை காரணமாகக் கொண்டு ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களுக்கும் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டோர்களும் முர்தத்கள் – இஸ்லாத்தை விட்டும் நீங்கியவர்கள் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பத்வா வழங்கி தீர்ப்பை பிரகடனம் செய்தது. இது அடிப்படைவாத வஹ்ஹாபிஸத்திற்கு இலங்கையில் கிடைத்த பெரும் வெற்றியாகும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் வழங்கப்பட்ட மார்க்கத்தீர்ப்பின் பின்னர் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அவர்கள் வெளிப்பிரதேசங்களுக்கு சென்று வஹ்ஹாபிஸத்திற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதிலும் ஸூபித்துவ பிரச்சாரங்களை மேற்கொள்வதிலும் பாரிய உயிர் அச்சுறுத்தலை எதிர் நோக்கினார்கள். இதனால் நாடு தழுவிய ரீதியில் வஹ்ஹாபிஸத்திற்கு எதிரான பிரச்சாரங்களையும் ஸூபித்துவ பிரச்சாரங்களையும் முன்னெடுப்பதற்காக ஸூபி மார்க்க அறிஞரான அஷ்ஷஹீத் மௌலவீ அல்ஹாஜ் MSM. பாறூக் காதிரீ அவர்களை நியமித்தார்கள். இவர்கள் நாடு பூராகவும் சென்று வஹ்ஹாபிஸ அடிப்படைவாதத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்கள்.
தனது பிரச்சாரத்திற்கான பிரதான தளமாக காத்தான்குடியின் வலீமார்களின், வாசஸ்தலமாக திகழும் பத்ரிய்யஹ் ஜும்ஆ பள்ளிவாயலை பயன்படுத்தி வந்தார்கள். இங்கு வருடாந்தம் நடைபெற்று வரும் கந்தூரிகள், வாராந்தம் நடைபெற்று வரும் புனித குத்பிய்யஹ் மஜ்லிஸ், ஜும்ஆ பிரசங்கம் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு அல்லாஹ்வின் அகமியங்கள் பற்றியும் அவ்லியாக்களின் அந்தரங்கங்கள் பற்றியும் ஆணித்தரமான விளக்கங்களையளித்து வந்தார்கள்.
அண்ணல் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வையகத்தில் அவதரித்த புனித றபீஉனில் அவ்வல் மாதத்தில் கொழும்பு, கண்டி, காலி, பேருவலை தர்ஹாடவுன், கல்முனை போன்ற ஊர்களுக்குச் சென்று அண்ணலாரின் அகமியங்களைப் பற்றியும், பூமான் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்வதன் அவசியத்தையும் வலியுறுத்தி வஹாபிஸ அடிப்படைவாதிகளின் விசமப் பிரசாரங்களை முறியடித்து வந்தார்கள். இதே போன்று இந்தியா, ஈராக் போன்ற நாடுகளுக்குச் சென்று ஜும்ஆப் பள்ளிவாயல்கள், மீலாத் மேடைகள் போன்றவற்றில் ஸுன்னத்வல் ஜமாஅத்தின் கொள்கைகளை உறுதிப்படுத்தினார்கள். இலங்கை வானொலி முஸ்லிம் சேவை இவரது 4 குத்பாப் பிரசங்கங்களை ஒளிபரப்பியது. இவரின் பேச்சாற்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
இவர்களது பிரச்சாரத்தினால் வஹ்ஹாபிஸம் வளர்ச்சி அடைவதில் தடைகள் ஏற்பட்டன. இதனால் படுபாதகர்களான அடிப்படைவாத வஹ்ஹாபிகள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் வழங்கப்பட்ட மார்க்கத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ‘இஸ்லாத்தில் இருந்து மதம் மாறியவர்களை கொலை செய்ய வேண்டும்’ என்பதை ஆதாரமாகக் கொண்டு அஷ்ஷஹீத் மௌலவீ அல்ஹாஜ் MSM. பாறூக் காதிரீ அவர்களை 1998.05.29ஆம் திகதி அன்று காத்தான்குடியில் உள்ள அவர்களின் வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்தார்கள். இலங்கை வரலாற்றில் வஹ்ஹாபிஸ அடிப்படைவாதிகளால் நிகழ்த்தப்பட்ட முதலாவது படுகொலைச் சம்பவம் இதுவாகும்.
29.05.1998 வௌ்ளிக் கிழமை பிற்பகல் சனி இரவு சுமார் 10.30 மணியிருக்கும் காத்தான்குடி எங்கும் ஒரே இருள்மயம். காரணம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் எமது அறிஞர் மௌலவீ பாறூக் காதிரீ அவர்கள் இரவு நேர சாப்பாட்டை முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்கள். அப்போது வீட்டின் கதவு தட்டப்படுகிறது. மனைவி யாரென குரல் கொடுக்கிறார்.
“நான்தான் றியாஸ் வந்திருக்கின்றேன். எனது மனைவி பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருக்கிறார். இந்த தண்ணீரை ஓதித் தாருங்கள்” என்று மறுமொழி வருகிறது. உடனே இரக்க சிந்தையுடைய மௌலவீ பாறூக் காதிரீ அவர்கள் தண்ணீர் ஓதிக் கொடுப்பதற்காக கதவைத் திறக்கின்றார்கள். அங்கே வந்து நின்றவர்களில் ஒருவன் மௌலவீ அவர்களைத் துப்பாக்கியால் சுட்டு விட்டான். அந்தத் துப்பாக்கியின் குண்டுகள் அவர்களின் தூய உடலைத் துளைத்து விட்டது.
மௌலவீ அவர்களுக்கு தனது அஜல் முடிந்து விட்டது என்பது தெரிந்துவிட்டது. உடனே திருக்கலிமாவை மொழிந்தவராகத் தனது ஷேய்கு நாயகமான தங்கள் வாப்பா அவர்களின் புகைப்படத்தை உற்று நோக்கியபடி தனது உமிழ்நீரை எடுத்து காயப்பட்ட இடத்தில் தடவுகிறார்கள். தனது கண்களை மூடித் தக்பீர் கட்டி எவ்வித பேச்சும் பேசாமல் ஷஹீதானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
அன்னார், 1979களில் காயல்பட்டணம் ஸூபி ஹஸ்ரத் நாயகத்திடம் பைஅத் பெற்றார்கள், பின்னர் அப்துர் றஸீத் கோயா தங்கள் மெளலானா வாப்பாவி அவர்களிடமும் பைஅத் பெற்றுள்ளார்கள்.
“மகன்! மெளலவித் தம்பிக்கு உறுதுணையாயிருங்கள்!” என்று தங்கள் மெளலானா வாப்பா அவர்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களோடு தோளோடு தோள் நின்று கொள்கைக்காக போராடினார்கள்.
அல் ஜாமிஅதுர் றப்பானிய்யாஹ்வின் அதிபராக பல ஆண்டுகள் கடமையாற்றினார்கள்.
முன்னாள் ஈராக் அதிபர் ஸதாம் ஹுஸைனால் இஸ்லாமிய மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.
மெளலவீ பாறூக் காதிரீ அவர்கள் சிறுவனாக இருக்கும்போது விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் ஒரு மர நிழலில் வீற்றிருந்த நெருப்பு மஸ்தான் வலீ அவர்கள் இவர்களை உற்று நோக்கி, “இங்கே வா!” என்று அழைக்கிறார்கள். அருகில் சென்ற சிருவனிடம் “வாயைத்திற!” என்கிறார்கள். சிறுவனும் வாயைத்திறக்க அவரின் வாய்க்குள் உமிழ்ந்துவிட்டு, “விழுங்கு!” என்றார்கள். சிறுவனும் விழுங்கிவிட்டார்கள். பின்னாளின் அவர்களின் நாவு தங்கு தடையின்றி சத்தியக்கொள்கையை அறைகூவிக்கொண்டிருந்தது.
இவர்கள் தமது ஆரம்ப கல்வியை 1962 ம் ஆண்டு தொடக்கம் அபுல் இர்பான் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் அவர்களிடம் கற்றார்கள்.
தமது எட்டாவது வயதில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதக்கற்றுக் கொண்டார்கள். இவர்களது திறமையை உணர்ந்த அபுல் இர்பான் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் அவர்கள் சுமார் 2 வருடங்கள் வரை தமது மத்ரஸாவில் அறபு, இலக்கணம், இலக்கியம், தப்ஸீர், பிக்ஹ், மன்திக், அகீதா போன்ற அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
அதன்பின் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்த அன்னார் 1967ம் ஆண்டு காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு சுமார் 7 வருடங்கள் ஓதியபின் மௌலவீ பாஸில் பலாஹீ பட்டம் பெற்று தொடர்ந்து 3 வருடங்கள் இம்மத்ரஸாவிலேயே விரிவுரையாளராக கடமை புரிந்தார்கள்.
பின்னர் அட்டாளைச்சேனை “ஷர்க்கிய்யஹ்” அறபுக் கல்லூரியில் சுமார் 1 வருடம் வரை அதிபராகக் கடமை புரிந்தார்கள். அதன்பின் ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராமத்தில் அமைந்திருக்கும் மஸ்ஜிதுல் பஃதாத் பள்ளிவாயலில் பேஷ் இமாமாகவும் மஆனிமுன் முஸ்தபா அறபுக் கல்லூரியில் அதிபராகவும் கடமை புரிந்தார்கள். இறுதியாக காத்தான்குடியில் ஸுன்னத்வல்ஜமாஅத்தின் தளமாக இயங்கும் பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயல் வளாகத்தில் அமைந்திருக்கும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரியில் அதிபராக கடமையாற்றி பல “றப்பானீ” ஆலிம்களை உருவாக்கினார்கள்.
இந்த ஈழத்திரு நாட்டில் கொலைகள் பல நடந்தேறியுள்ளன. ஆனால் அஷ்ஷஹீத் மௌலவீ அல்ஹாஜ் MSM. பாறூக் காதிரீ அவர்களின் கொலை இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. பொன்னுக்கும் மண்ணுக்கும், பெண்ணுக்கும் பதவிக்கும் எனப்படுகொலைகள் நடைபெறும் இந்த நாட்டில் மார்க்கத்தின் பெயரால் ஒரு ஸூபித்துவ இஸ்லாமிய மார்க்க அறிஞர் படுகொலை செய்யப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.
இவ்வாறானதொரு அவப்பெயரை ஆலிம்கள் நிறைந்து வாழும் இந்தக் காத்தான்குடி பெற்றுவிட்டது. இந்த வரலாற்றுக் கறையை வரலாற்று ஏடுகளில் இருந்து என்றுமே அகற்ற முடியாது. அத்துடன் இதற்கு காரணமானவர்கள் இறை தண்டணையில் இருந்து என்றுமே தப்பமுடியாது.
அல்லாஹு அஹ்கமுல் ஹாகிமீன் – அல்லாஹ் நீதியரசர்கரசன்.